மேகா க்ளைமாக்ஸ் மாற்றம்... புதிதாக படம்பிடித்து சேர்த்தனர்!

மேகா படத்தின் இறுதிக் காட்சி, படம் பார்த்தவர்களுக்கு திருப்தி அளிக்காததால் அதில் மாற்றம் செய்துள்ளனர் படக்குழுவினர்.

இளையராஜா இசையில் தயாராகியுள்ள படம் ‘மேகா'. அஸ்வின், சிருஷ்டி ஜோடியாக நடித்துள்ளனர். கார்த்திக் ரிஷி இயக்கியுள்ளார். ஆல்பர்ட் ஜேம்ஸ், எஸ்.செல்வகுமார் தயாரித்துள்ளனர்.

மேகா க்ளைமாக்ஸ் மாற்றம்... புதிதாக படம்பிடித்து சேர்த்தனர்!

ஜெ.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜெ.சதீஷ்குமார் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார். தமிழகம் முழுவதும் வருகிற 22-ந்தேதி ‘மேகா' படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது ரிலீஸ் தேதியைத் தள்ளி வைத்துள்ளனர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார் கூறுகையில், "இளையராஜா இசையில் ‘மேகா' படம் பிரமாதமாக வந்துள்ளதால் இப்படத்தை வெளியிடுகிறேன்.

முன் கூட்டியே கடந்த வாரம் இந்த படத்தை பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காட்டினோம். எல்லோரும் படத்தைப் பாராட்டினார்கள்.

ஆனால் ‘கிளைமாக்ஸ்' காட்சி சோகமாக முடிகிறது என்றும் அதை மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் யோசனை சொன்னார்கள். அதை ஏற்றுக் கொண்டேன். ராஜா சாரும் இதையே சொன்னார்.

இப்போது க்ளைமாக்ஸ் சுபமாக முடிவது போல் படத்தை மாற்றி உள்ளோம். இதற்காக மீண்டும் புதிய கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கி சேர்த்துள்ளோம்.

இதற்காக மீண்டும் படத்துக்கு தணிக்கை செய்ய வேண்டி உள்ளது. தணிக்கை குழுவில் ஆள் பற்றாக்குறை இருப்பதால் உடனடியாக தணிக்கை செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறது. படம் தணிக்கையானதும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்," என்றார்.

 

கத்தி, புலிப்பார்வை படங்களை வெளியிடக் கூடாது- உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மதுரை: கத்தி, புலிப்பார்வை படங்களை வெளியிடக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி ரமேஷ் இம்மானுவேல் தாக்கல் செய்துள்ள மனு:

"வரும் தீபாவளி தினத்தில் ‘கத்தி' மற்றும் ‘புலிப்பார்வை' திரைப்படங்கள் வெளியிடப்பட உள்ளன. இந்த திரைப்படங்கள் தமிழ்க் கலாசாரம், இலங்கைப் போர் தொடர்பான தமிழர் உணர்வுகளை மோசமாக சித்தரித்துக் காட்டியிருப்பதாக தெரியவந்துள்ளது.

கத்தி, புலிப்பார்வை படங்களை வெளியிடக் கூடாது- உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கத்தி' திரைப்படத்தை தயாரித்துள்ள அய்ங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே மறைமுகமாக நிதியுதவி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் தமிழர் உணர்வுகளை புண்படுத்துவதாக வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இலங்கையில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தபட்ட தமிழ்ப் பெண்கள் அமைதியாக வாழ்வதாகவும், சிங்களர், தமிழர் இனக் கலப்பு மூலம் அங்கு புதிய இனம் தோன்றுவதாகவும், ‘கத்தி' படத்தில் கருத்துக்கள் இடம் பெறுகின்றன.

புலிப்பார்வை' திரைப்படத்தை வேந்தர் மூவீஸ் தயாரித்துள்ளது. இப்படம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் மரணத்தை மோசமாக சித்தரித்துக் காட்டுவதாக உள்ளது. பாலச்சந்திரனை சீன ராணுவத்தினர் கொன்றதாக ‘புலிப்பார்வை' படத்தில் கூறியுள்ளனர்.

மேற்கண்ட 2 படங்களும் தமிழர்களை தீவிரவாதிகளாகவும், தேசவிரோதிகளாகவும் சித்தரிக்கின்றன. இலங்கை அதிபர் ராஜபக்சே, போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை திசை திருப்புவதற்காக இப்படிப்பட்ட திரைப்படங்களை தயாரிப்பதாக கூறப்படுகிறது.

இத்திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியிடப்பட்டால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இந்த 2 திரைப்படங்களையும் திரையிட தடை விதிக்கும்படி டிஜிபி-யிடம் புகார் அளித்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும்," என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், இருதரப்பு வாதங்களை கேட்டறிந்தார். தீர்ப்பை வேறொரு நாளுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

 

"சிங்கள" குரல் 'புலிப்பார்வை'; இனத்துரோகம் 'கத்தி': 65 இயக்க தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை!

சென்னை: சர்ச்சைக்குரிய கத்தி மற்றும் புலிப்பார்வை ஆகிய திரைப்படங்களை ஏன் எதிர்க்கிறோம் என்பதற்கான கூட்டு விளக்க அறிக்கையை 65 அமைப்புகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.

சென்னையில் இன்று தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 65 பேர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தின் முடிவில் "கத்தி, புலிப்பார்வை திரைப்படத்தை எதிர்ப்பது ஏன்?" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை:

புலிப் பார்வை

அன்று வியட்நாம் போரின் கொடூரத்தை உலககுக்கு எடுத்துச் சொன்னது ஒரு சிறுமியின் படம்.. அதேபோல் தமிழீழ விடுதலைப் போரின் உச்ச கொடூரத்தை சர்வதேச சமூகம் முன்வைத்தது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் இளைய மகன் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் குறித்த புகைப்படங்கள்..

சிங்கள வல்லூறுகளிடம் உயிருடன் சிக்கி நெஞ்சப் பரப்பெங்கும் வஞ்சகத்தார் துப்பாக்கி குண்டுகளால் துளைத்த அந்தப் பிஞ்சுவின் புகைப்பட காட்சிகள் கண்டு கதறியழுது கண்ணீர் விடாத இதயம் எதுவும் இல்லை...

தற்போது பாலச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வதாக கூறும் வகையில் புலிப் பார்வை என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இதன் காட்சிகளைப் பார்க்கும் மனசாட்சி உள்ள எந்த மனிதருமே இப்படி ஒரு அப்பட்டமான இனத்துரோக சிந்தனையுடன் கூடிய படம் தமிழகத்தில் இருந்து வெளியாகிறதே? என்று கொந்தளிக்கத்தான் செய்வார்கள்.

ஏனெனில்

- இந்த படத்தின் காட்சிகள் அனைத்திலுமே பாலகன் பாலச்சந்திரன் 'சிறார் போராளியாக' சித்தரிக்கப்படுகிறார்... இது உண்மைக்கு மாறானது.

- அத்தனை காட்சிகளிலுமே துப்பாக்கியுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சீருடையுடனுமே பாலச்சந்திரன் 'பாத்திரம்' வலம் வருகிறது..

- உச்சகட்ட கொடூரமாக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன், பாலச்சந்திரனுக்கும் சிறார்களுக்கும் ஆயுத பயிற்சி கொடுப்பதாக காட்சிகள் வருகின்றன.

இவை அனைத்துமே சிங்களத்தின் பொய்யுரைக்கு வலுச்சேர்க்கவே பயன்படும்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் தொடர்பான உண்மை புகைப்படம் எதனிலும் அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கச் சீருடையுடன் ஆயுதப் போராளியாக இருந்ததே கிடையாது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆளுமை செலுத்திய காலத்தில் பாலகன் பாலச்சந்திரன், அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்தார். அது தொடர்பான செய்திகளும் படங்களும் உலகத்தின் பார்வைக்கும் வந்திருக்கின்றன.

ஆனால் போர்முனையில் பாலகன் பாலச்சந்திரன் பலியானதாக காட்டி அந்தப் படுகொலையை நியாயப்படுத்தத் துடிக்கிறது 'புலிப் பார்வை' திரைப்படம். இது சிங்களப் பேரினவாதத்தின் பொய்யுரைக்கு வலு சேர்க்கிற திரைப்படம்.

பாலகன் பாலச்சந்திரன் போன்ற பிஞ்சுக் குழந்தைகளையும் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி சிங்களப் பேரினவாதம் படுகொலை செய்ததை நியாயப்படுத்துகிற இனவெறியின் உச்சகுரலே 'புலிப் பார்வை' திரைப்பட,ம்.

இனக்கொலை புரிந்த குற்றச்சாட்டின் பேரில் சிங்களப் பேரினவாத அரசு பன்னாட்டுப் புலனாய்வுக்கு உள்ளாகியிருக்கும் நேரத்தில் சிங்களத்தைக் காப்பாற்றும் முயற்சியாக இத்திரைப்படம் வந்துள்ளது. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கத்தி

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கத்தி திரைப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கடந்த ஒரு மாத காலமாக ஓடிக் கொண்டிருக்கிறன.

தமிழீழ பிரச்சனையில் ஒட்டுமொத்தம தமிழகமே ஒன்று திரண்ட நிலையில், இலங்கை பேரினவாத அரசு மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தி தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் சிங்களப் பேரினவாதமும் அதன் தலைமைத்துவத்தில் இருக்கிற போர்க்குற்றவாளியான ராஜபக்சேவும் ஒட்டுமொத்த தமிழினத்தின் கொந்தளிப்பை கொச்சைப்படுத்த, திசை திருப்ப, மழுங்கடிக்க கையில் எடுத்த உத்திதான் தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானத்தை தோற்கடிக்கும் வகையில் தமிழ்த் திரை உலகத்துக்குள் பணத்தை பாய்ச்சுவது என்பது.

தமிழ்த் திரை உலகத்தில் ஐங்கரன் கருணாவை அனைவரும் அறிவர். ஆனால் அவருடன் மெல்ல மெல்ல லைக்கா என்ற நிறுவனம் இணைந்து கோடம்பாகத்தில் கால்பதித்தது. அத்துடன் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்கிறது லைக்கா நிறுவனம்.

இந்த தகவல்கள் வெளியானது முதலே லைக்கா நிறுவனத்துக்கும் ராஜபக்சே குடும்பத்துக்குமான உறவுகள் என்ன என்பது குறித்து நீண்ட பட்டியல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. லைக்கா நிறுவனமே இந்தியாவில் இல்லை என்று சொன்னபோது சென்னையிலே அதன் அலுவலகம் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

இதற்கெல்லாம் மேலாக லைக்காவின் சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு ஈழத் தமிழர் என்று சப்பை கட்டு கட்டப்படுகிறது. ஆமாம் சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு ஈழத் தமிழர்தான். சந்தேகம் இல்லையே...

ஆனால் முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக உறவுகள் படுகொலை செய்யப்பட்ட போது நம் இனத்தின் மீது நச்சுகுண்டுகளை வீசிய அதே சிங்கள ராணுவத்தின் ஹெலிகாப்டரில் போய் இறங்கும் அளவுக்கு ராஜபக்சே கும்பலிடம் செல்வாக்கு கொண்ட இன்னொரு டக்ளஸும் கருணாவும்தான் இந்த சுபாஸ்கரன் என்பது உலகத் தமிழினம் நன்கறியும்.

முருகதாஸ், விஜய் என்ற தமிழர்கள் செய்யும் இனத்துரோகத்தை இனமானம் உள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்க முடியாது.

உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலையை நிகழ்த்திய போர்க்குற்றவாளிகளின் கரங்களில் படிந்திருப்பது நம் தொப்புள்கொடி உறவுகளின் ரத்தம் என்பதை மறந்துவிட முடியாது.. ஒரு மனிதனாக இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மனிதப் பேரவலத்தை நிகழ்த்திய மிக மோசமாக மனித உரிமைகளை காலில்போட்டு மிதித்த போர்க்குற்றவாளியான ராஜபக்சேவுடன் யார் கரம் குலுக்கினாலும் மன்னிக்கவும் முடியாது.

இப்படி புலிப் பார்வை, கத்தி போன்ற திரைப்படங்கள் தமிழினத்தின் உளவியல் சிந்தனை மீது நடத்தப்படுகிற போரின் வெளிப்பாடே!

சிறீலங்காவை புறக்கணிப்போம், அதன் மீது பொருளாதார தடைவிதிப்போம்! என்ற முழக்கம் தமிழகத்திலும் உலகெங்கிலும் எழுந்து வரும் நிலையில் தமிழகத்துக்குள்ளேயே சிங்களம் தலை நுழைத்து தொழில், வணிகம் செய்கிற முயற்சியை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

சிங்களத்தின் உளவியல் போரை வெல்ல தமிழர்களாய் ஓரணியில் ஒன்று திரள்வோம்! தமிழீழ விடுதலையை மீட்டெடுப்போம்!

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

கத்தி, புலிப்பார்வையை வெளியிடக் கூடாது: 65 அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று திரண்டு போர்க்கொடி!!

சென்னை: சர்ச்சைக்குரிய புலிப் பார்வை மற்றும் கத்தி திரைப்படங்களை வெளியிடக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் தனியரசு எம்.எல்.ஏ, புலவர் புலமைப்பித்தன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலர் கோவை ராமகிருட்டிணன் உட்பட 65க்கும் மேற்பட்ட இயக்கங்களின் தலைவர்கள் இணைந்து போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

சென்னையில் தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 65 பேர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கத்தி, புலிப்பார்வையை வெளியிடக் கூடாது: 65 அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று திரண்டு போர்க்கொடி!!

இக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, கொங்கு இளைஞர் பேரவையின் எம்.எல்.ஏ தனியரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, முன்னாள் எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலர் கோவை ராமகிருட்டிணன், கூடங்குளம் அணு உலை இயக்க எதிர்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன், தமிழ்த் தேசப் பேரியக்கத்தின் பெ. மணியரசன், தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் தியாகு, திராவிடர் விடுதலை கழகத்தின் தபசி குமரன், புதுச்சேரி மீனவர் வேங்கைகள் அமைப்பின் மங்கையர்செல்வன், தமிழ்ப் புலிகள் திருவள்ளுவன், திராவிட முன்னேற்ற மக்கள் கழகத்தின் ஞானசேகரன், மே 17 இயக்கத்தின் திருமுருகன், இளந்தமிழகம் இயக்கத்தின் செந்தில்குமார், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் பொழிலன் என மொத்தம் 65 அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கத்தி, புலிப்பார்வை ஆகிய திரைப்படங்களை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று முதல் கட்டமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையும் மீறி கத்தி, புலிப்பார்வை திரைப்படத்தை வெளியிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 65 அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி ஆலோசித்து போராட்ட அறிவிப்பை வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

 

'கத்தி' இசையில் விஜய் ரசிகர்களுக்கு நிறைய 'சர்பிரைஸ்' உண்டு: ஆவலைத் தூண்டும் அனிருத்

சென்னை: கத்தி பட இசை ஆல்பத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஏராளாமான ஆச்சரியங்கள் காத்திருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வரும் கத்தி படத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. படம் பிரச்சனையை எல்லாம் தாண்டி தீபாவளிக்கு ரிலீஸாகுமா என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

படத்தில் விஜய் தனது சொந்த குரலில் டூயட் பாடுகிறார். இந்நிலையில் இது குறித்து படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டரில் கூறுகையில்,

கத்தி இசை வேலை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அதில் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் காத்துள்ளன. விஜய் சார் பாடும் பாடல் தயாராகிவிட்டது. விரைவில் அவரை பாட வைத்து அதை பதிவு செய்வேன். படத்தின் இசையை செப்டம்பர் மாதம் மத்தியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். விரைவில் தேதியை அறிவிப்போம். கத்தி இசையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நாங்கள் அனைவரும் ஆவலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கத்தி படத்தின் தயாரிப்பாளர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுவதால் தான் இத்தனை பிரச்சனைகளும். ஆனால் தயாரிப்பாளர் வெளிநாட்டில் வாழும் ஈழத் தமிழர், அவருக்கும் ராஜபக்சேவுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறது படக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.

 

வரதட்சணைக் கொடுமை.. கணவன் வீட்டு முன் 3வது நாளாக துணை நடிகை தர்ணா!

வரதட்சணைக் கொடுமை.. கணவன் வீட்டு முன் 3வது நாளாக துணை நடிகை தர்ணா!

சென்னை: வரதட்சணைக் கேட்டு தன்னை வீட்டில் சேர்க்காத கணவன் மற்றும் மாமியாருக்கு எதிராக துணை நடிகை மூன்றாவது நாளாக தர்ணாவில் ஈடுபட்டார்.

ஆவடியில் உள்ள கணவன் வீட்டின் முன் தொடர்ந்து 3 நாட்களாக இந்த தர்ணாவை நடத்தி வருகிறார்.

ஆவடி கோவர்த்தனகிரி கிருஷ்ணன் தெரு வில் வசிப்பவர் விஜயகுமார் (34). இவரது மனைவி கலைவாணி (31). தமிழில் சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார் கலைவாணி.

கலைவாணிக்கு பிறந்த குழந்தை இறந்தது. இதனால் கணவர் வீட்டில் அவரை சேர்க்க மறுத்துவிட்டனர். மேலும் வரதட்சணை கேட்டு கலைவாணியை மிரட்டியுள்ளனர்.

நேற்று முன்தினம் கணவர் வீட்டுக்குச் சென்ற கலைவாணியை மாமியார் மரகதம் மிரட்டி, அங்கிருந்து விரட்டியுள்ளார். இதையடுத்து கலைவாணி தனது தாய் பிரேமாவுடன் ஆவடி காவல்நிலையத்துக்குச் சென்று கணவன் வீட்டார் மீது வரதட்சணைப் புகார் கொடுத்தார்.

போலீசார் அந்தப் புகாரைப் பெறஅறு வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இதற்கிடை யில், கலைவாணி நேற்று முன்தினம் முதல் கணவர் வீட்டின் முன்பு தெருவில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். அவரை உறவினர்கள் மற்றும் அந்த பகுதியினர் சமாதானப்படுத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்து இன்று 3வது நாளாக தர்ணாவில் கலைவாணி ஈடுபட்டுள்ளார்.

 

கார் டயர் வெடித்து விபத்து: நடிகர் பாபுகணேஷ் பலத்த காயம்

சென்னை: நடிகர் பாபுகணேஷ் சென்ற கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.

‘கடல் புறா' என்ற படத்தில் பாபு கணேஷ் நாயகனாக நடித்துள்ளார். இவரே இப்படத்தை இயக்கவும் செய்தார். தாட்பூட் தஞ்சாவூர், தேசிய பறவை, நடிகை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கார் டயர் வெடித்து விபத்து: நடிகர் பாபுகணேஷ் பலத்த காயம்

தற்போது பாபுகணேஷ் காட்டு புறா என்ற பேய் படத்தை இயக்கி நாயகனாகவும் நடிக்கிறார். இந்த படத்துக்காக லொக்கேஷன் பார்ப்பதற்காக பாபுகணேசும் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவியும் கிருஷ்ணகிரிக்கு காரில் சென்றனர்.

கிருஷ்ணகிரியில் உள்ள பெங்களூர் நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டு இருந்த போது திடீரென காரின் இடது பக்க டயர் வெடித்தது. இதனால் கார் நிலை தடுமாறி தாறுமாறாக ஓடியது. திடீரென சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மேல் மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. பாபு கணேசும், கேமராமேனும் தலை, மார்பு பகுதியில் பலத்த அடிப்பட்டு காயத்துடன் மயங்கி விழுந்தார். அருகில் வீடுகளில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

 

இந்தியர்கள் தங்கள் கலாச்சாரத்துக்கு சம்பந்தமே இல்லாமல் படமெடுப்பது ஏன்? -ரஹ்மானைக் கேட்ட மஜித் மஜிதி

சென்னை: இந்தியர்கள் தங்கள் கலாச்சாரத்துக்கு தொடர்பே இல்லாமல் வெளிநாட்டு கலாச்சாரத்தைப் படமாக்குவது ஏன்? என்று ஏ ஆர் ரஹ்மானிடம் பிரபல ஈரான் இயக்குநர் மஜித் மஜிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை ரஹ்மானே நேற்று தெரிவித்தார்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள காவியத் தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.

இந்தியர்கள் தங்கள் கலாச்சாரத்துக்கு சம்பந்தமே இல்லாமல் படமெடுப்பது ஏன்? -ரஹ்மானைக் கேட்ட மஜித் மஜிதி

விழாவில் படக்குழுவினருடன் ஏஆர் ரஹ்மானும் பங்கேற்றார். விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேரும் நீட்டி முழக்கிப் பேசிக் கொண்டே இருந்தனர். குறிப்பாக தயாரிப்பாளர் சசிகாந்தும், நடிகர் சித்தார்த்தும் பொறுமையைச் சோதித்துவிட்டனர்.

எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ரஹ்மான். ஒரு சிறு புன்னகை மட்டுமே அவர் முகத்தில். கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் நடந்தது நிகழ்ச்சி.

இறுதியாக ரஹ்மானைப் பேச அழைத்தனர். அவர் பேசியது முப்பது வினாடிகள்.. நான்கே வரிகள்.

அவரது பேச்சு:

"நான் இதுவரை 3 தலைமுறைகளுக்கு இசையமைத்திருக்கிறேன். சில தினங்களுக்கு முன்பு ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்திடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது, அவர் என்னிடம், நான் உங்களுடைய படங்கள் எல்லாம் பார்த்து வருகிறேன். ஏன் உங்கள் கலாச்சாரத்தை விட்டுவிட்டு, வெஸ்டர்ன் கலாச்சாரத்தையே பின்பற்றி வருகிறீர்கள் என்றார். அவருக்கான பதிலாக இந்தப் படம் இருக்கும்."

-ஒரு விழாவில் எப்படி பேச வேண்டும் என்று ரஹ்மானிடம் கற்றுக் கொள்ள வேண்டும் காவியத் தலைவன் குழு!

(குறிப்பு: சாங் ஆப் ஸ்பேராஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களைத் தந்தவர் மஜித் மஜிதி. 'இந்தியாவில் ஏன் நடிகர்களுக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுக்கிறார்கள்' என்று கேள்வி எழுப்பியவர்).

 

'சாமானியருடன் ஒரு நாள்'!

சாமானியருடன் ஒரு நாள்... தலைப்பே சொல்லும் நிகழ்ச்சி எதைப் பற்றியதென்று.

இந்த நிகழ்ச்சி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையன்று பகல் 12.30 மணி முதல் 1.00 மணி வரை ஒளிபரப்பாகிறது.

'சாமானியருடன் ஒரு நாள்'!

திரை நட்சத்திரங்களையும் அரசியல் பிரபலங்களையும் அறிந்துக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தை, அண்டை வீட்டுக்காரரை அறிந்து கொள்வதில் காட்டுவதில்லை மக்கள்.

அடுத்த வீட்டுக்காரருக்கே இந்த நிலையென்றால், சாலையில் நம்மைக் கடந்து போகும் சாதரண மனிதர்களின் வாழ்க்கை குறித்து நமக்கு என்ன தெரிந்துவிடும்?

சலவைத் தொழிலாளி, பழைய துணி விற்பவர், டீ விற்பவர், மரம் ஏறும் தொழிலாளி என எத்தனையோ சாமானியர்களை சாலைகளில் கடந்து செல்கிறோம்.

'சாமானியருடன் ஒரு நாள்'!

அவர்களின் உழைப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் நாம், அவர்களுடைய அன்றாட வாழ்க்கை குறித்து சிந்திப்பதில்லை. இந்த சாமானிய மனிதர்களின் கஷ்டங்கள், நஷ்டங்கள், இஷ்டங்கள் நாம் அறியாதது, தெரியாதது.

அதை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்த ‘சாமானியருடன் ஒரு நாள்' நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.

 

உசிலம்பட்டியை மையப்படுத்தி எடுக்கப்படும் 'போர் குதிரை'!

உசிலம்பட்டி... மதுரை மாவட்டத்தின் சிறப்பு மிக்க பகுதி. மதுரை மீது அபார பாசம் கொண்ட மக்கள் வாழும் பகுதி.

இந்த ஊரை மையப்படுத்தி ஒரு படம் உருவாகிறது. படத்துக்கு தலைப்பு போர்க்குதிரை.

மண்ணின் மணம் சார்ந்த படங்களுக்கு என்றுமே ஒரு அபரிதமான வரவேற்பு உத்திரவாதம் என்ற நம்பிக்கையுடன் மெயின் ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் என்னும் புதிய பட நிறுவனம் 'போர் குதிரையை' உருவாக்குகிறது.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் பிரவீண் பேசுகையில், 'மதுரையை அடுத்துள்ள உசிலம்பட்டியின் கலாசாரத்தைச் சுற்றி பின்னப்பட்ட கதை இது.

இந்த மண்ணின் மணத்துக்கும், குணத்துக்கும் ஒரு தனித்துவம் உண்டு. என்னுடைய கதை அந்த மண்ணின் மைந்தர்களின் பழக்கங்களையும் உணர்வுகளையும் படம் பிடித்து காட்டும். இவர்களுக்கென இருக்கும் ஒரு உத்வேகமான போர்குணமே 'போர் குதிரை' படத்துக்கு அடித்தளம்,' என்றார்.

இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறது இந்த போர்க் குதிரை.

 

அஞ்சான் படத்தில் பிரமானந்தம் காமெடி கட்…

சூர்யா - சமந்தா ஜோடியாக நடித்த அஞ்சான் படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார். யு.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. ஆக்‌ஷன் படமாக வந்துள்ளது. நண்பனை கொன்ற தாதாக்களை நாயகன் தேடி பிடித்து அழிப்பதே கதை.

பெரும்பகுதி படப்பிடிப்பை மும்பையில் நடத்தி உள்ளனர். இடைவேளைக்கு பிறகு படத்தின் காட்சிகள் நீளமாக இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பின. சில காட்சிகளை குறைக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டன. இதையடுத்து அஞ்சான் படத்தில் 6 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு நீளம் குறைக்கப்பட்டது.

அஞ்சான் படத்தில் பிரமானந்தம் காமெடி கட்…

இது குறித்து கூறிய யு.டி.வி படநிறுவன நிர்வாகி தனஞ்செயன், அஞ்சான் படத்தில் இடைவேளைக்கு பிறகு காட்சிகள் நீளமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். எனவே அதை குறைக்க முடிவு செய்தோம். தற்போது 6 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டு உள்ளன.

பிரம்மானந்தம் தொடர்பான நகைச்சுவைக் காட்சியொன்று படத்தில் உள்ளது. அது கதையோடு சார்ந்து இல்லாமல் இருந்ததால் அந்த காமெடி நீக்கப்பட்டு உள்ளது. ஆனால் தெலுங்கு படத்தில் இந்த நகைச்சுவைக் காட்சி இருக்கும் என்று கூறியுள்ளார்.

 

கார் டயர் வெடித்து விபத்து: நடிகர் பாபுகணேஷ் பலத்த காயம்

கார் டயர் வெடித்து விபத்து: நடிகர் பாபுகணேஷ் பலத்த காயம்

சென்னை: நடிகர் பாபுகணேஷ் சென்ற கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.

‘கடல் புறா' என்ற படத்தில் பாபு கணேஷ் நாயகனாக நடித்துள்ளார். இவரே இப்படத்தை இயக்கவும் செய்தார். தாட்பூட் தஞ்சாவூர், தேசிய பறவை, நடிகை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பாபுகணேஷ் காட்டு புறா என்ற பேய் படத்தை இயக்கி நாயகனாகவும் நடிக்கிறார். இந்த படத்துக்காக லொக்கேஷன் பார்ப்பதற்காக பாபுகணேசும் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவியும் கிருஷ்ணகிரிக்கு காரில் சென்றனர்.

கிருஷ்ணகிரியில் உள்ள பெங்களூர் நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டு இருந்த போது திடீரென காரின் இடது பக்க டயர் வெடித்தது. இதனால் கார் நிலை தடுமாறி தாறுமாறாக ஓடியது. திடீரென சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மேல் மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. பாபு கணேசும், கேமராமேனும் தலை, மார்பு பகுதியில் பலத்த அடிப்பட்டு காயத்துடன் மயங்கி விழுந்தார். அருகில் வீடுகளில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

 

லீடர் நடிகருக்கு பில்லி சூனியம் வச்சிட்டாங்களாமே!

லீடர் நடிகருக்கு எதிராக இப்போது நடக்கும் விஷயங்களுக்கெல்லாம் காரணம் அவருக்கு யாரோ பில்லி சூனியம் வைத்துவிட்டதுதான் என்று அவரது குடும்பத்தினர் நம்புகிறார்களாம்.

இதனால் ஒரு நல்ல மந்திரவாதியைத் தேடி வருகிறதாம் அவர் குடும்பம். இது கற்பனையல்ல.. சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு செய்தி.

லீடர் நடிகர் நடித்த பாடிகார்டு தொடங்கி இப்போதைய நைஃப் வரை ஏக பிரச்சினை.

குறிப்பாக இப்போது அவர் நடித்து வரும் இந்தப் படத்துக்கு எதிராக அமைப்பு ரீதியாக மட்டுமல்ல, சினிமா ரசிகர்களும் கூட அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

ஆளும் தரப்பு இந்தப் படத்தை தடை செய்துவிடும் என்றே தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும் நம்புகிறார்களாம்.

நடிகரின் அம்மாவோ தன் மகனுக்கு யாரோ பில்லி சூனியம் வைத்துவிட்டார்கள் என்பதைத் தீவிரமாக நம்புகிறாராம். அதனால் தன் கணவரிடம் சொல்லி நல்ல மந்திரவாதியை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக அந்த பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது.

அதற்கு முன் குடும்பத்தோடு வேளாங்கண்ணி போய் வழிபாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளார்களாம்.