மக்கள் டிவியில் சுட்டிக் குழந்தைகளின் 'நாடாளுமன்றம்'

Makkal Tv Parliament Program

நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நடக்கும் கூத்துக்களை பார்த்தாலே ஆளை விடுங்கடா சாமிகளா என்று டிவியை நிறுத்தி விடுவார்கள். இந்திய நாட்டின் நாடாளுமன்றம் போல ஒரு மாதிரி நாடாளுமன்றம் நிகழ்ச்சி ஒன்று மக்கள் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இது ஒரு மாறுபட்ட நிகழ்ச்சி.

"குழந்தைகள் பாராளுமன்றம்'' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மாண்புமிகு எம்பிக்களாக பதவியேற்க வருகிறார்கள். எல்லை பிரச்சனை தொடங்கி, கொல்லைப்புற பிரச்சனை வரை இங்கு அலசப்பட உள்ளது.

இந்த நாடாளுமன்றத்திலும் பட்ஜெட் தாக்கல் இருக்கும். ஆனால் பட்ஜெட்டை கிழித்து வீசும் தாக்குதல் இருக்காது என்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.

 

கேப்டன் டிவியில்: தமிழ் சினிமாவின் மறுபக்கம்

Ninaivellam Cinema Captain Tv Shows

பிற சேனல்களை விட கொஞ்சம் வித்தியாசமாக கொடுத்தால் எந்த ஒரு நிகழ்ச்சியுமே ரசிகர்களை எளிதில் சென்றடையும். கேப்டன் டிவியில் ஞாயிறுதோறும் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் `நினைவெல்லாம் சினிமா' நிகழ்ச்சியில் தமிழ், ஹாலிவுட் சினிமா தவிர, இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமா பற்றிய சுவாரஸ்யமான தகவல்களும் காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன.

இந்த நிகழ்ச்சி மறந்து போன பக்கங்கள், கவுபாய், பஞ்ச தந்திரம் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமா பற்றிய சுவாரஸ்யமான தகவல்களும், காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன. இரண்டாவது பகுதியில் இந்திய மொழிகள் அல்லாத பிற மொழிப்படங்களில் இருந்து ஆச்சரியப்பட வைக்கும் செய்திகளுடன் அசத்தலான காட்சிகளும் ஒளிபரப்பாகிறது.

பஞ்ச தந்திரம் எனப்படும் மூன்றாவது பகுதியில் சினிமாவில் நடைபெற்ற சுவையான, அதே சமயம் அநேக ரசிகர்கள் அறிந்திராத தகவல்கள் இடம் பெறுகின்றன. அவர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லாத அல்லது பார்க்க தவறிய காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன.

ஞாயிறு தோறும் 5 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி பெரும்பாலான சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளது என்கின்றனர் தொலைக்காட்சி விமர்ச்சகர்கள்.

 

பைக் விபத்தில் நடிகர் பாண்டியராஜனின் மகன் படுகாயம்!

Pandiyarajan S Son Injured

பைக் விபத்தில் நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரேம் ராஜன் (19) படுகாயமடைந்தார்.

பிரேம்ராஜன் பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் படித்து வருகிறார். தனது நண்பர் பாரத் (18) என்பவடன் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்குப் புறப்பட்டனர்.

மத்திய கைலாஷ் பகுதியில் சென்றபோது அவரது பைக்கின் முன் பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விழுந்தது.

இதில் பிரேம்ராஜன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பாரத்தின் கால் உடைந்தது. இருவரும் பெருங்குடி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பிரேம்ராஜன் தலையில் 18 தையல் போடப்பட்டது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

துப்பட்டாவால் 'பிரபுதேவாவை' மறைக்கும் நயன்தாரா

Nayantara Hides Prabhu Deva Tatto   

நயன்தாரா தன் கையில் உள்ள பிரபுதேவாவின் பெயரை துப்பட்டாவால் மறைத்துக் கொண்டிருக்கிறார்.

நயன்தாராவும், பிரபுதோவாவும் உருகி, உருகி காதலித்தனர். கடைசியில் பார்த்தால் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து சென்றுவிட்டனர். காதலித்த காலத்தில் பிரபுதேவாவின் பெயரை நயன்தாரா தனது இடது கையில் பச்சை குத்தினார். காதல் முறிந்த பிறகும் அவர் அந்த பச்சையை இன்னும் அழிக்கவில்லை. இந்நிலையில் அவர் தனது கையில் உள்ள பச்சையை அழிக்க வெளிநாடு சென்றார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்று நயன் தெரிவித்தார்.

இந்நிலையில் அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் நயன் கலந்து கொண்டார். அவர் கையில் உள்ள பிரபு தேவாவின் பெயரை எப்படியாவது போட்டோ எடுத்துவிட வேண்டும் என்று புகைப்படக்காரர்கள் முயன்றார்கள். அவர் முக்கால் கை உள்ள சுடிதார் அணிந்து துப்பட்டாவால் தன் கையில் உள்ள பச்சையை மறைத்துச் சென்றார்.

புகைப்படக்காரர்கள் முட்டி மோதி ஒரு வழியாக அந்த பச்சையை போட்டோ எடுத்துவிட்டனர். பிரபுதேவா என்னவென்றால் நயன் முடிந்து போன விஷயம் என்கிறார். ஆனால் நயன்தாராவோ பிரபுதேவாவின் பெயரை இன்னும் அழிக்காமல் வைத்துள்ளார்.

 

தூம் 3ல் ரஜினியை நடிக்க வைக்க விரும்பும் ஆமீர் கான்?

Aamir Khan Wants Rajinijkanth On Bo

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தான் நடிக்கவிருக்கும் தூம் 3 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க வைக்க விரும்புகிறார் என்று கூறப்படுகிறது.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆமீர் கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைப் உள்ளிட்டோரை வைத்து எடுக்கும் படம் தூம் 3. இந்த படத்தில் ஆமீர் கான் வில்லனாக நடிக்கவிருக்கிறார். இந்த படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இது குறித்து ஏதாவது செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் ஆமீர் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க வைக்க விரும்புகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து பாலிவுட் வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில்,

ரஜினி சாருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட்டில் இருக்கும் யாராலும் அதில் அவரை அடித்துக்கொள்ள முடியாது. அவர் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளார். அவர் ஸ்டைல், நடிப்பைப் பார்த்து விட்டு தான் ஆமீர் அவருடன் பணிபுரிய விரும்புகிறார் என்பது புரிகிறது. ஏற்கனவே ஐஸ்வர்யா ராய், ஷாருக் கான் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் ரஜினி சாருடன் நடித்துள்ளனர். அவருடன் நடிக்க பாலிவுட்டில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களும் விரும்புகிறார்கள் என்றார்.

தூம் 3 படத்தில் நடிக்க இந்தி கஜினிக்கு, நம்ம ரஜினி ஓ.கே. சொல்வாரா?

 

முரட்டுக்காளை - பட விமர்சனம்

Murattukkalai Review   

நடிகர்கள்: சுந்தர் சி, சினேகா, விவேக், சுமன், சிந்து துலானி, செல்முருகன்
இசை:ஸ்ரீகாந்த் தேவா
தயாரிப்பு: சூர்யா புரொடக்ஷன்ஸ்
இயக்கம்: கே செல்வபாரதி

எண்பதுகளில் ரஜினி நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற முரட்டுக் காளை படத்தை, ஒரு காட்சி கூட மாற்றாமல் அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள்.

ஆனால் ரஜினி படம் நிகழ்த்திய மாஜிக்கை, சுந்தர் சி காளையனாக வரும் இந்த மாடர்ன் முரட்டுக்காளை நிகழ்த்தியதா? பார்க்கலாம்...

முரட்டுக்காளை கதை ரொம்ப சிம்பிள். பாசமும் வீரமும் நிறைந்த அண்ணன் காளையனுக்கு (சுந்தர் சி), 4 தம்பிகள். ஒருவருக்கொருவர் அத்தனை பாசம். தானுண்டு தன் தம்பிகளுண்டு என போய்க்கொண்டிருக்கும் காளையன் மீது, ஊர் ஜமீன் சுமனின் தங்கை சிந்து துலானிக்கு காதல்.

தனது அடியாளின் தங்கை சினேகா மீது சுமனுக்கு ஒரு கண். ஆனால் சுமனைப் பிடிக்காமல், காளையனிடம் அடைக்கலமாக வருகிறார் சினேகா.

காளையன் - சிந்து துலானி, சுமன் - சினேகா விவகாரத்தை வைத்து பெரிய விளையாட்டை ஆரம்பிக்கிறார், தன் குடும்பத்தைத் தீர்த்துக் கட்டிய சுமனை உடனிருந்தே பழிவாங்கத் துடிக்கும் திருநங்கை சரோஜா (விவேக்).

வில்லன்களுடன் உக்கிரமான சண்டைகள், ரயிலில் தொங்கிக் கொண்டு மோதல் என அதே எண்பதுகள் காலத்து பார்முலாவைக் கடந்து ஹீரோவும் ஹீரோயினும் இணைவது க்ளைமாக்ஸ்.

ரஜினியின் முரட்டுக் காளையில் ஆரம்பத்தில் காளை சண்டை வரும். இதில் ரேக்ளா ரேஸ். அதேபோல சினேகாவுடனான இரண்டு டூயட்டுகள் தவிர்த்து எந்த வித்தியாசமும் இல்லை ஒரிஜினலுக்கும் ரீமேக்குக்கும்.

ஆனால் ரஜினியின் படத்தில் இருந்த இயல்பும், சுவாரஸ்யமான காட்சியமைப்பும், நடிப்பும், எல்லாவற்றுக்கும் மேல் இனிமையான இசையும் இந்தப் படத்தில் இல்லை!

காளையனாக வரும் சுந்தர் சி, ஓங்கியடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என்கிற ரேஞ்சுக்கு அடித்துக் கொண்டே இருக்கிறார். ரயில் சண்டைக் காட்சிகளில் ஓகே. தம்பிகளுக்கு தெரியாமல் சினேகாவை காதலிக்கும் காட்சிகள் இன்னும் அழகாக வந்திருக்க வேண்டாமா...?

சினேகா அழகாக வந்து போகிறார். அவரை அநியாயத்துக்கு ஓடவிட்டு 'படமாக்கி'யிருக்கிறார்கள்!

திருநங்கையாக வரும் விவேக் காட்சிகள் ஆரம்பத்தில் கலகலப்பாக இருந்தாலும், சில இடங்களில் வசனங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன. ஆனால் அவரும் செல் முருகனும் பதினாறு வயதினிலே ஸ்ரீதேவி - வெட்னரி டாக்டராக வரும் இடங்களில் வெடிச் சிரிப்பு!

சுமனைப் பார்க்கும்போதுதான், ஜெய்சங்கர் என்ற அற்புதமான நடிகரின் அருமை புரிகிறது!

ஸ்ரீகாந்த் தேவாவுக்கு ஒரே ஒரு விஷயத்துக்காக நன்றி சொல்ல வேண்டும். அது, பொதுவாக எம்மனசு.. பாடலை மெட்டு, வரிகள், பின்னணி இசை, குரல் என எதையும் மாற்றாமல் ரிமேக் பண்ணியிருப்பதற்காக! மற்ற பாடல்கள், பின்னணி இசை ம்ஹூம்..! ஒளிப்பதிவு பரவாயில்லை.

எம்ஜிஆர், ரஜினி போன்ற சாதனையாளர்களின் படங்களை ரீமேக் செய்தால், அந்த பழைய மேஜிக் மீண்டும் நிகழும் என நம்பக்கூடாது என்பதை மீண்டும் உணர்த்தியுள்ள படம் இது!

-ஷங்கர்

 

பில்லா இல்லாத சந்தோஷத்தில் 450 அரங்குகளில் களமிறங்கும் சகுனி!!

Saguni Gets Solo Release 450 Screens   

அஜீத் குமார் நடித்த பில்லா 2 படம் வெளியாகாத சூழலில், தன்னந்தனியாக உற்சாகத்துடன் நாளை மறுநாள் களமிறங்குகிறது கார்த்தி நடித்த சகுனி.

இந்தப் படம் நேரடியாக தெலுங்கிலும் அதே பெயரில் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இது கார்த்திக்கு முதல் தெலுங்குப் படமாகும்.

சகுனி படம் ஜூன் 22 என அறிவிக்கப்பட்டதும், 21-ம் தேதியே பில்லா 2 வெளியாகும் என்று கூறப்பட்டது. தியேட்டர்கள் முன்பதிவுக்கான வேலைகளை ஆரம்பித்த நிலையில், திடீரென்று சென்சார் பிரச்சினையில் சிக்கிக் கொண்டது பில்லா 2. பட வெளியீடு இந்த மாத இறுதியிலா... அடுத்த மாதமா என்று தெரியாத நிலை.

இது சகுனிக்கு ரொம்ப சாதகமாக அமைந்துள்ளது. தமிழில் சோலோ ரிலீசாகக் களமிறங்கும் இந்தப் படத்துக்கு இதுவரை 450 திரையரங்குகள் ஒப்பந்தமாகியுள்ளன. இதற்கு முன் கார்த்தி என்ன... சூர்யாவின் படமே தமிழகத்தில் இத்தனை அரங்குகளில் வெளியாகியிருக்குமா என்பது சந்தேகம்!

தியேட்டர்காரர்கள் பெரிய தொகையை மினிமம் கேரண்டியாகத் தந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் ஒரு காம்ப்ளெக்ஸ் மட்டுமே ரூ 30 லட்சத்தை இந்தப் படத்துக்குக் கொடுத்துள்ளதென்றால் சகுனி விற்பனையைப் பார்த்துக் கொள்ளுங்கள்!

விநியோகஸ்தர்கள் பாண்டவர்களாகாமல் இருந்தால் சரி!

 

ஆபாசம் இல்லாத சில்க் ஸ்மிதா கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சில்க் ஸ்மிதா வாழ்க்கை படத்தில் ஆபாசம் இருக் காது என்றார் சனா கான். இந்தியில் வெளியான சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமான 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' படத்தில் வித்யாபாலன் சில்க் ஸ்மிதா வேடம் ஏற்றதுபோல் மலையாளத்தில் உருவாகும் சில்க் ஸ்மிதா வாழ்க்கை படத்தில் சில்க் வேடம் ஏற்கிறார் சனா கான்.  இவர் சிலம்பாட்டம் படத்தில் நடித்தவர். இதுபற்றி சனா கான் கூறியதாவது: என்னைப்பற்றி சிலர் வதந்தி பரப்புகிறார்கள். இதனால் மன வேதனை அடைந்தேன். அதுபற்றி என் அம்மாவிடம் கூறவில்லை. என் மீது சுமத்தப்படும் தவறான வதந்திகளை அவரால் தாங்கிக்கொள்ள முடியாது. இனிமேலாவது அதுபோன்று யாரும் செய்ய வேண்டாம். வரும் காலங்களில் எல்லாம் நல்லவையாகவே நடக்கும் என்று நம்புகிறேன்.

மலையாளத்தில் 'கிளைமாக்ஸ்' என்ற படத்தில் நடிக்கிறேன். இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிப்பதுபற்றி கேட்கிறார்கள். அவரைப் பற்றி தெரிந்தவர்கள் இப்படத்தின் ஸ்கிரிப்ட் எழுதுவதால் நிறைய உண்மைகள் இருக்கும். மலையாள படவுலகுக்குள் நுழைய இதைவிட நல்ல கதை எனக்கு கிடைக்காது. இது ஆபாசத்தை வெளிப்படுத்தும் கதையாக இருக்காது. அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், சினிமாவில் சாதித்த விஷயங்கள் இருக்கும். இன்னும் சொல்வதென்றால் சிறியவர்களும் இப்படத்தை பார்க்கும் வகையில் தணிக்கையில் யு சான்றிதழ் பெறும் வகையிலேயே காட்சிகள் அமைக்கப்படுகிறது. இவ்வாறு சனா கான் கூறினார்.


 

எனக்கு வந்த காதல் கடிதங்கள்: அழகு தொகுப்பாளினி ரம்யா!

I Like Cinema Commercial Director Ramya

எந்த ஒரு நிகழ்ச்சியுமே வெற்றி பெறுவதற்கு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளுக்கு முக்கிய பங்குண்டு. அந்த வகையில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அழகு தொகுப்பாளினி ரம்யாவுக்கு அனைவரையும் கவர்ந்தவர். காம்பயர் ஆக இருந்தாலும் அவருக்கு இயக்குநர் ஆகவேண்டும் என்பதுதான் லட்சியமாம். நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தொடங்கிய தனது பயணம் பற்றி அவர் அளித்த பேட்டி

உலகத்திலேயே சென்னைதான் எனக்கு பிடித்த ஊர். ஏனென்றால் நான் பிறந்த இடமாயிற்றே. எல்லோர் மாதிரியும் என்னையும் என்ஜினீயர், டாக்டர் ஆக்கி அழகு பார்க்க நினைத்தது என் குடும்பம். அதில் எல்லாம் மனது ஒட்டவே இல்லை. ஏதாவது வித்தியாசமாகச் சாதிக்க வேண்டும் என தோன்றியது. அதனால்தான் இந்த துறைக்கு வந்தேன்.

வைஷ்ணவா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் முடித்த பிறகு மாடலிங் செய்து வந்தேன். அப்போதுதான் காம்பியரிங்கில் ஆர்வம் வந்தது. இன்றைக்கு காம்பியரிங் ஆசையில் தினமும் புதியதாக நிறைய பேர் வருகிறார்கள். காம்பியரிங் ஒன்றும் சுலபமான வேலை அல்ல. எவ்வளவு பெரிய ஆட்கள் வந்தாலும் எங்களைத்தான் எல்லோரும் கவனிப்பார்கள். காம்பியரிங் செய்யும்போது தமிழில் பேசுவதையே விரும்புகிறேன்.

எதையுமே வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என நினைப்பவள் நான். இதற்காக நிறைய இழந்திருக்கிறேன். திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் என் கனவு, ஆசை, லட்சியம் எல்லாமே. கல்லூரி காலத்தில் இரண்டு குறும்படங்களை இயக்கிய அனுபவம் எனக்கு உண்டு.

காம்பியரிங் மூலமாக நிறைய சினிமா உலக நட்பு கிடைத்தது. அவர்களும் உதவி இயக்குனராக பணிபுரிய அழைக்கிறார்கள். காம்பியரிங்கில் சிக்கிக்கொண்டதால் என்னால் அங்கு எளிதாகப் போக முடியவில்லை. என்றைக்கு இந்த துறை போதும் என்ற எண்ணம் வருகிறதோ, அன்றைக்கு ஒடிப்போய் சினிமாவில் சாதித்து விடுவேன். கமர்ஷியல் சினிமாக்கள்தான் இன்றைய சினிமா உலகத்தை ஆட்சி செய்கின்றன. எப்போதாவது வருகின்ற ஒன்றிரண்டு பெண் இயக்குனர்கள் கூட உணர்வுப்பூர்வமான கதைகளுக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள். அந்த நிலையை நான் மாற்றுவேன்.

சினிமாவில் நடிப்பதற்கு தினமும் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதில் எனக்கு ஆர்வம் சுத்தமாக இல்லை. சினிமாதான் வாழ்க்கையென்று கிளம்பியிருந்தால் இதுவரை நிறைய படங்களில் என்னையும் சராசரி நடிகையாக இந்த உலகம் பார்த்திருக்கும்.

இதுவரைக்கும் நிறைய பேர் காதலை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாரும் என்னை பாதிக்கவில்லை. இதுவரை எனக்கு வந்த காதல் கடிதங்களையெல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறேன். நாளை எனக்கு வரும் கணவரிடம் அவற்றைக் காண்பிப்பதற்காகத்தான் என்று கூறிவிட்டு சிரித்தார் அழகு ரம்யா.

 

நயன்தாராவை மறந்துட்டேன் - இனி அவரைப் பத்தி கேக்காதீங்க! - பிரபு தேவா

I Erases The Memories Nayanthaara

நயன்தாராவை அடியோடு மறந்துவிட்டேன். இனி அவரைப் பற்றி எதுவும் கேட்க வேண்டாம் என பிரபு தேவா கூறியுள்ளார்.

தீவிரமான காதலில் இருந்த நயன்தாரா, பிரபுதேவா இப்போது பிரிந்துவிட்டனர்.

திருமணத்துக்கு தயாரான நிலையில் காதலை இருவரும் துண்டித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா சினிமாவுக்கு முழுக்குப் போட்டு, இந்து மதத்துக்கும் மாறினார்.

பிரபுதேவாவும் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

மேலும் பிரபுதேவா தன் காதலுக்கு தகுதியில்லாதவர் என்றெல்லாம் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு பிரபுதேவா இப்போது பதிலளித்துள்ளார் (புதுப்புது அர்த்தங்கள் ரேஞ்சுக்கு போயிடுவாங்க போலிருக்கே!)

பிரபு தேவாவிடம், 'நயன்தாராவுடன் உங்களுக்கு என்ன பிரச்சினை. காதலை ஏன் முறித்துக் கொண்டீர்கள்?' என்று கேட்டதற்கு,

"இத்தனை நாள் பேசக்கூடாது என்று இருந்தேன். இப்போது இந்த கேள்விக்கு பதில் சொல்ல நான் விரும்புகிறேன். ஆனால் ஏதோ ஒன்று பேச விடாமல் தடுக்கிறது. எனவே இந்த விஷயம் பற்றி பேச விரும்பவில்லை. அவரைப் பத்தி கேக்காதீங்க. அது முடிந்து போன விஷயம். இப்போது எதையும் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. அதை மறந்து விட்டு மேலே போய்க் கொண்டே இருக்கிறேன். அதுதான் என் பாலிசி.

'நயன்தாரா தனது நேர்மைக்கும் விசுவாசத்துக்கும் மதிப்பில்லாமல் போனதால் விலகியதாக வருத்தப்பட்டுள்ளாரே?'

"நயன்தாரா வெளிப்படையாக பேசுவது அவரது விருப்பம். அதற்கொல்லாம் பதில் சொல்ல வேண்டியது இல்லை. அவர் சொல்வதெல்லாம் என்னை பாதிக்காது. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். என்னை பொறுத்தவரை கடவுள் விருப்பத்தின்படியே எல்லாம் நடக்கிறது. அவர் என்னை நல்ல பாதையில் வழி நடத்துவார்..", என்றார்.

'அடுத்தடுத்த படங்கள் குறித்து...'

"தங்கர்பச்சான் இயக்கத்தில் நான் நடித்த "களவாடிய பொழுதுகள்" அழகான காதல் கதை. அந்த படம் எப்போது வரும் என்று காத்திருக்கிறேன். இந்தியில் எனது படங்கள் நன்றாக போகிறது. தமிழில் நல்ல வாய்ப்புகள் வந்தால் வருவேன்.

சல்மான்கானுடன் மீண்டும் படம் பண்ண யோசனை இருக்கிறது. ரஜினியின் பாட்ஷா படத்தை அக்ஷயகுமாரை வைத்து ரீமேக் செய்யப் போவதாக வெளியான செய்தி உண்மையல்ல," என்றார்.

 

தமிழ் சினிமாவை உலகமே பெருமையாகப் பேசுகிறது! - கே.பாலச்சந்தர்

Now The World Is Proud Tamil Cinema   

ஒரு காலத்தில் ஏதோ ஒரு மாநில மொழிப் படமாக இருந்த தமிழ் சினிமாவை இன்று உலகமே கொண்டாடுவது பெருமையாக உள்ளது, என்று இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் பேசினார்.

பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் முதல் முறையாக இயக்கியுள்ள படம் ஆரோகணம். விஜி சந்திரசேகர், மாரிமுத்து, உமா உள்பட ஏராளமானோர் நடித்துள்ள இந்தப் படத்தை மலையாளத்தில் பல படங்களைத் தயாரித்துள்ள அனூப் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. ஜேஎஸ்கே பிலிம்ஸ் வெளியிடுகிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை மாலை சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.

இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் விழாவுக்கு தலைமை தாங்கினார். மூத்த இயக்குநரும் பல விருதுகள் பெற்றவருமான இயக்குநர் கேஎஸ் சேதுமாதவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

தமிழ் திரையுலகப் பிரமுகர்கள் இயக்குநர்கள் மிஷ்கின், வசந்த், பாண்டிராஜ், ஈரம் அறிவழகன், தயாரிப்பாளர் டி சிவா, நடிகர் தலைவாசல் விஜய், பின்னணி பாடகி சின்மயி, படத்தின் நாயகி விஜி, வடிவுக்கரசி, நடிகை சச்சு, நடிகர் ஏஆர்எஸ் உள்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

விழாவில் இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் பேசுகையில், "லட்சுமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆரோகணம் படத்தை நானும் பார்த்தேன். ரொம்ப நீட்டான, கச்சிதமான படம். மேக்கிங் எல்லாம் அருமை.

நானும் கூட அந்தக் காலத்தில் படம் எடுத்தேன். அக்னி சாட்சி. அதே சாயல் கதைதான். ஆனால் இந்தப் படம் அளவுக்கு விஞ்ஞான வார்த்தைகளை அதில் நான் பயன்படுத்தவில்லை. எனக்கு அது தெரியவில்லை.

படத்தின் பட்ஜெட் பற்றி சொன்னார்கள். நான் ஆச்சர்யப்பட்டுவிட்டேன். இவ்வளவு பட்ஜெட்டில் படம் எடுக்க முடியும் என்றால், நான் கூட ஒரு கதையை தயார் பண்ணி எடுக்கலாமே... சும்மாதானே இருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படும் அளவுக்கு எனக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்துவிட்டது ஆரோகணம் படம்.

முன்பெல்லாம் தமிழ் சினிமாவுக்கு மாநில மொழிப்படம் என்ற அந்தஸ்துதான். ஆனால் இன்று தமிழ் சினிமாவை உலகமே கொண்டாடுகிறது. எந்த நாட்டுக்குப் போனாலும் தமிழ் சினிமாவை பெருமையாகப் பேசுகிறார்கள். இந்தப் படம் உலகம் பேசும் அளவுக்கு உள்ளது. எடுத்துக் கொண்ட கதை, அதை சொல்லியிருக்கும் விதம் எல்லாமே சிறப்பாக உள்ளது.

இன்னொன்று படம் ஒன்றரை மணி நேரம்தான். அது நன்றாக உள்ளது. வயசாயிடுச்சி வேற... ரொம்ப நேரம் உட்கார்ந்து படம் பார்க்க முடியறதில்ல. பல காட்சிகளில் நெளிந்து கொண்டிருக்க வேண்டும். அப்படியெல்லாம் எதுவும் இல்லாமல், ரொம்ப சுருக்கமா, கச்சிதமா இருக்கு இந்தப் படம்.

பாடல்கள், இசை கூட அருமை. குறிப்பா அந்த தப்பாட்டம் பாட்டு எனக்கு பிடிச்சுப் போச்சு. தப்புத்தாளங்கள் படம் எடுத்தவனில்லையே... அந்த மாதிரி வரும் பாடல்கள் எனக்குப் பிடிக்கும்.

லட்சுமி ராமகிருஷ்ணன் இதுபோல 100 படங்களை எடுக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இந்தப் படத்தில் நடித்துள்ள விஜி (சரிதாவின் தங்கை)யை நான்தான் தில்லுமுல்லு படத்தில் அறிமுகம் செய்தேன். அவரது நடிப்பைப் பார்த்தபோது, எனக்கு சரிதாவைப் பார்ப்பது போலவே இருந்தது. ரொம்ப சிறப்பா நடிச்சிருக்காங்க. இது அவங்களுக்கு இன்னொரு தொடக்கம். சிறப்பாக வர வாழத்துகிறேன்," என்றார்.

சேதுமாதவன்...

பல வெற்றிப் படங்கள் - விருதுப் படங்களைத் தந்த இயக்குநர் கே எஸ் சேதுமாதவன் பேசுகையில், "சிறு பட்ஜெட் படங்களைத்தான் நானும் எடுத்திருக்கிறேன். ஒரு படம் பேசப்படுவது பட்ஜெட்டை வைத்தல்ல.. எடுத்துக் கொள்ளும் கதை. சொல்லும் விதத்தை வைத்துதான். அந்த வகையில் ஆரோகணம் ஒரு சர்வதேசத் தரத்திலான சிறந்த படம்.

பொதுவாக முன்பெல்லாம், தமிழ்ப் படங்கள் என்றதும், அங்கே பாட்டு, விதவிதமான லொகேஷன்கள், பொழுதுபோக்குச் சமாச்சாரங்கள் என அலங்காரங்கள் அதிகமாக இருக்கும். அழுத்தமில்லாமல் இருக்கும்," என்று சொல்வார்கள். இந்தப் படம் பார்க்கும்போது, அது பொய் என்று நிரூபணமாகிவிட்டது. சிறந்த நடிப்பு, அருமையான படமாக்கம். வசூல், விருதுகள் இரண்டும் குவிய வாழ்த்துகள்," என்றார்.

இயக்குநர் வசந்த் தனது வாழ்த்துரையில், "தமிழ் சினிமாவில் வெற்றிப் படம் தந்த முதல் பெண் இயக்குநர் என்ற பெருமை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு சேரும்," என்றார்.

என் இரண்டாவது தாய் - மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், "லட்சுமி ராமகிருஷ்ணன் தன் நடிப்பை, தொழிலை காதலிப்பவர். அவர் அளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவரைப் பார்க்க முடியாது. நான் இயக்கிய யுத்தம் செய் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் நதியா. ஆனால் தலையை மொட்டை அடிக்க வேண்டும் என்றதும், அவர் டூப் போட்டுக்கலாம் என்றார். நான் வந்துவிட்டேன். அப்போது வேறு ஒரு சின்ன வேடத்துக்காக வந்திருந்த லட்சுமியிடம், மொட்டை போட்டுக் கொள்ள முடியுமா? என்று கேட்டபோது, கேரக்டருக்கு தேவை என்றால் போட்டுக் கொள்கிறேன் என்றார். கதை கேட்டார், மொட்டையும் போட்டார்.

ஒரு பெண் மொட்டை போடுவது சாதாரண விஷயமல்ல. அது சங்க காலங்களில் நடந்திருக்கலாம். ஆனால் நிஜத்தில் 30 -40 வருடங்கள் வளர்த்த கூந்தலை மழித்துக் கொள்ள யாரும் விரும்புவதில்லை. லட்சுமி இதைச் செய்த போது, அவரது காலைத் தொட்டுக் கும்பிட நினைத்தேன்.

அவரது இந்த முதல் முயற்சி பெரும் வெற்றி பெற, நான் இரண்டாவது தாயாகக் கருதும் அவரையே வேண்டிக் கொள்கிறேன்," என்றார்.

லட்சுமி ராமகிருஷ்ணன்...

படத்தின் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது நன்றியுரையில், "ஒரு குழந்தை தப்புத் தப்பா, ஒருவித அறியாமையுடன் (Ingnorance) செய்த தயாரிப்பை பாராட்டுவதுபோல, குறைகளைப் பொறுத்துக் கொண்டு என் படத்தைப் பாராட்டியமைக்கு சாதனை இயக்குநர்கள், சக கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இதே அறியாமையுடன் தொடர்ந்து படங்கள் செய்ய விரும்புகிறேன். காரணம் அறியாமை தருகிற துணிச்சல்தான் புதிய முயற்சிகளைச் செய்ய வைக்கிறது. நான் அப்படியே இருக்க விரும்புகிறேன்.

இந்தப் படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தனர். சம்பளம்கூட வாங்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்," என்றார்.

முன்னதாக படத்தின் இசை குறுந்தகடை இயக்குநர்கள் கே பாலச்சந்தர், கேஎஸ் சேது மாதவன் வெளியிட, இயக்குநர் மிஷ்கின் மற்றும் இயக்குநர் அறிவழகன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

 

பிக் பாஸ் 6 ரியாலிட்டி ஷோவில் 'செக்ஸி' கிம் கர்தஷியான்?

Kim Kardashian Bigg Boss Season 6

எதையெடுத்தாலும் கவர்ச்சி என்றாகி விட்டது. பிக் பாஸ் மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா என்ன.. வீணா மாலிக்கை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சூடு சேர்த்த பிக் பாஸ் ஏற்பாட்டாளர்கள், அடுத்து 6வது எபிசோடில் கிம் கர்தஷியானை கூட்டி வர திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த கிம், ஒரு மாடல் அழகி, நடிகை மற்றும் டிவி ரியாலிட்டி ஸ்டார் ஆவார். 6வது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரை சேர்க்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முயன்று வருகின்றனராம். கிம் வந்தால் நிகழ்ச்சிக்கு கும் புகழ் கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்காக அவரை இழுக்க முயற்சிப்பதாக தெரிகிறது. ஆனால் அவரோ நாலரை கோடி கொடுத்தால் வருகிறேன் என்று தனது ஏஜென்டுகள் மூலம் ஓலை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டுக்கு கவர்ச்சி திலகங்கள் வருவது என்பது புதிதல்ல. ஏற்கனவே 4வது சீசனின்போது பமீலா ஆண்டர்சனை அழைத்து வந்து கவர்ச்சி களை கட்டினர். இதே நிகழ்ச்சியில் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் செய்த கவர்ச்சி அலப்பறைகள் இன்னும் ரசிகர்களால் மறக்க முடியாதது. அதேபோல 5வது சீசனில் ஆபாசப் பட நடிகை சன்னி லியோனை வரவழைத்து அனைவரையும் வியர்க்க வைத்தனர்.

சன்னி லியோன் வந்து போனதற்குப் பிறகு, யாராவது ஒருவர் அவரைப் போன்ற கவர்ச்சியுடன் இருந்தாக வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாம். சன்னி இடத்தை கிம்மால்தான் நிரப்ப முடியும் என்று முடிவெடுத்தே கிம்மை அணுகியுள்ளனராம்.

இந்த நிகழ்ச்சியின் வடிவமைப்பாளரான என்டமோல் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ தீபக் தர் இதுகுறித்துக் கூறுகையில், பல சர்வதேச பிரபலங்களை அணுகியுள்ளோம். இன்னும் எதுவும் முடிவாகவில்லை என்றார்.

ஒரு வேளை கிம் வந்தால் கூட அவருக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் இந்திய உணவு வகைகள் தனக்கு அறுவறுப்பாக இருப்பதாக கூறியிருந்தார். எனவே கிம், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா, மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா உள்ளிட்ட அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி பஞ்சாயத்தைக் கூட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வேளை அத்தகைய குப்பாச்சு குழப்பாச்சுக்களை எதிர்பார்த்தே, பப்ளிசிட்டியை மனதில் கொண்டே கிம்மை வரவழைக்க முயற்சிக்கிறார்களோ என்னவோ...

 

நடிகை ராதிகா ஆப்தே திருமண நிச்சயதார்த்தம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகை ராதிகா ஆப்தே ஆங்கிலேய காதலரை மணக்கிறார். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்தது. 'தோனி' படம் மூலம் தமிரூ.ல் அறிமுகமானவர் மராட்டி நடிகை ராதிகா ஆப்தே. தற்போது 'வெற்றிச்செல்வன்' படத்தில் நடிக்கும் அவர் இதன் ஷூட்டிங்கிற்காக சென்னை வந் துள்ளார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

'தோனி'க்கு பிறகு பல தமிழ்பட வாய்ப்புகள் வந்தன. அப்போது மராட்டி படங்களில் நடித்துக் கொண்டிருந்தால் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. 'வெற்றிச்செல் வன்' படத்தின் கதையும், கேரக்டரும் பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

எங்கு சென்றாலும் என் காதலை பற்றித்தான் கேட்கிறார்கள். நானும் லண்டனை சேர்ந்த பெனடிக் டெய்லர் என்பவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். பெனடிக் இசைக்கலைஞர். எனக்கும் இசை மீது ஆர்வம் இருந்ததால் காதலர்களானோம். கடந்த மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். பெனடிக் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். நான் நடிப்பதற்கும் அவர் தடை சொல்லவில்லை. திருணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்.


 

ரஜினி கோவையில் குடியேறத் திட்டமா?- உதவியாளர் விளக்கம்

Is Rajini Shjifting His House Coimbatore

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோயமுத்தூரில் தங்கப்போவதாக வந்துள்ள செய்திகள் குறித்து, ரஜினியின் உதவியாளர் விளக்கம் அளித்துள்ளார்.

ரஜினிக்காக கோவை ஆனைகட்டியில் வீடு தயாராவதாகவும், அங்கு அவர் சில காலம் தங்கியிருப்பார் என்றும் குமுதம் பத்திரிகையில் செய்தி வெளியானது. ரஜினிக்காக உருவாகும் வீடு என ஒரு படமும் வெளியாகியிருந்தது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இல்லை.

உடல்நலக்குறைவு ஏற்பட்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பியபோதே போயஸ்கார்டன் வீட்டில் இருந்து வெளியேறி கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் குடியேறப் போவதாக கூறப்பட்டது. ஆனால் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கினார்.

தற்போது கோவையில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமம் அருகே குடியேறப் போவதாக செய்தி பரவியது. இதற்காக அங்கு இடம் தேர்வு செய்து அழகான பங்களா கட்டி வருவதாகவும், அந்த பங்களாவின் கட்டுமான பணி முடியும் தருவாயில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

விரைவில் அந்த பங்களா வீட்டில் கிரகப்பிரவேசம் செய்து ரஜினி குடியேறப் போவதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இதனை ரஜினியின் உதவியாளர் மறுத்துள்ளார்.அவர் கூறும்போது, 'ரஜினி குடியேறப் போவதாக வெளியான செய்தி உண்மையானது அல்ல. ரஜினி எங்கேயும் போகமாட்டார். சென்னையில்தான் குடியிருப்பார்' என்றார்.

 

சிவாஜி, ரஜினி, கமலை வைத்து ஏராளமான படங்கள் தயாரித்த கே ஆர் ஜி மரணம்!

Veteran Producer Krg Passes Away

சென்னை: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கேஆர்ஜி எனும் கே ராஜகோபால் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 73.

மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்தது.

சிவாஜி, ரஜினி, கமல், மம்முட்டி, மோகன்லால் என ஜாம்பவான்களை வைத்து 65க்கும் அதிகமான படங்களைத் தயாரித்தவர் கேஆர்ஜி.

ஸ்ரீதர் இயக்கத்தில் வந்த நெஞ்சில் ஓர் ஆலயம், சிவாஜி நடித்த நேர்மை, தாய்க்கு ஒரு தாலாட்டு, திருப்பம், ரஜினி நடித்த ஜானி, கமல் நடித்த சிவப்பு ரோஜாக்கள், கடல் மீன்கள், சரத்குமார் நடித்த செம்மலர், பிரபு நடித்த பட்ஜெட் பத்மநாபன், மிடில்கிளாஸ் மாதவன், விஜய் நடித்த மின்சாரக் கண்ணா, மம்முட்டி, மோகன்லால் நடித்த மலையாளப் படங்கள் என 65க்கும் மேற்பட்ட படங்களை தனது 'கேஆர்ஜி இன்டர்நேஷனல் பிலிம் கார்ப்பரேஷன்' சார்பில் தயாரித்தவர் கேஆர்ஜி.

தயாரிப்பாளர் சங்கத்தில் 4 ஆண்டுகள் தலைவராகவும், பிலிம்சேம்பரில் 5 ஆண்டுகள் தலைவராகவும் இருந்தார். தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளை உருவாக முக்கிய காரணமாக இருந்தார் கேஆர்ஜி.

கலைமாமணி விருது பெற்றுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் அடுத்த தலைவர் பதவிக்கான வேட்பாளராக இவரை நிறுத்த ஒரு அணி முடிவு செய்திருந்தது. இந்த நிலையில் அவர் மரணமடைந்துவிட்டார்.

இவருக்கு ஒரு மகன் கங்காதரன். அவர் காலமாகிவிட்டார். மகள் பெயர் ராதா. கவுதம், மாளவிகா என மகன் வழி பேரன் பேத்திகள் உள்ளனர்.

திநகர் பாகீரதி அம்மாள் தெருவில் உள்ள வீட்டில் கேஆர்ஜி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம் நடக்கிறது.

திரையுலகம் அஞ்சலி..

கேஆர்ஜி மறைந்துவிட்ட செய்தி கேட்டு தமிழ் திரையுலகம் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர்கள் ஏவி எம் சரவணன், எஸ்ஏ சந்திரசேகரன், கலைப்புலி தாணு உள்பட பல தயாரிப்பாளர்கள் கேஆர்ஜி வீட்டில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஏராளமான நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள், மலையாள திரையுலக பிரமுகர்கள் கேஆர்ஜி வீட்டில் குவிந்து வருகின்றனர்.

தொடர்புக்கு- 9383388860 (பாலன் பிஆர்ஓ)