பாலிவுட் படங்களில் நடிக்க ஆசை: பாரிஸ் ஹில்டன்


மும்பை: பாரிஸ் ஹில்டனுக்கு பாலிவுட் படங்களில் நடிக்கை ஆசையாக இருக்கிறதாம். நல்ல கதைக்காக காத்திருக்கிறாராம்.

நடிகை, சோஷியலைட், கோடீஸ்வரி, தொழிலதிபர், மாடல் அழகி என பல அவதாரங்களைக் கொண்டவர் பாரிஸ் ஹில்டன். தனது கைப்பைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அறிமுகப்படுத்த 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

மும்பையில் தங்கியுள்ள அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்புகள் வரத் தான் செய்கிறது. எனக்கும் பாலிவுட்டில் நடிக்க ஆசையாக உள்ளது. ஆனால் நல்ல கதை இன்னும் கிடைக்கவில்லை. அதற்காகத் தான் காத்திருக்கிறேன் என்றார்.

நீங்கள் நடத்தும் பெஸ்ட் பிரண்ட்ஸ் பார்எவர் ரியாலிட்டி ஷோவை இந்தியாவில் நடத்தலாமே என்று கேட்டதற்கு, எனக்கும் ஆசை தான். ஆனால் நான் தற்போது பிசியாக உள்ளேன் என்றார்.

பெஸ்ட் பிரண்ட்ஸ் பார்எவர் ரியாலிட்டி ஷோ கடந்த 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் துவங்கப்பட்டது. பின்னர் அது ஹிட்டானவுடன் இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் துவங்கப்பட்டது.

காபி வித் கரண் நிகழ்ச்சியில் பாரிஸ் கலந்துகொள்ளப்போகிறார் என்றும், பாலிவுட் நட்சத்திரங்கள் அவருக்கு பார்ட்டி கொடுக்கப்போகிறார்ள் என்றும் பேசப்படுவது பற்றி கேட்டதற்கு,

இது எல்லாம் வதந்திகள். நான் இங்கு வியாபார விஷயமாகவும், எனது ரசிகர்களை சந்திக்கவும் தான் வந்துள்ளேன்.

பின்னர் பாரிஸ் தனது தயாரிப்பான கைப்பைகள், அழங்காரப் பொருட்களை அறிமுகப்படுத்தினார்.
 

நீச்சல் கற்கும் ஷாலினி!


நடிகை ஷாலினி பேட்மிண்டன் விளையாடுவதோடு சேர்த்து தற்போது நீச்சலும் கற்றுக் கொண்டிருக்கிறார்.

நடிகை ஷாலினி அஜீத் குமாரை மணந்த பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டார். பின்னர் பேட்மிண்டன் போட்டிகளில் கவனம் செலுத்தத் துவங்கினார். இந்தப் போட்டியில் பல்வேறு பரிசுகளும் வாங்கியுள்ளார். அண்மையில் சிவகாசியில் நடந்த மாநில அளிவிலான பேட்மிண்டன் போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஷாலினி பரிசு பெற்றார்.

குழந்தை அனோஷ்காவையும், குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு விளையாட்டிலும் கவனம் செலுத்துகிறார். தற்போது கூடுதலாக நீச்சல் கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.

ஷாலினிக்கு பேட்மிண்டன், அஜீத் குமாருக்கு பைக் ரேஸ். நல்ல ஜோடிதான்.
 

எஸ்.பி.பி. சரண் வீடு முன்பு முற்றுகை போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு


தயாரிப்பாளர், பாடகர் எஸ். பி. பி. சரண் வீட்டுக்கு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக பெண்கள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

மது விருந்தில் கலந்து கொண்ட தனக்கு எஸ்.பி. பி. சரண் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சோனா அவர் மீது போலீசில் புகார் கொடுத்தார். சோனா சென்னை கமிஷனரை சந்தித்து வீடியோ ஆதாரம் ஒன்றையும் கொடுத்தார். இந்த வழக்கில் எஸ்.பி. பி. சரண் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் நடிகை சோனாவுக்கு ஆதரவு தெரிவித்து எஸ். பி. பி. சரண் வீட்டுக்கு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத் தலைவி கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சோனா ஒரு நடிகையாக இருக்கலாம். அதற்காக எஸ்.பி.பி. சரண் அவரை ஆபாசமாக திட்டி இருக்கக் கூடாது. சோனா ஒரு பெண். அவருக்கும் கவுரவம் உள்ளது. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு பெண்கள் திரண்டு கறுப்புக் கொடியுடன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டம் நாளை தொடங்குகிறது. சோனாவுக்கு நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
 

அப்பாக்கள் வரலையே: ஸ்ருதி, ஐஸ்வர்யா வருத்தம்!


ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும், ஸ்ருதி ஹாசன் நடிக்கும் 3 படப்பிடிப்பிற்கு தங்களது அப்பாக்கள் ரஜினி மற்றும் கமல் வரவலில்லையே என்று அவர்கள் வருத்தம் அடைந்துள்ளனராம்.

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தனுஷ் 3 படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இதில் கதாநாயகனாக அவரது கணவர் தனுஷ் நடிக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக தனது தோழி ஸ்ருதி ஹாசனை நடிக்க வைத்துள்ளார்.

ஐஸ்வர்யாவும், ஸ்ருதியும் செட்டில் இருப்பதால் அவர்களது தந்தைகள் அதாவது ரஜினியும், கமலும் படப்பிடிப்புக்கு வருவார்கள் அவர்களை ஒன்றாகப் பார்த்துவிடலாம் என்று படக்குழுவினர் ஆர்வமாக உள்ளனர்.

அதேபோல தங்கள் அப்பாக்கள் நிச்சயம் படப்பிடிப்புக்கு வந்து தாங்கள் எப்படி பணிபுரிகிறோம் என்பதைப் பார்ப்பார்கள் என்று ஐஸ்வர்யாவும், ஸ்ருதியும் கூட மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் உள்ளனர்.

படப்பிடிப்பு துவங்கி இத்தனை நாட்களாகியும் அப்பாக்கள் வராததால் மகள்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

அட, இதுக்கெல்லாமா வருத்தப்படுவாங்க...!
 

ஃபேஷன் ஷோக்களுக்கு பட்டுப்புடவையில் வரும் ஸ்நேகா!


நடிகை ஸ்நேகா ஃபேஷன் ஷோக்களுக்கு பட்டுப்புடவையில் வந்து அசத்துகிறாராம். அதற்காக புதுப் புது டிசைன்களில் பட்டுப்புடவைகள் வாங்கிக் குவிக்கிறாராம்.

நடிகை ஸ்நேகா ஃபேஷன் ஷோக்களில் அதிகம் கலந்து கொள்கிறார். ஃபேஷன் ஷோ என்றால் மாடர்ன் டிரஸ்ஸில் வருபவர்களுக்கு மத்தியில் ஸ்நேகா பட்டுப்புடவையில் சென்று அசத்துகிறார். அதற்காக வித, விதமாக பட்டுப்புடவைகள் வாங்கிக் குவிக்கிறாராம்.

அது காஸ்ட்லியாக இருந்தாலும் சரி, பிடித்திருந்தால், விலையைப் பற்றி கவலைப்படாமல் வாங்கிவிடுகிறார். ஒவ்வொரு ஷோவுக்கும் ஒரு டிசைன் புடவையில் வந்து கலக்குகிறார்.

தனக்கு எது கச்சிதம் என்பதை புரிந்து கொண்டு அதையே விரும்பி அணிகிறார் ஸ்நேகா.

தப்பேயில்லை...!
 

இயக்குநரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக செய்தி-டென்ஷனில் சமந்தா


தான் ஒரு பிரபல இயக்குனரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்து தமிழ் பத்திரிக்கையாளர்களிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார் நடிகை சமந்தா.

கௌதம் மேனனின் தெலுங்கு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிறப்பாக நடித்து அசத்தியவர் நடிகை சம்ந்தா. இவரைத்தான் அஜீத்துடன் நாயகியாக போட்டு துப்பறியும் ஆனந்த் படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார் மேனன். ஆனால் அப்படம் டிராப் ஆகவே தமிழுக்கு வரும் வாய்ப்பு சமந்தாவுக்குத் தள்ளிப் போனது.

இருந்தாலும் சமந்தாவை விட்டு விடாத கெளதம் மேனன் தற்போது அவரை தனது படத்தில் மீண்டும் நடிக்க வைத்து தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார். 'நீதானே என் பொன்வசந்தம்' என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சமந்தா.

இந்நிலையில் சமந்தா யாரோ ஒரு பிரபல இயக்குனரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பத்திர்க்கைகளில் செய்தி வெளியாகின. அட என்னடா இது இப்படி எழுதியிருக்கிறார்களே என்று சமந்தா கடுப்பாகிவிட்டாராம்.

இதையடுத்து தன்னைப் பற்றி இப்படியெல்லாம் எழுதிய மீடியா அதிலும் குறிப்பாக தமிழ் மீடியாக்காரர்களிடம் பேசுவதையே நிறுத்திவிட்டாராம்.

எத்தனை நாளைக்கு இப்படி தலைமறைவாக இருக்க முடியும் சமந்தா?
 

ரஜினி வழியில் 'மலை' ஏறுகிறார் அஜீத்!


இமயமலை செல்லும் நடிகர்கள் வரிசையில் இணைகிறார் அஜீத். ரஜினி பாணியில் இவரும் இமயமலைக்குச் செல்லப் போகிறாராம்.

சமீபத்தில்தான் மங்காத்தா என்ற மெகா ஹிட் படத்தைக் கொடுத்தார் அஜீத். அடுத்து பில்லாட2 வேலைகளில் பிசியாகியுள்ளார். மங்காத்தாவில் வெள்ளை முடியுடன் வந்த அஜீத், இதில் சிக்கென யூத் கெட்டப்பில் வரப் போகிறாராம். இந்த நிலையில் மெதுவாக இமயமலைக்கும் ஒருடிரிப் அடிக்கவுள்ளாராம்.

இதுகுறித்து வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,

மங்காத்தா நான் நீண்ட காலமாக மௌனம் காத்ததற்கு கிடைத்த வெற்றி. படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டவும் செய்கிறார்கள். இவன் என்னடா படம் முழுவதும் தண்ணி, தம்மோடு தான் இருக்கான் என்றும் சொல்கிறார்கள். அனைத்தையும் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன். படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் அஜித் எப்பவும் ஒரே மாதிரி தான் இருப்பான்.

என்ன தல தத்துவமா பொழிகிறீர்களே? உங்க தலைவர் ரஜினி பாணியில் ஆன்மீகத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டீர்களா? என்று கேட்டதற்கு,

எனக்கு ஏற்கனவே ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கியத் திருத்தலங்களுக்கு சென்று வந்துள்னேன். 4 தடவை சென்னையில் இருந்து திருப்பதிக்கு நடந்து சென்றிருக்கிறேன். என்னை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக மாறுவேடம் போட்டு நண்பர்களோடு சென்றேன்.

சூப்பர் ஸ்டார் இமயமலை பற்றி ஒரு புத்தகம் கொடுத்தார். அதைப் படித்ததில் இருந்து எனக்கும் இமயமலைக்கு போக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. விரைவில் இமயமலைக்கு புறப்பட்டுவிடுவேன் என்று நினைக்கிறேன் என்றார்.
 

தேர்தல் நடைபெறும் நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன்?-'குத்து' ரம்யாவுக்கு நோட்டீஸ்!


தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கிருஷ்ணா, வெளியுறவு அமைச்சராக இருக்கிறார். இவரது வழியில் இப்போது குத்து ரம்யாவும் அரசியலில் குதித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரஸில் இணைந்த அவர் சாந்திநகர் பூத் கமிட்டி இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேர்வு பெற்றார். தற்போது மாநிலத் தலைவர் பதவிக்குக் குறி வைத்துள்ளார்.

இதற்காக ஆதரவு திரட்டும் வகையில் பத்திரிகைகளுக்குப் பேட்டிகள் கொடுத்து அங்கு புயலைக் கிளப்பியுள்ளார். ரம்யாவின் இந்த பேட்டி அரசியல், மாநில காங்கிரஸாரை, குறிப்பாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு குறி வைத்திருப்போரை எரிச்சலுக்குள்ளாக்கியஉள்ளது. இதையடுத்து ரம்யாவைத் தட்டி வைக்குமாறு அவர்கள் தேர்தல் அதிகாரிக்கு புகார்களை அனுப்பினர்.

இதையடுத்து தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பேட்டி கொடுப்பது ஏன் என்று விளக்கம் கேட்டு குத்து ரம்யாவுக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் கொடுத்துள்ளார்.