விஷாலின் சமர், மத கஜ ராஜாவுக்கு சிக்கல்!

Vishal S 2 Movies Clash On The Same Day   

வரும் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்ட விஷாலின் சமர் படம் தள்ளிப் போய்விட்டது.

பொங்கலுக்கு இந்தப் படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

படத்தின் தயாரிப்பாளர்கள் நிதிப் பிரச்சினையில் சிக்கியிருப்பதால் இந்த ஒத்தி வைப்பு என்று கூறப்படுகிறது. இரண்டு வார கெடுவுக்குள் சிக்கலைச் சமாளித்து வெளியிட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் இப்படி அறிவித்துள்ளனர்.

ஆனால் இந்த ஒத்தி வைப்பால் விஷாலின் இன்னொரு படமான மத கஜ ராஜாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரணம் மதகஜ ராஜாவை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, அறிவிப்பும் வெளியிட்டுவிட்டார் சுந்தர் சி.

இந்த நிலையில் ஒரே நேரத்தில் சமரும் மத கஜ ராஜாவும் வெளியானால் இருபடங்களுமே அடிவாங்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மதகஜ ராஜாவை ஜெமினி நிறுவனம் தயாரித்துள்ளது.

 

டெல்லி மாஃபியா: சினிமா படமாகிறது டெல்லி பலாத்கார சம்பவம்

Hemant Madhukar Next Movie Delhi Mafia

டெல்லி: மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், திரைப்படம் ஆகிறது. பாலிவுட் இயக்குநர் ஹேமந்த் மதுகர் ‘டெல்லி மாஃபியா' என்ற பெயரில் இதனை இயக்குகிறார்.

டெல்லியில், ஓடும் பேருந்தில் 23 வயது மருத்துவ மாணவி கடந்த டிசம்பர் 14ம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பலாத்காரம் செய்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்த கோரிக்கையுடன் டெல்லியில், கடந்த 5 நாட்களாக மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தி திரைப்படமாகிறது

நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம், ‘டெல்லி மாஃபியா' என்ற பெயரில் திரைப்படம் ஆகிறது. ‘மும்பை 125 கிலோ மீட்டர்' என்ற இந்தி படத்தை இயக்கிய ஹேமந்த் மதுகர், இந்த படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.

இதுபற்றி கருத்து கூறியுள்ள ஹேமந்த் மதுகர்,‘‘இது மிகவும் வெட்கக்கேடான சம்பவம். டெல்லியில் நம் சகோதரிகளும், மகள்களும் தினமும் படும் கஷ்டங்களையும் சிரமங்களையும் படத்தில் காட்டப் போகிறேன்.

பலாத்கார சம்பவத்தில் நடந்த உண்மைகளை அப்படியே சொல்லப் போகிறேன். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்துள்ளன. அதையும் படத்தில் காட்ட இருக்கிறேன்.

எவ்வளவு சீக்கிரம் தொடங்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படும்.'' இவ்வாறு டைரக்டர் ஹேமந்த் மதுகர் கூறினார்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன. மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை திரைப்படமாக எடுக்கும் போது பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அமைய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மகன், மகளுடன் பியூர்டாரிகோ கச்சேரியில் கலக்கிய ஜெனீபர் லோபஸ்!

Jennifer Lopez S Twins Join Her On Stage In Puerto Rico

சான் ஜூவான், பியூர்டாரிகோ: பியூர்டாரிகோவின் சான் ஜூவான் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெனீபர் லோபஸ், தனது இரட்டைக் குழந்தைகளையும் மேடையில் ஏற்றி அவர்களுடனும் நடனமாடி அனைவரையும் களிப்பில் ஆழ்த்தினார்.

ஜெனீபர் லோபஸுக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு 4 வயதாகிறது. மேக்ஸ் மற்றும் எம்மி என பெயரிடப்பட்ட அவர்களுடன் தற்போது பியூர்டாரிகாகோவில் முகாமிட்டுள்ளார் ஜெனீபர். அங்கு நடந்த தனது இசை நிகழ்ச்சிகளையும் தனது பிள்ளைகளையும் மேடையேற்றிய ஜெனீபர் அவர்களுடன் லேசான ஒரு டான்ஸையும் போட்டு உற்சாகப்படுத்தினார்.

கச்சேரி முடிவடையப் போகும் நேரத்தில் இரு குழந்தைகளும் மேடையேறினர். அவர்களுடன் ஜெனீபரின் லேட்டஸ்ட் காதலரான காஸ்பரும் உடன் வந்தார். கூடவே ஜெனீபரின் டான்ஸர்களும் சேர்ந்து கொண்டனர்.

ஒரு கையில் தனது மகளைப் பிடித்துக் கொண்ட ஜெனீபர் இன்னொரு கையில் மகனைப் பிடித்துக் கொண்டு மேடையை ஒரு ரவுண்டு அடித்தார்.

மகன் மேக்ஸ், தனது அம்மாவுக்கு ஒரு ஒற்றை வெள்ளை ரோஜைவை பரிசாகக் கொடுத்து கூட்டத்தினரிடமிருந்து கலகலப்பான கோஷத்தைப் பாராட்டாகப் பெற்றான்.

 

துபாயில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா!

Nayanthara Celebrates Christmas Dubai

துபாயில் கிறிஸ்துமஸ் விழாவை தனது உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார் நடிகை நயன்தாரா.

நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். அவரது உண்மையான பெயர் டயானா குரியன்.

நாகார்ஜுனா ஜோடியாக அவர் நடித்து வரும் தெலுங்குப் படப்பிடிப்பு முடிந்ததும், தனது பெற்றோரை அழைத்துக் கொண்டு துபாய் பறந்துவிட்டார் நயன்.

அங்கே தன் அண்ணன் வீட்டில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் தினத்தை கேக் வெட்டிக் கொண்டாடினார்.

"நீண்ட நாளைக்குப் பிறகு நான் மிகவும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இந்த நாளைக் கொண்டாடுகிறேன். அதுவும் குடும்பத்தோடு கிறிஸ்துமஸ் கொண்டாடி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது," என்றார்.

இன்று இரவு குடும்பத்தினருடன் மெகா விருந்துக்குத் தயாராகிறாராம் நயன்.

இன்னும் ஐந்து தினங்களில் புத்தாண்டு பிறப்பதால், அந்த நாளையும் குடும்பத்துடன் துபாயிலேயே கொண்டாடப் போகிறாராம்.

 

இவங்க அண்ணன் தம்பிகளா? இளையராஜாவை அதிர வைத்த ஜிவி, மணிரத்தினம்!

Ilayaraja S Encounter With Gv Manirathnam

சினிமா உலகில் அண்ணன் தம்பிகளைக்கூட அடையாளம் காண முடியாமல் அசடு வழிந்த சம்பவம் உண்டு என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.

பிரபல வார இதழ் ஒன்றில் கேள்வி பதில் பகுதியில் பதிலளித்துள்ள இளையராஜாவிடம் வாசகர் ஒருவர் நீங்கள் அசடு வழிந்த சம்பவங்கள் ஏதாவது உண்டா என்று கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள இளையராஜா, சினிமாவில் இரண்டு பெரிய புள்ளிகள். இருவருமே பிரபலமானவர்கள். அதில் ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. இப்போது பெரிய இயக்குநராக உள்ள அவர் முதல்முதலில் கன்னடப் படம் இயக்கினார். அதற்கு நான்தான் இசைஅமைத்தேன். பின்னர் பெரிய நிறுவனம் எடுத்த சிறிய படத்தில் அந்த புதுப்பையனுக்கு வாய்ப்பு தர உள்ளதாக தயாரிப்பாளர் கூறினார். கதையை கேட்டு விட்டு சரி என்று கூறிவிட்டேன்.

அதன்பின்னர் ஒரு படத்தின் பூஜைக்காக ஒரு பெரிய பைனான்சியர் வந்திருந்தார். அவரிடம் அந்த புதிய இயக்குநரின் பெயரைச் சொல்லி வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறி சிபாரிசு செய்தேன். அதற்கு அவர், நீங்கள் வேண்டுமானால் என்னிடம் அனுப்புங்கள் என்று கூறினாரே தவிர அவன் என் தம்பிதானே? என்று என்னிடம் கூறவே இல்லை.

அதேபோல் அந்த இயக்குநரிடம், பைனான்சியரின் பெயரைச் சொல்லி அவரைப்போய் பார்க்கச் சொன்னேன். அப்போது அந்த இயக்குநர், சார், அவர் என்னோட அண்ணன்தானே? என்று என்னிடம் சொல்லவேயில்லை.

சில நாட்கள் கழித்து இது பற்றி வேறொருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, அவங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பிதானே உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார். அப்போது என் முகத்தில் அசடு வழிந்தது என்று கூறியுள்ளார் இளையராஜா.

எப்படி இவர்களால் அண்ணன் தம்பிகள் என்பதைக்கூட மறைத்து உலவி வர முடிகிறது?. அதை நினைக்கும் போதெல்லாம் என் மனம் உறைந்து போய்விடும் என்று கூறியுள்ளார் ராஜா.

ராஜா சொல்லியுள்ளஅந்த அண்ணன் தம்பி மறைந்த ஜிவி மற்றும் மணிரத்தினம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 

இளையராஜாவுக்கு, விக்கு விநாயக் ராமுக்கு சங்கீத் நாடக அகாடமி விருது

Sangeet Natak Academy Award Ilayaraja

டெல்லி: இசைஞானி இளையராஜா, கடம் வித்வான் விக்கு விநாயக் ராம் உள்ளிட்ட 36 பேருக்கு சங்கீத் நாடக அகாடமி விருது கிடைத்துள்ளது.

இசை, நாட்டியம், நாடகம், பொம்மலாட்டம் ஆகிய கலைத்துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் சங்கீத் நாடக அகாடமி விருதுகள், மற்றும் சங்கீத் நாடக அகாடமி சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன.

2012ம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இளையராஜா உள்ளிட்ட 36 பேருக்கு சங்கீத் நாடக அகாடமி விருது கிடைத்துள்ளது. இசைத் துறையில் புதுமைகளை புகுத்தி சாதனை படைத்ததற்காக இளையராஜா சங்கீத் நாடக அகாடமி விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.

இளையராஜா உள்ளிட்ட விருது பெறுவோருக்கு தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரப் பட்டயம், அங்கவஸ்திரம் ஆகியவை பரிசாக வழங்கப்படும்.

சங்கீத நாடக அகாடமி சிறப்பு விருதுக்கு பிரபல கடம் வித்வான் டி.எச்.விநாயக்ராம், வயலின் இசைக்கலைஞர் என்.ராஜம், ரத்தன் தியாம் உள்பட 40 கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு, தாமிரபட்டயம், அங்கவஸ்திரம் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.