ஷங்கர்-உலக நாயகன் கமலஹாசன் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த 'இந்தியன்' மிகப் பெரிய வசூலை தந்ததோடு, சமூகத்திலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த படத்திற்காக கமல் தேசிய விருது வாங்கினார். தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைப் போகிறது என்று கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. ஷங்கர் நண்பன் படத்தை முடித்து விட்டு தற்போது பட ரிலீசுக்காக காத்துக் கொண்டியிருக்கிறார். அதே சமயம் கமல் 'விஸ்ரூபம்' படத்தில் படு பிசியாக இருக்கிறார். இடையில் கமலை பார்த்து இயக்குனர் ஷங்கர் கதை ஒன்றை சொல்லியிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமியும் உலக நாயகனிடம் கதை ஒன்றை சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஷங்கரின் கதை பிடித்து இருப்பதால், அடுத்த படத்தில் கமல் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கலாம் என தெரிகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்திலும் லிங்குசாமியும் உள்ளார். நடிகராக இல்லை.. தயாரிப்பாளராக லிங்குசாமி ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் எவரிடமிருந்தும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை. நண்பன் ரிலீசுக்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் சில மாதங்கள் ஓய்வு எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேடிச்சென்று வாய்ப்பு கேட்பதில்லை
தேடிச் சென்று வாய்ப்பு கேட்பதில்லை என்று பிரியாமணி கூறினார். மேலும் அவர் கூறியதாவது: இப்போது அதிகம் நடித்துக் கொண்டிருப்பது கன்னடத்தில்தான். பிப்ரவரியிலிருந்து தெலுங்கு படம் நடிக்கிறேன். மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். 2012 கடைசி வரை கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் தமிழ்ப் படம் கிடைத்தால் வந்து விடுவேன். யாரையும் தேடிச் சென்று வாய்ப்பு கேட்காததுதான் தமிழ் படங்கள் அமையாததற்கு காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மையாக கூட இருக்கலாம். எந்த மொழியிலும் தேடிச் சென்று வாய்ப்பு கேட்பதில்லை. அப்படி கேட்டிருந்தால் இப்போது இந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பேன்.
தமிழ் படங்களில் நடிக்க பிரேசில் மாடல் ஆசை!
அஜீத், பார்வதி ஓமனக்குட்டன், இந்தி நடிகர் வித்யூத் ஜாம்வால் நடிக்கும் படம், 'பில்லா 2'. இதை சக்ரி டோலட்டி இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது. இதில் பிரேசில் மாடலும் இந்தி நடிகையுமான புருனா அப்துல்லா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதில் நடித்துள்ளது பற்றி புருனா கூறியதாவது: இந்தியில், 'ஐ ஹேட் லவ் ஸ்டோரி', 'தேஸி பாய்ஸ்' உட்பட சில படங்களில் நடித்தேன். 'பில்லா 2' வாய்ப்பு வந்ததும் உடனே சம்மதித்தேன். இந்தி படங்களை விட, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் பணியாற்றுவதைதான் விரும்பினேன். ஏனென்றால் அவர்கள் குறிப்பிட்ட காலத்தில் படத்தை முடித்துவிடுகிறார்கள். எனது விரும்ப்பம் 'பில்லா 2' மூலம் நிறைவேறியிருக்கிறது. மொழி பிரச்னை இல்லையா என்கிறார்கள். பிரச்னைதான். 'பில்லா 2' ஷூட்டிங்கில், ஷாட் தொடங்கும் முன் டயலாக் சொல்லித்தர எனக்கென ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் மூலம் பயிற்சிப் பெற்றேன். வேறொருவர் டப்பிங் பேசுவார் என்றாலும் உச்சரிப்பை சரியாகச் செய்துள்ளேன். அஜீத் எனக்கு நிறைய உதவிகள் செய்தார். அவருடன் நடித்தது புது அனுபவமாக இருந்தது. இந்தப் படம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும்.
பழங்குடிப் பெண்ணாக ஷிகா
'பழங்குடியினப் பெண்ணாக நடிப்பது வித்தியாசமான அனுபவம்' என்றார், ஷிகா. மேலும் அவர் கூறியதாவது: நான் நடித்த 'விண்மீன்கள்' விரைவில் ரிலீசாகிறது. இதில் கனமான வேடம். இதையடுத்து 'படம் பார்த்து கதை சொல்' வருகிறது. மாடர்ன் பெண்ணாக நடித்துள்ளேன். 'வன யுத்தம்' படத்தில் பழங்குடிப் பெண்ணாக நடிக்கிறேன். அடர்ந்த காடுகளில், மலைப்பகுதிகளில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். இனி தமிழ்ப் படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன்.
ரஜினியுடன் நடிக்க அசின் மறுத்தாரா?
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க எப்போதும் ரெடியாகவே இருக்கிறேன் என்று அசின் கூறினார். சவுந்தர்யா இயக்கும் 'கோச்சடையான்' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஜோடியாக அசின் நடிக்க இருந்ததாகவும் கால்ஷீட் பிரச்னை காரணமாக நடிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி அசினிடம் கேட்டபோது கூறியதாவது: 'கோச்சடையானில்' நடிக்க மறுத்தேனா என்பதை அதன் தயாரிப்பாளரிடம்தான் கேட்கவேண்டும். இதுபற்றி இப்போது நான் கருத்து சொல்ல முடியாது. ஆனாலும் நல்ல புராஜக்ட் அமைந்தால் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க எப்போதும் தயாராகவே இருக்கிறேன். இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷை காதலிக்கிறீர்களா என்கிறார்கள். இந்தி சினிமாவில் கிசுகிசுவை கேட்டு காது புளித்துவிட்டது. நான் எப்போதும் வெளிப்படையானவள். யாரையும் காதலித்தால் நேரடியாகச் சொல்லிவிடுவேன். இப்போது அக்ஷய்குமார், ஜான் ஆபிரகாமுடன், 'ஹவுஸ்புல் 2', அஜய்தேவ்கன், அபிஷேக் பச்சனுடன், 'போல் பச்சான்' ஆகிய இந்தி படங்களில் நடித்து வருகிறேன். இவ்வாறு அசின் கூறினார்.
மம்மூட்டி மகன் திருமணம் சென்னையில் நடந்தது!
மம்மூட்டியின் மகனும் நடிகருமான தல்குவார் சல்மான், சென்னை தொழிலதிபர் செய்யது நிஜாமுதீன் மகள் அமல் சுல்பி, திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. எளிமையாக நடந்த இத்திருமணத்தில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாடகர் கே.ஜே. ஏசுதாஸ், சரத்குமார், ராதிகா, பிரபு, ராம்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொச்சியிலுள்ள ராமதா ரிசார்ட்ஸில் திங்கட்கிழமை நடக்கிறது.
கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தமிழில் விஜய் டிவியில் நடத்துகிறார் நடிகர் சூர்யா
இந்தியில் பிரபலமான கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தமிழில் விஜய் டிவியில் நடத்துகிறார் நடிகர் சூர்யா. இதன் மூலம் அவர் சின்னத் திரையிலும் கால் பதிக்கிறார். உலகின் பல்வேறு நாடுகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி 'கோன் பனேகா குரோர்பதி'. தமிழில் இந்த நிகழ்ச்சி கோடீஸ்வரன் என்ற பெயரில் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்நிகழ்ச்சியை பிரபல நடிகரான சூர்யா தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை சில ஆண்டுகளுக்கு முன்பு வடஇந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ஹிந்தி தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கினார். அதேபோல் தமிழிலும் 'கோடீஸ்வரன்' என்ற நிகழ்ச்சியை கொண்டு வந்தார்கள். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவை தேர்வு செய்துள்ளனர். இன்றைய தினசரிகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்களும் வெளியாகியுள்ளன. முன்னதாக, இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் தொகுத்து வழங்குவார் என்று தகவல் வெளியானது. ஆனால் சூர்யாவுக்குப் போய்விட்டது என்கிறார்கள்!
மனம் கொத்திப் பறவை
ஒலிம்பியா மூவீஸ் சார்பில் எழில், அம்பேத்குமார், ரஞ்சீவ் மேனன் தயாரிக்கும் படம், 'மனம் கொத்திப் பறவை'. சிவகார்த்திகேயன், ஆத்மியா, இளவரசு, சூரி, ரவிமரியா உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சூரஜ் நல்லுசாமி. இசை, இமான். பாடல்கள், யுகபாரதி. படத்தை இயக்கும் எழில், நிருபர்களிடம் கூறியதாவது: நான் இயக்கிய 'துள்ளாத மனமும் துள்ளும்', 'பெண்ணின் மனதைத் தொட்டு' உட்பட பல படங்கள் நகரம் சார்ந்த கதைகளை கொண்டது. இப்போது கிராமத்துக் காதல் கதையுடன் இந்தப் படத்தை இயக்குகிறேன். காமெடிக்கும், யதார்த்தத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும். தஞ்சையிலுள்ள என் சொந்த கிராமத்தில் ஷூட்டிங் நடக்கிறது. இக்கதையை பலரிடம் சொன்னபோது, யாரும் தயாரிக்க முன்வரவில்லை. பிறகு நண்பர்களுடன் இணைந்து நானே தயாரிக்கிறேன். இந்தப் படம் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.