இந்தியாவின் ஜார்ஜ் குளூனி அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்... குஷ்பு

சென்னை: கோலிவுட்டில் இன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகின்ற "தல" அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார் நடிகை குஷ்பு சுந்தர்.

தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்கள் உள்ளனர், ஆனால் இதில் ஒரு சில நட்சத்திரங்கள் தான் காலம் கடந்து மின்னுகின்றனர்.

அந்த வகையில் எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன் சொந்த முயற்சியால் திரையுலகில் நம்பர் 1 இடத்தை நோக்கி பயணித்து கொண்டிருப்பவர் தான் அஜித்.

அவர் தன்னுடைய பிறந்தநாளினை இன்று கொண்டாடி வருகின்றார். அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ள நடிகை குஷ்பு, " என்னுடைய இந்தியாவின் ஜார்ஜ் குளூனி அஜித்துக்கு இன்று பிறந்தநாள்... ஹேப்பி பர்த்டே அஜித்... யூ ஆர் தி பெஸ்ட்" என்று டுவிட்டில் தெரிவித்துள்ளார்.

 

துபாயில் உத்தம வில்லன் ரிலீஸ்: ரசிகர்களோடு படம் பார்த்த கமல்

துபாய்: கமல் ஹாஸன் நடித்த உத்தமவில்லன் வியாழக்கிழமை மாலை துபாயில் திரையிடப்பட்டது.

கமல் ஹாஸன், பூஜா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள உத்தம வில்லன் படம் தமிழகத்தில் இன்று ரிலீஸாகியுள்ளது. முன்னதாக வியாழக்கிழமை மாலை துபாயில் உத்தம வில்லன் திரையிடப்பட்டது. இந்த திரைப்படம் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெளியிடப்பட்டது.

Uthama Villain in Dubai

துபாய் கோல்டன் சினிமாஸில் நடந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் கலந்து கொண்டார். இதனால் ரசிகர்கள் திரைப்படத்தைக் காண மிகவும் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

புர் துபாயில் உள்ள கோல்டன் சினிமாஸில் 1, 500 பேர் அமர்ந்து படம் பார்க்கலாம். கமல் ஹாஸன் வருகையால் நேற்று கோல்டன் சினிமாஸ் களைகட்டியிருந்தது. கோல்டன் சினிமாஸ் மூடப்பட உள்ளது. அந்த தியேட்டரில் வெளியாகியுள்ள கடைசி படம் உத்தம வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷார்ஜா திரையரங்கில் படம் பார்த்த மதுரையைச் சேர்ந்த டிசைனர் சீனி பாவா கூறுகையில், படத்தின் காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக கமல் குடுமியுடன் தோன்றுவது காமெடியாக இருந்தது. படம் போரடிக்காமல் குடும்பத்துடன் காணும் வகையில் அமைந்திருந்தது என்றார்.

துபாயில் படம் பார்த்த பொறியாளர் ஜுபைர் கூறுகையில், கமலின் நடிப்பு அவரது நடிப்புத்திறனை சிறப்பாக வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. கமல் தனக்கு வந்துள்ள நோய் குறித்து குடும்பத்தினருக்கும், குறிப்பாக மகனுக்கு தெரிவிக்கும் விதம் வித்தியாசமானது. எந்த நோய் வந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் பணியாற்ற வேண்டும் என்பதனை கமலின் நடிப்பு உணர்த்தியது என்றார்.

 

உத்தம வில்லன் தாமதம்.. ரசிகர்கள் ஆவேசம்.. போராட்டம், சாலை மறியல்

சென்னை: கமல்ஹாசன் நடித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உத்தம வில்லன் படத்தை திரையீடு பைனான்சியர்களால் தடைபட்டுள்ளதற்கு கமல்ஹாசன் ரசிகர்கள் கடும் ஆட்சேபனையும், கோபமும் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் போராட்டமும் நடந்தன.

உத்தமவில்லன் இன்று காலை திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் ஹிட்டாகி விட்டன. டிரெய்லரும் ஹிட்டாகி விட்டது. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது.

Kamal fans upset over the delay in Uthama Villain release

இதன் காரணமாக இன்று காலையில் தியேட்டர்களில் மிகப் பெரிய அளவில் கூட்டம் திரண்டிருந்தது. ஆனால் ரசிகர்கள் காட்சி திரையிடப்படவில்லை. அது ரத்தானதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோல காலைக் காட்சியும் திரையிடப்படவில்லை.

இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தது. படத்தைத் திரையிடுவது தொடர்பாக பைனான்சியர்கள் பிரச்சினையைக் கிளப்பியதால்தான் படம் திரையீடு தள்ளிப் போயுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு கூறி வருகிறது.

இதுகுறித்து ரசிகர்கள் கூறுகையில், ஏன் கமல் படத்துக்கு இப்படி செய்கிறார்கள். முன்பே பேசி சரி செய்திருக்க வேண்டியதுதானே, படம் பார்க்க ஆவலுடன் வந்த ரசிகர்களை இப்படியா ஏமாற்றுவது என்று கேட்டனர்.

சென்னை, மதுரை உள்பட பல இடங்களில் படம் திரையிடப்படாத காரணத்தால் ரசிகர்கள் கோபத்துடன் காணப்பட்டனர். அவர்களில் சிலர் திரையரங்குகளில் கோபத்துடன் நடந்து கொண்டதால் போலீஸார் தலையிட வேண்டி வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திராவிலும் கூட காலைக் காட்சிகள் வெளியாகவில்லை. இது கமல்ஹாசனின் ஆயிரக்கணக்கான ரசிகர்களை, டிக்கெட் எடுத்துக் காத்திருந்தவர்களை பெரும் கோபத்துக்குள்ளாக்க விட்டது.

சென்னை ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் திரையரங்கு முன் ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல், திருச்சியிலும் உத்தம வில்லன் படத்தை காண்பதற்காக இன்று காலை மேரிஸ் திரையரங்கம் முன்பும் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால், படம் வெளியாகாததை அடுத்து, ரசிகர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. ரம்பா தியேட்டர் முன்பும் காலையில் இருந்தே ரசிகர்கள் குவிந்தனர். படம் தாமதமாவதால் அவர்களில் சிலர் கலாட்டாவில் குதித்தனர். இதனால் போலீஸார் விரைந்து வந்தனர். 2 பேரைப் பிடித்துச் சென்றனர்.

 

வேணும்னா எடுத்துப் பூசிக்கோ... கதாநாயகியோடு கலாட்டாவில் இறங்கிய காமெடி டைம் அர்ச்சனா

சென்னை: காமெடி டைம் நிகழ்ச்சி காணாமல் போய் பத்தாண்டுகள் ஆனாலும் அந்த நிகழ்ச்சியை நடத்திய சிட்டிபாபுவையும் தொகுப்பாளினி அர்ச்சனாவையும் அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட மாட்டார்கள்.

கொக்கரக்கோ குமாங்கோ என்று கூறி சிட்டிபாபு கும்பிட... வணக்கம் வணக்கம் வணக்கம் என்று அர்ச்சனா சிரிப்போடு வைக்கும் வணக்கத்திற்காகவே பத்துமணிக்கு அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பார்கள்.

எந்நேரமும் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கும் அர்ச்சனா கல்யாணம் செய்து கொண்டு தொகுப்பாளர் தொழிலுக்கே குட் பை சொல்லிவிட்டு போனார். அமெரிக்காவில் ஒதுங்கியவர், அமெரிக்கா அலுத்துப்போய் சென்னையில் மீண்டும் செட்டில் ஆனார்.

Comedy time Arachana's teaser to heroine

விஜய் டிவியில் திருமண நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவதோடு முக்கிய பட விழாக்களையும் தற்போது தொகுத்து வழங்கி வந்த அர்ச்சனாவை நம்ம படத்துல நடிக்கிறீங்களா என்று கேட்டு சினிமா வாய்ப்பையும் வழங்கி வருகிறார்கள்.

இனியா படத்தில் அர்ச்சனா

அப்படிதான் இனியா கதாநாயகியாக நடிக்கும் ஒரு படத்தில் அர்ச்சனாவும் நடிக்கிறார். இனியாவுக்கு கதைப்படி இவர்தான் அக்கா. அதுவும் பிரியாணி போடும் அக்காவாம்.

கலர் ஃபுல் அக்கா

படத்தில் நடிக்கும் போது அர்ச்சனா கலராக இருப்பதால் பக்கத்திலிருக்கும் நாயகி இனியா மங்கலாக தெரிகிறாராம். இதனால் எரிச்சலான நாயகி ஒருநாள் வாய்விட்டே கேட்டுவிட்டார்.

டல்லா மேக் அப் போடுங்க

இந்த படத்தின் ஹீரோயின் நான்தான். நீங்க இனி டல் மேக்கப் போட்டுட்டு வாங்க என்றாராம் இனியா.

டென்சன் அர்ச்சனா

இதைக்கேட்டு கடுப்பான காமெடி டைம் சீரியஸ் ஆகி, அதை நீ சொல்லக் கூடாது. டைரக்டர் சொல்லட்டும். என்னைவிட நீ அழகா இருக்கணும், கலரா இருக்கணும்னா இருக்கவே இருக்கு, கலர். எடுத்து பூசிக்க வேண்டியதுதானே என்று எகிறி விட்டாராம் எகிறி.

ஒரே சமாதான படலம்தான்

இதனால் ஷுட்டிங் ஸ்பாட் ஏக கசமுசாவாக கதாநாயகியையும், அக்கா அர்ச்சனாவையும் புகுந்து சமாதானப்படுத்த வேண்டியதாகிவிட்டதாம். ஒருவழியாக அரை மனசோடு நடித்துக் கொண்டிருக்கிறாராம் இனியா.

 

விநாயகர் கோவிலில் சன்னி லியோன்... பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்!

மும்பை: மும்பையில் உள்ள பிரபலமான சித்திவிநாயக் கோவிலுக்கு வந்த நடிகை சன்னி லியோன் அங்கு பயபக்தியுடன் பிள்ளையாரை வணங்கிச் சென்றார்.

பளிச் பிங்க் மற்றும் மஞ்சள் நிற உடையில், வந்திருந்த சன்னி லியோன், தனது படங்கள் நன்றாக ஓட வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் கோவிலுக்கு வந்திருந்தாராம் சன்னி லியோன்.

Sunny Leone visits Siddhivinayak Temple

சன்னி லியோன் தற்போது குச் குச் லோச்சா ஹை என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் டிவி புகழ் ராம் கபூர் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படம் பாலிவுட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கவர்ச்சிகரமான வேடத்தில் நடித்துள்ளார் சன்னி.

மே 8ம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது. இந்தப் படம் நன்றாக ஓட வேண்டும் என்று கோவிலில் பிரார்த்தனை செய்து கொண்டாராம் சன்னி லியோன்.

 

சினிமாக்காரன் சாலை 22: சிகரத்திலிருந்து அதலபாதாளத்துக்கு...

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

தான் பெற்ற பிள்ளைக்கு வயது ஐந்துக்கும் மேல் ஆகியும் பேச்சு வரவில்லையே என்ற கவலை அந்த தாய்க்கு. கோவில் குளமெல்லாம் சுற்றி அன்னதானங்கள் ஆயிரம் செய்து காத்திருக்கையில் பத்தாவது வயதில் பேச ஆரம்பித்த அந்தக்குழந்தை தாயைப் பார்த்து கேட்ட முதல் பேச்சு , ‘ஆத்தா நீ எப்ப தாலியறுப்பே?' என்பதுதானாம் என்றொரு குரூர கதை கிராம வட்டாரங்களில் இன்றும் புழங்கக் கூடியது.

இன்றைய காலை தினசரிகளைப் புரட்டியபோது காணப்பட்ட அதிர்ச்சிகரமான ஜப்தி விளம்பரம் ஏனோ எனக்கு அந்தக் கதையை நினைவூட்டியது.

விநியோகஸ்தராக தனது சினிமா வாழ்க்கையை துவங்கி, இன்று தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற தயாரிப்பாளராக வலம் வரும் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் சொத்து ஜப்தி அறிவிப்புதான்.

கமல், விக்ரம், ஷங்கர், அந்நியன், தசாவாதாரம் 'ஐ' என்ற பெரும் சங்கதிகளைக் கட்டி ஆண்ட ஆஸ்கார் ரவியின் புகைப்படங்கள் இதுவரை எதிலும் வெளியானதில்லை. 'புகைப்படம் பிரசுரிக்கலாமா?" என்று கேட்டால் அரை டஜன் திருப்பதி லட்டுக்களைக் கொடுத்து கையெடுத்துக் கும்பிட்டு, ‘தெய்வமே என் போட்டோ எப்பவுமே மீடியாவுல வரக் கூடாது' என்று அனுப்பி வைப்பார் நிருபர்களை.

இதையும் மீறி தப்பித் தவறி யாரும் தனது புகைப்படங்களைப் போட்டு விடக்கூடாதே என்பதற்காக தனது படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட எப்போதாவது ரகசியமாக சென்று பூனை போல் வந்துவிடுவார். அவர் பட சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கும் திசைப் பக்கம் தலை வைத்துக்கூட படுப்பதில்லை. அதையும் மீறி யாராவது படம் எடுத்துவிட்டால் அந்த ஸ்பாட்டிலேயே கேமராவை விலைகொடுத்து வாங்கிவிடுவார்.

ஆனால்.... இன்று ‘ஆத்தா எப்ப தாலியறுப்பே' கேஸ் போல் அவரது முதல் புகைப்படம் ஜப்தி அறிவிப்பு நோட்டீஸ்களில் வெளியாகி,அவரது எதிரிகளும் இரக்கப்படும் சூழலைக் கொண்டு வந்திருக்கிறது.

Muthuramalingan's Cinemakkaran Saalai 22

இந்த ஆஸ்கார் ரவியை அவர் சினிமாவுக்கு வந்த வெகு சில நாட்களிலிருந்தே தெரியும் என்கிற வகையில் இந்த ஜப்தி நடவடிக்கை குறித்து எனக்கு மகிழ்ச்சியோ அதிர்ச்சியோ இல்லை.

காரணம் அசுர வளர்ச்சி என்பது எப்போதும் அதே வேகத்தில் வீழ்ச்சியிலேயே கொண்டுபோய் நிறுத்தும் என்பதற்கு இவர் இன்னுமொரு உதாரணம் அவ்வளவே.

கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்கார் ரவியைப்போல் இப்படி தலைகுப்புற வீழ்ந்த முன்னணி தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு டஜன் இருக்கும். சூப்பர்குட் நிறுவனம், லட்சுமி மூவி மேக்கர்ஸ், கே.டி.குஞ்சுமோன், ராஜகாளியம்மன் பிக்‌சர்ஸ், ஏ.வி.எம், போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் இப்போது சினிமாவில் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.

இந்தியன் தியேட்டர்ஸ் என்றொரு நிறுவனத்தின் தயாரிப்பாளர் முருகானந்தம் ‘மன்மதன்,' திருடா திருடி' போன்ற படங்களைத் தயாரித்தவர், இப்போது எடைக்குப் போட்டால் இருநூறு ரூபாய் தேறாத பழைய டி.வி.எஸ் 50'யில் போய்க் கொண்டிருக்கிறார். ‘கரகாட்டக்காரனுக்கு இணையாக வசூலித்த படம் ‘திருடா திருடி'. என்.எஸ்.சி ஏரியாவில் அந்தப்படத்தை ஏலத்தில் எடுக்க குவிந்த விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையில் கால்வாசிகூட இப்போது திரைத்துறையில் இல்லை.

இவரைப்போல பல வெற்றிப் படங்களைத் தயாரித்துவிட்டு டவுன் பஸ்ஸில் பயணம் போகும் தயாரிப்பாளர்கள் சிலரை தினமும் கோடம்பாக்கம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்தக் கொடூர சூழலை ஒத்துக்கொள்ளும் விதமாக தயாரிப்பாளர் சங்கத்தில் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு இலவச உணவு என்ற திட்டம் அமலில் இருப்பதே ஆதாரம்.

ஒரு கட்டத்தில் உச்சத்தில் இருக்கும் தயாரிப்பாளர், படுகுழியில் விழும் இந்த விபத்துக்கள் எப்படி நடக்கின்றன என்று பார்த்தால் அனைவருமே ஒருகட்டத்தில் அகலக்கால் வைத்தது தெரிய வரும்.

ஒருகோடி சம்பாதித்தவுடன் அடுத்த படத்தில் ஐந்து கோடிக்கு ஆசைப்பட்டு சூதாடுவார்கள். குதிரை குப்புறவிழுந்து குழியையும் பறித்துவிடுவது இங்கேதான்.

Muthuramalingan's Cinemakkaran Saalai 22

ஆஸ்கார் ரவியையே எடுத்துக்கொள்வோம். ஆரம்பத்தில் ‘ரோஜாக் கூட்டம்' ‘மனசெல்லாம்,' 'வானத்தைப் போல,' ரமணா' என அடக்கமான பட்ஜெட் படங்களைத்தான் எடுத்தார். அப்புறம் ஆசை தொற்றிக்கொள்ள பெரிய ஹீரோ பெரிய டைரக்டர் காம்பினேஷன்களைத் தேட ஆரம்பித்து, ‘தசாவாதாரம்,' ‘அந்நியன்,' ஐ' என்று பெரும்போக்கு போக ஆரம்பித்தார். வங்கிகளிலும், ஃபைனான்சியர்களிடமும் வட்டிக்கு வாங்கி, அந்த வட்டி குட்டி போட்டு, குட்டி காலில் மெட்டி போட்டு, இன்று ஜப்தி நோட்டீஸ் புகைப்படங்களில் தர்மசங்கடமாக முழிக்கிறார்.

இப்படி பெரிய பட்ஜெட் படங்கள் என்று போகிறபோது செலவுகள் எப்போதும் தயாரிப்பாளர் கட்டுக்குள் நிற்பதில்லை. ஒரு நாள் படப்பிடிப்புக்கு ஏழெட்டு கேரவன்கள் நிற்கின்றன. ஒரு படம் முடிந்தவுடன் கேரவன்களின் உரிமையாளர் நாகர்கோவில் ஏரியாவில் நாற்பது ஏக்கர் நிலம் வாங்கிபோடுகிறார். நூத்துச்சொச்ச நாட்கள் படப்பிடிப்பு முடிந்து பார்க்கிற போது ஸ்டார் ஹோட்டல் பில்கள் பல லட்சங்களில் பல்லிளிக்கின்றன.

நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கி சொத்துக்களை வாங்கிக் குவித்து விட்டு பாக்கிப் பணத்துக்கு சங்கத்தில் புகார் கொடுத்துவிட்டு சைலண்டாகிவிடுவார்கள். நடிகைகளுக்கு ஆகும் செலவுகள் அலாதியானவை. அவர்களது உதவியாளகள் கூட, வாங்கிய பேட்டா மற்றும் கன்வேயன்ஸ்களில், படம் முடியும் தறுவாயில் தயாரிப்பாளர்களை விட செழிப்பானவர்களாக இருப்பார்கள்.

இந்த கேரவன்கள், ஸ்டார் ஹோட்டல்கள், அளவுக்கு அதிகமாக புழங்கும் நட்சத்திரங்களின் உதவியாளர்களால் படத்துக்கு, அதன் தரத்துக்கு, ஒருபோதும் எந்த உபயோகமும் இல்லை. பெரிய படம் செய்வதால் மிகப்பெரிய பிசினஸ் ஆகிவிடும் என்ற மூட நம்பிக்கையில் இவற்றைப் படம் நடக்கிற சமயத்தில் எந்த ஒரு தயாரிப்பாளரும் கண்டுகொள்வதே இல்லை.

சினிமா செலவுகளில் அதன் தயாரிப்புக்கு நேர்மையாக ஆகும் செலவுகள் நான் கணித்தவரை நாற்பது சதவிகிதம் மட்டுமே. மற்றவை தண்டச்செலவுகள்.

இவற்றைக் கட்டுப்படுத்தாதவரை தயாரிப்பாளர்கள் இனம் அழிந்து அவர்கள் பழைய டி.வி.எஸ்50'களில் டவுன் பஸ்களில் போவதை, இலவச உணவுக்காக சொந்த கவுன்சிலில் கையேந்துவதை, வெளிவரவே கூடாது என்று நினைக்கிற தன் படத்தை கேவலமான பிரிண்டிங்கில் ஜப்தி நோட்டீஸ்களில் பார்ப்பதை சந்தித்தே தீரவேண்டும்!

 

ரஜினி - ஷங்கர் புதுப் படம் இன்று அறிவிப்பு?

ரஜினி படம் வெளியாகும் நாள் மட்டுமல்ல, அறிவிக்கப்படும் நாளும் கூட விசேஷமானதுதான்.

லிங்காவுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் புதிய படம் குறித்து ஏராளமான செய்திகள் கடந்த நான்கு மாதங்களாக வலம் வந்து கொண்டிருந்தன. அவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், அவரது புதுப்பட அறிவிப்பு உழைப்பாளர் தினமான இன்று வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

படத்தின் தலைப்பு குறித்து பல்வேறு யூகங்கள். இந்தப் படம் எந்திரன் 2 ஆ அல்லது வேறா என்பதற்கு இன்று விடை கிடைத்துவிடும் என்கிறார்கள்.

Rajini - Shankar new movie announcement today?

ஷங்கரின் வழக்கமாக காம்பினேஷன் இந்தப் படத்திலும் தொடரும் எனத் தெரிகிறது.

இந்தப் படத்தை லைக்கா நிறுவனமும் அய்ங்கரனும் கூட்டாகத் தயாரிக்கவிருக்கிறார்கள்.

ரஜினியின் எந்திரன் படத்தின் முதல் தயாரிப்பாளரும் அய்ங்கரன்தான். பின்னர்தான் அந்தப் படம் சன் பிக்சர்ஸ் கைக்குப் போனது நினைவிருக்கலாம்.

 

நடிப்பு, படிப்பு இரண்டையும் தொடர்வேன்! - லட்சுமி மேனன்

தமிழ் சினிமாவின் அதிர்ஷ்ட நடிகையான லட்சுமி மேனனுக்கு வாய்ப்புகள் குவிந்தாலும், அவர் கவனமெல்லாம் படிப்பிலேயே நிலைத்திருக்கிறது.

நடிப்பையும் படிப்பையும் சம அளவில் தொடர்வேன் என்கிறார் இந்த தேவதை.

சமீபத்தில் அவர் நடித்து வெளியான கொம்பன் படம், இதுவரை இல்லாத அளவுக்கு அவருக்கு பெயரைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. இதில் ரொம்பவே மகிழ்ந்துபோன லட்சுமி இப்படிச் சொல்கிறார்:

Lakshmi Menon decides to continue her studies

"நான், இதுவரை நடித்த படங்களில், 'கொம்பன்' வித்தியாசமான அனுபவம். அந்தப் படத்தின் கதையை இயக்குநர் முத்தையா என்னிடம் விரிவாகச் சொன்னார். படத்தில், நான்தான் நடிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அப்படி எனக்கு பொருந்துகிற மாதிரி என்ன இருக்கிறது? என்று முதலில் புரியவில்லை.

படம் திரைக்கு வந்தபிறகுதான் புரிந்தது. எந்த படத்துக்கும் வராத அளவுக்கு போன்கள், பாராட்டுகள் வந்து கொண்டே இருந்தன. இனிமேல், இதுபோன்ற கதைகளில்தான்0 நடிக்க வேண்டும் என முடிவே செய்துவிட்டேன்," என்றார்.

ப்ளஸ்டூ முடித்துவிட்ட லட்சுமி, அடுத்து பட்டப் படிப்பைத் தொடரப் போகிறாராம்.

 

‘உத்தமவில்லன்’ இன்னும் ரிலீசாகவில்லை!

சென்னை: ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் உத்தமவில்லன். இப்படத்தின் ரசிகர்கள் காட்சி இன்று காலை ரத்தானது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் படம் ரிலீசாகும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கமல் நடித்து இயக்குநர் லிங்குசாமி தயாரித்திருக்கும் படம் உத்தமவில்லன். நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ளனர். இவர்கள் தவிர கே. பாலசந்தர், விஸ்வநாத், ஜெயராம், நாசர், ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், பார்வதி, பார்வதி நாயர், சித்ரா லட்சுமணன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

Uthama villain movie release delayed

இப்படம் தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளில் வெளியாகிறது. சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் பெரிய படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தின் விளம்பரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமோக டிக்கெட் முன்பதிவும் நடைபெற்றது.

இன்று இப்படம் திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், திடீர் நிதி பிரச்சனையால் இப்படத்தின் முதல் காட்சி ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது. காட்சிகள் ரத்தானதாக செய்திகளும் வந்தன. இதையடுத்து தயாரிப்பாளர்கள் தரப்பில் விசாரித்தபோது, பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. காலையில் ரசிகர்கள் காட்சி மட்டுமே ரத்தானது. விரைவில் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தமவில்லன் இதுவரை ரிலீஸ் ஆகாதா காரணத்தால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

 

அட்டகாசம்.. "ஸ்டன்" ஆயிட்டேன்.. உத்தமவில்லன் குறித்து குஷ்பு சந்தோஷ ரியாக்ஷன்!

சென்னை: உத்தமவில்லன் படம் குறித்து மகிழ்ச்சியுடன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் நடிகை குஷ்பு.

உத்தம வில்லன் இன்று திரைக்கு வருகிறது. திரைக்கு வருவதற்கு முன்பே அந்தப் படத்தை சிலர் பார்த்துள்ளனர். அந்த அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர் நடிகை குஷ்பு. உத்தமவில்லன் குறித்து அவர் டிவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில் படம் அட்டகாசமாக இருப்பதாகவும், பார்த்ததும் ஸ்டன் ஆகி விட்டதாகவும் கூறியுள்ளார் குஷ்பு. கமல்ஹாசனுடன் சேர்ந்து இந்தப் படத்தை விசேஷமாக சிலருக்கு காட்டினர். அந்தக் காட்சியில் குஷ்புவும் கலந்து கொண்டார்.

"கமல்சாருடன் இணைந்து உத்தமவில்லன் படத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. விஷவல்களைப் பார்த்து ஸ்டன் ஆகி விட்டேன். வசனம், நடனம்.. எல்லாமே பிரமாதம்" என்று ஒரு டிவிட்டில் கூறியுள்ளார் குஷ்பு.

இன்னொரு டுவிட்டில் தமிழ் சினிமா இப்படி ஒரு படத்தை இதுவரை கண்டதில்லை. மனசை உலுக்கும் படம் உத்தமவில்லன் என்று கூறியுள்ளார்.

மற்றொரு டிவிட்டில், கமல்ஹாசனை ஏன் மாஸ்டர் என்று சொல்கிறோம் என்பதை மீண்டும் அவர் நிரூபித்துள்ளார். ஒவ்வொரு காட்சியைப் பார்த்தாலே தெரிகிறது. பிரேமுக்கு பிரேம் திரையை ஜொலிக்க வைக்கிறார் கமல். அவரது கண்கள் அவ்வளவு பேசுகின்றன என்று கூறியுள்ளார் குஷ்பு.

"நாசர், பூஜா குமார், ஊர்வசி, ஆண்ட்ரியா, எம்.எஸ்.பாஸ்கர் எல்லோருமே பிரமாதக நடித்துள்ளனர். இதுவரை கொடுத்திராத நடிப்பை இதில் கொடுத்துள்ளனர்" என்கிறது இன்னொரு டிவிட்.

"மறைந்த கேபி சார் தனது நடிப்பால் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கிறார். படம் பார்த்தபோது நான் அழுதபடி பார்த்தேன்"

"படத்தின் கடைசிக் காட்சியைப் பார்த்து முடித்ததும் நான் கமல் சார் காலைத் தொட்டு வணங்கினேன். என்னுடைய சூப்பர்ஹீரோ கமல்ஹாசன்.. என்று புகழாம் சூட்டியுள்ளார் குஷ்பு.

 

உழைப்பாளர் தின ஸ்பெஷல்... உத்தம வில்லன், வை ராஜா வை!

இன்று உழைப்பாளர் தினத்தையொட்டி கமல் நடித்த உத்தம வில்லன் மற்றும் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கிய வை ராஜா வை ஆகிய இரு படங்கள் திரைக்கு வருகின்றன.

உத்தம வில்லன் படத்தில் கமல் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கலைஞனாகவும், இந்த நூற்றாண்டைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார் நடிகராகவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

Today's releases: Uthama Villain and Vai Raja Vai

மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். திருப்பதி பிரதர்ஸ் - ராஜ் கமல் கூட்டாகத் தயாரித்துள்ளனர்.

ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழகம் மற்றும் உலகெங்கும் 1500 அரங்குகளில் வெளியாகிறது.

Today's releases: Uthama Villain and Vai Raja Vai

வை ராஜா வை

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வை ராஜா வை. கவுதம், ப்ரியா ஆனந்த் நடித்துள்ளனர். தனுஷ், எஸ் ஜே சூர்யா ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

கமல் படம் வெளியானாலும், கவலைப்படாமல் தன் படத்தை வெளியிடுகிறார் ஐஸ்வர்யா. கமல் படத்துக்கு பெரிய அரங்குகள் ஒதுக்கப்பட்டதால், சிறு அரங்குகளைக் குறி வைத்து இந்தப் படத்தை வெளியிடுகிறார்.