இந்த 2012-ல் இதுவரை கோடம்பாக்கத்தில் தயாரான நேரடிப் படங்கள் என்று பார்த்தால் 100-ஐத் தாண்டிவிட்டது. டப்பிங்கையெல்லாம் சேர்த்தால் 150-ஐத் தாண்டுகிறது.
இவற்றில் நேரடித் தமிழ்ப் படங்களில் வெற்றிப் பெற்று பெரும் லாபம் குவித்த படங்கள் என்று பார்த்தால் வெகு சிலதான் தேறுகின்றன.
வசூல், அதிக நாள் ஓடிய கணக்கு என அனைத்து வகையிலுமே முதலிடத்தில் இருப்பது உதயநிதி ஸ்டாலின் - சந்தானம் நடித்து வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடிதான். இந்தப் படம் விரைவில் வெள்ளி விழா காணவிருக்கிறது. பெரும் தொகையை லாபமாக சம்பாதித்துக் கொடுத்துள்ளது.
இந்தப் படத்தின் சாதனையை சசிகுமாரின் சுந்தரபாண்டியன் மிஞ்சலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
தமிழ் - தெலுங்கில் நேரடி இருமொழிப் படமாக வந்த நான் ஈ, இன்னொரு குறிப்பிடத்தக்க வெள்ளிப் படம். தமிழில் மட்டும் இந்தப் படம் 25 கோடியும், தெலுங்கில் 75 கோடியும், ஆக ரூ 100 கோடியை வசூலித்துள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ 40 கோடிதான்!
ஷங்கர் இயக்கத்தில் பொங்கலுக்கு வந்த நண்பன் முதலுக்கு மோசமில்லை என்ற அளவுக்கு ஓடியது.
'கலகலப்பு', 'காதலில் சொதப்புவது எப்படி', 'அட்டகத்தி' படங்கள் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை சம்பாதித்துக் கொடுத்துள்ளன. இவற்றின் பட்ஜெட்டுக்கும் வசூலுக்கும் ஏக வித்தியாசம்.
மெரீனா படத்தை ரூ 1 கோடியில் எடுத்தனர். ரூ 3 கோடி லாபம் பார்த்துள்ளனர் (தயாரிப்பாளர் - இயக்குநர் சண்டைதான் தீர்ந்தபாடில்லை!)
அம்புலி எனும் 3 டி படம், ஆச்சர்யப்படும் அளவுக்கு டீசன்டான வசூலைப் பெற்றது.
'வழக்கு எண் 18/9' மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நல்ல லாபம் பார்த்தது. தமிழி சினிமாவுக்கு பெருமையும் சேர்த்தது. 'தோனி,' 'கழுகு', 'உருமி', 'நான்' ஆகிய மூன்று படங்களும் அவற்றின் தரத்துக்காக பேசப்பட்டவை. வசூலும் மோசமில்லை என்கிறார்கள்.
சமீபத்தில் வெளியான படங்களில் ஸ்ரீகாந்த் பாகன் வெற்றிப் படமாக அமைந்து, லாபம் ஈட்டிக் கொடுத்துள்ளது. முகமூடி குறித்து எதிர்மறை விமர்சனங்கள் இருந்த போதிலும், வசூல் ரீதியில் முதல் இரு வாரங்களில் திருப்திகரமான நிலை இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெரிதாக எதிர்ப்பார்த்து ஏமாற்றிய படங்களில் முக்கியமானவை சகுனி, வேட்டை, 3, பில்லா 2 போன்றவை சேர்கின்றன!