நடிகர் சங்க வளாகத்தில் தியேட்டர்கள் கட்டுவதை எதிர்த்து வழக்கு: பதில் அளிக்க சங்கத்திற்கு நோட்டீஸ்


நடிகர் சங்க வளாகத்தில் 8 தியேட்டர்கள் உள்ள அடுக்குமாடி கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் மனுவுக்கு பதில் அளி்ககுமாறு நடிகர் சங்க அறக்கட்டளை, நடிகர் சங்க கலைஞர்கள் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி. நகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் 8 தியேட்டர்கள் உள்ள அடுக்குமாடி கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த சுகுமாறன், அம்பிகா மேனன் உள்பட 3 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,

அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்கக் கட்டிடம் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் 8 தியேட்டர்கள் அடங்கிய அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்காக, சத்யம் தியேட்டர் குரூப்புக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் விட்டுள்ளது.

நடிகர் சங்க அறக்கட்டளை, நடிகர் சங்க சினிமா கலைஞர்கள் சங்கம், இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை.

இப்பகுதியில் அதிக குடியிருப்புகள் உள்ளன. வர்த்தக நோக்கத்துக்காக கட்டடம் கட்டப்பட்டால் அபிபுல்லா சாலையில் மேலும் நெருக்கடி ஏற்படும். இதனால் எங்களுக்கு அசவுகரியம் ஏற்படும். சினிமா கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக நடிகரும், எம்.எல்.ஏ.வுமான சரத்குமார் உள்ளார்.

வலுவான இந்த சங்கத்துக்கு எதிராக, நாங்கள் போராட முடியாது. வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியும், அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு துரித நடவடிக்கையை நடிகர் சங்க அறக்கட்டளை, சினிமா கலைஞர்கள் சங்கம், சத்யம் சினிமாஸ் எடுக்கிறது.

எங்கள் நோட்டீசுக்கு ஊரக வளர்ச்சித் துறை, சி.எம்.டி.ஏ., சென்னை மாநகராட்சி, போக்குவரத்து போலீஸ் கமிஷனர் ஆகியோர் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு எந்த நேரத்திலும் சம்பந்தப்பட்ட துறைகள் அனுமதி வழங்கலாம்.

அவ்வாறு அனுமதி வழங்கினால், கட்டுமான நடவடிக்கைகள் துவங்கப்படும். எனவே, கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்க அரசு மற்றும் மாநகராட்சிக்கு, தடை விதிக்க வேண்டும் என்று அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், மூத்த வழக்கறிஞர்கள் தியாகராஜன், விஜய்நாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இந்த மனுவுக்கு 3 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு நடிகர் சங்க அறக்கட்டளை, சினிமா கலைஞர்கள் சங்கம், சத்யம் சினிமாஸுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது குறித்து அரசு தரப்பில் பதில் அளிக்க அட்வகேட் ஜெனரல் நோட்டீஸ் பெற்றுக் கொண்டார். சி.எம்.டி.ஏ., மற்றும் சென்னை மாநகராட்சி பதில் அளிக்க வழக்கறிஞர்கள் நோட்டீஸ் பெற்றுக் கொண்டனர். இந்த வழக்கு விசாரணை 3 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 

மகள் ஸ்ருதியை அழ வைத்த கமல்


உலக நாயகன் தனது மூத்த மகள் ஸ்ருதியை கண்ணீர் சிந்த வைத்துள்ளார். என்னடா கமல்ஹாசன் எதற்காக தனது செல்ல மகளை அழ வைத்தார் என்று தானே நினைக்கிறீர்கள். விஷயம் இருக்கு.

ஸ்ருதி இந்தியில் அறிமுகமானாலும் தமிழில் அவர் நடித்த ஏழாம் அறிவு தான் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அந்த மகிழ்ச்சியில் இருந்த ஸ்ருதிக்கு தற்போது கூடுதல் இல்லை பன்மடங்கு சந்தோஷம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் ஒய் தி்ஸ் கொலவெறி, கொலவெறிடி.

உலகமெல்லாம் முணுமுணுக்கும் பாடல் கொலவெறிடி. இந்த பாடல் மூலம் தனுஷும், ஸ்ருதியும் புகழின் உச்சிக்கே சென்றுள்ளனர்.

சரி ஸ்ருதியை கமல் எதற்காக அழ வைத்தார் என்ற மேட்டருக்கு வருவோம்.

கமல்ஹாசன் நடித்த மகாநதி, குணா ஆகிய படங்களை ஸ்ருதி 20 தடவைக்கும் மேல் பார்ததுள்ளாராம். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் தனது தந்தையின் சோகமான நடிப்பைப் பார்த்து அழ ஆரம்பித்துவிடுவாராம்.

அடடா என் அப்பா எவ்வளவு தத்ரூபமாக நடித்துள்ளார். அவரது சோகமான நடிப்பைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் கண்கள் கலங்கி கண்ணீர் வடிகிறதே என்று ஸ்ருதி தன் தந்தையைப் பற்றி பெருமைப்படுகிறார்.