மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா?

Aishwarya Rai Make Her Comeback Mani Rathnam Movie

மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் மூலம் தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்குகிறாராம் ஐஸ்வர்யா ராய்.

புகழ் பெற்ற நடிகையான ஐஸ்வர்யா ராய், கர்ப்பமான பிறகு நடிப்பதை நிறுத்திவி்ட்டார். குழந்தைப் பெற்ற பிறகு, தாறுமாறாகிவிட்ட உடம்பை சீரமைத்துக் கொள்வதில் படுபிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் அவரை மீண்டும் நடிக்க வைக்க சில தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

ஒரு நல்ல திரைக்கதை கிடைத்தால் மீண்டும் நடிக்க தயார் என ஐஸ்வர்யா ராய் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் தனது பேவரிட் இயக்குநரான மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் ஐஸ்வர்யா ராய்.

கடல் படம் முடிந்ததும் இந்தப் படத்தை எடுக்கப்போகிறாராம் மணிரத்னம். ஆங்கில நாவல் ஒன்றை தழுவி எடுக்கப்படும் படம் இது.

ஏற்கெனவே மணிரத்னம் இயக்கத்தில் இருவர், குரு, ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ளார் ஐஸ்!

 

தயாரிப்பாளர் பிபிஜி குமரன் படுகொலையில் 3 பேர் கைது

சென்னை: சினிமா தயாரிப்பாளர் பி.பி.ஜி.குமரன் நேற்று காலையில் வெடி குண்டு வீசியும் கடப்பாரையால் குத்தியும் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

33 வயதே ஆன குமரன் இளம் வயதிலேயே பல தொழில்களைத் தொடங்கி நடத்தி வந்தார். வைகை என்ற படத்தையும் தயாரித்தார். ஆரம்பத்தில் புரட்சி பாரதம் கட்சியில் சேர்ந்த அவர் பின்னர் அதில் இருந்து விலகி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார்.

பிறகு அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். ஆனால் சில நாட்களில் நீக்கப்பட்டார். இதனால் கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார்.

தொழில்ரீதியாக குமரனுக்கும், குன்றத்தூர் வைரவன் என்பவருக்கும் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அரசியல் ரீதியாகவும் குமரனுக்கு எதிரிகள் இருந்தனர்.

சம்பவம் நடந்த திங்கள் காலையில் 2 கார்கள் முன்னே செல்ல, கடைசியாகத்தான் குமரனின் கார் சென்றது. ஆனால் கூலிப்படை கொலையாளிகள், பல நாட்களாக அவர் சென்று வந்த பாதையை நோட்டமிட்டு இக்கொலையை செய்துள்ளனர்.

குமரன் கொலை தொடர்பாக மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் என்ற ரவுடியை சம்பவ இடத்தில் மடக்கி விசாரித்ததில், மதுரையைச் சேர்ந்த கும்பலின் கொடூரத் திட்டம் இது என்பது தெரியவந்தது.

வைரவன் வேறு ஒரு வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்து வேலூர் சிறையில் உள்ளார். இவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வியாசர்பாடியைச் சேர்ந்த கவுஸ் பாஷா, குன்றத்தூரைச் சேர்ந்த கலைமணி, பெரம்பூரைச் சேர்ந்த சாம்சன் ஆகிய 3 பேர் நேற்று மாலை 6 மணி அளவில் எழும்பூர் 13-வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கீதா முன்னிலையில் சரண் அடைந்தனர்.

அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை காவலில்எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

சாட்டை சரியான தலைப்புதான்! பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டு!!

Teachers Parents Welcome Sattai

எந்த ஒரு திரைபடத்தின் தலைப்புமே யோசிக்க வைக்கவேண்டும். படத்தின் கதையை புரியவைப்பது அந்த தலைப்புதான். ஆசிரியர்கள் மாணவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள சாட்டை திரைப்படம் அந்த படத்திற்கு ஏற்ற சரியான தலைப்பு என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் சான்றிதழ் அளித்தனர்.

காந்தி ஜெயந்தியை ஒட்டி விஜய் டிவியில் சாட்டை திரைப்படக்குழுவினர் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. திரைப்படத்தின் தயாரிப்பாளர், நடிகர்கள் சமுத்திரகனி, தம்பி ராமையா, மாணவர்களாக நடித்த நடிகர்கள் இதில் பங்கேற்றனர்.

ஆசிரியர்களும், பெற்றோர்களும், மாணவர்கள் சங்கத்தினரும் அவர்களை சந்தித்து உரையாடினர். ஒவ்வொரு ஆசிரியரும் எந்த அளவிற்கு இதனை ரசித்து பார்த்தோம் என்பதை பகிர்ந்து கொண்டனர். இதுமாதிரியான ஒரு நல்ல திரைப்படத்தை கொடுத்ததற்காக திரைப்பட தயாரிப்பாளருக்கும் அதில் நடித்த நடிகர்களுக்கும் மாணவர் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொண்டனர். சாட்டை திரைப்படம் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்குமானது என்று நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அனைவருமே ஒத்துக்கொண்டனர். அடுத்த ஆண்டு ஆசிரியர் தயாளனுக்கு நல்லாசிரியர் விருது கிடைக்கும் என்று பெற்றோர்கள் ஆசிரியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டபோது அனைவரும் கரவொலி எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

காந்தி ஜெயந்தி தினத்தை ஒட்டி ஒளிபரப்பான இந்த சிறப்பு நிகழ்ச்சி சினிமா நடிகர்களை அழைத்து சாதாரணமாக பேட்டி காணாமல் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களையும் அழைத்து அவர்களையும் கலந்துரையாடலில் பங்கேற்கச் செய்தது சிறப்பானதாக அமைந்திருந்தது. விஜய் டிவியால் மட்டுமே இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடியும் என்று மீண்டும் நிரூபித்துள்ளனர்.

 

இளையராஜா முடியாதுன்னு சொன்னா நானே இறங்கிடுவேன் - குண்டு வீசும் தயாரிப்பாளர்

அஜந்தா.. இசைஞானி இளையராஜா இசையில் நான்கு மொழிகளில் உருவாகியுள்ள படம் இது.

சிறந்த இசைக்கான விருதினைக் கூட தமிழக அரசு இந்தப் படத்துக்குத்தான் வழங்கியுள்ளது. ஆனாலும் இன்னும் ரிலீசாகவில்லை.

இப்போது படத்தை வெளியிடும் தீவிர முயற்சியில் உள்ளார் இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜ்பாரவிசங்கர்.

சமீபத்தில் இந்தப் படத்தின் பிரஸ்மீட் எம்எம் தியேட்டரில் நடந்தது. இதில் கலந்து கொண்ட ரவிசங்கர் கூறுகையி்ல், படம் வெளியாகும் முன்பே இதற்கொரு கவுரவத்தைப் பெற்றுத் தந்துள்ளது இசைஞானியின் இசை.

இனிமேல் நான் தயாரிக்கப் போகும் எல்லா படத்திலும் இளையராஜாதான் இசையமைப்பார். ஒருவேளை முடியலேன்னு சொல்லிட்டா... நானே இசையமைக்கப் போறேன். எல்லாரையும் விட எனக்கு மூளை கொஞ்சம் அதிகம்.

இந்தப் படத்தை வெளியிடுவதில் சில காரணங்களால் தாமதமாகிடுச்சி. அப்பவே பண்ணி ஒரு முப்பது கோடி கலெக்ட் பண்ணியிருக்கும், என்றார் கொஞ்சமும் சிரிக்காமல்.

இன்னொன்று, இந்த படத்தை ரஜினி படத்துக்குப் போட்டியா ரிலீஸ் பண்ண நினைச்சாராம் ராஜ்பா.. அப்பப்பா

 

ஓய்வை அறிவித்தார் யாஷ் சோப்ரா.. ஷாரூக்கான் படம்தான் கடைசி

Bollywood Legend Yash Chopra Announces Retirement

பிரபல இந்திப் பட இயக்குநர் யாஷ் சோப்ரா தனது நீண்ட திரைவாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியில் பல கோல்டன் ஜூப்லி படங்களைக் கொடுத்தவர் யாஷ் சோப்ரா. தீவார், சில்சிலா, த்ரிசூல், டாக், சாந்தினி, லம்மே, வீர்ஜரா, தில் தோ பாகல் ஹை என அவரது படங்களின் பட்டியல் பெரிது.

80 வயதாகும் யாஷ் சோப்ரா இப்போது ஷாரூக்கான் நடிப்பில் ஜப் தக் ஹை ஜான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் நவம்பர் 13-ம் தேதி வெளியாகிறது.

இந்தப்படம்தான் தனது இயக்கத்தில் வரும் கடைசி படம் என்றும், இனி ஓய்வெடுக்கப் போவதாகவும் அறிவி்த்துள்ளார்.

அவரது இந்த முடிவு பெரும் சோகம் தருவதாகவும், நடிகர் நடிகைகளுக்கு பெரும் இழப்பு என்றும் பாலிவுட் பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

பரீட்சைக்கு நேரமாச்சு ரீமேக்கில் சந்தானம்!

Santhanam Paritchaiku Neramaachi Remake

சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த பரீட்சைக்கு நேரமாச்சு படம் ரீமேக் ஆகவுள்ளதாம். அதில் சிவாஜி வேடத்தில் ஒய்.ஜி.மகேந்திராவும், அவர் நடித்த வேடத்தில் சந்தானமும் நடிக்கவுள்ளனராம்.

சிவாஜிகணேசனின் நடிப்பில் பேசப்பட்ட படம் பரீட்சைக்கு நேரமாச்சு. அதில் அவரது மகனாக ஒய்.ஜி.மகேந்திரா நடித்திரு்பபார். இப்படத்தை இப்போது ரீமேக் செய்யவுள்ளனராம். இதுதொடர்பான விவாதம் நடந்து வருகிறதாம்.

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒய்.ஜி.மகேந்திராவின் நாடக குரூப்பின் விழாவில் சந்தானமும் கலந்து கொண்டார். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசிக் கொண்டனர்.

தமிழ் சினிமாவை இப்படியா கதைப் பஞ்சம் பிடித்து ஆட்ட வேண்டும்...!

 

ரசிகர்களை ஈர்க்கும் பழைய திரைப்படங்கள்!

Old Is Gold Sun Life Vs Murasu

கலைஞர் தொலைக்காட்சியில் இருந்து புதிதாக தொடங்கப்பட்ட முரசு டிவிக்கும் சன் குழுமத்தின் சன் லைப் தொலைக்காட்சிக்கும் இடையேயான போட்டி அதிகரித்துள்ளது. இரண்டு தொலைக்காட்சிகளிலும் பழைய திரைப்படங்கள், பாடல்கள் போன்றவைகளை தொகுப்பாளர்களின் தொந்தரவு இல்லாமல் ஒளிபரப்புவதே ரசிகர்களை அதிக அளவில் ஈர்த்துள்ளது என்று கூறப்படுகிறது.

இசை சேனலோ, நகைச்சுவை சேனலோ யாராவது ஒரு தொகுப்பாளினி பேசி போரடித்துக்கொண்டிருப்பார். சில சமயம் இதுவே நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆனால் ஜெயாடிவியின் மேக்ஸ், மூவி சேனல்களில் இதுபோன்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் தொந்தரவு இருக்காது. இருந்தாலும் நேயர்களிடையே இந்த தொலைக்காட்சிகளுக்கு வரவேற்பு குறைவாகவே இருந்தது.

இதனிடைய பழைய பாடல்கள், பழைய திரைப்படங்களை ஒளிபரப்புவதற்காக சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் இருந்து முரசு சேனல் தொடங்கப்பட்டது. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் தாத்தா, பாட்டி காலத்தவை என்றாலும் இன்றைக்கு வீட்டில் உள்ள தாத்தா, பாட்டிகளுக்கு அவை நல்ல பொழுது போக்காக இருக்கின்றனவாம்.

அதேபோல் முரசுக்கு போட்டியாக உள்ள சன் லைப் டிவியில் 80, 90களில் வெளிவந்த திரைப்படங்கள், பாடங்கள் ஒளிபரப்புகின்றனர். இது இன்றைய நடுத்தரவயதினரை கவர்ந்துள்ளது. சன் லைப் தொலைக்காட்சியிலும் தாத்தா, பாட்டிகளை கவரும் வகையில் அவ்வப்போது பழைய திரைப்படங்களை ஒளிபரப்புகின்றனர். சீரியல்களைப் பார்த்து அலுத்துப் போன ரசிகர்களுக்கு இந்த தொலைக்காட்சிகளில் புத்துணர்வு கிடைக்கிறதாம். சபாஷ் சரியான போட்டி என்கின்றனர் பழைய சினிமாவையும், பாடல்களையும் விரும்பும் ரசிகர்கள்.

 

நீர்ப்பறவை படத்துக்கு யு - கண்ணீருடன் பாராட்டிய தணிக்கைக் குழுவினர்!

U Certificate Neerparavai   

ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் ‘நீர்ப்பறவை' படத்திற்கு யு சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கைக் குழு.

‘தென்மேற்கு பருவகாற்று' படத்தின் மூலம் மூன்று தேசிய விருதுகளை பெற்ற இயக்குனர் சீனுராமசாமி இயக்கி வரும் மூன்றாவது படம் இது.

விஷ்ணு, சுனேனா, சரண்யா பொன்வண்ணன், யோகி தேவராஜ் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் இசை குறுந்தகடு மற்றும் திரை முன்னோட்டம் வரும் 10 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் சத்யம் திரையரங்கில் நடக்கிறது.

இயக்குனர் பாலுமகேந்திரா, கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் மற்ற திரைக்கலைஞர்களுடன் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட இசை குறுந்தகடை ஹாரிஸ் ஜெயராஜ் பெற்றுக் கொள்கிறார்.

இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் பார்த்து, மிக நெகிழ்ந்து, கண்ணீருடன் பாராட்டியதுதான் ஹைலைட்!

 

எங்கள் காதலில் திரில்லும் இல்லை, திருப்பமும் இல்லை... லதாராவ்

Our Love Has No Thrill Says Latha Rao

மெட்டி ஒலி தொடரில் தொடங்கிய லதா ராவின் சின்னத்திரை பயணம் வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. கணவர் ராஜ்கமலுடனான குடும்ப வாழ்க்கை, குழந்தைகள் என சீரியலை விட்டு சற்று விலகி இருந்தாலும், சமையல் நிகழ்ச்சி, ரியாலிட்டி ஷோ என மீடியாவின் கவனத்திலேயே இருக்கிறார். பிஸியான வாழ்க்கைக்கு இடையே தன்னுடைய அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார் லதா ராவ்.

நடிகையாக வரவேண்டும் என்று திட்டமிட்டு வரவில்லை. பெங்களூரில் பிறந்தாலும் வளர்ந்ததெல்லாம் சத்தியமங்கலம் பக்கத்தில் பவானி சாகர் என்ற ஒரு சின்ன கிராமத்தில்தான். ஒரு விசேஷத்துக்காக சென்னைக்கு வந்தபோது, அங்கே பக்கத்தில் மெட்டி ஒலி தொடரின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அதை பார்க்கப் போன இடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அந்தத் தொடரில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தேன். அப்படித்தான் சின்னத்திரைக்குள் நுழைந்தேன்.

மெட்டி ஒலியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 30க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்திருக்கிறேன். அப்பா என்ற சீரியலில்தான் கணவர் ராஜ்கமலை முதன் முதலில் சந்தித்தேன். அப்பொழுது ஒரு ஹாய் கூட சொல்லிக்கொண்டதில்லை. பின்னர் பாலசந்தர் சாரின் ரெக்கை கட்டிய மனசு தொடரில் ராஜ்கமல் ஹீரோவாக நடித்தார் அதில் எனக்கு வில்லி கதாபாத்திரம். சீரியலில் தொடங்கிய காதல் நிஜத்தில் முடிந்தது. வீட்டில் சொன்னவுடன் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் முடிந்து விட்டது. எங்களின் காதலில் எந்த திரில்லோ, திருப்பமோ இல்லை என்பதுதான் உண்மை.

எங்களுடையது கண்டிப்பான கூட்டுக்குடும்பம். மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கைக்கு அடையாளமாக இரண்டு குழந்தைகள். பெரிய பெண் எல்.கே.ஜி படிக்கிறாள். இரண்டாவது குழந்தை பிறந்து 8 மாதம்தான் ஆகியிருக்கிறது. திருமண வாழ்க்கை, குழந்தைகள் என நடிப்பிற்கு சில காலங்கள் இடைவெளி விட்டாலும் மீடியாவின் கவனத்திலேயே இருப்பேன். கணவரின் ஈவன்ட் மேனெஜ்மென்ட் தொழிலுக்கு சப்போர்ட்டாக இருக்கிறேன்.

சன் தொலைக்காட்சியின் திருமதி செல்வம் தொடரில் நந்தினி கதாபாத்திரம் அதிக அளவில் பேசப்பட்டது. சூழ்நிலை காரணமாக திடீரென அந்த தொடரில் இருந்து விலக நேரிட்டது. சீரியல்களில் நெகடிவாக நடிப்பதை விட பாஸிட்டிவ் ஆக நடிப்பதையே விரும்புகிறேன்.

என் கணவர் ராஜ்கமல் நடிகர் என்பதால் நான் நடிப்பதற்கு நிறைய என்கரேஜ் செய்வார். இந்த மாதிரி கேரக்டர் செய்தால் நல்லா இருக்கும் என்று சொல்லுவார். நான் பெரியதிரை படங்களில் நடிப்பதுகூட அவர் கொடுத்த ஊக்கம்தான். அவரும் இதே இண்டஸ்ட்ரியில் இருப்பதனால், இதில் உள்ள கஷ்ட நஷ்டங்களை அவரால் ஈசியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அது எனக்கு ரொம்ப உதவியாக இருக்கிறது.

இப்பொழுது ஜெயா டிவியில் ஸ்டார் கிச்சன்' நிகழ்ச்சியை நாங்கள் இருவருமே தொகுத்து வழங்குகிறோம். அந்த நிகழ்ச்சியில் ஒருநாள் ஜாலியாக சமைத்துவிட்டு வரலாம் என்றுதான் போனோம். எங்களுடைய கலாட்டாவை பார்த்து விட்டு வாரா வாரம் தொகுத்து வழங்கச் சொல்லி விட்டார்கள். அது ஈசியாக இருக்கிறது. குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு வேலையை செய்ய முடிகிறது. சீரியல் என்றால் 30 நாளும் வேலை இருந்து கொண்டே இருக்கும் ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது எளிதானது.

இரண்டு சின்னக்குழந்தைகள் இருப்பதால் அவர்களை கவனிக்க அதிக நேரம் வேண்டும் என்பதால் இப்போதைக்கு புதிதாக சீரியல் எதிலும் கமிட் ஆகவில்லை. ஏனெனில் நான் நல்ல நடிகையாக இருப்பதை விட நல்ல அம்மாவாக இருப்பதையே விரும்புகிறேன் என்று பொறுப்பாக சொன்னார் லதாராவ்.

 

ரஜினிக்கு சம்பளம் ரூ 240 கோடி? - பரபரக்கும் கோலிவுட்!

Rajini S Salary Is Rs 240 Crore

விரைவில் ஹன்ஸ்ராஜ் சக்சேனா தொடங்கவுள்ள புதுப் படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ 240 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக ஒரு நாளிதழ் கிளப்பிய செய்தியால் மீடியா உலகம் பரபரத்துக் கிடக்கிறது!

ஒட்டு மொத்த இந்தியாவிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் ரஜினி நடித்த எந்திரன். அதற்கு முன்பு சிவாஜி, வசூலில் பல சாதனைகளைப் படைத்து இந்திய திரையுலகினரை வியக்க வைத்தது.

இப்போது ரஜினி நடித்துவரும் கோச்சடையான் படம் உலகம் முழுவதும் ஹாலிவுட் படத்துக்கு நிகராக வெளியாகும் நிலையில் உள்ளது.

ரஜினியை வைத்து படமெடுத்தால், அது உலக அளவிலான பெரும் வசூலுக்கு உத்தரவாதம் என்பதால், அவருக்கு எவ்வளவு கோடிகள் வேண்டுமானாலும் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.

இந்த நிலையில், இதுவரை இந்திய சினிமாவில் யாரும் கேட்டிராத பெரும் தொகையான ரூ 240 கோடியை சம்பளமாகத் தர சக்சேனா முன்வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ரஜினியைச் சந்தித்தாராம் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. தனக்கு 30 நாட்கள் மட்டும் கால்ஷீட் தந்தால் போதும், ஒரு புதிய மெகா பட்ஜெட் படத்தை உருவாக்கிவிடுவேன் என்று கூறினாராம்.

இந்தப் படத்தில் ரஜினியுடன் தெலுங்கின் டாப் நடிகர் ராம்சரண் தேஜாவை நடிக்க வைக்கத் திட்டமாம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் நேரடியாக வெளியிட்டு, இந்த பெரும் தொகையை வசூலிக்கத் திட்டமாம்.

விஷயத்தைக் கேட்ட ரஜினி, யோசித்துச் சொல்வதாகக் கூறிவிட்டாராம்.

சக்சேனா சொல்லும் கணக்குப்படி பார்த்தால் ரஜினிக்கு ஒரு நாளைக்கு ரூ 8 கோடி சம்பளம். ஹாலிவுட்டில் முதல் நிலை நடிகர்களுக்கு இணையான சம்பளம் இது.

இதுகுறித்து சாக்ஸ் பிக்சர்ஸ் தரப்பில், "இந்த திட்டம் குறித்து இப்போதே கருத்து சொல்வது சரியல்ல. பேசிக் கொண்டிருக்கிறோம். ரஜினி சார் சரி என்றதும், ராம்சரண் தேஜாவை அணுகப் போகிறோம்," என்று தெரிவித்துள்ளனர்.

 

நகைச்சுவைதான் என்றாலும் இது கொஞ்சம் டூ மச்தான்!

This Is Too Much Guys

தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளை கிண்டல் செய்து ஒளிபரப்புவது தூர்தர்சன் காலம் தொடங்கி செய்யப்படுவதுதான். ஆனால் இன்றைக்கு அதுவே பேஷனாகிப் போய்விட்டது. பெப்ஸி உங்கள் சாய்ஸ் உமா தொடங்கி இன்றைக்கு நீயா நானா கோபிநாத் வரை கிண்டலுக்கு ஆளாகாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். பிரபல நிகழ்ச்சியைப் போலவே கிண்டலாக தயாரித்து காமெடிக்காக ஒளிபரப்பி வந்திருக்கின்றனர்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியை ஜெயா ப்ளஸ் டிவியில் ‘நீங்களும் செல்லலாம் தெருக்கோடி' என்ற பெயரில் ஒளிபரப்புகிறார்கள். சின்னக் குழந்தையிடம் கேள்வி கேட்டு அது அழுவதை கூட காமெடியாக காட்டுகின்றனர்.

அதேபோல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை பாலிமர் தொலைக்காட்சியில் பவர் ஸ்டார்ஸ் குழுவினர் ‘சொல்வதெல்லாம் பச்சைப் பொய்' என்ற பெயரில் காமெடி செய்தார்கள்.

சாதாரண குடும்ப பிரச்சினையை எந்த அளவிற்கு ஊதி பெரிதாக்கி அடி தடியில் முடிக்கிறார்கள் என்பதை காமெடி கலந்து சொன்னார்கள் பவர் ஸ்டார்ஸ் குழுவினர். அதற்காக நிகழ்ச்சி நடத்தும் நிர்மலா பெரியசாமியின் மடியில் அமர்ந்து குறையை சொல்வது போல அமைத்திருப்பது நகைச்சுவைக்காகத்தான் என்றாலும் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது. ஆனால் தங்களின் நிகழ்ச்சியை கிண்டல் செய்வதை சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம் என்று நிர்மலா பெரியசாமி கூறியிருப்பதுதான் மிகப்பெரிய காமெடி.

 

செளந்தர்யாவின் சொத்துக்காக குடுமிபிடி சண்டையில் குடும்பத்தினர்!

Soundarya S Relatives Fight Over Her Property

பெங்களூர்: மறைந்த நடிகை செளந்தர்யாவின் ரூ. 50 கோடி சொத்துக்காக அவரது குடும்பத்தினருக்கிடையே பெரும் சண்டை நடந்து வருகிறதாம்.

கர்நாடகாவைச் சேர்ந்தவர் நடிகை செளந்தர்யா. கன்னடம் தவிர தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்தவர். அழகான, நன்கு நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெயரைப் பெற்றவர்.

கடந்த 2004ம் ஆண்டு பாஜக தேர்தல் பிரசாரத்திற்காக ஆந்திராவுக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியதில் செளந்தர்யா மரணமடைந்தார். அந்த விபத்தில் அவருடன் அவரது சகோதரர் அமர்நாத்தும் உயிரிழந்தார்.

இந்த நிலையில் செளந்தர்யாவின் ரூ. 50 கோடி மதிப்புள்ள சொத்துக்காக அவரது குடும்பத்தினருக்கிடையே பெரும் மோதல் மூண்டுள்ளது. செளந்தர்யாவின் தாயார் மஞ்சுளா, செளந்தர்யாவின் முன்னாள் கணவர் ராஜு ஒருபக்கமாகவும், அமர்நாத்தின் மனைவி நிர்மலா, நிர்மலாவின் மகன் சாத்விக் ஆகியோர் மறுபக்கமாகவும் பிரிந்து நின்று மோதி வருகின்றனராம்.

செளந்தர்யா மரணமடைந்தபோது அவருக்குச் சொந்தமாக 6 சொத்துக்கள் இருந்துள்ளன. இது போக தங்க நகைகள் உள்ளிட்ட பிற சொத்துக்கும் இருந்தன. தனது சொத்துக்கள் தொடர்பாக ஒரு உயிலை விட்டுச் சென்றிருந்தார் செளந்த்ர்யா. அதில் ஒரு வீட்டை அவர் தனது சகோதரர் மகன் சாத்விக் பெயரில் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வீடு பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்தது. ஆனால் இந்த வீடு தான், செளந்தர்யா மற்றும் குடும்பத்தினர் பெயரில் உள்ள ஒரு ஜாயிண்ட் பிராப்பர்ட்டி என்று செளந்தர்யாவின் தாயார் மஞ்சுளா தற்போது கூறுகிறார்.

அதேபோல ஹைதராபாத்தில் உள்ள ஒரு சொத்தை குடும்பத்தினர் அனைவரும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று செளந்தர்யா கூறியுள்ளார். மேலும் 2 சொத்துக்களை தனது கணவருக்கும், குழந்தைகளுக்கும் அவர் எழுதி வைத்திருந்தார்.

சாத்விக் தனது அத்தை செளந்தர்யா தனது பெயரில் எழுதி வைத்திருந்த சொத்தை கையகப்படுத்த முயன்றபோது செளந்தர்யாவின் தாயார் தை எதிர்த்ததால், சாத்விக் கோர்ட்டுக்குப் போய் விட்டார். இந்த மோதல் மேலும் முற்றி இருதரப்பினரும் காவல் நிலையம் வரை போக நேரிட்டுள்ளது.

செளந்தர்யாவின் கணவரான ராஜு, செளந்தர்யாவின் மரணத்திற்குப் பின்னர் இன்னொரு கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் தற்போது செளந்தர்யாவின் சொத்துக்காக அவரது தாயாருடன் வந்து ஒட்டிக் கொண்டிருப்பதாக நிர்மலா தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.