நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல்நலம் பெற வேண்டி, தஞ்சாவூர் பெரிய கோவிலில் அவரது ரசிகர்கள் சிறப்பு அபிஷேகம் மற்றும் யாகம் நடத்தினர்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தில் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் முழு உடல்நலம் பெற வேண்டும் என தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர் பெரிய கோவிலில் உள்ள அம்மனுக்கு ஐந்து வகையான பூஜைகளை நடத்தினர்.
நடிகர் ரஜினிகாந்த் தோஷங்கள் நீங்கி, 100 ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டி பூஜைகள் செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
பூஜைக்குப் பின்னர் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு ரஜினி ரசிகர்கள் அன்னதானம் செய்தனர்.
தஞ்சை மாவட்ட ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்றம் சார்பில் நடந்த இந்த யாகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து தஞ்சை மாவட்ட ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்ற தலைவர் ரஜினிகணேசன் நிருபர்களிடம் கூறும்போது, “ரஜினிகாந்த் உடல்நலம் பெற்று நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக வராகி அம்மனுக்கு வராகி ஹோமம் நடத்தப்பட்டது. இந்தியாவிலேயே வராகி அம்மன் 2 இடங்களில் மட்டும்தான் உள்ளது. வராகி அம்மனிடம் என்ன நினைத்து வேண்டினாலும் அந்த காரியம் நடக்கும்.
அவர் விரைவில் குணம் அடைந்து ராணா படப்பிடிப்பில் கலந்து கொள்வார். ராணா படம் வெற்றி அடையும். தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பல்வேறு சேவைகளை அவர் செய்து வருகிறார். அந்த சேவை தொடர விரைவில் அவர் பூரண குணம் அடைவார்,ட என்று கூறினார்.
தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இதே போன்ற சிறப்பு வழிபாடுகள், யாகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இதே போன்ற சிறப்பு வழிபாடுகள், யாகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.