சென்னை: திருட்டு விசிடிக்கு எதிராக இயக்குநர் பார்த்திபன் பர்மா பஜாரில் சோதனை நடத்தினார்.
தனது கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் உள்பட புதுப்படங்களின் திருட்டு டிவிடிகளை விற்பனை செய்த ஒரு கடைக்காரரை கையோடு போலீசில் பிடித்துக் கொடுத்தார்.
பர்மா பஜாரில் பல கடைகளில் டிவிடிகள் விற்பனையாகின்றன. இவற்றில் பெரும்பாலான கடைகள் புதுப்படங்களை திருட்டுத்தனமாக டிவிடி அடித்து விற்பதையே தொழிலாகக் கொண்டவைதான்.
இதே போல சென்னை அண்ணாநகர் பகுதியிலும் திருட்டு டிவிடிகள் விற்பனையாகின்றன.
இதுகுறித்து திரைத்துறையினர் தொடர்ந்து தமிழக காவல் துறையிடம் புகார் கொடுத்தாலும், இந்த திருட்டு டிவிடிகள் விற்பனை அமோகமாக நடந்து கொண்டுதான் உள்ளது.
பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் சமீபத்தில் வெளியானது. அந்தப் படம் வெளியான நாளிலேயே அதன் திருட்டு டிவிடியும் புழக்கத்துக்கு வந்துவிட்டது. அண்ணா நகர் பகுதிக்குப் போய் பார்த்திபனே அந்த திருட்டு டிவிடிகளை வாங்கி வந்து பத்திரிகையாளர்களிடமும் காட்டினார்.
மேலும் தானே களத்திலிறங்கி திருட்டு வீடியோவுக்கு எதிராகப் போராடப் போவதாகவும் அறிவித்தார்.
அதன்படி போலீசாருக்கு தகவல் சொல்லிவிட்டு, நேற்று பர்மா பஜார் பகுதிக்கு தன் உதவியாளர்களுடன் சென்றார் பார்த்திபன். சாலையின் ஓரத்தில் தன் காரில் அமர்ந்தபடி, உதவியாளர்களை அனுப்பி ஒரு கடையில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் திருட்டு டிவிடி இருக்கிறதா என்று கேட்டு, அதை பணம் கொடுத்து வாங்க வைத்தார்.
டிவிடி கைக்கு வந்ததும், போலீசாருக்கு தகவல் சொன்ன பார்த்திபன், காரை விட்டு இறங்கி சாலையைக் கடந்து வேகமாகப் போய் சம்பந்தப்பட்ட கடைக்காரரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். மேலும் அங்கு விற்பனைக்கு கிடைக்கும் புதிய தமிழ்ப்படங்களின் பட்டியலையும் பெற்று போலீசாரிடம் தந்தார்.