50 லட்சத்தில் செட்... 50 காஸ்ட்யூம்... இது விஜயகாந்த் மகனின் சகாப்தம் கதை!

தமிழ் சினிமாவின் வழக்கமான அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கி வருகிறது விஜயகாந்த் மகன் நடிக்கும் சகாப்தம் படம்.

முன்பெல்லாம் விஜயகாந்த், பாக்யராஜ், சரத்குமார், டி ராஜேந்தர் படங்களின் செய்திகள் வரும்போது, இத்தனை லட்சத்துக்கு செட் போட்டார்கள், காஸ்ட்யூமுக்கு மட்டுமே இத்தனை லட்சம் செலவு என்றெல்லாம் குறிப்பிடுவார்கள்.

விஜயகாந்த் மகன் நடிக்கும் சகாப்தம் படத்துக்கும் அப்படித்தான் செய்திகள் வெளியாகின்றன.

சகாப்தம் படத்திற்காக லங்காவியிலும் அதன் சுற்றியுள்ள மலை மற்றும் கடல் பகுதிகளிலும் ஒரு டூயட் பாடல் எடுத்தார்களாம்.

50 லட்சத்தில் செட்... 50 காஸ்ட்யூம்... இது விஜயகாந்த் மகனின் சகாப்தம் கதை!

இதற்காக ரூ 50 இலட்சம் செலவழித்தார்களாம். மாஸ்டர் நோபல் நடனம் அமைத்த இந்தப் பாடலில் நாயகன் சண்முகபாண்டியன் மட்டும் 50 விதவிதமான உடைகளைப் பயன்படுத்தினாராம்.

நாயகி மட்டும் இளப்பமா என்ன... அவருக்கும் 50 காஸ்ட்யூமாம்.

இப்பாடல் காட்சிகளை இதுவரை யாரும் படம்பிடிக்காத பகுதிகளில் படம்பிடித்துள்ளார்களாம்.

 

சூர்யாவின் மாஸில் கார்த்தி ஹீரோயின் பிரனீதா

சென்னை: சூர்யா நடித்து வரும் மாஸ் படத்தில் பிரனீதா புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் மாஸ். இதில் ஏற்கனவே நயன்தாரா, ஏமி ஜாக்சன் என்று இரு ஹீரோயின்கள் உள்ளனர். இந்நிலையில் படத்தில் புதிதாக சகுனி ஹீரோயின் பிரனீதா சேர்க்கப்பட்டுள்ளார்.

சூர்யாவின் மாஸில் கார்த்தி ஹீரோயின் பிரனீதா

பிரனீதாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாம். பிரனீதா ஏமி ஜாக்சனுக்கு பதில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் ஏமிக்கு பதிலாகவா இல்லை கூடுதல் ஹீரோயினாக சேர்க்கப்பட்டாரா என்பது உறுதியாக தெரியவில்லை.

படக்குழு இந்த மாத இறுதியில் பல்கேரியா செல்கிறது. அங்கு ஒரு வார காலம் படப்பிடிப்பு நடக்க உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் தெலுங்கு ஹீரோக்களான ராணா, பிரபாஸ், ரவி தேஜா ஆகியோர் கௌரவத் தோற்றத்தில் வருகிறார்களாம்.

வழக்கம் போல் வெங்கட் பிரபுவின் இந்த படத்திலும் அவரது தம்பி பிரேம்ஜி அமரன் காமெடியில் கலக்க உள்ளார்.

 

காவியத் தலைவன் படத்துக்கு வரிவிலக்கு

வசந்த பாலன் இயக்கத்தில் வரும் 28-ம் தேதி வெளியாகவுள்ள காவியத் தலைவன் படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.

முன்பெல்லாம் படத்தின் தலைப்பு தமிழில் இருந்தாலே போதும், வரி விலக்கு நிச்சயம் என்ற நிலை இருந்தது. அதிமுக அரசு பதவிக்கு வந்த பிறகு அந்த நிலை மாறியது.

தமிழில் தலைப்பு, ஆபாசமில்லாத காட்சி அமைப்பு, அனைவரும் பார்க்கத்தக்க வகையில் யு சான்று என்று பல அம்சங்கள் சிறப்பாக அமைந்தால் மட்டுமே வரிவிலக்கு என்ற கட்டுப்பாடுகள் வந்தன.

காவியத் தலைவன் படத்துக்கு வரிவிலக்கு

இந்தக் கட்டுப்பாடுகள் இன்னொரு பக்கம் அரசியல் ரீதியான நெருக்கடிகளுக்குப் பயன்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் விமர்சித்தாலும், மக்களுக்குச் சேர வேண்டிய வரிச்சலுகை குப்பைப் படங்களை எடுத்தவர்களுக்கும் போகாமல் தடுக்க ஓரளவு உதவி வருகிறது.

படங்களுக்கு வரிச் சலுகை பெறுவது அத்தனை சாதாரண விஷயமல்ல என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் வசந்த பாலன் இயக்கத்தில், சித்தார்த், ப்ருத்விராஜ், வேதிகா நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வரவிருக்கும் காவியத் தலைவன் படத்துக்கு முழுமையாக கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

வருண் மணியனுடன் திருமணமா? - த்ரிஷா விளக்கம்

எனக்கு நிச்சயம் திருமணம் நடக்கும்.. ஆனால் எப்போது, யாருடன் என்பதை நான்தான் சொல்வேன் என்று வழக்கமான பதிலையே மீண்டும் கூறியுள்ளார் த்ரிஷா.

அதே நேரம் மாப்பிள்ளை வருண் மணியனா என்பதற்கு நேரடியாக அவர் எந்த பதிலும் சொல்லவில்லை.

நடிகை திரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் ஜனவரியில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாயின.

வருண்மணியன் தமிழில் வாயை மூடி பேசவும் என்ற படத்தை தயாரித்து உள்ளார். தற்போது சித்தார்த் நடிக்கும் ‘‘காவியத் தலைவன்'' படத்தில் இணை தயாரிப்பாளராக உள்ளார்.

வருண் மணியனுடன் திருமணமா? - த்ரிஷா விளக்கம்

விளக்கம்

வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் ஆனதாக வந்த செய்சி, படங்கள் குறித்து த்ரிஷாவிடம் கேட்டபோது, "இல்லை எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. நிச்சயதார்த்தத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. திடீர் என்று நிச்சயதார்த்தம் செய்து கொள்ள மாட்டேன். நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

நிச்சயம் எல்லோருக்கும் சொல்வேன்

நிச்சயதார்த்தம் என்று ஒன்று நடந்தால் அதுபற்றி என்னுடன் நடிக்கும் நடிகர்கள் என்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் போன்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். அந்த பொறுப்பு எனக்கு இருக்கிறது. ரகசியமாக நிச்சயதார்த்தத்தை நடத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நிச்சயதார்த்தம் என்பது சந்தோஷமான நிகழ்ச்சி. அதை மறைக்க தேவை இல்லை," என்றார்.

அப்ப என்னதான் நடந்துச்சி?

இருவரும் நெருக்கமாக படமெடுத்துக் கொண்டது பற்றி கேட்டதற்கு, "வருண் மணியனை எனக்கு நன்றாக தெரியும். அவர் எனது நண்பர். ஆனால் திருமணம் பற்றியெல்லாம் இப்போது எதுவும் சொல்ல முடியாது. வருண் மணியனுக்கு குடும்பம் இருக்கிறது. எனவே மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது. உங்கள் நண்பருடன் சேர்ந்து படம் எடுப்பதால் அவருடன் நிச்சயதார்த்தம் நடக்கும் என்று எடுத்துக் கொள்ள முடியாது," என்று மழுப்பினார்.

ராணாவை நான் காதலித்தேனா?

ராணாவுடன் ஏற்பட்ட காதல் முறிவு பற்றி கேட்டதற்கு, " ராணாவை காதலிப்பதாக எப்போதுமே நான் சொன்னது இல்லை. அப்புறம் எப்படி பிரிந்து விட்டேன் என்று சொல்லப்படுவதற்கு நான் பதில் கூற முடியும்?," என்றார்.

சரி, முடிவா என்னதான் சொல்றீங்க?

"நான் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். ஒருத்தரை பார்த்ததும் அவரை மணந்து கொள்ளும்படி இதயமும் மனமும் சொல்ல வேண்டும். அப்படி இரண்டும் சொல்வதாக உணரும் போது திருமணம் செய்து கொள்வேன்," என்று முடித்தார் த்ரிஷா.

 

அவார்டுகளின் மேல் ஆசை கொண்டுள்ள ஷ்ரேயா- விலைமாது கேரக்டருக்கும் ரெடி!

சென்னை: தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் கவர்ச்சியாய் பட்டையைக் கிளப்பிய கதாநாயகி ஷ்ரேயாவிற்கு தற்போது விருதுகளின் மேல் ஆசை வந்துள்ளது.

அதனால் சிறந்த நடிகைக்கான பெரிய அங்கீகாரத்தை அரசுகளிடம் இருந்து பெறும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதற்காக விலைமாது கேரக்டருக்கு மாறியுள்ளார்.

அவார்டுகளின் மேல் ஆசை கொண்டுள்ள ஷ்ரேயா- விலைமாது கேரக்டருக்கும் ரெடி!

இந்தியில் இது போன்ற வேடங்களில் வந்த நடிகைளுக்கு தான் விருதுகள் கிடைத்துள்ளன. எனவேதான் அதை குறி வைத்து இருக்கிறார்.

அரை குறை ஆடையில் விலை மாதுவாக நடித்துள்ள அவரது படம் ஒன்று கன்னடத்தில் வந்தது. அப்படம் இப்போது தமிழிலும் வருகிறது. இதே கேரக்டரில் கதைகள் தேடி வருகின்றாராம் ஷ்ரேயா.

யாராவது "நல்ல" கேரக்டரா இருந்தா சொல்லுங்கப்பா!!!

 

ஒரு மனிதரின் அன்புக்காக! - ரஜினி ரசிகர்கள் பற்றி நெதர்லாந்து பெண் உருவாக்கும் ஆவணப் படம்

ரஜினி தன் ரசிகர்கள் மீது வைத்திருக்கும் அன்பை, ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் வெறித்தனமான பாசத்தை எடுத்துக் காட்டும் விதமாக ஒரு ஆவணப்படத்தை உருவாக்குகிறார் நெதர்லாந்தைச் சேர்ந்த பெண் தயாரிப்பாளர். அவர் பெயர் ரிங்கு கால்சி.

ஒரு மனிதரின் அன்புக்காக என்ற தலைப்பில் படமாகும் அந்த ஆவணப் படத்தை, இன்று நேற்றல்ல.. சுமார் நான்கு ஆண்டுகளாகவே எடுத்து வருகிறார் கால்சி.

ஒரு மனிதரின் அன்புக்காக!  - ரஜினி ரசிகர்கள் பற்றி நெதர்லாந்து பெண் உருவாக்கும் ஆவணப் படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது தமிழ்நாட்டு ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பு, அவர் படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் காட்டும் இணையற்ற ஈடுபாடு, அவர் உடல்நிலை சரியில்லாமல் வெளிநாட்டு சிகிச்சைக்கு சென்றபோது, அவர்கள் தவித்த தவிப்பு, மேற்கொண்ட பிரார்த்தனைகள், வேண்டுதல்கள், செருப்பு கூட அணியாமல் கொளுத்தும் வெயில் பல மைல் தூரம் மேற்கொண்ட பாத யாத்திரை, முழங்காலில் மலைப் படி ஏறி நேர்ந்து கொண்டது போன்றவற்றை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்.

இதற்காக, தமிழகத்தில் உள்ள ரஜினி ரசிகர்களின் உணர்வுகளை சுமார் 4 ஆண்டுகாலமாக நெருக்கத்தில் இருந்து பார்த்த கால்சி, கடைசியில் தானும் தீவிர ரஜினி ரசிகையாகிவிட்டதுதான் சுவாரஸ்யம்.

பல முறை ரஜினியை விழாக்களில் ரஜினியை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை எனும் கால்சி, அந்த தருணத்துக்காக காத்திருக்கிறார். அப்போது ரஜினிக்கு இந்தப் படத்தைக் காட்டி சமர்ப்பணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

தான் உருவாக்கும் ஒரு மனிதரின் அன்புக்காக படத்தை 2015- பிப்ரவரியில் உலகளாவிய அளவில் திரையிடத் திட்டமிட்டுள்ளார் கால்சி.

 

உடல் உறுப்பு தானம் செய்த சூர்யா!

சூர்யா தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளார்.

தற்போதெல்லாம் நடிகர், நடிகைகள் பலர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருகிறார்கள். அந்த வகையில் முதன்முதலில் உடல் உறுப்பு தானத்தை அறிவித்தவர் ரஜினி. அவர் தன் கண்களை எப்போதோ தானமாகக் கொடுக்க உறுதிப் பத்திரம் அளித்துவிட்டார்.

உடல் உறுப்பு தானம் செய்த சூர்யா!

அடுத்து தன் உடல் முழுவதையுமே தானமாகக் கொடுத்துவிட்டவர் கமல் ஹாஸன்.

இவர்கள் வழியில் சரத்குமார், விஜய், சினேகா, த்ரிஷா உட்பட பலர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு கூட நடிகை அசின் தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்ததோடு அதற்கான உறுதி மொழி பத்திரத்திலும் கையெழுத்திட்டார். இப்போது அவரைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவும் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்திருக்கிறார்.

கடந்த 2013ல் வெளியான சென்னையில் ஒரு நாள் என்ற படத்தின் இறுதியில் தோன்றும் சூர்யா அதில் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை பற்றி பேசுவார். தற்போது அது வெறும் பேச்சல்ல என்பதை உடல் தானம் செய்து நிரூபித்திருக்கிறார். வெல்டன் சூர்யா!

 

உதவி இயக்குநர்களா... அடுத்த வருஷம் செப்டம்பர் வரைக்கும் இந்தப் பக்கம் வராதீங்க!

உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வரவேண்டாம் என தன் அலுவலக வாசலில் எழுதிப் போட்டிருக்கிறார் ஒரு பிரபல இயக்குநர்.

அவர் 'வாய்யா கூலிங் கிளாஸ்' என இயக்குநர் பாலாவால் அழைக்கப்பட்ட மிஷ்கின்.

உதவி இயக்குநர்களா... அடுத்த வருஷம் செப்டம்பர் வரைக்கும் இந்தப் பக்கம் வராதீங்க!

செனடாப் சாலையில் மிஷ்கினின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கதவில்தான் இப்படி எழுதி ஒட்டி வைத்துள்ளார்.

இந்த ஆண்டு பிசாசு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் அவர், அடுத்த ஆண்டும் ஒரு புதிய படம் இயக்குகிறார். அந்தப் படத்துக்கும் போதிய உதவி இயக்குநர்கள் அவரிடம் உள்ளார்களாம்.

எனவே புதிய உதவி இயக்குநர்கள் செப்டம்பர் 2015-க்குப் பிறகு வந்தால் போதும் என்பதால் அப்படி எழுதிப் போட்டுள்ளாராம்.

 

அய்யோ பாவம், இந்த நடிகையின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே

சென்னை: பெயரில் தித்திப்பை வைத்துள்ள நடிகைக்கு மார்க்கெட் இல்லாததால் குத்தாட்டம் போட, வில்லி வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.

அண்டை மாநிலத்தில் இருந்து கோலிவுட் வந்தவர் பெயரில் தித்திப்பை வைத்திருக்கும் அந்த இளம் நடிகை. அவர் நடித்த முதல் படம் பல விருதுகளை பெற்றது. நடிகையின் நடிப்புத் திறனையும் பலரும் பாராட்டினார்கள்.

அழகும் உள்ளது, நடிக்கும் திறமையும் உள்ளது நடிகை நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அவர் நடித்த படங்கள் எல்லாம் ஊத்திக் கொண்டன. இதனால் நடிகையை ஹீரோயினாக்க யாரும் விரும்பவில்லை. அதனால் வாய்ப்பும் இல்லை, வருமானமும் இல்லை.

அவர் தற்போது விளம்பரப் படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். ஹீரோயின் வாய்ப்பு தான் என்று இல்லை நான் குத்தாட்டம் போடவும் தயாராக உள்ளேன் என்று நடிகை தெரிவித்துள்ளார். மேலும் வில்லி கதாபாத்திரங்களிலும் நடிக்க தான் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வசீகரிக்கும் அழகால் அனைவரையும் கவர்ந்த இந்த நடிகைக்கா இப்படி ஒரு அவல நிலை என்று தயாரிப்பாளர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

 

லிங்கா படத்திற்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

மதுரை: ரஜினிகாந்த நடித்துள்ள லிங்கா படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

மதுரை சின்ன சொக்கிகுளத்தைச் சேர்ந்தவர் ரவிரத்தினம். இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "முல்லைப் பெரியாறு அணை மற்றும் அணையைக்கட்டிய பென்னிகுயிக் வரலாறை பின்னணியாக கொண்டு "முல்லை வனம் 999" என்ற படத்தை இயக்கி வருகிறேன்.

லிங்கா படத்திற்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

அந்த கதையை திருடி "லிங்கா" படத்தை தயாரித்துள்ளனர். எனவே லிங்கா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். எனது கதையை திருடிய லிங்கா படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து படத்தின் நாயகனானா நடிகர் ரஜினிகாந்த் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், "லிங்கா படத்தின் வினியோகஸ்தர் உரிமையை பெற்றுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இது தவறானது. லிங்கா படத்தின் கதை, திரைக்கதையை பொன்குமரன் எழுதி உள்ளார். லிங்கா படத்தில் நான் நடித்துள்ளதைத் தவிர வேறு எந்த பங்களிப்பும் எனக்கு கிடையாது. விளம்பர நோக்கத்துக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில், லிங்கா பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில் "லிங்கா படத்தின் கதை திருடப்படவில்லை. லிங்கா படத்தின் கதையை பொன்.குமரன் எழுதி உள்ளார். திரைக்கதையை நான் எழுதி உள்ளேன். மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

ரஜினியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து மனுதாரர் ரவிரத்தினம் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் "நடிகர் ரஜினிகாந்த் பதில் மனுவில் படத்தின் கதை திரைக்கதையை பொன்குமரன் எழுதியதாக கூறி உள்ளார். ஆனால் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கதையை பொன்குமரன் எழுதியதாகவும், திரைக்கதையை தான் எழுதியதாகவும் கூறி உள்ளார்.

இருவரின் பதில் மனுவிலும் முரண்பாடு உள்ளது. ரஜினியின் மகள் நடத்தி வரும் நிறுவனம் தான் லிங்கா படத்தின் வினியோக உரிமையை பெற்றுள்ளது. தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் மனுவை தாக்கல் செய்து இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறி இருப்பது சரியல்ல. அந்த நோக்கத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை" என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி எம்.வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் பீட்டர், ரமேஷ்குமார், வி.ரமேஷ் ஆகியோர் "முல்லைவனம் 999" கதையும் "லிங்கா" கதையும் ஒன்று தான். மனுதாரரின் கதை திருடப்பட்டுள்ளது. மனுதாரரின் கதையும், "லிங்கா" படக்கதையும் ஒன்று தானா என்பதை உண்மை அறியும் குழு மூலம் விசாரித்து போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்றனர்.

நடிகர் ரஜினிகாந்த், படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சஞ்சய்ராமசாமி, சண்முகராஜாசேதுபதி ஆகியோர் ‘மனுதாரர் கூறி உள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. அவர் தனது கதையை பதிவு செய்யவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் மனுதாரர் பதிப்புரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோர முடியாது. லிங்கா படத்தின் கதை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. லிங்கா படத்தின் கதை திருடப்படவில்லை. மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றனர்.

விசாரணையின் போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் மதுரை போலீஸ் கமிஷனரின் பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில் "மனுதாரரின் புகார் மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை" என்று கூறப்பட்டு இருந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

 

ஹூட் ஹூட் புயல் நிவாரண நிதி நிகழ்ச்சி.. கமல் ஹாஸன் பங்கேற்கிறார்!

சென்னை: விசாகப்பட்டணத்தை உருக்குலைத்த ஹூட் ஹூட் புயல் நிவாரண நிதி திரட்ட நடத்தப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதித்துள்ளார் கமல் ஹாஸன்.

நவம்பர் 30-ம் தேதி நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு மேமு சைத்தம் டெலிதான் என்று பெயரிட்டுள்ளனர்.

ஹைதராபாதில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு சினிமாவின் அனைத்து நடிகர் நடிகைகளும் பங்கேற்க உறுதியளித்துள்ளனர். சிரஞ்சீவி, நாகார்ஜூனா, வெங்கடேஷ், என்டிஆர், பாலகிருஷ்ணா, பவன் கல்யாண் உள்ளிட்ட அனைவருமே பங்கேற்கின்றனர்.

ஹூட் ஹூட் புயல் நிவாரண நிதி நிகழ்ச்சி.. கமல் ஹாஸன் பங்கேற்கிறார்!

இந்த நிகழ்ச்சியில் தமிழ் நடிகர் நடிகைகளையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அழைப்பை ஏற்றுள்ள நடிகர் கமல் ஹாஸன், நிச்சயம் நிகழ்ச்சியில் பங்கேற்பேன் என்று உறுதி கூறியுள்ளார்.

நட்சத்திரங்களுடன் விருந்து, நட்சத்திர கிரிக்கெட், கபடிப் போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன. இவற்றை 12 மணி நேரம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள். இவற்றின் மூலம் கிடைக்கும் தொகையை ஹூட் ஹூட் நிவாரண நிதிக்கு வழங்குகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ரஜினிக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

கரையை கடந்த புயல்.. இனி ஹீரோ அரிதாரம் பூசப்போவதில்லை என முடிவு

சென்னை: ஒரு காலகட்டத்தில் ஓஹோ என புகழப்பட்டவர் அந்த புயல் நகைச்சுவை நடிகர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அவரது காமெடியை பார்த்து வாய்விட்டு சிரித்தனர்.

ஹீரோக்களை விட இவருக்கே டிமாண்ட் அதிகமாக இருந்தது. ஆனால் ஆசை யாரை விட்டது. வரலாற்று பின்புலத்தை வைத்து வெளியான படத்தில் டபுள் ஹீரோ சப்ஜெக்டில் புயல் நடிக்கப்போக, அது தாறுமாறு ஹிட் ஆனது. கதை, திரைக்கதை படு ஜோராக இருந்ததால் அந்த படம் ஓடியது என்று புரியாமல் தலைகீழாக நடக்க ஆரம்பித்தது புயல்.

இனி நடித்தால் ஹீரோதான், மற்ற கதைகள் எல்லாம் எனக்கு ஜீரோதான் என்று போர் முரசு கொட்டியது. இதற்கு நடுவே தேர்தல், பிரச்சாரம் என்று வேறு அநாவசியமாக அரசியலில் தலையிட்டு அதன்பிறகு வம்பில் சிக்கிக் கொண்டது புயல்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு புயல் ஹீரோவாக நடித்து வெளியான படமும் ஊத்திக்கொள்ளவே, இப்போது கரையை கடந்த புயல் போல அமைதி குடிகொண்டுள்ளது. இனிமேல் முதலில் இருந்தே தொடங்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ள புயல், நான் எப்போதுமே காமெடியன்தானப்பா என்ற டயலாக்குடன் கோலிவுட்டை சுற்றி வருகிறதாம். விரைவில் மீண்டும் வயிறு குலுங்க செய்வார் புயல் நடிகர் என்கிறது கோலிவுட் பட்சி.

 

நடிகர் விவேக்கின் தந்தை மரணம்

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் தந்தை அங்கையாத் தேவர் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.

சென்னையில் தங்கியிருந்த அங்கையாத் தேவர், அவ்வப்போது அகதிகள் முகாம்களில் உள்ள குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார்.

நடிகர் விவேக்கின் தந்தை மரணம்

இன்று காலை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் காலை உணவு சாப்பிட்டுப் படுத்தவர், உறக்கத்திலேயே உயிர் பிரிந்துவிட்டது.

விவேக்கின் தந்தை உடல் அவர்களின் சொந்த ஊரான கோவில்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதி மரியாதை செய்யப்படுகிறது.

அங்கையாத் தேவருக்கு விவேக் தவிர, மேலும் ஒரு மகள் உள்ளார். அங்கையாத் தேவரின் மனைவி கோவில்பட்டியில் வசிக்கிறார்.

நாளை விவேக் தந்தையின் இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. நடிகர் விவேக் தன் தந்தையின் உடலுடன் கோவில்பட்டி செல்கிறார்.

 

தல தரிசனத்துக்காக காத்திருக்கிறோம்..! - இப்படிக்கு 'எவனுக்கும் அடங்காத விஜய் வெறியர்கள்'!

அஜீத் - விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியானால், இரு தரப்பு ரசிகர்களும் மோதிக் கொள்ளும் செய்திகள் மீடியாவில் அதிகமாக இடம்பெறுவதை கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம்.

ஆனால் இப்போது.. இப்போது என்றால் சில மாதங்களாக ஒரு புதிய ட்ரெண்ட் உருவாகி வருகிறது. விஜய் படத்துக்கு அஜீத் ரசிகர்கள் வாழ்த்து தெரிவிப்பதும், அஜீத் படத்தை வாழ்த்தி விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவதுமாக.. ஒரு ஆரோக்கிய ட்ரண்ட். தொடரட்டும் நல்லதுதான்...

தல தரிசனத்துக்காக காத்திருக்கிறோம்..! - இப்படிக்கு 'எவனுக்கும் அடங்காத விஜய் வெறியர்கள்'!

இப்போது சேதி என்ன தெரியுமா... விரைவில் வரப் போகும் அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தை வரவேற்று விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்து மதுரையெங்கும் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டர்களில் 'தலயின் தரிசனத்துக்காகக் காத்திருக்கிறோம்' இப்படிக்கு எவனுக்கும் அடங்காத விஜய் வெறியர்கள் என்று அச்சடித்துள்ளனர்.

சமூக வலைத் தளங்களில் இந்த போஸ்டர்தான் பரபரவென பரவிக் கொண்டிருக்கிறது.

 

பிரபல நடிகர் திலீப் குமாரைக் 'கொன்ற' ட்விட்டரும் வாட்ஸ்ஆப்பும்!

மும்பை: பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் (91) உடல் நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு காலமானதாக ட்விட்டரிலும் வாட்ஸ்ஆப்பிலும் தீயாய் பரவி வருகின்றன வதந்திகள்.

ஆனால் அவர் நலமுடன் இருப்பதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. தன் கணவர் நலமுடன் இருப்பதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் திலீப் குமாரைக் 'கொன்ற' ட்விட்டரும் வாட்ஸ்ஆப்பும்!

மும்பையில் குடும்பத்தினருடன் வசித்து வரும் திலீப் குமாருக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அங்கு அவர் காலமானதாகவும் ட்விட்டரில் செய்திகள் பரவ, பாலிவுட்டே பதறிப் போனது.

ஆனால் பின்னர் விசாரித்ததில், திலீப் குமார் நலமுடன் வீட்டிலிருப்பது தெரிய வந்தது. யாரோ ஒருவர் திலீப் குமார் பற்றிய பழைய ட்வீட் ஒன்றை ரிட்வீட் செய்ய, அதுவே இந்த வதந்திக்கு காரணமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. வாட்ஸ்ஆப்பிலும் இதே கதைதான்.

சில தினங்களுக்கு முன் ஹைதராபாதில் நடந்த சல்மான்கானின் தங்கை திருமணத்தில் பங்கேற்றுவிட்டுத் திரும்பினார் திலீப் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.