-ஜெயலட்சுமி சுப்பிரமணியன்
சின்னத்திரையில் ‘கலக்கப்போவது யாரு?' நிகழ்ச்சியின் மூலம் நுழைந்து பின்னர் ‘அசத்தப்போவது யாரு?'நிகழ்ச்சியில் நடுவர்களை மட்டுமல்லாது பார்வையாளர்களையும் அசத்திய முத்து இப்போது நகைச்சுவையில் தனக்கென்று இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் மதுரை முத்து.
சன் டிவியில் ஞாயிறு காலையில் காமெடி கலாட்டாவில் தேவதர்ஷினியுடன் இவர் செய்யும் கலாட்டா ரசிகர்களுக்கு சிறப்பு விருந்துதான். இதே பிரபலத்தோடு இப்போது சினிமாவிலும் தனி கவனம் செலுத்திவருகிறார் முத்து. இவர் நடித்த இரண்டு திரைப்படங்கள் இப்போது ரிலீசுக்கு தயாராக உள்ளன. இது தவிர மாதந்தோறும் 20 மேடைநிகழ்ச்சிகள் வேறு செய்கிறார். தன்னுடைய பிசியான காமெடி நிகழ்ச்சிக்கிடையே காலை நேரத்தில் அலைபேசி வழியாக அவர் நமக்களித்த பேட்டி.
காமெடியனாக வர வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?
சிறுவயதில் இருந்தே நான் காமெடியாக பேசுவேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் அது அதிகமானது. விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு?' நிகழ்ச்சியின் மூலம் அது மெருகேற்றப்பட்டது. சன் டிவியின் அசத்தப்போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் என் நகைச்சுவை பிரபலமடைந்தது.
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு போவது பற்றி சொல்லுங்களேன்?
அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் என்னுடைய நகைச்சுவையைப் பார்த்து ‘மதுரைவீரன்' படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து மிளகா படத்தில் நடித்தேன். ஆனால் அதில் படத்தின் நீளம் அதிகமானதால் நான் நடித்த காட்சிகள் வரவில்லை. இப்போது ஒருதலைக்காதல், காளையரும் கன்னியரும், அகிலன் ஆகிய படங்களில் தனியான நகைச்சுவை பாத்திரங்கள் கிடைத்துள்ளன. காளையரும் கன்னியரும் படத்தில் ஜோசியக்காரன் கதாபாத்திரம் பேசப்படும் விதமாக இருக்கும். அதேபோல் அகிலன் படத்திலும் நல்லதொரு கதாபாத்திரம் அமைந்துள்ளது.
மதுரையில் இன்னுமொரு காமெடி நடிகர் சினிமாவுக்கு கிடைத்துவிட்டார் என்று கூறலாமா?
சின்னத்திரையில் 7 ஆண்டுகாலம் அனுபவம் இருந்தாலும் திரை உலகில் இப்பொழுதுதான் அடி எடுத்து வைத்திருக்கிறேன். இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. சினிமா உலகில் மதுரைக்காரன் என்ற பெயரை நிச்சயம் காப்பாற்றுவேன்.
உங்களுடைய வெளிநாட்டு அனுபவம் சொல்லுங்களேன்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி. அரசபட்டிதான் எனது சொந்த ஊர். நகைக்சுவை பேச்சிற்காக இதுவரை 38 நாடுகளுக்கு போயிருக்கிறேன். அமெரிக்கா, அரபுநாடுகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளுக்கும் இதுவரை சென்று வந்திருக்கிறேன். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சேர்த்து இதுவரை நான் 5000 ஸ்டேஜ் ஷோ நிகழ்ச்சி நடத்தியிருக்கிறேன்.
நீங்கள் வாங்கிய விருதுகளில் பெருமையானதாக நினைப்பது எது?
அமெரிக்கா, அரபு நாடுகளில் எனக்கு இதுவரை 5 விருது கொடுத்திருக்கின்றனர். திருநகர் நகைச்சுவை மன்றம் சார்பில் தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் கையால் ‘சின்னக் கலைவாணர் விருது' வாங்கியது மறக்க முடியாத அனுபவம். நகைச்சுவை சக்ரவர்த்தி, காமெடிகிங் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியிருக்கிறேன்.
உங்க வீட்டில் இருப்பவர்கள் உங்களின் நகைச்சுவையை ரசிப்பார்களா?
எங்க வீட்டில் இருப்பவங்கதான் என்னுடைய முதல் ரசிகர்கள். எனக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. மனைவி லேகா மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். என்னுடைய நகைச்சுவையை அதிகம் ரசிப்பது என் மனைவிதான். அவருக்கு பிடித்தமாதிரி இருந்தால்தான் நான் பேசுவேன் என்று கூறிவிட்டு நான் சொன்னது சரிதானே என்பது போல மனைவியிடம் கேட்டுக்கொண்டார் முத்து.
மதுரையில் இருந்து சினிமாவிற்கு வந்த நகைச்சுவை நடிகர்களான வடிவேலு, விவேக் ஆகியோரின் வரிசையில் முத்துவும் இடம்பெற வாழ்த்துக்களை கூறி விடைபெற்றோம்.