அவதூறு பரப்பிய பைனான்சியர் மீது லதா ரஜினி வழக்கு

தன் மீது அவதூறு பரப்பி, வீண் பழி சுமத்தியதாக பைனான்சியர் ஆட் பியூரோ நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் லதா ரஜினிகாந்த்.

கோச்சடையான் படத்துக்காக பெற்ற பணத்தை திரும்பச் செலுத்தவில்லை என லதா ரஜினிகாந்த் மீது ஆட் பியூரா நிறுவனத்தினர் பிரஸ் மீட் வைத்து அண்மையில் குற்றம் சாட்டியிருந்தனர்.

ஆனால் இந்த நூறுசதவீதம் வட்டி போட்டு மோசடியாக பணம் பறிக்கப் பார்ப்பதாக பதிலுக்கு கோச்சடையான் தயாரிப்பாளரான மீடியா ஒன் நிறுவனம் பதிலளித்திருந்தது.

அவதூறு பரப்பிய பைனான்சியர் மீது லதா ரஜினி வழக்கு

இந்த நிலையில், ஆட் பியூரோ நிறுவனம் திட்டமிட்டு தன் மீது வீண்பழி சுமத்துவதாகக் கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் லதா.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள லதா ரஜினிகாந்த், "ஆட் பியூராவைச் சேர்ந்தவர்கள் தங்கள் குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும். வீண் பழி சுமத்தி எனக்கு அவப்பெயர் தேடித் தருவதால் மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன். எனது பெயரை ஆட் பியூரா கெடுக்கிறது.

கோச்சடையான் படத்திற்காக மீடியா ஒன் நிறுவனத்திற்கு ஆட் பியூரா ரூ.10 கோடி கடன் அளித்தது. ஆனால் அப்போதே ரூ.1.2 கோடி கழித்துக் கொண்டுதான் தந்தது. தொடர்ந்து, ரூ.20 கோடி கடன் கொடுப்பார்கள் என்ற உத்தரவாதத்தில்பேரில்தான் ரூ.2.4 கோடி ஆட் பியூராவுக்கு திரும்ப செலுத்தினோம். ஆனால் அவர்கள் அந்தக் கடனைக் கொடுக்கவில்லை. மேலும் முதலில் வாங்கிய கடனில் ரூ.5.6 கோடி திரும்ப செலுத்துப்பட்டுவிட்டது," என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, லதா ரஜினிகாந்த்துக்கு பதில் அளித்து ஆட் பியூராவைச் சேர்ந்த அபிர்சந்த் நஹார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லதா ரஜினிகாந்த் வாங்கிய ரூ.10 கோடி பணத்தை திரும்பச் செலுத்துவதாக ஆட் பியூரா நிறுவனத்துக்கு உத்தரவாதக் கடிதம் அளித்துள்ளார். செய்து கொண்ட ஒப்பந்தத்தில் மேற்கொண்டு ரூ.20 கோடி தருவது பற்றி எங்கும் நாங்கள் குறிப்பிடவில்லை.

லதா ரஜினிகாந்த் பொய்களைப் பரப்புகிறார். எங்களிடம் அவருக்கு எதிரான ஆவணங்கள் உள்ளன," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ரசிகனுக்கே ரசிகனான சூப்பர் ஸ்டார்... அதான் ரஜினி!

நக்கீரனில் அந்தக் கட்டுரையைப் படித்த அத்தனைப் பேருக்குமே நெகிழ்ச்சி, வியப்பு...

இப்படி ஒரு ரசிகர்... அந்த ரசிகரை ரசித்து மரியாதை செய்த இத்தனை அரிய சூப்பர்ஸ்டார்.. இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று கேட்டுக் கொண்டனர்.

ரசிகனுக்கே ரசிகனான சூப்பர் ஸ்டார்... அதான் ரஜினி!

அந்தக் கட்டுரை இதோ...

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண் டாடப்படும் ரஜினியை இதுவரை யாரும் பார்த்திராத கோணத்தில் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது அவரது வெறித்தனமான ரசிகர் ரஜினி பாலாவுக்கு. ஒரு குழந்தை போல் ரஜினியும் குதூகலித்த அந்த தருணத்தில் நாமும் அங்கிருந்தோம்.

சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகரைச் சேர்ந்த இளைஞர் ரஜினி பாலா. ரஜினி யின் ரசிகர் மட்டுமல்ல, வெறியன் மட்டுமல்ல, அதற்கும் மேலே. ரஜினியைப் பார்க்கலாம் வா என யார் கூப்பிட்டாலும் அவர்களுடன் கிளம்பிவிடுவார். வீட்டில் சதா நேரமும் ரஜினி படம் பார்ப்பது, ரஜினியைப் போல் நடை, உடை, பாவனை, பேச்சு, இப்படி ரஜினியே மூச்சென இருக்கும் ரஜினி பாலா வுக்கு வயது 36. ஆனால் செயல்பாடுகள் எல் லாமே ஒரு குழந்தை யைப் போல்தான்.

"நாலு வயசு வரைக்கும் நல்லாத்தான் இருந்தான். திடீர்னு மூளைக் காய்ச்சல் தாக்கி இப்படி ஆகிட்டான். ஆனா அவனுக்கு ரஜினி அய்யா மட்டும்தான் தெரியும். ரஜினி அய்யா உடல்நலம் பாதிக்கப் பட்டப்ப, இவன் தற் கொலை பண்ணிக்கப் போய்ட்டான். ரஜினி அய்யா மாத்திரை கொடுத்து விட்டார்னு சொன்னாத்தான் மாத்திரை சாப்பிடுவான். ரஜினி அய்யாவை நேரில் ஒரு முறையாவது பார்த்துடணும்கிறதுதான் லட்சியம், கனவு எல்லாமே. ஆனா அது நடக்குமான்னு தெரியல..'' ரஜினிபாலாவின் தாய் பானுமதியின் இந்த ஏக்கத்தை "கிடைக்குமா ரஜினி தரிசனம்? -ஏங்கும் ஓர் உயிர்!' என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம்.

கடந்த செவ்வாய் மாலை நமக்கு ரஜினி வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. உடனே ரஜினி பாலா குடும்பத்தாருக்கு விஷயத்தைச் சொன்னோம். மகிழ்ச்சியில் திக்குமுக்காடியது அந்தக் குடும்பம். புதன் காலை 10 மணிக்கே ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் ஆஜரானோம். ரஜினிபாலா வருவதற்கு சற்று தாமதமாகிவிட்டது. சரியாக 10.28-க்கு இண்டர்காம் லைனில் வந்து 'அந்தப் பையன் வந்துட் டாரா?' என உதவியாளர் சுப்பையாவிடம் விசாரிக்கிறார் ரஜினி.

"இல்ல சார், நக்கீரன்லருந்து வந்துட்டாங்க. அந்தப் பையன் அண்ணா மேம்பாலத் துக்கிட்ட வந்துக்கிட்டிருக்கான்னு தகவல் சார்'' என்கிறார். மீண்டும் 10.40-க்கு ரஜினி விசாரிப்பதற்கும் ரஜினிபாலா குடும்பம் வருவதற்கும் சரியாக இருந்தது.

"தம்பி உனக்காக சார் காத்துக்கிட்டிருக்காரு'' என்று சொல்லியபடி, ரஜினிபாலாவுக்கும் அவரது தாயாருக்கும் மோர் கொடுத்து உபசரிக்கிறார் சுப்பையா. சில நிமிடங்கள் கரைகிறது... கதவைத் திறந்து கொண்டு மின்னலென அந்த ஹாலுக்குள் பிரவேசிக்கிறார் ரஜினி.

"கண்ணா எப்படி இருக்க?'' என கேட்டபடியே ரஜினிபாலாவை கட்டி அணைக்கிறார் ரஜினி.

"தலைவா...'' எனக் கூறியபடி சடாரென ரஜினியின் காலில் விழுகிறார் ரஜினி பாலா. மகிழ்ச்சியில் அதிர்ச்சியாகி நின்ற ரஜினி பாலாவின் தாய் பானுமதிக்கு இந்தக் காட்சியை நம்பவே முடியவில்லை.

ரஜினி பாலாவை தூக்கி நிறுத்திய ரஜினி, "உட்காரு கண்ணா...''என்றவாறு தன் அருகில் உட்கார வைக்கிறார். "வெளியில நிக்கிறவங்களை உள்ள வரச்சொல்லுங்க'' என ரஜினி சொல்லியதும், ரஜினிபாலாவின் தங்கை மற்றும் உறவினர்கள் உள்ளே அழைத்து வரப்படுகிறார்கள்.

"தம்பிக்கு வயசு என்ன, ஏன் இப்படி ஆயிட்டான்'' என அக்கறையாக ரஜினிபாலாவின் தாயாரிடம் விசாரித்துவிட்டு, "அந்த ஷாலை கொடுங்க''என தன் உதவியாளரிடம் சால்வையை வாங்கி ரஜினிபாலாவுக்குப் போர்த்தி தன்னுடைய வெறித்தனமான ரசிகனை கவுரவிக்கிறார் ரஜினி.

சடாரென சேரிலிருந்து எழுந்து ரஜினியின் முன்பு தரையில் உட்கார்ந்து, "அண்ணாமலை' பாம்பு சீன், துள்ளிக் குதித்து எழுந்து "பாட்ஷா' ஸ்டைல், விசுக்கென ஆள்காட்டி விரலை ஆட்டி "ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்றான்' என விதம் விதமாக நடித்துக் காட்டுகிறான் ரஜினிபாலா. எல்லாவற்றையும் குழந்தை போல் கைதட்டி ரசித்து, வாய் விட்டுச் சிரித்து மகிழ்கிறார் ரஜினி. அடுத்து கிஃப்ட் பாக்ஸ், ஸ்வீட் பாக்ஸ், கையடக்க ரஜினி சிலை ரஜினிபாலாவுக்கு ரஜினி கொடுக்க, கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் நெக்குருகுகிறது குடும்பம்.

"அய்யா ஒங்க பேரைச் சொன்னாத்தான்யா மாத்திரை சாப்பிடுறான்'' என ரஜினிபாலாவின் தங்கை கூறியதும், "கண்ணா மாத்திரயை ஒழுங்கா சாப்பிடணும், அம்மாகிட்ட நான் விசாரிப்பேன்... என்ன சரியா?'' என்றதும் "இனிமே ஒழுங்கா சாப்பிடுவேன்''என மழலை மொழியில் சொல்கிறான் ரஜினிபாலா.

"பார்த்து பத்திரமா கூப்பிட்டுப் போங்க''என உள்ளத்திலிருந்து வருகிறது ரஜினியின் வார்த்தகள்.

"அவரை நேரில் பார்த்துட்டான் என் மகன். இனிமே அவன் குணமாயிருவான்கிற நம்பிக்கை வந் திருச்சு," என்றார் ரஜினி பாலாவின் தாய் பானுமதி.

நன்றி: நக்கீரன்

 

நடிகர் சங்க தலைவர் பதவிக்குப் போட்டி... நடிகர் ஜெயசுதாவுக்கு கொலை மிரட்டல்

தெலுங்கு நடிகர் சங்க தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நடிகை ஜெயசுதாவுக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்தத் தேர்தல் வருகிற 29-ந்தேதி நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு நடிகை ஜெயசுதாவுடன் நடிகர் ராஜேந்திரபிரசாத் மோதுகிறார்.

நடிகர் சங்க தலைவர் பதவிக்குப் போட்டி... நடிகர் ஜெயசுதாவுக்கு கொலை மிரட்டல்

ஏற்கனவே தலைவராக இருந்த நடிகர் முரளிமோகன் தெலுங்குதேசம் கட்சி சார்பில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதால் போட்டியில் இருந்து விலகி விட்டார்.

அவர் ஜெயசுதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ராஜேந்திர பிரசாத்துக்கு நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இரு அணியினரும் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் போட்டியில் இருந்து வாபஸ் பெறும்படி ஜெயசுதாவுக்கு மிரட்டல் வந்துள்ளதாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் 43 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். ராஜேந்திரபிரசாத், முரளிமோகன் போன்றோர் வயதில் எனக்கு மூத்தவர்களாக இருக்கலாம். ஆனால் சினிமாவில் நான்தான் சீனியர்.

அவர்களுக்கு முன்பே நான் சினிமாவுக்கு வந்துவிட்டேன். தெலுங்கு நடிகர் சங்கத்தை உருவாக்கியதிலிருந்து அதில் உறுப்பினராக இருக்கிறேன். துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளேன்.

தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதால் எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. போட்டியிலிருந்து விலகும்படி அரசியல்வாதிகள் மிரட்டுகிறார்கள்.

இந்த மிரட்டல்களுக்கு பயப்படமாட்டேன். மிரட்டலுக்கு பிறகு தேர்தலில் இன்னும் தீவிரமாகி விட்டேன். நலிந்த நடிகர்- நடிகைகளுக்கு உதவிகள் செய்யவும், அரசிடம் இருந்து சலுகைகள் பெற்றுத்தரவும்தான் தேர்தலில் நிற்கிறேன். நிச்சயம் வெற்றி பெறுவேன்," என்றார்.

 

சன்னி லியோனுக்கு பெட்ருமாக்ஸ் லைட்டே தான் வேணுமாம்!

மும்பை: ஏக் பஹேலி லீலா படப்பிடிப்பின்போது ரூ.10 லட்சம் மதிப்புள்ள உள்ளாடையை மட்டும் தான் அணிவேன் என்று நடிகை சன்னி லியோன் ஓவர் சீன் போட்டுள்ளார்.

வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்துக் கொண்டிருந்த சன்னி லியோனை இந்தியா அழைத்து வந்து நடிகையாக்கிவிட்டார்கள் இந்த பாலிவுட்காரர்கள். அதன் பிறகு ஒவ்வொரு உட்காரர்களும் சன்னியை தங்கள் படங்களில் குத்தாட்டம் போட வைத்து வருகிறார்கள். இதற்கிடையே அம்மணி பெரிய இடத்து பார்ட்டிகளில் கலந்து கொண்டு வேறு பணம் சம்பாதித்து வருகிறார்.

சன்னி லியோனுக்கு பெட்ருமாக்ஸ் லைட்டே தான் வேணுமாம்!

சன்னி தற்போது ஏக் பஹேலி லீலா என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படப்பிடிப்பு நடந்தபோது அவருக்கு சில கவர்ச்சியான உடை அளித்து குத்தாட்டப் பாடலை படமாக்க தயாராகினர். அப்போது சன்னி பிரபல விக்டோரியா சீக்ரெட் பிராண்ட் உள்ளாடைகளை அளித்தால் மட்டுமே நடிப்பேன் என்று சீன் போட்டுள்ளார்.

அவர் கேட்ட உள்ளாடையின் விலை ரூ. 10 முதல் ரூ.12 லட்சம் ஆகும். அவ்வளவு பட்ஜெட் இல்லாததால் தயாரிப்பாளர்கள் சன்னியிடம் நிலைமையை கூறி கொடுக்கும் உடைகளை அணியுமாறு கேட்டுள்ளனர்.

நம்ம சீன் போட்டு இங்கு வேலைக்கு ஆகாது என்பதை தெரிந்து கொண்ட சன்னி இறுதியில் தயாரிப்பாளர்கள் அளித்ததை அணிந்து டான்ஸ் ஆடியுள்ளார்.

 

முதல் முறையாக போலீஸ் யூனிபார்ம் போடும் விஜய் சேதுபதி!

பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய எஸ் யூ அருண்குமார் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை வாசன் மூவீஸ் சார்பில் தயாரிக்கிறார் ஷான் சுதர்சன். முதல் முறையாக நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். ஏற்கெனவே பீட்சா படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர்.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.

முதல் முறையாக போலீஸ் யூனிபார்ம் போடும் விஜய் சேதுபதி!

விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

கடந்த ஆண்டு விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த இரண்டு படங்கள் வெளியாகின. ஒன்றுகூட வெற்றி பெறவில்லை. அதற்குப் பிறகு அவரது புதிய படங்கள் எதுவும் வரவில்லை.

இப்போது மெல்லிசை, புறம்போக்கு, நானும் ரவுடிதான் உள்பட 6 படங்களில் நடிக்கிறார். அடுத்தடுத்து புதிய படங்களைத் தொடர்ந்து ஒப்புக் கொண்டும் வருகிறார்.

 

விஷால் - சுசீந்திரன் புதிய படத்துக்கு ரஜினி படத் தலைப்பு

ரஜினி படங்களின் தலைப்பைக் கைப்பற்றுவதில் ஏக ஆர்வம் காட்டுகிறார் விஷால்.

முன்பு நான் மகான் அல்ல படத் தலைப்பைக் கைப்பற்றியவர், அடுத்து குறிவைத்தது பாயும் புலி.

எண்பதுகளில் ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடித்து வெளியான பெரும் வெற்றிப் படம் பாயும் புலி. இந்தத் தலைப்பை பெரும் விலை கொடுத்து அவர் வாங்கியதாகச் சொல்கிறார்கள்.

விஷால் - சுசீந்திரன் புதிய படத்துக்கு ரஜினி படத் தலைப்பு

இப்படத்தில் காஜல் அகர்வால் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மதுரையை கதைக் களமாக கொண்டு உருவாகி வருகிறது.

முதலில் இப்படத்திற்கு ‘காவல் கோட்டம்' என்று வைத்திருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் தற்போது ‘பாயும் புலி' என்ற தலைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கின்றனர்.

ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி வரும் ‘பாயும் புலி' படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக விஷால் நடிக்கிறார். சமுத்திரகனி விஷாலின் அண்ணனாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.