கிரிஷின் 'அனுஷ்கா பாசம்'!

Tags:


'வானம்' படத்தைத் தொடர்ந்து ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிப் படம் ஒன்றை இயக்குகிறார் கிரிஷ்.

யார் இந்த கிரிஷ்... ஜகர்லமுடி சாய்பாபா. ஆந்திர மக்கள் அறிந்த தயாரிப்பாளர். இவரின் மகன்தான் ராதாகிருஷ்ணன் என்கிற கிரிஷ்.

இவரின் முதல் தெலுங்குப் படமான 'கம்யம்' (தமிழில் 'காதல்னா சும்மா இல்ல') பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்ததுடன் நில்லாமல் ஏகப்பட்ட விருதுகளையும் அள்ளி வந்தது.

அதைத்தொடர்ந்து வந்த இவரின் 'வேதம்' தெலுங்கில் சமீப நாட்களில் வந்த முதல் மல்ட்டி ஸ்டாரர் படம் என்றே சொல்லலாம். அல்லு அர்ஜுன், அனுஷ்கா நடித்து புதுமையான திரைக்கதையில் வந்த இப்படம் மக்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடித்தது. இதை 'வானம்' என்ற பெயரில் தமிழ்படுத்தியவர் சிம்பு. தமிழிலும் கிரிஷ்தான் இயக்குனர் என்பது அறிந்ததே.

தன் தோழி அனுஷ்காவை விலைமாது பெண்ணாக நடிக்க வைத்து தமிழில் அவருக்கு புது அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார். 'வானம்' ரெஸ்பான்ஸை தொடர்ந்து ஒரே சமயத்தில் தமிழிலும், தெலுங்கிலும் படம் பண்ணும் பரபரப்பில் உள்ளார் கிரிஷ். கதையை கேட்காமலேயே அனுஷ்கா கால்ஷீட்டை அள்ளித்தர, இருமாநில மக்களும் அறிந்த ஹீரோவை தேடி வருகிறார்.

சூர்யா, கார்த்தி, சிம்பு ஆகிய மூவரும்தான் கிரிஷின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளவர்கள். மூவரிடமும் அனுஷ்கா மூலம் மூவ் செய்து வருகிறார். அனுஷ்காவின் அளவில்லாத பாசம் குறித்து கேட்டால், 'அது அப்படித்தாங்க' என்று நழுவுகிறார் கிரிஷ்.

ஏதோ நல்லா இருந்தா சரி!
 

'போர்க்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்': விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம்

Tags:


சர்வதேச நாடுகள் மற்றும் ஐநா நிபுணர் குழுவால் போர்க்குற்றவாளி என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள ராஜபக்சேவை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரி உண்ணாவிரதமிருந்தனர் விஜய்யின் ரசிகர்கள்.

சேலத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் சங்கம் சார்பில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தமிழர்களை கொன்று குவித்து கொடிய போர்க்குற்றங்களைச் செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும், அவர் மீது சர்வதேச கோர்ட்டில் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்று இப்போராட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே நடந்த இந்த உண்ணாவிரதத்துக்கு சேலம் மாவட்ட இளைய தளபதி விஜய் நற்பணி இயக்க மாவட்ட தலைவர் தமிழன்.ஆ.பார்த்திப தலைமை தாங்கினார்.

சேலம் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். அடுத்த கட்ட போராட்டத்தை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்தனர்.
 

மகா தீரா வெற்றியும் ஒரு அப்பாவி இயக்குநரின் புலம்பலும்!!

Tags:


வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற பழமொழி சினிமாவிலும் அவ்வப்போது நிஜமாகி வருகிறது.

கல்யாண்குமார், தேவிகா, நம்பியார் நடித்து கிளாசிகல் ஹிட்டடித்த ஸ்ரீதரின் 'நெஞ்சம் மறப்பதில்லை'யை அவ்வளவு எளிதில் நாம் மறந்திருக்க மாட்டோம். நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் அழகாக இணைத்து காலம் போற்றும் பாடல்களுடன் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த படம்.

இந்த 'நெஞ்சம் மறப்பதில்லை'யை தூசி தட்டி எடுத்து ஆங்காங்கே பட்டி, டிங்கரிங் பார்த்து தொழில்நுட்பத்தைத் தூவி அக்கட பூமியில் வெளியான அவியல் படம்தான் 'மஹதீரா'. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவின் விறுவிறு ஆக்ஷனும், காஜல் அகர்வாலின் கிளாமரும் படத்தை உச்சத்தில் வைத்துவிட்டது.

இந்தப் படத்தை தயாரித்த 'கீதா ஆர்ட்ஸ்' அல்லு அரவிந்த் ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் என்றாலும் இப்போதுதான் உண்மையில் அவருக்கு அறிமுகம் தேவை!!

இந்த அல்லு, சிரஞ்சிவியின் மைத்துனர். ராம்சரணின் தாய்மாமா. தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜூனின் அப்பா. இந்தி 'கஜினி'யை வாங்கி வெளியிட்டவர். தமிழில் மாப்பிள்ளை உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்தவர். இவர்தான் இந்தச் செய்தியின் நாயகன்.

தங்கச்சி மகனான ராம்சரணை நாயகனாக்க நல்ல சென்சேனல் கதைகளைத் தேடினார். தெலுங்கிலோ காரம் பிளஸ் கலாட்டா கதைகளை கேட்டு காதில் ரத்தம் வராதக் குறையாக சென்னை வந்தார்.

அப்போது அவருக்கு சிக்கியதுதான் 'மஹதீரா' கதை. நாற்பது பிளஸ் வயதுடைய ஒரு இயக்குனர் அவர். அல்லு அரவிந்தின் அலைச்சல் மற்றும் தேவை அறிந்து அணுகினார். இவர் சொன்ன இந்த நெஞ்சம் மறப்பதில்லை டைப் 'ஒன் லைன்' பிடித்துப்போக முழு கதையையும் சொல்லச் சொன்னார் அல்லு. சிரஞ்சீவியிடம் கதையை விளக்குவதற்கு வசதியாக இயக்குனரின் ஸ்க்ரீன்பிளே முழுவதையும் டேப் செய்திருக்கிறார்.

நாட்கள் ஓடின... ஆனால் அரவிந்திடமிருந்து அந்த அப்பாவி இயக்குனருக்கு எந்த பதிலும் வரவில்லை. சரி பிடிக்கவில்லை போலிருக்கு என மனதை தேற்றிக்கொண்டார் இயக்குனர்.

இதற்கிடையில் தான் சொன்ன கதையையே வேறொரு இயக்குனரை வைத்து படம் எடுத்து பிளாக்பஸ்டர் ஹிட்டாக்கியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு தியேட்டரில் அந்தப் படத்தைப் பார்த்த இயக்குநருக்கு செம ஷாக். தான் சொன்ன திரைக்கதையை காட்சி மாறாமல் காப்பி அடித்திருப்பதை கண்டு தியேட்டரிலேயே குமுறி குமுறி அழுதார்.

அரவிந்ததை அணுகினார். 'ஆமாங்க. உங்களால இவ்வளவு பெரிய படத்தை எடுக்க முடியுமா? அதான் நாங்களே எடுத்துட்டோம்' என்று அசால்டாக பதிலளிக்க, படத்தின் இயக்குனர் ராஜமவுலியிடம் சென்றார். 'சிரஞ்சீவி பக்கம் இருந்து பிரஷர். அதான் பண்ணினேன்' என அவரும் நழுவினார்.

கடைசியாக ஃபெப்சியிடம் முறையிட, புகார் உண்மை என உறுதி செய்யப்பட்ட பிறகும் கிணற்றில் போட்ட கல்லானது இயக்குனரின் முறையீடு. தமிழிலோ, கன்னடத்திலோ இந்தப் படத்தை பண்ணும்போது அந்த ரைட்ஸ் உங்களுக்குத்தான் என தாமதமாக பதில் வந்தது அரவிந்த் தரப்பிடம் இருந்து.

சரி, இதாவது கிடைத்ததே என மனதை தேற்றிக் கொண்டவருக்கு, 'மஹதீரா' தமிழில் 'மாவீரன்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரெட் ஜெயண்ட் மூலம் வெளிவர உள்ளதை அறிந்தும் பயம் பிளஸ் பதட்டம் தொற்றிக் கொள்ள, இப்போது வாய்விட்டு புகார் சொல்லக் கூட முடியாமல், எஃப்.எம். ஒன்றில் ஆர்.ஜே.யாக பணியாற்றிக் கொண்டுள்ளாராம் அந்த அப்பாவி இயக்குநர்.

சினிமா அப்பாவிகளை தோற்கடிக்கும். 'அடப்பாவி'களையே வெற்றிபெற வைக்கும். என்பது இதனால் அறியப்படும் நீதி!!
 

டப்பிங்கை 4 நாளில் முடித்த தீபிகா, 40 நாள் இழுத்தடித்த கத்ரீனா

Tags:


மும்பை: நடிகை தீபிகா படுகோண் தனது ஆரக்ஷன் படத்திற்கான டப்பிங்கை வெறும் 4 நாட்களில் முடித்துள்ளார். ஆனால் கத்ரீனாவோ ராஜ்னீதி பட டப்பிங்கை 40 நாட்களில் முடித்தார்.

தீபிகாவும், கத்ரீனா கைபும் ஒரு காலத்தில் ரன்பீர் கபூர் காதலியாக இருந்தார்கள். பின்னர் ஆளுக்கொரு திசையாக சென்றுவிட்டனர். பாலிவுட்டில் பெரிய நடிகைகள் ஒருவருக்கொருவர் பிடிப்பதே இல்லை. இதற்கு கத்ரீனா மட்டும் விதிவிலக்கா என்ன?

கத்ரீனா நடித்த ராஜ்னீதி படத்தை இயக்கிய பிரகாஷ் ஜா தற்போது தீபிகாவை வைத்து ஆரக்ஷன் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் தனது டுவிட்டரில் தீபிகா வெறும் 4 நாட்களில் டப்பிங் வேலையை முடித்து சாதனை படைத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்த கத்ரீனா கடுப்பாகி உடனே ஜாவை தொடர்பு கொண்டு தனது எரிச்சலை வெளிப்படுத்தினாராம்.

கடுப்புக்கு காரணம் கத்ரீனா ராஜ்னீதி பட டப்பிங்கை 40 நாட்களில் முடித்தார் என்பது தான்.

பிரகாஷ் ஜாவின் டுவிட்டர் செய்தியைப் பார்த்த கத்ரீனா அவர் தீபிகாவை பாராட்ட எழுதியிருக்கிறாரா அல்லது தன்னை குத்திக்காட்டுகிறாரா என்று நினைத்துள்ளார். என்ன பெரிய சாதனை, கதாபாத்திரத்தின் முக்கியத்துவம், உணர்வு வெளிப்பாடு மற்றும் நடிகர்களை பொறுத்துத் தானே டப்பிங் செய்ய முடியும் என்று முனுமுனுத்துள்ளார்.
 

நயனதாரா கல்யாணம் நடக்கட்டும், பார்க்கலாம்-பொடி வைக்கும் சிம்பு

Tags:



எனக்கு ஏற்ற பெண்ணாக அமையும் போது திருமணம் செய்து கொள்வேன். அது காதல் கல்யாணமாகக் கூட இருக்கலாம் என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு.

அதை விட முக்கியமாக, நயனதாரா கல்யாணம் நடந்தால் பார்க்கலாம் என்றும் அவர் பொடி வைத்துப் பேசியிருப்பதால் நயனதாரா கல்யாணத்தில் ஏதாவது சிக்கல் வருமோ என்ற பரபரப்பும் கூடியுள்ளது.

தனது தங்கைக்கு திருமணம் செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், அது முடிந்த பின்னர்தான் தனது கல்யாணம் குறித்து யோசிக்கப் போவதாகவும் சிம்பு கூறுகிறார். தனக்குப் பிடித்த, ஏற்ற பெண்ணாக அமைந்தால் கல்யாணம் செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ள அவர் தனது கல்யாணம், காதல் கல்யாணமாகவும் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

சரி நயனதாரா கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாரே என்ற கேள்விக்கு, கல்யாணம் நடக்கட்டும் பார்க்கலாம் என்று பொடி வைத்துப் பேசியுள்ளார் சிம்பு.

வானம் படத்தின் வெற்றியால் சிம்பு பெரும் குஷியடைந்துள்ளார். அதே சூட்டோடு தற்போது ஒஸ்தி என்ற புதிய படத்தில் நடிக்கப் போகிறார். தரணி தான் படத்தை இயக்குகிறார்.

டபாங் படத்தின் ரீமேக்தான் இது. இதில் சிம்பு நாயகனாக நடிக்கவிருக்கிறார். படத்தின் பூஜை முடிந்து விட்டது. படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

 

பெண் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நடிகர் கைது

Tags:



சென்னை: மதுராந்தகம் அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகரும், வக்கீலுமான தமிழரசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மண்டபம் என்ற படத்தில் நடித்துள்ளவர் தமிழரசன். மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர். வக்கீலாக செயல்பட்டு வருகிறார்.

இவரை ஒரு வழக்கு தொடர்பாக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கவிதா என்ற 45 வயதுப் பெண் அணுகினார். இதையடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், வழக்கு தொடர்பாக தமிழரசன், கவிதா மற்றும் தமிழரசனின் தோழியான அலமேலு ஆகியோர் காரில் மதுராந்தகம் சென்றனர். அலமேலு ஒரு துணை நடிகையாவார்.

இவர்களது கார், பழைய சீவரம் அருகே ஆற்றங்கரையில் கவிதா கத்திக்குத்துக் காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

108 ஆம்புலன்ஸில் கவிதாவைக் கொண்டு வந்தபோது அவர் வழியிலேயே உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்பு தன்னை தமிழரசன்தான் கத்தியால் குத்தியதாக ஆம்புலன்ஸில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார் கவிதா. இதை அவர்கள் போலீஸில் தெரிவிக்கவே போலீஸார் தமிழரசனைக் கைது செய்தனர்.

 

ஹை... கோ படம் 15 நாள் தாண்டிடுச்சி! - ஜீவா சந்தோஷம்

Tags:



தற்போது வெளியாகும் திரைப்படங்கள் ஒரு வாரம் அல்லது 2 வாரம்தான் ஓடுகிற நிலை, ஆனால் கோ படம் 15 நாட்களுக்கும் மேலாக ஓடுகிறது, என்று சந்தோஷப்பட்டார் நடிகர் ஜீவா.

கேவி ஆனந்த் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள கோ படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் ரசிகர்கள் முன்தோன்றி, நடிகர் ஜீவா உற்சாகப்படுத்தி வருகிறார். சேலத்தில் இப்படம் ஓடுகிற ஏ.ஆர்.ஆர்.எஸ். மல்டி பிளக்ஸ் தியேட்டரில் நேற்று இரவு 8-30 மணிக்கு ரசிகர்கள் முன்பு கதாநாயகன் ஜீவா, துணை நடிகர் அஜ்மல் ஆகியோர் தோன்றினார்கள்.

ரசிகர்கள் விசில் அடித்தும், ஆரவாரம் செய்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரசிகர்கள் மத்தியில் அவர் பேசுகையில், “ராம், ஈ ஆகிய படங்களுக்கு பின்னர் கோ படத்திற்காக சேலம் வந்துள்ளேன். தற்போது வெளியாகும் திரைப்படங்கள் ஒரு வாரம் அல்லது 2 வாரம் தான் ஓடுகிற நிலை, ஆனால் கோ படம் 15 நாட்களுக்கும் மேலாக ரசிகர்களாகிய உங்களின் ஆதரவுடன் வெற்றிக்கரமாக ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.தொடர்ந்து இப்படம் ஓட ரசிகர்கள் ஒத்துழைக்க வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், கோ படம் என் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தைத் தந்துள்ள படம். குறிஞ்சிப்பூ மாதிரி அரிதாகத்தான் இந்த மாதிரி படங்கள் என்னைப் போன்றவர்களுக்கு அமையும். இதில் பத்திரிகைப் புகைப்படக்காரராக நடித்தது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.

 

தியேட்டர் உரிமையாளர் மகனை மணக்கும் அபர்ணா-நிச்சயதார்த்தம் நடந்தது

Tags:



நடிகை அபர்ணாவுக்கும், தியேட்டர் உரிமையாளர் கண்ணப்பனின் மகன் பரணிக்கும் நேற்று இரவு நிச்சயதார்த்தம் நடந்தது. ஜூன் 29ம் தேதி திருமணம் நடைபெறுகிறது.

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அபர்ணா. கண்ணுக்குள்ளே உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

பரதநாட்டியக் கலைஞரான அபர்ணாவுக்கும், சென்னை பூந்தமல்லி சுந்தர் தியேட்டர் உரிமையாளர் கண்ணப்பனின் மகன் டாக்டர் பரணிக்கும் திருமணம் முடிவானது.

இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று இரவு தி.நகரில் நடந்தது. இதில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இவர்களின் திருமணம் ஜூன் 29ம் தேதி வானகரம், ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

 

குருவாயூர் கோயிலில் குழநதைக்கு சோறூட்டி துலாபாரம் கொடுத்த நடிகை மீனா!

Tags:



தனது 5 மாத குழந்தைக்கு குருவாயூர் கோயிலில் சோறூட்டி, எடைக்கு எடை வெண்ணை துலாபாரம் கொடுத்தார் நடிகை மீனா.

நடிகை மீனாவுக்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நைனிகா என பெயரிட்டுள்ளனர். இப்போது 5 மாதம் ஆகிறது. மலையாளிகள் வழக்கப்படி (மீனாவின் தந்தை துரைராஜ் ஒரு தமிழர். அவரது அம்மா ராஜ் மல்லிகா மலையாளி) குழந்தை நைனிகாவுக்கு சோறூட்டும் நிகழ்ச்சி கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் நடந்தது.

இதற்காக கணவர் மற்றும் குழந்தையுடன் சனிக்கிழமை இரவு மீனா குருவாயூர் சென்றார். ஹோட்டலில் தங்கிய பிறகு, குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

பின்னர் கணவர் வித்யாசாகர் மடியில் நைனிகாவை உட்கார வைத்து சோறூட்டினார். குழந்தை எடைக்கு எடை வெண்ணை துலாபாரமும் செய்தார்.

 

அருள், அறிவு, நகுல்... ஒரு முக்கோணக் கதை!

Tags:



அருள்நிதியின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த ‘ஈரம்’ பட இயக்குனர் அறிவழகன், தற்போது நகுலை வைத்து தன் அடுத்த பட வேலைகளை தொடங்கி இருக்கிறார்.

அறிவழகன் வெங்கடாசலம். சுருக்கமாக அறிவழகன். இயக்குனர் ஷங்கரின் மாணவர். தொழில்நுட்ப மிரட்டல் பிளஸ் நருக் சுருக் திரைக்கதையால் முதல் படமான ‘ஈரம்’ மூலம் கவனம் ஈர்த்தவர்.

இந்தப் பட வெற்றியைத் தொடர்ந்து ‘எங்களுக்கு ஒரு படம் பண்ணித் தாங்க’ என்ற வரிசையில் வந்த தயாரிப்பாளர்களை புறந்தள்ளி தன் கதைக்கு தோதானவர் என்று ‘வம்சம்’ ஹீரோ அருள்நிதியை அணுகினார். ஒரு கூடைப்பந்தாட்ட வீரரின் வாழ்க்கைதான் கதை என்பதால் தன் உயர உடல்வாகுக்கு தோதாக இருக்கும் என்று அருளும் அறிவின் கதையை டிக் அடித்தார். போட்டோசெஷன் கூட முடிந்தது.

ஆனால் இது கொஞ்சம் காலம் எடுக்கக்கூடிய புராஜெக்ட் என்பதை லேட்டாக உணர்ந்த அருள், நீண்ட தயக்க மயக்கங்களுக்குப் பின் அதிலிருந்து பின்வாங்கினார்.

கதாநாயகனுக்காக காத்திருப்பது முட்டாள்தனம் என்பதை காலதாமதமாக உணர்ந்த அறிவழகன், அந்தக் பேஸ்கட் பால் பிளேயர் கதையை நகுலுக்கு தோதாக மாற்றினார். உடனடி வெற்றிக்கு காத்திருந்த நகுலும் மறுபேச்சு பேசாமல் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். நகுல் என்றால் சன் பிக்சர்ஸ் இல்லாமலா… இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ்தான் வெளியிடும் என்கிறார்கள்!

 

ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!!

Tags:



நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதிலும் அவரது ரசிகர்கள் தீவிர பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சியில் ரசிகர் மன்ற நிர்வாகி ராயல் ராஜ் உடல் முழுக்க தீச்சட்டி ஏந்திய வேண்டிக் கொண்டார். திருச்சி மாவட்ட தலைவர் கர்ணன் வெள்ளி ரதம் இழுத்தார்.

சென்னையில் நடந்த ராணா படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை இசபெல்லா மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அன்றே ரஜினி வீடு திரும்பினார்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.

ரஜினியின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலைபட வேண்டாம் என்று சிகிச்சையளித்த டாக்டர் கிஷோர் மற்றும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகியோர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக அங்காங்கே சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகேயுள்ள முனீஸ்வரர் கோவிலில் இருந்து இன்று காலை திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற அமைப்பாளர் ‘ராயல் ராஜ்’ தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்றார். உடல் முழுவதும் நட்சத்திர வடிவமைப்பில் 10-க்கும் மேற்பட்ட தீச்சட்டிகளை ஏந்திகொண்டு அவர் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக முருகன் கோவில் வரை சென்றார். இதில் ஏராளமான ரஜினி ரசிகர்களும் பங்கேற்றனர்.

இதேபோல் ஸ்ரீரங்கம் ராகவேந்திரா கோவிலில் ரஜினி உடல் நலமடைய வேண்டி திருச்சி மாவட்ட தலைவர் கர்ணன் தலைமையில் வெள்ளி ரதம் இழுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆர்.கே.எஸ்.ராஜா, ரஜினி சிவா, தென்னூர் உதயா, நாசர், ஸ்ரீரங்கம் திலீப்ரமேஷ், ரஞ்சித்குமார் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.