டெல்லி: தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படங்களுக்கு இனி சென்சார் சர்ட்டிபிகேட் பெறவேண்டியது அவசியம் என்ற அறிவிப்பு வெளியாக உள்ளது.
தொலைக்காட்சி என்பது அனைவரின் வீட்டிற்குள்ளும் இருக்கும் அத்தியாவசிய சாதனமாகிவிட்டது. நடுவீட்டில் அமர்ந்து குடும்பத்தினர் எல்லோரும் மொத்தமாக அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை கண்டு களிக்கின்றனர்.
சீரியலோ, விளம்பரமோ சில சமயம் முகம் சுளிக்க வைக்கிறது. சில திரைப்படக்காட்சிகளும், பாடல்களும் கூட பார்க்க முடியாத காட்சிகளாக இருக்கின்றன. எனவே தொலைக்காட்சிகளுக்கும் தணிக்கை அவசியம் கருத்து வலுவடைந்து வருகிறது. இந்த நிலையில் திரைப்படங்களை,
"டிவியில் ஒளிபரப்புவதற்கு, இனிமேல் தனியாக சென்சார் போர்டு சான்றிதழ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.
இந்தியாவில் திரைப்படங்கள் எல்லாம், சென்சார் போர்டால் தணிக்கை செய்யப்பட்டு, சான்றிதழ் அளித்த பின்னரே, தியேட்டர்களில் திரையிடப்படுகின்றன. திரைப்படங்களை, யு, யு.ஏ., ஏ மற்றும் எஸ் என்ற, நான்கு பிரிவுகளில் தரம் பிரித்து, சென்சார் போர்டு சர்டிபிகேட் அளிக்கின்றது.
திரைப்படங்கள் எல்லமே சேட்டிலைட் உரிமம் மூலம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றன. இதில் கவர்ச்சி காட்சிகள், பெரியவர்கள் மட்டுமே பார்க்கவேண்டிய காட்சிகள் பலவும் நடுக் கூடத்தில் ஒளிபரப்பாகிறது. இதனை தவிர்க்க தற்போது டிவியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களுக்கும் தனியாக சென்சார் சர்டிபிகேட் அவசியம் என்ற கருத்து எழுந்துள்ளது. இது தொடர்பாக, மத்திய ஒளிபரப்புத் துறை அமைச்சகமும், மத்திய சென்சார் போர்டும், விரிவாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இது குறித்து, திரை உலகத்தினரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் பற்றி, கருத்து கூறிய சினிமா தயாரிப்பாளர்கள், "திரையரங்கங்களில் திரையிடுவதற்காக ஒன்றும், "டிவி ஒளிபரப்புக்கு என்றும், தனித்தனியாக சென்சார் போர்டு சான்றிதழ் தரலாம் என்றனர்.
நடிகை வித்யாபாலன் நடித்த, "டர்ட்டி பிக்சர் என்ற இந்திப் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு , தனியார், தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக இருந்தது. அப்போது அதனை டிவியில் ஒளிபரப்ப தடை ஏற்பட்டது. பின்னர் அப்படத்தில் ஆட்சேபத்திற்குரிய பல காட்சிகள் நீக்கப்பட்டு, ஒளிபரப்பப்பட்டது. இது போன்ற சர்ச்சைகள் மீண்டும் எழாமல் இருக்க, "டிவியில் ஒளிபரப்புவதற்கு என, சென்சார் போர்டிடம் தனி சான்றிதழ் பெற வேண்டும் என்ற நடைமுறையை அமல்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் டிவி சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கும் சென்சார் அவசியம் என்று கட்டாயமாக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.