எல்லாம் முடிஞ்சு போச்சு.. ஆனாலும் ஒரு பயம்...!

சென்னை: பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து பலவருட போராட்டத்திற்குப் பின் வெளிவர இருக்கிறது விரல் நடிகரின் படம், கடந்த முறை எல்லாம் முடிந்து படம் வெளியிட சில நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் உள்ளே புகுந்த நிறுவனம் பயங்கர பிரச்சினையை உண்டு பண்ணி படத்தை வெளியிட முடியாமல் செய்து விட்டது.

படம் மீண்டும் பெட்டிக்குள் முடங்கி விடுமோ என்று எண்ணிய போது தளபதியான அந்த மூன்றெழுத்து நடிகர் வந்து பிரச்சினையை தீர்த்து வைத்தார், படத்தின் மீது உள்ள வழக்குகள் அனைத்தும் முடிந்து தற்போது முழு வேகத்துடன் படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

விளம்பரங்களை விறுவிறுப்பாக வெளியிட்டு வரும் படக்குழுவினருக்கு சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு பக்கம் சிறிய பயம் ஒன்றும் மனதிற்குள் எட்டிப் பார்க்கிறதாம்.

வேறு ஒன்றுமில்லை இந்த முறையாவது படம் வெளியாகுமா? அல்லது மீண்டும் ஏதேனும் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளுமா, என்ற பயம் தற்போது படக்குழுவினரின் மனதில் பூகம்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறதாம்.

படம் வெளியாகற வரைக்கும் உள்ளுக்குள்ள இந்த மாதிரி பயமெல்லாம் இருக்கத்தான் செய்யும் என்ன செய்யுறது...

 

வந்தா மல... சென்னைப் பெண்ணாய் வெளுத்து வாங்கிய ப்ரியங்கா!

விக்ரம், விஜய் சேதுபதி போன்று தனது முந்தய படங்களின் சாயல் தெரியாமல் அகடம், 13ஆம் பக்கம் பார்க்க, கங்காரு, வந்தா மல என வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ப்ரியங்கா. சொந்த ஊர் புதுச்சேரி.

Vandha Mala (U/A): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

வந்தா மல படத்தில் சேரியில் வாழும் பெண்ணாக சென்னைத் தமிழில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

பொதுவாக நடிகைகளிடம் கேள்வி கேட்கும் போது, நிறைய யோசித்து பதில் சொல்வார்கள் அல்லது இது வேண்டாமே.. இது பர்சனல்.. என்று மழுப்புவார்கள்.

Priyanka rocks in Vandha Mala

ஆனால் ப்ரியங்காவோ கேள்வியை முடிக்கும் முன்பே பதிலைத் தயாராக வைத்திருக்கிறார்.

அவரிடம் பேசியபோது..

நீங்க தமிழ் நல்லா பேசறீங்களே?!

ஆமாம் சார் .. நான் தமிழ்ப் பொண்ணு.. பாண்டிச்சேரி தான் என் சொந்த ஊர்.

தமிழ் சினிமால கேரளாவை சேர்ந்தவர்களும் மும்பை பொண்ணுங்களும்தானே நடிக்கறாங்க.... நீங்க எப்படி?

அப்படி இல்லை சார்.. நல்லா தமிழ் பேசி நடிக்கிற பொண்ணுங்க வேணும்னுதான் நிறைய டைரக்டர் விரும்பறாங்க.. அப்படிக் கிடைக்லைன்னுதான் மற்ற மாநிலத்திற்கு போக வேண்டிய சூழ்நிலை அவங்களுக்கு.. ஆனால் இப்ப அப்படி இல்லை.. நிறைய தமிழ் பொண்ணுங்க சினிமாவுல நடிக்கிறாங்களே..

Priyanka rocks in Vandha Mala

அங்காடி தெரு அஞ்சலி மாதிரி நீங்க நல்லா நடிக்கறீங்க.. அவங்க இடத்தை பிடிப்பீங்களா?

அஞ்சலி இடத்தை பிடிப்பேனா தெரியாது.. ஆனா எனக்குன்னு ஒரு இடம் தமிழ் சினிமாவுல இருக்கும் .. அதை நான் கண்டிப்பா பிடிப்பேன்.

வந்தா மல படத்தில அடிக்கடி முத்தத்தை பற்றியே பேசறீங்க.. நிஜ வாழ்கையில் யார் கிட்டயாச்சும் முத்தம் வாங்க ஆசை இருக்கா?

இருக்கு.. என் வருங்கால கணவரிடம்!

உங்க திருமணம் காதல் திருமணமா?

கண்டிப்பா இல்ல.. அதை செய்யத்தான் எனக்கு என் பெற்றோர் இருக்காங்க.. எனக்கு, என்ன செய்தா நான் நல்லா இருப்பேன்னு அவங்களுக்குத் தெரியும்.. எனவே எனக்கு திருமணம் நிச்சயம் அம்மா அப்பா பார்க்கிற பையன்கூடத்தான்.

Priyanka rocks in Vandha Mala

கதைக்கு தேவைன்னா..கிளாமரா நடிக்க சொன்னா நடிப்பீங்களா?

ஹாப் சாரி, சுடிதார்லையே என்ன பார்த்ததால இப்படிக் கேட்கறீங்கன்னு நினைக்கிறன்.. கண்டிப்பா மாடர்ன் பொண்ணா நடிப்பேன் சார் .. வந்த மல படத்துல சைபர் ஆகலாம்னு ஒரு பாட்டு வருது சார்.. அதை பார்த்தீங்கன்னா இப்படி கேட்க மாட்டீங்க..

தமிழ் பொண்ணுங்க கிளாமருக்கு மறுக்கிறதாலத்தான் இயக்குநர்கள் கேரளா மும்பை பக்கம் போறாங்க சரியா?

சரி, நானே இப்போ நீச்சல் உடையில வந்தா நீங்க ரசிப்பீங்களா? ஏம்மா நல்லா ஹோம்லியாத்தானே நடிச்சிட்டிருந்தே என்னாச்சும்மான்னு கேப்பீங்களா? மாட்டீங்களா? எல்லா படங்களுமே நீச்சலுடையில ஹீரோயின் கேட்கிறதில்லை. ஹோம்லியா உள்ள படங்களுக்கு ஏன் மும்பைக்கும் கேரளாவுக்கும் போகணும்? தமிழ்ப் பொண்ணுங்களை நடிக்க வைக்கலாமே? அப்போ நிறைய தமிழ்ப் பெண்கள் நடிக்க முன் வருவாங்க. அப்படி வர்றவங்களுக்கு நான் முன்னுதாரணமா இருக்க விரும்புறேன்.

வந்தா மலயில் ஆபாசமா வசனங்கள் பேசி நடிச்சிருக்கீங்களே?

சேரியில வாழுற சென்னை பொண்ணுங்க நான்.. இந்த படத்துல எனக்கு ரொம்ப போல்டான கேரக்டர்.. அங்க உள்ள பெண்கள் ஆண்களுக்கு சமம். அவங்களே ஆம்பள மாதிரி எல்லா வேலையும் செய்வாங்க. காதலைக் கூட மென்மையா சொல்லத் தெரியாது. ரோட்டோரம் படுத்திருக்கிறவங்களோட தாம்பத்திய வாழ்க்கை வெட்கப்பட்டா நடக்குமா? அப்படித்தான் வசந்தாவும். அவளுக்கு எதையும் ஒளிச்சிப் பேசத் தெரியாது. அதனால அந்த வசந்தா பேசுனது ரொம்பக் கம்மிதான்.

இந்த படத்துல சென்னை தமிழ் பேசி நடிச்சிருக்கீங்களே .. எவ்ளோ நாள் பயிற்சி எடுத்தீங்க..?

அதெல்லாம் இல்ல சார்.. இப்படித்தான் பேசணும்னு இகோர் சார் சொன்னதை செய்தேன்.. அவ்வளவுதான்..

நடிக்கும் படங்கள் பற்றி...

ரீங்காரம், திருப்பதி லட்டு, சாரல் னு மூணு படம் பண்றேன் சார்.. திருப்பதி லட்டு படத்துல சுரேஷ் காமாட்சி சார் இயக்கத்துல விஜய் வசந்த் சார் கூட ஜோடியா பண்றேன்.. முழுக்க முழுக்க காமடிப் படம்," என்றார்.

 

இதோ இன்னும் ஒரு காதல் கதை.. மதமும், கொள்கையும் போராடும் ... பானு!

சென்னை: தமிழ்த்திரையில் மற்றொரு காதல் கதையாக உருவாகியிருக்கும் பானு திரைப்படம் புதுமுகங்களின் உழைப்பில் உருவாகி இருக்கிறது. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படம் முழுவதுமே காதல் மற்றும் காதலை சார்ந்தே எடுக்கப்பட்டிருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

முஸ்லிம் பெண் ஒருவருக்கும் கடவுள் மறுப்புக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு இளைஞனுக்கும் வருகின்ற காதலைப் பற்றி கூறும் படமே பானு. படத்தில் நாயகி தன் காதலை விட்டுக் கொடுத்தாரா அல்லது நாயகன் தன் கொள்கையை விட்டுக் கொடுத்தாரா என்பதை விளக்கும் விதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஜீ.வீ.சீனு.

Baanu Movie Based a Love Story

படத்தை இயக்கியதுடன் நாயகனாகவும் நடித்திருக்கிறார் சீனு, இன்னொரு நாயகனாக நடித்திருக்கும் உதயராஜ் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். நந்தினி ஸ்ரீ நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகை சுஜிபாலா ஒரு பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் சீனு " படத்தின் திரைக்கதை பிரச்சினைக்குரிய வகையில் இருப்பது போல தோன்றினாலும் யார் மனதையும் புண்படுத்தாமல் படத்தை எடுத்திருக்கிறோம். தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யூ சான்றிதழ் அளித்திருக்கின்றனர்" என்று கூறியிருக்கிறார்.

Baanu Movie Based a Love Story

அடுத்த மாதம் படம் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, மும்பை மற்றும் சென்னை பகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது.

படத்தோட தலைப்புக்கு ரொம்ப யோசிச்சிருக்க மாட்டாங்க போல...

 

ஒரே நிறுவனத்திற்கு 3 படங்கள்.. முன்னணி ஹீரோக்களுக்கு "டப்" கொடுக்கும் பாபி

சென்னை: சூது கவ்வும் படத்தில் கேரக்டர் ரோலில் நடித்த பாபி சிம்ஹாவிற்கு ஜிகர்தண்டா படம் ஒரு மிகப்பெரிய வாழ்க்கையை அளித்திருக்கிறது, மனிதரின் கையில் தற்போது அரை டஜன் படங்களுக்கும் அதிகமாக இருக்கின்றன.

உறுமீன், கவலை வேண்டாம், கோ 2, பாம்புச்சட்டை, இறைவி போன்ற படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சிம்ஹா, ஒரே நிறுவனத்திற்கு அடுத்தடுத்து 3 படங்களை நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

Bobby Simha's Next Movie Title Veera

ரஜினி, மீனா, ரோஜா ஆகியோரின் நடிப்பில் 21 வருடங்களுக்கும் முன்னால் வெளிவந்து வெற்றிபெற்ற படம் வீரா, தற்போது அந்தப் தலைப்பையே பாபி சிம்ஹாவின் அடுத்த படத்திற்கு வைத்திருக்கிறார்கள்.

இந்தப்படத்தின் கதைக்கு வீரா என்கிற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று இயக்குநர் சொன்னதும், பஞ்சு அருணாசலத்தை சந்தித்து கதையைக் கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார். கதை பிடித்ததால் பெயரைத்தர உடனே சம்மதம் சொல்லிவிட்டாராம் பஞ்சு அருணாசலம், அதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.

பாபி சிம்ஹாவின் நடிப்பில் ஆக்‌ஷன் கலந்த நகைச்சுவைப் படமாக உருவாகவிருக்கும் வீரா திரைப்படத்தை, அறிமுக இயக்குநரான கே.ராஜாராமன் ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மெண்ட் நிறுவனத்திற்காக இயக்குகிறார்.

இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ஏற்கனவே கவலைவேண்டாம், கோ 2 ஆகிய படங்களீல் நடித்துக்கொண்டிருக்கிறார் பாபிசிம்ஹா. வீரா படத்தின் மூலம் ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் 3 படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்கும் நடிகராக மாறியிருக்கிறார் பாபி சிம்ஹா.

வலுவான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் பாபி சிம்ஹா தற்போது தமிழின் முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுக்கும் ஒரு நாயகனாக மாறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசால்ட் சேதுவுக்கு அடித்தளம் வலுவா இருக்கு போல...

 

பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் இல்லாமல் சின்னதாகப் படம் பண்ணும் கேஎஸ் ரவிக்குமார்!

கேஎஸ் ரவிக்குமார் என்றாலே பிரமாண்டம், பெரிய ஆர்டிஸ்ட், டெக்னீஷியன்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் லிங்காவுக்குப் பிறகு அவர் உருவாக்கும் புதிய படம் சிம்பிளாக தயாராகிறது.

கன்னடத்தில் முன்னணி ஹீரோவாக இருந்தாலும், தமிழைப் பொறுத்தவரை இன்னும் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறார் சுதீப். அவரைத்தான் நாயகனாக வைத்து தன் அடுத்த படத்தைத் தொடங்குகிறார் கேஎஸ்ஆர்.

KS Ravikumar's next project with Sudeep will start on Aug 10

நெடு நெடு உயரம் கொண்ட சுதீப்புக்கு இந்தப் படத்தில் ஜோடி 'குள்ள' நித்யா மேனன். தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் தயாராகிறது இந்தப் படம்.

இதுபற்றி சுதீப் கூறும்போது, "கே.எஸ். ரவிக்குமாரின் சமீபத்திய படங்கள் சரியாகப் போகாததால் அவருடைய திறமை குறைந்துவிடாது. இந்தப் படம் கமர்ஷியல் அம்சங்கள் கொண்டது. இதுபோன்ற படங்களை எடுப்பதில் அவர் திறமைசாலி," என்றார்.

ஆகஸ்ட் 10-ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.

 

ரஜினி படத் தலைப்பு.. கோதாவில் குதித்து 'வீரா'வைப் பிடித்த பாபி சிம்ஹா!

ரஜினி படங்களின் தலைப்புகளை முன்பு அவரது மருமகன் தனுஷ்தான் அடிக்கடி பயன்படுத்தி வந்தார். இப்போது அத்தனை நடிகர்களுமே கோதாவில் குதித்துவிட்டனர்.

சமீபத்தில் விஷால் பாயும் புலியை அனுமதி பெற்று பயன்படுத்தினார். அடுத்து அஜீத்தும் விஜய்யும் மூன்று முகம் தலைப்புக்காக காத்திருக்கிறார்கள்.

Bobby Simha pics Rajini's Veera title

இந்த நிலையில் சைலன்டாக வீரா தலைப்பை கொத்திக் கொண்டுள்ளார் பாபி சிம்ஹா.

இந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்போடைன்மென்ட்.

"திட்டமிட்டு நாங்கள் ரஜினி சாரின் இந்தத் தலைப்பை எடுக்கவில்லை. அது தானாக அமைந்தது. பாபி சிம்ஹாவின் தொழில் நேர்மைக்கு நாங்கள் தரும் பரிசு இந்த வீரா தலைப்பு. ரஜினி சார் படத் தலைப்பைவிட வேறு என்ன பெருமையை பாபி சிம்ஹாவுக்கு நாங்கள் தரமுடியும்," என்கிறார் எல்ரெட் குமார்.

நகைச்சுவை, ஆக்ஷன் கலந்த இந்தப் படத்துக்கு எழுத்தாளர் பாக்கியம் சங்கர் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார். வீரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் கே ராஜாராமன்.

'ஒரு நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தது வரும் கதா நாயகன் பாபி சிம்மாவுக்கு 'வீரா' மேலும் ஒரு மணி மகுடம் ஆக அமையும்,' என்கிறார் ராஜாராமன்.

"எனது நிறுவனம் சார்பாக பல் வேறு திறமையான புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன். அந்த வகையில் இந்த படத்தின் இயக்குநர் ராஜாராம் எங்கள் நிறுவனத்துக்கு பெரும் பெருமை சேர்ப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. புதிய நாயகி ஐஸ்வர்யா மேனன் இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் பால சரவணன் இந்தப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள இந்த படத்துக்கு மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது," என்றார் எல்ரெட் குமார்.

 

கல்யாணமெல்லாம் வேஸ்ட்... வேணும்னா சேர்ந்து வாழலாம்! - த்ரிஷா

திருமணம் செய்துகொண்டு, சண்டைபோட்டு விவாகரத்து பெறுவதைக் காட்டிலும் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து பிரிவது மேலானது என்கிறார் நடிகை த்ரிஷா.

Living Together is Trisha's choice

ஒரு தொழிலதிபருடன் த்ரிஷாவுக்கு திருமணம் நிச்சயமாகி, கடைசி நேரத்தில் திருமணம் ரத்தானது நினைவிருக்கலாம்.

இப்போது திருமணமே வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்ட த்ரிஷா, திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வது நல்லது என்று கூற ஆரம்பித்துள்ளார்.

Living Together is Trisha's choice

இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், "லிவிங் டுகெதர் முறை உறவு ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் இந்த உறவு சரி என்று தோன்றினால், பிறகு அதில் வேறு எந்தப் பிரச்னையும் இருக்கக் கூடாது.

திருமணம் செய்து, கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து பெற கோர்ட் படிகளில் ஏறுவதைக் காட்டிலும், லிவிங் டுகெதர் உறவில் இருந்து பிரிவது மேலானது, சிக்கலில்லாதது என நினைக்கிறேன்," என்றார்.

 

டார்லிங் பிரகாஷின் அடுத்த பட தலைப்பு "கைப்புள்ள"

சென்னை: ஜி.வி.பிரகாஷின் படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ தெரியாது ஆனால் தலைப்புகள் ஒவ்வொன்றும் அதிர வைக்கும் விதமாக இருக்கின்றன.

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, கெட்ட பய இந்த கார்த்தி, புரூஸ்லி என்று வரிசையாக தலைப்புகள் வைத்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த ஜி.வி.பிரகாஷ் தற்போது தனது அடுத்த படத்திற்கு கைப்புள்ள என்று பெயர் வைத்திருக்கிறார்.

G.V.Prakash Next Film Title

டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் மீண்டும் ஜி.வி.பிரகாஷை வைத்து இயக்கும் புதிய படத்திற்கு காமெடி கலந்த தலைப்பு வைத்தால் நன்றாக இருக்கும், என்று கருதி இந்த தலைப்பை தேர்வு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

வின்னர் படத்தில் இடம்பெற்ற பிரபலமான வசனமான கைப்புள்ள என்ற தலைப்பு ரசிகர்களைக் கவரும் என்ற நோக்கத்தில் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்து உள்ளனர்.ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா' ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

டார்லிங் படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே "கைப்புள்ள" படத்தையும் தயாரிக்கிறது.

 

சண்டி வீரனுக்கு சிங்கப்பூரில் தடை

சென்னை: சண்டி வீரன் திரைப்படத்தை வெளியிட சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூர் நாட்டில் வழங்கப்படும் ஒரு தண்டனையைப் பற்றி படத்தில் விமர்சனம் செய்யப்பட்டு காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Chandi Veeran (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

களவாணி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சற்குணம், இயக்கியுள்ள படம் 'சண்டி வீரன்'. இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோ நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இப்படத்தில் அதரவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக 'கயல்' ஆனந்தி நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் லால் நடித்துள்ளார்.இன்று தமிழகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது.

Sandi Veeran movie ban in Singapore

சிங்கப்பூரில் வேலைக்காக சென்ற இளைஞன் மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்து செட்டிலாகிறான். அப்போது அவனுக்கு ஏற்படும் சில பிரச்சினைகளை அவன் எப்படி சமாளிக்கிறான் என்பது தான் இப்படத்தின் கதை என்று சற்குணம் கூறியுள்ளார்.

இந்தப்படத்திற்கு சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூர் நாட்டில் கொடுக்கப்படும் தண்டனையைப் பற்றி இந்தப்படம் விமர்சனம் செய்யப்படுவதால் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திரைப்படத்திற்கு தடை விதிப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று இயக்குநர் சற்குணம் கருத்து தெரிவித்துள்ளார்.

 

பூனம் பாண்டேவுடன் ஒப்பிடும்போது இது கொஞ்சம் டீசன்ட்டா இருக்கு பாஸு!

டெல்லி: மத்திய அரசு, ஆபாச இணயைதளங்களுக்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து பலரும் பொறுமித் தள்ளி விட்டனர். ஆளாளுக்கு சமூக வலைதளங்களை குத்தகைக்கு எடுத்து குதிரை வண்டி ஓட்ட, மத்திய அரசு சற்றே பீதியடைந்து ஸாரிப்பா தடை செய்யலை என்று சொல்லி ஜகா வாங்க நேரிட்டது.

இந்தத் தடையைத் தொடர்ந்து, இதற்காகவே காத்திருந்தார் போல, கவர்ச்சி மாடல் அழகி பூனம் பாண்டே, நான்தான் இருக்கேன்ல என்று கூறி ஒரு ஹேஷ்டேக்கைப் போட்டு டிரெண்டிங் ஆக்க டிவிட்டர் பற்றிக் கொண்டது.

அவரது டிவிட்டுக்கு வந்த கமெண்டுகள் பயங்கர காரமாக இருந்ததைப் போல அவரது டிவிட்டர் பக்க படங்களும் காமா ரேஞ்சுக்கு இருந்தன.

இந்த நிலையில் இன்னொரு கவர்ச்சி இமயமான சன்னி லியோனும் அதே பாணியில் ஒரு கருத்தை டிவிட்டரில் போட்டார். ஆனால் பூனம் பாண்டேவைப் போல இ்ல்லாமல் ஒரே ஒரு படத்தை, நச்சென்று போட்டு சொல்ல வந்ததை சொல்லி விட்டு்ப் போய் விட்டார்.

தனது கணவருடன் இந்த போட்டோவில் காணப்படுகிறார் சன்னி. அவரது கணவர் டேணியல் வெப்பரின் டி சர்ட்டில் செக்ஸ் செல்ஸ் என்ற வாக்கியம் உள்ளது.. அவ்வளவுதான்!

சுருங்கச் சொல்லி நிறையவே வெளங்க வச்சுட்டாங்கப்பா சன்னி...!

 

கலாம் ஆவணப்படத்தை இந்தியா முழுவதும் திரையிட வேண்டும்- கங்கை அமரன்

திரைத்துறையினர் உருவாக்கி வரும் டாக்டர் அப்துல் கலாம் ஆவணப் படத்தை இந்தியா முழுவதும் திரையிட வேண்டும் என்று கங்கை அமரன் தெரிவித்தார்.

ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் இசை அமைப்பாளர் கங்கை அமரன், ஆர்.எஸ்.எஸ். மாநில செயலாளர் ஆடலரசன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, காந்தி கண்ணதாசன், ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Gangai Amaran's request on Kalam documentary

பின்னர் கங்கை அமரன் கூறுகையில், "இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக சிந்தித்து மாணவர்கள், இளைஞர்களை லட்சிய கனவு மூலம் உயர்த்த பாடுபட்ட மாமனிதர் அப்துல் கலாம். உலக நாடுகளின் பிரச்சனைக்கு அறிவுரை வழங்கிய அவர் உலக ஜோதியாக உருவாகி உள்ளார்.

கவிஞர் கண்ணதாசனின் 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம், வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்' என்ற பாடல் அப்துல்கலாம் பெயரை உச்சரிக்கும். இது அவருக்கு பொருத்தமான பாடலாக அமைந்துள்ளது. அவர் மறையவில்லை. நம்மிடம்தான் உள்ளார்.

அவரது லட்சிய பயணத்தை தொடர லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் உறுதி எடுத்துள்ளார்கள். கலாம் கனவை விதைக்க திரைப்படத்துறையினர் ஆவணப்படம் உருவாக்கி வருகின்றனர். அதை இந்தியாவில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ஒளிபரப்ப மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.