தமிழ் சினிமாவில் வெகு நீண்ட காலம் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் விவேக்.
முதல் முறையாக நான்தான் பாலா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றது அந்தப் படம்.
அடுத்து இப்போது பாலக்காட்டு மாதவன் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். சந்திரமோகன் என்பவர் இயக்கியுள்ளார்.
கதாநாயகனாக நடிப்பது குறித்து விவேக் கூறுகையில், "பாலக்காட்டு மாதவன்' குடும்பத்தோடு பார்க்க கூடிய கமர்ஷியல் பொழுதுபோக்குப் படம். எனக்கு பொருத்தமான கதையாக இருந்ததால் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டேன்.
காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி கம்பெனியொன்றில் வேலை பார்க்கின்றனர். மனைவிக்கு கணவனைவிட அதிக சம்பளம். இதனால் ஈகோ பிரச்சினை ஏற்படுகிறது. வேலையை ராஜினாமா செய்து விட்டு அதிக சம்பளத்தில் வேலை பார்க்கிறான். இதனால் பலரிடம் ஏமாறுகிறான்.
வயதான பெண்ணை தாயாக தத்தெடுத்து வீட்டுக்கு அழைத்து வருகிறான். அப்பெண்ணுக்கும் மனைவிக்கும் தகராறு. அவன் நிலைமை என்ன ஆகிறது என்பது கதை. முதல் முறையாக ஒரு தாயை தத்தெடுப்பதை கதைக் கருவாக வைத்துள்ளோம் இந்தப் படத்தில்.
மொட்டை ராஜேந்திரன் எஸ்பிபி ரசிகராக வந்து பாடுவது போல காட்சிகள் உள்ளன. இமான் அண்ணாச்சி, மனோபாலா என ஒரு காமெடி பட்டாளமே படத்தில் உள்ளது.
ஷீலாதான் படத்தில் நான் தத்தெடுக்கும் தாயாக வருகிறார். மிக அற்புதமான நடிப்பைத் தந்துள்ளார்.
பேய்ப் படங்கள், திகில் படங்களுக்கு மத்தியில் குடும்பத்தோடு பார்க்கும் காமெடி படமாக பாலக்காட்டு மாதவன் தயாராகியுள்ளது. இதுபோன்ற பொருத்தமான கதைகள் அமைந்தால் நாயகனாக மீண்டும் நடிப்பேன்.
வேறு கதாநாயகர்கள் படங்களில் காமெடி வேடங்களில் நடிப்பதையும் தொடர்வேன்," என்றார்.