ரஜினியின் கோச்சடையான் படம் வெளியானதை இரண்டாவது நாளும் கொண்டாடி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.
பல திரையரங்குகளில் இன்றும் பட்டாசு வெடித்து நடனமாடி, படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள்.
பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு ரஜினியின் கோச்சடையான் நேற்று உலகெங்கும் வெளியானது. மிக அதிக அரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு வரலாறு காணாத வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழகம், வளைகுடா நாடுகள், தென்கிழக்காசியா, ஐரோப்பாவில் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பு வெளியீட்டை, ஒரு திருவிழா போல கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.
நேற்று கோச்சடையான் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்ற ரஜினி ரசிகர்கள், இன்றும் அதைத் தொடர்கின்றனர்.
சென்னை காசி தியேட்டரில் நேற்று முழுக்க நடந்த கொண்டாட்டங்கள், இன்றும் தொடர்கின்றன. தியேட்டருக்கு வெளியே பட்டாசுகள் வெடித்த ரசிகர்கள், அங்கு குழுமி நின்றவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
பாலாபிஷேகம், ஆரத்தி, தேங்காய் உடைப்பு என ஆராதனைகளுக்கும் குறைவில்லை.
பெரும்பாலான ரசிகர்கள் தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகள் பார்க்கவே விரும்புகின்றனர்.
பொதுவாக ரஜினி படம் என்றால் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பைப் பார்த்து, சில தினங்கள் கழித்தே திரையரங்குக்கு வருவார்கள் குடும்ப ரசிகர்கள். ஆனால் இந்த முறை முதல் நாளிலிருந்தே குழந்தை குட்டிகளுடன் குடும்பம் குடும்பமாகப் படம் பார்க்க வருகிறார்கள்.
சென்னையைத் தாண்டி, புறநகர்களில் ரசிகர்கள் ஆரவாரத்துக்கும் உற்சாகத்துக்கும் குறைவில்லை. அம்பத்தூர், மடிப்பாக்கம், நங்கநல்லூர், வில்லிவாக்கம் பகுதிகளிலும், வெளிமாவட்டங்களில் சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, நாகர்கோவில், நெல்லை, மதுரை, திருச்சி, கும்பகோணம் பகுதிகளிலும் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் இன்றும் பட வெளியீட்டைக் கொண்டாடி வருகின்றனர்.