பாலிவுட் படத்தில் விமலா ராமன்!


தமிழில் பொய் படத்தில் கே பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் விமலா ராமன்.

தொடர்ந்து ராமன் தேடிய சீதை போன்ற படங்கள் மூலம் நடிக்கத் தெரிந்த நல்ல நடிகை எனப் பெயர் பெற்றார். தெலுங்குப் படங்களில் நல்ல வாய்ப்புகள் வந்ததால் அங்கும் சில படங்களில் நடித்த விமலாவுக்கு இப்போது பாலிவுட் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக அவரது செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விமலா ராமன் இந்தியில் 'அப்ரா டபாரி' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் கோவிந்தா. ஹெட் அலி அப்ரார் இயக்குகிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் சுனில் ஷெட்டி, ஆர்யா பப்பர், குல்ஷன் குரோவர், முக்தே கோட்ஸே உள்பட பலரும் நடிக்கின்றனர். கோவிந்தாவின் வழக்கமான பொழுதுபோக்குப் படமாக பாணி படமாக 'அப்ரா டபாரி' இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசின், த்ரிஷா, ஜெனிலியா என முதல் செட் நடிகைகளின் பாலிவுட் பிரவேசத்துக்குப் பிறகு இப்போது, சினேகா, லஷ்மி ராய், விமலா ராமன் என அடுத்த செட் நடிகைகளின் மும்பை படையெடுப்பு ஆரம்பமாகியுள்ளது. எத்தனை பேர் வெற்றிக் கொடி கட்டுவார்கள்... பார்க்கலாம்!
 

தெய்வத் திருமகள்... சென்சார் குழு பாராட்டு!


விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படத்துக்கு அனைவரும் குடும்பத்துடன் பார்க்கத்தக்க படம் என யு சான்றிதழ் வழங்கியுள்ளது மண்டல தணிக்கை அலுவலகம்.

விக்ரம், அனுஷ்கா, அமலா பால் நடித்துள்ள படம் தெய்வத் திருமகள். மதராசபட்டணம் புகழ் விஜய் இயக்கியுள்ள படம் இது.

விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படம் சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை நேற்று பார்த்த சென்சார் குழுவினர், எந்த கட்டும் இல்லாமல், அனைவரும் பார்க்கத்தக்க படம் எனும் யு சான்றிதழ் வழங்கினர்.

மேலும், இந்தப் படம் தங்களை மிகவும் நெகிழ வைத்துவிட்டதாகவும், மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளதாகவும் பாராட்டு தெரிவித்தனர்.

ராஜகாளியம்மன் மீடியாஸ் சார்பில் மோகன் நடராஜன் தயாரித்துள்ள படம் இது. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் வரும் ஜூலை 15-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.
 

பாலச்சந்தர் பட அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்-இயக்குநர் ஸெல்வன் அறிவிப்பு


தான் இயக்கிய கிருஷ்ணலீலை படத்தை உடனே வெளியிடக் கோரி இயக்குநர் பாலச்சந்தருக்கு சொந்தமான கவிதாலயா பட நிறுவனம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் ஸெல்வன்.

இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் ஸெல்வன். சூரி என்ற படம் மூலம் இவர் இயக்குநரானார். இதையடுத்து ஜீவன்-மேக்னா ஜோடியாக நடித்த கிருஷ்ண லீலை படத்தை இயக்கினார். இப்படம் முடிந்து இரு வருடங்களுக்கு மேலாகியும் ரிலீசாகவில்லை.

இந்தப் படம் வெளிவந்தால்தான் தனக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், படத்தை வெளியிடாவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக இயக்குனர் ஸெல்வன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "கிருஷ்ணலீலை படத்தை கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. பின்னர் அப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் பிலிம் நிறுவனத்துக்கு விற்று விட்டனர். படப்பிடிப்பு டப்பிங் பணிகள் முடிந்துள்ளது.

2 வருடங்கள் 3 மாதங்களுக்கு முன்பே 90 சதவீதம் வேலைகள் முடிந்து படம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இரு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பலமுறை அலைந்து விட்டேன். படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படம் வராததால் புதுப்பட வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை.

'கிருஷ்ணலீலை' ரிலீஸ் ஆன பிறகு பட வாய்ப்பு தருகிறோம் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இதனால் பெற்றோர்களை வைத்துக் கொண்டு என்னால் குடும்பம் நடத்த இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது. வருமானமின்றி மிகவும் கஷ்டப்படுகிறேன்.

எனவே படத்தை ரிலீஸ் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் வருகிற ஜூலை 5-ந்தேதி முதல் கவிதாலயா நிறுவனம் முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்," என்று கூறியுள்ளார்.

உண்ணாவிரதத்துக்கு அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மனு கொடுத்தார்.
 

ஆடிக்காற்றில் பறந்த அரவாண் செட்!


வசந்தபாலன் இயக்கி வரும் அரவாண் படத்தின் ஷூட்டிங்கில் அடிக்கடி அசம்பாவிதங்கள் நடப்பது வழக்கமாகிவிட்டது.

இந்த முறை படப்பிடிப்புக்காக போடப்பட்ட குடிசை செட் அப்படியே காற்றில் பறந்துவிட்டதாம்.

மதுரை, தென்காசி என தென் மாவட்டங்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார் வசந்த பாலன். ஆதி, பசுபதி, தன்ஷிகா, கபீர் பேடி உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த சரித்திரப் படத்துக்காக தென்காசி அருகே தோரணமலையில் ஒரு பெரிய குடிசைப் பகுதி செட் போடப்பட்டது. கிட்டத்தட்ட 100 குடிசைகள் இதில் இடம்பெற்றிருந்தன.

தென்காசி பகுதியில் பருவக் காற்று மிகப் பலமாக உள்ளது. எனவே இந்த குடிசை செட் காற்றில் பறந்துவிட்டது.

மேலும் படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்ட ஜிம்மி ஜிப் கேமராவும் இதில் பழுதடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பை ஒகேனக்கல் பகுதிக்கு மாற்றியுள்ளார் வசந்தபாலன்.

ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்போது அரவாண் செட் எம்மாத்திரம்...
 

விசா மோசடி கும்பலுடன் கொரியா போய் சிக்கிக் கொண்ட பிரபல கவர்ச்சி நடிகை!


விசா மோசடி காரணமாக பிரபல கவர்ச்சி நடிகை லக்ஷா மற்றும் படக்குழுவினர் 12 பேரை கொரியா அரசு சிறைப்படுத்தியுள்ளது.

பிரபல கவர்ச்சி நடிகை பபிதா மகள் லக்ஷா. இன்றைக்கு முன்னணி கவர்ச்சி நடிகையாக உள்ளார். பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார்.

'லாலி' என்ற புதிய படத்தில் நடிக்க லக்ஷாவை ஒப்பந்தம் செய்தனர். இதில் புதுமுகங்கள் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். சித்திரைச் செல்வன், பிரகாஷ் ஆகியோர் தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பையும் லக்ஷா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியையும் தென்கொரியாவில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டனர்.

இதற்காக லக்ஷா மற்றும் நடிகர்கள், நடன கலைஞர்கள் என 'லாலி' படக்குழுவினர் 13 பேர் தென் கொரியா புறப்பட்டுச் சென்றனர்.

அவர்களுடன் துணை நடிகர்கள் என்ற பெயரில் மேலும் 30 பேர் டெல்லியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். தென் கொரியாவில் 4 நாட்கள் லக்ஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

அப்போது டெல்லியிலிருந்து இவர்களுடன் போனவர்கள் திடீரென மாயமானார்கள். லக்ஷா உள்ளிட்ட சென்னையில் இருந்து சென்ற அனைவரும் இந்தியா திரும்ப நேற்று கொரியா விமான நிலையம் சென்றனர். அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்திவிட்டனர்.

டெல்லியில் இருந்து வந்த 29 பேரும் ஜாயிண்ட் விசாவில் வந்திருப்பதால் அவர்களும் வந்தால்தான் நாடு திரும்ப அனுமதிப்போம் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் லக்ஷா உள்ளிட்ட படக்குழுவினர் 13 பேரையும் அங்குள்ள ஓட்டலில் சிறை வைத்தனர். வெளியே போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டார்கள்.

29 பேரும் வராவிட்டால் விசா மோசடியின் கீழ் லக்ஷா உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று தென்கொரியா போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி ஆசாமிகள் 29 பேரும் யார்? லக்ஷா படக்குழுவினருடன் துணை நடிகர்கள் பெயரில் எதற்காக கொரியா வந்தார்கள் என்று விசாரணை நடக்கிறது.

அந்த நாட்டில் தங்கி வேலை பார்ப்பதற்காக படக் குழுவினர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஐரோப்பிய, அமெரிக்க, தென்கிழக்காசிய நாடுகளில் இந்த குற்றம் அதிகமாக நிகழ்கிறது. எனவே இந்த 29 பேரையும் கண்டுபிடித்து கொடுக்காமல் நாடு திரும்ப விடமாட்டோம் என்று அதிகாரிகள் கண்டிப்புடன் கூறிவிட்டனர்.

மகள் லக்ஷா வெளிநாட்டில் சிக்கிக் கொண்ட தகவல் அறிந்ததும் தாய் பபிதா கதறி அழுதார். தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்கள் போனை ஆஃப் செய்து வைத்துள்ளதாக பபிதா தெரிவித்தார்.
 

பாலிவுட்டில் குத்தாட்டம் போட வரும் பாக். நடிகை வீணா மாலிக்


பாலிவுட்டின் புதிய ஐட்டம் டான்சராக களம் இறங்கியுள்ளார் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்.

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 4-வது சீசன் மூலம் இந்தியாவில் பிரபலமானார். சர்ச்சையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆசிபின் காதலி. வீணா மாலிக்கை வைத்து ஏகப்பட்ட சர்ச்சைகள் உலா வந்தவண்ணம் உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியின்போதே அவர் பெரும் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் பாலிவுட்டில் குத்தாட்டம் போட வந்துள்ளார் வீணா.

பாலிவுட்டில் ஏற்கனவே மலாய்கா அரோரா, கத்ரீனா, பிபாஷா, மல்லிகா ஷெராவத் என குத்தாட்டம் போட ஏராளமானோர் இருக்கின்றனர். மேலும், நாயகிகளும் நாங்களும் குத்தாட்டம் போட வருகிறோம் என்று கூறுகின்றனர். நாயகிகளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க நாயகர்களும் குத்துப் பாட்டுக்கு ஆடத் துவங்கியுள்ளனர். குத்துப் பாட்டு இல்லாமல் இந்திப் படங்கள் இல்லை என்ற நிலை உள்ளது.

தற்போது இந்த குத்தாட்டக்காரர்கள் பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவர் வீணா மாலிக். பாபி ஷேக் இயக்கும் பிர் முலாகத் ஹோ நா ஹோ என்ற படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடவிருக்கிறார் வீணா.

குத்துப் பாட்டுக்கு ஆடவருமாறு வீணா மாலிக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றார் பாபி ஷேக்.

இது தான் பாபியின் முதல் படம். அவர் இதற்கு முன் ரன் மற்றும் ரங் தே பசந்தியில் துணை இயக்குனராக பணி புரிந்துள்ளார்.

ராஜ்பால் யாதவ், காதர் கான் மற்றும் பிரவீன் குமார் நடிக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீசாகிறது.
 

தமிழகம் முழுவதும் 10 லட்சம் மரக் கன்றுகள் நடும் காமெடியன் விவேக்


திருச்சி: தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் மரங்களை வளர்க்க முடிவு செய்திருப்பதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் யூத் எக்ஸ் னோரா இன்டர் நேசனல் அமைப்பு மற்றும் நடிகர் விவேக் ரசிகர் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விவேக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம், பேசிய வி வேக், “ இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் 100 கோடி மரக்கன்று நடவேண்டும். தமிழ் நாட்டில் 100 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து உள்ளோம். டிசம்பர் 2011க்குள் 10 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்து இதற்காக மரக்கன்றுகள் வழங்கி வருகிறோம். வனத்துறை அமைச்சர், சமூக நல ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவிகளையும் நாடி வருகிறோம் என்று கூறினார்.

நான் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்த போது மரங்களின் நிலமை பற்றி ஒரு கவிதை புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். அதில் மரம் தனது அவலநிலைப்பற்றி கூறுவதுபோல கவிதை இருந்தது. அதுதான் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற காரணம் என்றும் விவேக் தெரிவித்தார்.

நான் அடுத்து கந்தா படத்தில் நடித்து வருகிறேன். இதில் மரங்களை அழித்து ரியல் எஸ்ட்டேட்டில் நிலத்தை விற்ற விவசாயி கடைசியில் சித்தாளாக மாறியதுடன் இலவச அரிசிக்கு வரிசையில் காத்திற்கும் அவலம் பற்றி கூறியுள்ளேன். மரங்களை வளர்த்தால் தான் எதிர்காலம் வளமாகும்’’ என்று கூறினார்.
 

சென்னை திரும்பும் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு... ரசிகர்களுக்கு அனுமதி தந்தார் லதா!


சென்னை: பொதுவாக எந்த தனிப்பட்ட நிகழ்ச்சி என்றாலும் சத்தமில்லாமல் அமைதியாக வந்துபோவார் ரஜினி. தன்னால் யாருக்கும் இடைஞ்சல் என்ற செய்தி வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது அவர் சிறப்பு.

ஆனால் ரசிகர்கள் அவருக்காக ஆடம்பர விழா, வரவேற்பு அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாகவே விருப்பம் தெரிவித்து வந்தனர். இந்த முறை ரசிகர்களின் விருப்பம் நிறைவேறப்போகிறது.

சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று, பூரண நலத்துடன் புதுப்பிறவி எடுத்துத் திரும்பும் ரஜினிக்கு சென்னையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்துக்கு ஒரு நிபந்தனையோடு சம்மதம் தந்துள்ளார் ரஜினியின் மனைவி லதா ரஜினி.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியால் போக்குவரத்துக்கோ, மக்களுக்கோ சிறு இடையூறும் ஏற்படக்கூடாது என்ற நிபந்தனைதான் அது.

திங்கள்கிழமை தன்னைச் சந்தித்த சென்னை மன்ற நிர்வாகி என் ராமதாஸ், சைதை மன்ற நிர்வாகி சைதை ஜி ரவி மற்றும் சிதம்பரம் ரமேஷ் ஆகியோர், ரஜினிக்காக நடத்தப்பட்ட பிரார்த்தனை மற்றும் நேர்த்திக் கடன் குறித்து லதாவிடம் தெரிவித்து, ரஜினிக்கு பிரசாதம் அளித்தனர்.

அப்போது ரசிகர்களின் இந்த அன்பும் பிரார்த்தனையும்தான் ரஜினியைக் காத்தது என்று தெரிவித்தார் லதா.

பின்னர் ரஜினி சென்னை வரும்போது பிரமாண்ட வரவேற்பு அளிக்கவும், அவரைச் சந்திக்கவும் லதாவிடம் அனுமதி கேட்டனர். "நான் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்கிற நிலையில் இப்போது நீங்கள் இல்லை. எனவே, எந்த இடையூறும் இல்லாமல், பாதுகாப்பாக நடத்துங்கள். ரஜினி சார் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே உங்களுக்கு தகவல் தருகிறேன்," என்றார்.

ரஜினி தொடர்பான ரசிகர்களின் நிகழ்ச்சிக்கு, லதா ரஜினி நேரடியாக அனுமதி தருவது இதுவே முதல்முறை என்பதால், மிகுந்த உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள், வரவேற்பு ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
 

சினிமா போதும், இனி முதல்வர் பதவிதான்! - சிரஞ்சீவி


ஹைதராபாத்: மக்கள் என்னை நிஜத்தில் முதல்வராகப் பார்க்க விரும்புகிறார்கள். எனவே இனி சினிமாவில் நடிக்கமாட்டேன். ஓய்வு பெறுகிறேன்," என அறிவித்துள்ளார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி.

ரஜினி நடித்த ராணுவ வீரனில் அறிமுகமானவர் சிரஞ்சீவி. கடந்த 30 ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவின் முதல்நிலை நடிகராகத் திகழ்பவர் சிரஞ்சீவி. இதுவரை 149 படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் உச்சத்திலிருக்கும்போதே 2009-ல் அரசியலில் நுழைந்தார். பிரஜா ராஜ்யம் என்ற தனிக்கட்சியை அவர் தொடங்கினார். 2009-ல் நடந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அவரது கட்சி, ஆந்திரத்தில் 18 எம் எல் ஏக்களைப் பெற்றது. 17 சதவீத ஓட்டுக்களைப் பெற்றது.

ஆனால் சமீபத்தில் திடீரென பிரஜா ராஜ்யம் கட்சியை காங்கிரஸில் இணைப்பதாக அறிவித்தார் சிரஞ்சீவி. இப்போது இணைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் சினிமாவில் நடிப்பதாக அறிவித்தார்.

அவரது 150வது படத்தை தானே தயாரிக்கப் போவதாகவும், அதில் அப்பா சிரஞ்சீவி நடிப்பார் என்றும் அவரது மகனும் நடிகருமான ராம் சரண் தேஜா அறிவித்தார்.

புதிய படத்துக்கான இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது நடிப்புக்கு நிரந்தர முழுக்கு என அறிவித்துள்ளார் சிரஞ்சீவி.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அரசியலில் மிகவும் பிஸியாக உள்ளேன். மீண்டும் மேக்கப் போடுவதில் அர்த்தமும் இல்லை, அதற்கு நேரமும் இல்லை. என் இடத்தை என் மகன் ராம்சரண் நிரப்புவார்," என்றார்.

அடுத்த படத்தில் நீங்கள் அரசியல்வாதியாக, முதல்வராக நடிப்பதாக இருந்ததாக கூறப்பட்டதே என்று கேட்டதற்கு, "ஆந்திர மக்களுக்கு என்னை நிஜத்தில் இந்த மாநில முதல்வராகவே பார்க்க நீண்ட நாளாக ஆசை. இனி அதற்கான வேலைகளில் இறங்குவேன்," என்றார்.
 

30 வயதுக்குள் தாயாகி விட விரும்பினேன்-பியான்ஸ் ஏக்கம்!


லாஸ் ஏஞ்சலெஸ்: 30 வயதை எட்டுவதற்குள் தாயாகி விட வேண்டும் என்று விரும்பினாராம் பியான்ஸ். ஆனால் செப்டம்பர் மாதம் 30 வயதை அவர் தொடவுள்ள நிலையில் அது இன்னும் கனவாகவே இருப்பதாக ஏக்கம் வெளியிட்டுள்ளார்.

கவர்ச்சிகரமான நடிகை+பேஷன் டிசைனர் பியான்ஸ். இவரது ஹூ ரன் தி வேர்ல்ட் என்ற பாடல் சூப்பர் ஹிட்+ஹீட்டானது. இவரது கணவர் பெயர் ஜே இசட்.

இந்த நிலையில் தனது மனக்கிடக்கை ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார் பியான்ஸ். 30 வயதுக்குள் தாயாகி விட வேண்டும் என்று நான் நீண்ட காலமாகவே நினைத்திருந்தேன். ஆனால் அது இதுவரை கனவாகவே உள்ளது. செப்டம்பரில் நான் 30 வயதை எட்டுகிறேன். இருப்பினும் இந்த நிமிடம் வரை கர்பப்மாகும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை.

எனக்குக் குழந்தை வேண்டும்தான். இருப்பினும் வருகிற ஆண்டில் எங்களுக்குக் குழந்தை இருக்குமா என்று தெரியவில்லை. அந்த திட்டமும் எங்களிடம் இல்லை.

அதேபோல நான் இப்போதைக்கு ஓய்வு பெறும் திட்டமும் இல்லை. எனது இசைச் சேவை தொடரும் என்றார் பியான்ஸ்.

பியான்ஸும், அவரது கணவரும் ஆறு ஆண்டுகள் தீவிரமாக காதலித்து 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும் இதுவரை அவர்கள் குழந்தைப் பேறு குறித்து சிந்திக்கவில்லை.
 

ஐஸ்வர்யா மாதிரி அழகான பெண் குழந்தைதான் வேண்டும்: அபிஷேக்


மும்பை: எங்களுக்கு ஐஸ்வர்யா ராய் மாதிரி அழகான பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று தந்தையாகவிருக்கும் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

தனது மருமகள் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக கடந்த வாரம் அமிதாப் பச்சன் அறிவித்தார். மேலும் தனக்குப் பேரன்தான் பிறப்பான் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அப்போ அபிஷேக்கோ தனக்கு ஐஸ்வர்யா மாதிரியே அழகான பெண் குழந்தை வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

நான் தந்தையாகப் போவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தான் கர்ப்பமாக இருப்பதை எனது தந்தை தான் உலகிற்கு தெரிவிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா தான் கூறினார்.

என்னுடைய தாய் ஜெயா பச்சன் கர்ப்பம் தரித்தபோது எனது தந்தை அவரது தந்தையைத் தான் அந்த செய்தியை உலகிற்கு தெரிவிக்க சொன்னார். இதை நான் என் மனைவியிடம் எப்பொழுதோ கூறியிருந்தேன். அதை நினைவில் வைத்து தான் இவ்வாறு செய்துள்ளார்.

ஐஸ்வர்யா விருப்பப்படியே அந்த செய்தியை எனது தந்தை டுவிட்டரில் வெளியிட்டார். அதில் இருந்து வாழ்த்துகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. தொலைபேசி ஓயாது ஒலிக்கிறது. எங்கள் வீடு முழுவதும் மலர்கொத்துகளாகக் காட்சியளிக்கிறது.

குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது பற்றி இன்னும் யோசிக்கவேயில்லை. ஐஸ்வர்யாவை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எந்த புத்தகங்களையும் இன்னும் படிக்கவில்லை.

புதிய படங்கள் திரைக்கு வந்தவுடன் தான் இதில் முழுக் கவனம் செலுத்துவேன். நவம்பரில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் குழந்தை ஜஸ்வர்யா போன்று அழகான பெண் குழந்தையாக இருக்க வேண்டும். அடுத்து ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். இரண்டு குழந்தைகள் வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றார்.

அமிதாப் பேரன் வேண்டும் என்று கூறியுள்ளார், அபியோ பெண் வேண்டும் என்கிறார். யார் ஆசை நிறைவேறுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
 

ஜெனிபர் ஆனிஸ்டனின் 'ஸ்ட்ரக்சர்' ரகசியம்


தனது உடலை எப்பொழுதும் ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ஆனிஸ்டன் சத்தே இல்லாத, கொழுப்பு, எண்ணெய்ச் சத்து அதிகம் நிரம்பிய உணவு (ஜங்க் புட்) வகைகளைத் தொடுவதே இல்லை என்று அவரது முன்னாள் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஜெனிபர் ஆனிஸ்டன். இவருக்கு வயது 42 ஆகி விட்டது. நடிகை பிராட் பிட்டின் முன்னாள் மனைவி. 42 வயதானாலும் ஆனிஸ்டனின் ஸ்டைலும், ஸ்டிரக்சரும் இன்னும் மாறவே இல்லை. அப்படியே 'படையம்மா' மாதிரி இன்னும் இளமையாக, ஸ்லிம்மாக இருக்கிறார். அதற்கு காரணம் அவர் சத்தே இல்லாத, கொழுப்பு, எண்ணெய்ச் சத்து அதிகம் நிரம்பிய உணவை எடுத்துக் கொள்வதே இல்லையாம்.

இது குறி்த்து அவர் கூறியதாவது,

உடலுக்குத் தேவையான சத்து இல்லாத, வெறும் கொழுப்பு, எண்ணெய்ச் சத்து அதிகம் நிரம்பிய உணவு வகைகளைத் தவிர்த்தாலே எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கலாம். இது தவிர தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மற்றபடி நான் ஸ்லிம்மாக இருக்க வேறு எதையும் செய்வதில்லை.

நான் தினமும் யோகா செய்வேன். யோகா செய்வதால் நான் மிகுந்த உற்சாகமாகக் காணப்படுகிறேன். தினமும் 20 நிமிடங்கள் யோகா செய்தால் அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும். நான் போதிய அளவு உடற்பியிற்சி செய்வதால் எடை கூடிவிடுமோ என்ற கவலையின்றி உணவு எடுத்துக் கொள்கிறேன்.

அப்படியே எடை கூடினாலும், ஒரு வாரத்திற்கு மீன் மற்றும் சாலட் அதிகம் எடுத்துக் கொள்வேன். வழக்கமாக வாரத்தில் 2 அல்லது 3 மூன்று தடவை உடற்பயிற்சி செய்வேன். எடை கூடிவிட்டால் 4 அல்லது 5 தடவை செய்வேன்.

உடற்பயிற்சி செய்த பிறகு எனக்கு நிறைய தெம்பு கிடைக்கும். எதையும் நினைத்து கவலைப்படாமல் இருக்க முயல்வேன் என்றார்.

கோலிவுட் 'அழகிகளே' ஆனிஸ்டன் சொல்வதையும் கேட்டுக்கங்க...!
 

கடைசி படம்... கண்ணீர்... கதறலுடன் விடைபெற்ற நயன்தாரா!!


நயன்தாரா, சினிமாவிலிருந்து விலகிவிட்டார். தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீராம ராஜ்யம்தான் அவரது கடைசி படம். இந்தப் பட ஷூட்டிங்கின் கடைசி தினமான நேற்று, படப்பிடிக்குழுவினரிடம் கதறி அழுதபடி விடைபெற்றார் நயன்தாரா!

இனி நான் நடிக்க மாட்டேன். உங்களை ஷூட்டிங்கில் சந்திப்பது இதுவே கடைசி என்று கூறிவிட்டுச் சென்றார்.

வில்லு படத்தில் நடித்தபோது நடிகை நயன்தாராவுக்கும், நடிகர்-இயக்குநர் பிரபுதேவாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. கணவர்-மனைவி போல் வாழ ஆரம்பித்தனர்.

நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு ஆரம்பத்தில், பிரபுதேவாவின் மனைவி ரமலத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதையும் மீறி நயன்தாரா-பிரபுதேவா காதல் தொடர்ந்தது.

நயன்தாராவின் காதலுக்கு விலையாக ரம்லத்தை விவாகரத்து செய்யத் தயாரானார் பிரபு தேவா. விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்கள் பிரபு தேவாவும் ரம்லத்தும். திடீர் திருப்பமாக, இருவரும் மனமொத்து பிரிவதாக எழுதிக் கொடுத்தனர். இதற்கு நஷ்டஈடாக ரம்லத்துக்கு பல கோடி சொத்துக்களை கொடுத்துள்ளார் பிரபு தேவா. இந்த செட்டில்மென்டும் சமீபத்தில் முடிந்துவிட்டது. அடுத்தமாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வருகிறது.

விவாகரத்து தீர்ப்பு வந்ததும் பிரபுதேவா, நயன்தாராவை திருமணம் செய்துகொள்கிறார். இப்போது இருவரும் மும்பையில் தங்கியிருக்கிறார்கள். அநேகமாக திருமணத்தையும் விரைவில் மும்பையிலேயே வைத்துக்கொள்வார்கள் என்று தெரிகிறது.

கடைசி படம்

திருமணத்துக்குப்பின் நயன்தாரா சினிமாவில் நடிக்கக்கூடாது என்று பிரபுதேவா கண்டிப்புடன் கூறியிருக்கிறார். அதற்கு நயன்தாராவும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். அவர் கடைசியாக, 'ஸ்ரீராமராஜ்யம்' என்ற தெலுங்கு படத்தில் சீதையாக நடித்து வந்தார்.

இது, என்.டி.ராமராவ் நடித்த 'லவகுசா' என்ற படத்தின் ரீமேக். அவருடைய மகன் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் நடந்தது. அதில் நயன்தாரா கலந்துகொண்டு நடித்து வந்தார். நேற்று கடைசி நாள் படப்பிடிப்பு.

கண்ணீர் கதறல்...

நயன்தாரா காலையில் படப்பிடிப்புக்கு வந்தபோதே சோகமாக காணப்பட்டார். மாலை 6 மணிக்கு படப்பிடிப்பு முடிந்ததும், அவர் மற்ற நடிகர்-நடிகைகளிடமும், படப்பிடிப்பு குழுவினரிடமும் பிரியா விடை பெற்றார். அப்போது அவர் கதறி அழுதார். இவ்வளவு நாள் இருந்த சினிமாவை விட்டு பிரிந்து போகிறோமே என்ற துயரம் தாங்காமல், சத்தம்போட்டு அழுதார்.

அவருக்கு, நடிகர் பாலகிருஷ்ணா ஆறுதல் கூறினார். "திருமணம் ஆனபிறகும் நீ தொடர்ந்து நடிக்கலாம். கவலைப்படாதே'' என்றார். அதற்கு நயன்தாரா, "திருமணத்துக்குப்பின் நடிக்கக்கூடாது என்று 'அவர்' கண்டிப்பாக கூறிவிட்டார்'' என்று பதில் அளித்தார்.

கடிகாரம்-மோதிரம் பரிசு

பின்னர் அவர், படப்பிடிப்பு குழுவில் இருந்த 150 பேர்களுக்கும் கைக்கடிகாரங்களை பரிசாக வழங்கினார். தன்னிடம் நீண்ட நாட்கள் 'மேக்கப்மேன்' ஆக பணிபுரிந்த ராஜுவுக்கு ஒரு பவுனில் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினார்.

அதன்பிறகு படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் நயன்தாரா சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. நயன்தாரா கண்களை துடைத்துக்கொண்டு, விமானம் மூலம் மும்பைக்கு பறந்தார்.