- மதுரை தமுக்கம் மைதானத்திலிருந்து சங்கர்
மதுரை: மதுரையில் தடுக்கி விழுந்தால் இட்லிக் கடை, இடியாப்பக் கடை, இனிக்க இனிக்க உணவகங்கள, பாசக்கார மக்கள், எம்.ஜி.ஆர். ரசிகர்கள், ரஜினி பாலுக்கள், கமல் ராஜ்கள், நள்ளிரவு 12 மணிக்கும் உற்சாகம் குறையாமல் விழுந்து விழுந்து பேசிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம்... சிட்டுக் குருவியின் சுறுசுறுப்புடன் ஜில்லென்று உழைத்துக் குவிக்கும் மக்கள் கூட்டத்தில் சிக்கித் தவிக்கும் சிம்மக்கல்.. இப்படி நிறைய அடையாளங்கள்.. கூடவே காது குளிர இளையராஜாவின் பாட்டுக்கள்.
மதுரையின் அசைக்க முடியாத ஒரு அங்கம்தான் இளையராஜா. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் பண்ணைப்புரத்திலிருந்து வந்தவரான ராஜா இசை உலகின் உச்சம் தொட்ட பிறகும் கூட இதுவரை ஒருமுறை கூட மதுரையில் இசை நிகழ்ச்சியை நடத்தியதில்லை.
எலலா ஊருக்கும் போறீயே ராசா.. நம்ம ஊருக்கும் வாயேய்ய்யா வெரசா என்று மக்களெல்லாம் ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் இன்று பங்குனி வெயிலை விரட்டியடித்து மதுரை முழுவதையும் குளிர வைத்துள்ளார் ராஜா - தனது இசை வருகையின் மூலம்.
ஊரெங்கும் பெரும் உற்சாகம். எங்கு பார்த்தாலும் உற்சாக அலை மோதல்கள். அத்தனை சாலைகளும் தமுக்கத்தை நோக்கி திருப்பி விடப்பட்டதைப் போல ஜன சமுத்திரம் அலை கடலென அடித்துப் பிடித்து ஓடிக் கொண்டிருக்கிறது.
சித்திரைத் திருவிழாவுக்குத்தான் இப்படி மதுரை அல்லோகல்லப்படும். ஆனால் இளையராஜாவால் பங்குனியிலேயே விழாக் கோலம் பூண்டு விட்டது மதுரை. சும்மாவே எங்காளுங்க ராத்திரி கூட தூங்காமல் திரிவார்கள்.. இன்றைய ராத்திரி ஊருக்கு சிவராத்திரிதான் என்ற செல்லமான அலுப்புகள்.
தமுக்கம் மைதானம் நிரம்பி வழிகிறது. டிக்கெட் இல்லை என்ற போதிலும் சீறிப் பாய்ந்து குவிந்து கொண்டிருக்கிறது ரசிகர் கூட்டம்.
திருவிழாவுக்குச் செல்வது போல சீவி சிங்காரித்து குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருவதைப பார்த்து இந்தத் திருவிழாவுக்குப் 'போக மறந்தவர்கள்' ஆச்சரியத்துடன் பார்க்கும் அளவுக்கு விறுவிறுப்பான ஒரு காட்சி அரங்கமாக மதுரை மாறிப் போயிருக்கிறது.
பல சாலைகளில் வாகனங்களின் கூட்டம் காரணமாக ஒரு வழிப் பாதையாக மாற்றியுள்ளனர் காவல்துறையினர். அவர்களும் கூட இத்தனை பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. இதனால் மைதானத்திற்கு வருவோருக்கும், பொது மக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்து மாற்றங்களை செய்து கூட்டத்தை கையாண்டு வருகின்றனர்.
மதுரையில் இப்படி ஒரு கூட்டம், இதுவரை கண்டதில்லை. அழகர் ஆற்றில் இறங்கும்போது கூடும் கூட்டத்தைப் போலவே இந்த ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஆனால் இதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. மதுரையே கிட்டத்தட்ட ராஜாவின் ரசிகர் மன்றம்தான்.. அவரே முதல் முறையாக வந்திருப்பதால் ஒட்டுமொத்த ஊரும் உற்சாகமாகி விட்டது, அம்புட்டுதான், போய்க் கச்சேரியை கேட்டு ரசியுங்க என்று கூறுகிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.