சென்னை: மெட்ராஸ் கபே படம் ரிலீசாகும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என அப்படத்தின் தயாரிப்பாளர் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் போரை மையமாக வைத்து நடிகர் ஜான் ஆபிரகாம் "மெட்ராஸ் கபே' என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்த படத்தை ஷீகித் சர்கார் என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படம் இம் மாதம் 23-ஆம் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 70 திரையரங்குகளில் திரையிடத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், ஈழ விடுதலைப் போரை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் இயக்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளை கேவலமாகச் சித்தரித்துள்ளதால் இந்த திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என மதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் அறிவித்துள்ளன.
இதனால் அந்தப் படத்தை வெளியிட இப்போது திரையரங்குகள் தயங்குகின்றன. பிரச்சினையைத் தவிர்க்க சில திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வேண்டாம் என கூறிவிட்டன.
இதனால் அந்தப் படத்தை வெளியிடும் நிறுவனத்தின் நிர்வாகி விஜய ஆறுமுகம், சென்னை கமிஷனர் ஜார்ஜை திங்கள்கிழமை சந்தித்து, சென்னையில் "மெட்ராஸ் கபே' திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனு கொடுத்தார்.