மும்பை: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகள் விருது வழங்கப்பட்டது.
நேற்று (13.12.2014)மாலை மும்பையில் காஞ்சி காமகோடி மஹாபெரியவர் ஜகத்குரு ஶ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
ஜெயேந்திரர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை அர்ப்பணிப்பினைப் பாராட்டி அவருக்கு விருது வழங்கப்பட்டது.
விருதினையும், பாராட்டுப் பத்திரம் மற்றும் நினைவுப் பரிசினையும் பெற்றுக்கொண்டு இசைஞானி ஆற்றிய உரை:
இவ்வரிய வாய்ப்பினை வழங்கிய இறைவனுக்கு நன்றி. குருவருள் இல்லாது இறையருள் கிடைக்காது. இறையருள் இல்லாது குருவருள் கிடையாது. அருள்வழங்குவது இறைவனின் வேலை கிடையாது. எந்த வேலையும் இல்லாதவன் இறைவன். ஏனென்றால் அருளே இறைவன்தான். எப்படி சூரியன் ஒளி வீசுகிறதோ அனல் வழங்குகிறதோ அதுபோன்று.
பொதுவாக விருதுகளைப் பொருட்படுத்துவதில்லை. ஒருமுறை வெளிநாட்டில் உள்ள முக்கியமான அமைப்பு ஒன்று எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற அழைத்தார்கள். பல தரப்பிலிருந்தும் வற்புறுத்தினார்கள். நான் மறுத்துவிட்டேன் ஏனென்றால் எனது வேலை இன்னும் முடிவுபெறவில்லை. இன்றும் காலை ஏழு மணிக்கெல்லாம் இசைப்பணியினை தொடங்கிவிடுகிறேன்.
எனக்கு இசை வழிகாட்டி யாரும் கிடையாது. ஒருவேளை வழிகாட்டி யாரேனும் இருந்திருந்தால் இவ்விடத்திற்கு வந்திருக்கமுடியாது என்றுதான் நினைக்கிறேன். எனக்கு இசை தெரியாது தெரிந்துவிட்டால் அது முடிவுபெற்றுவிடும்.
இன்னும் கற்று வருகிறேன். பெரியவாளின் அருளினைப் பெற இங்கு வந்திருக்கிறேன். இதனை பெரும் பாக்யமாக நான் கருதுகிறேன்," என்றார்.
உத்திரப்பிரதேச ஆளுநர் ராம் நாயக்குக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.