சென்னை: ராஜ் தொலைக்காட்சியில் நவம்பர் 10ம்தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய மெகாத் தொடர் என் இனிய தோழியே.
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரின் கதை இதுதான்.
பாரி, சந்தியா நெருங்கிய தோழிகள். அனாதைகளாக, சிறுவயதில் இருந்து ஆசிரமத்தில் தங்கி வளர்ந்தவர்கள். ராம் அசோசியேட் எனும் நிறுவனத்தில் AEO-வாக வேலை பார்க்கிறாள் பாரி. சந்தியாவோ, மற்றொரு நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறாள். இருவரும் பணிநேரம் போக, ஆசிரமத்தில் தங்கி அனாதை சிறுவர்களுக்கும், முதியவர்களுக்கும் வேண்டிய உதவிகளை செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.
அந்த ஆசிரமத்தில் ராகவன் தாத்தா தங்கியிருக்கிறார். அவரது பேரன் பாலு, தன் மனைவி துர்கா, மகள் காவ்யாவுடன் வசித்து வருகிறான். மற்றொரு பேரன் சத்யா சிங்கப்பூரில் வேலை பார்த்துவிட்டு இப்போதுதான் சென்னை வந்துள்ளார்.
இந்நிலையில் பாரியிடம் ராகவன் தாத்தா, ஒரு கோரிக்கையை முன் வைக்கிறார். ஆனால் அவளோ, பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டு சென்றுவிடுகிறாள். பள்ளிக்குச் சென்ற பாலுவின் மகள் காவ்யாவை காணவில்லை என போன்வர, புகாரின் அடிப்படையில் போலீஸ் காவ்யாவை தேட ஆரம்பிக்கிறது. அப்போது, காவ்யா ஆசிரமத்தில் தாத்தாவுடன் இருப்பது தெரியவருகிறது. ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அங்கு செல்கின்றனர்.
அப்போதுதான் ராகவன் தாத்தாவின் ஆசைப்படி, பாரிதான் குழந்தை காவ்யாவை தூக்கி வந்திருப்பது தெரியவருகிறது. தனது தாத்தா ஆசிரமத்தில் இருப்பது தெரிந்த சத்யா, அதிர்ச்சியடைந்தாலும், பாரியின் குணத்தையும், அழகையும் பார்த்தை அவளை ரசிக்கின்றான்.
எல்லோரும் சமாதானம் ஆகி, காவ்யாவை தூக்கிக்கொண்டு புறப்படுகிறார்கள். தாத்தா ரகாகனை சத்தியா வீட்டிற்கு அழைக்க அவரோ பாரியை திருமணம் செய்தால் வருவேன் என்று கூறுகிறார். ஆனால் தாத்தா ஆசிரமத்தில் இருந்தால்தான் அடிக்கடி அவரை பார்க்க வருவது போல பாரியை பார்க்க முடியும் என்று நினைத்து அங்கேயே தாத்தாவை இருக்கச் சொல்கிறான் சத்தியா.
இந்நிலையில் கதையின் வில்லி வாசுகி ஜெயிலில் இருந்து வெளியே வருகிறாள், பாரியை பழிவாங்கப்போவதாக சபதம் போடுகிறாள். இதனிடையே பாரியின் எம்.டி., ராம் அலுவலகம் புறப்படுகிறார். வேலைக்கார பெண்ணை டிபன் எடுத்து வைக்க சொல்லும்போது, அவரது மனைவியோ உதாசீனப்படுத்துகிறாள். அவன் கலங்கி நிற்கிறான்.
ஏன் ராமின் மனைவி அப்படி நடந்துகொண்டாள்? சத்யா-பாரி மீண்டும் சந்திப்பார்களா? பாரியை பழிவாங்க புறப்பட்ட வாசுகி என்ன செய்யப்போகிறாள்? என பல்வேறு ஆவல்களை சுமந்து ஒளிபரப்பாக உள்ளது, என் இனிய தோழியே.