தேர்தல் எப்போது வந்தாலும் ஜெகன்தான் ஆந்திர முதல்வர்! - ரோஜா


 

பச்சைக்குடை... சம்பளம் வாங்காமல் இசையமைத்த இளையராஜா!


பாரதிராஜாவின் ஆஸ்தான கதாசிரியரான 'அன்னக்கிளி' ஆர் செல்வராஜ் ஒரு படம் இயக்கியுள்ளார். இயற்கை வளமான காடுகளையும் மரங்களையும் அழிக்கக் கூடாது என்ற உலகளாவிய நல்ல விஷயத்தை வலியுறுத்தும் படம் அது.

நித்யா தாஸ் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் செல்வராஜ். பல்வேறு உலகப் பட விழாக்களில் பங்கேற்க வைக்கும் நோக்கில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

பழங்குடி மக்கள் கால காலமாக தெய்வமாய்ப் போற்றி வணங்கும் காடுகளையும் மரங்களையும், நகரத்து மனிதர்கள் தங்கள் சுய தேவைக்காக அழிக்கப்பார்ப்பதும், அதை ஒரு பழங்குடிப் பெண்ணும் அவர் சகோதரரும் தடுத்துக் காப்பதும்தான் கதை.

இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். செல்வராஜின் நீண்ட கால நண்பர் ராஜா. அதுமட்டுமல்ல, படத்தைப் பார்த்த அவர், ஒரு நல்ல விஷயத்தை பெரும் சவால்களுக்கிடையே எடுத்திருக்கிறீர்கல். இதற்கு சம்பளமே வேண்டாம் என்று கூறி அற்புதமாக பின்னணி இசை அமைத்துத் தந்துள்ளாராம்.

இந்தப் படத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுக்கு திரையிட்டுக் காட்ட செல்வராஜ் முடிவு செய்துள்ளார்.
 

அக்டோபர் 6-ம் தேதிக்கு தள்ளிப் போன வெடி!


பிரபு தேவா இயக்கத்தில் விஷால் நடித்துள்ள வெடி திரைப்படம், சில காரணங்களால் குறித்த தேதியில் வெளியாகவில்லை.

அக்டோபர் 6-ம் தேதிக்கு இந்தப் படம் தள்ளிப் போடப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெடி படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஷால், சமீரா ரெட்டி, விவேக் நடித்துள்ள இந்தப் படம், தெலுங்கில் வெளியான சௌர்யம் படத்தின் ரீமேக் ஆகும்.

செப்டம் 30-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடியாததால் இந்தப் படத்தை வெளியிடுவது ஒரு வாரத்துக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

சில்க் பற்றிய பட ட்ரெயிலருக்கு சென்சாரில் வெட்டு!


சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் தி டர்ட்டி பிக்டர் படத்தின் ட்ரெயிலரில் சில காட்சிகள் ஆட்சேபணைக்குரியதாக இருப்பதாகக் கூறி, கத்தரி போட்டுள்ளது தணிக்கைக் குழு.

சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடிக்க, ஏக்தா கபூர் தயாரித்துள்ள படம் தி டர்ட்டி பிக்சர்.

இந்தப் படத்தின் இரண்டாவது ட்ரெயிலர் சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. இதில் ஆட்சேபனைக்குரிய வகையில் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, அவற்றை நீக்குமாறு கூறியுள்ளது தணிக்கைக் குழு.

வித்யா பாலனும் நஸ்ருதீன் ஷாவும் காருக்குள் நெருக்கமாக இருக்கும் காட்சி, நஸ்ருதீன் ஷாவின் சில வசனங்கள் ஆபாசமாக உள்ளதாக தணிக்கைக் குழு குறிப்பிட்டுள்ளது.

ஆனால், தணிக்கைக்கு உட்படுத்தப்படும் முன்பே இந்த ட்ரெயிலர் மீடியாவில் உலாவர ஆரம்பித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

மகத்துடன் காதலா? - டாப்ஸி விளக்கம்


மங்காத்தா படத்தில் நடித்த மகத்துக்கும் நடிகை டாப்ஸிக்கும் காதல் என்று கடந்த சில தினங்களாக செய்தி வெளியாகி வருகிறது.

இதுகுறித்து முதல் முறையாக வாய் திறந்துள்ளார் நடிகை டாப்ஸி. "மகத் எனக்கு நல்ல நண்பர். சூட்டிங் இருக்கும் போது காரில் அழைத்து போய் என்னை அவர் இறக்கி விடுவது உண்மைதான். சக நடிகர்கள், நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வது போன்றுதான் இதுவும்," என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளேன். தமிழ் படங்களிலும் நடிக்கிறேன். இதுவரை எந்த ஒரு இயக்குனரோ, தயாரிப்பாளரோ என்னைப் பற்றி தவறாக இதுவரை எந்த புகாரும் கூறியது இல்லை.

மகத் எனக்கு நல்ல நண்பர். சூட்டிங் இருக்கும் போது காரில் அழைத்து போய் என்னை அவர் இறக்கி விடுவது உண்மைதான். சக நடிகர்கள், நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வது போன்றுதான் இதுவும்.

மகத்துக்கு நிறைய சினிமா தொடர்புகள் உள்ளன. சிம்புவுக்கு சிறு வயதில் இருந்தே அவர் நண்பர். தயாநிதி அழகிரிக்கும் நன்றாக தெரியும். எனவே அவருக்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் நான் சிபாரிசு செய்ய வேண்டிய அவசியம் இல்லை," என்றார்.
 

தேர்தல் எப்போது வந்தாலும் ஜெகன்தான் ஆந்திர முதல்வர்! - ரோஜா


ஹைதராபாத்: ஆந்திராவில் தேர்தல் எப்போது வந்தாலும், அதில் வென்று முதல்வராக அமரப் போகிறவர் ஜெகன்மோகன் ரெட்டிதான் என்று நடிகை ரோஜா கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் நடிகை ரோஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறுகையில், "தெலுங்கானா பகுதியில் உள்ள சிங்கரேனி நிலக்கரி தொழிலாளர்கள் ஸ்டிரைக்கால் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி கிடைக்கவில்லை. மின் உற்பத்தி இல்லாததால் ஆந்திரா தற்போது இருளில் மூழ்கி உள்ளது.

தொழிலாளர் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர ஆந்திர அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. தெலுங்கானா போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் முடியவில்லை. இதனால் ஆந்திர அரசு செயல்படாத அரசாக உள்ளது. இந்த அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஆந்திராவில் எப்போது தேர்தல் வந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டிதான் முதல்வர். ஆந்திர மக்கள் அவர் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ளனர். காங்கிரஸ் அவர் மீது எத்தனை பொய் வழக்கு போட்டாலும் கோர்ட்டில் நிரபராதி என்பதை நிரூபிப்பார்," என்றார்.
 

மம்முட்டியின் மகனின் 'செகண்ட் ஷோ'!


மலையாள சினிமா நடிகர் மம்முட்டியின் மகன் துல்ஹர் சல்மான் முதல் முறையாக மலையாள சினிமாவில் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு செகண்ட் ஷோ என தலைப்பு வைத்துள்ளனர்.

இதுகுறித்து இயக்குநர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் கூறுகையில், "மம்முட்டியின் மகன் துல்ஹர் சல்மான் செகண்ட் ஷோ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

கிராமத்தில் வாழும் ஏழை இளைஞனாக நடிக்கும் அவர், இந்தப் படத்தில் எந்த வேலையையும் செய்ய தயாராக இருக்கிறார். நல்ல துடிப்பான இளைஞர். அவருக்கு ஜோடியாக புதுமுகம் கவுதமி நாயர் நடிக்கிறார். வில்லன் நடிகர் பாபுராஜும் இந்த படத்தில் இடம் பெறுகிறார்.

இந்த படத்தில் இந்தி நடிகர் சுதேஷ் பெரியும் நடிக்கிறார். அவர் இயக்குனர் மணி ரத்தினத்தின் 'அக்னி நட்சத்திரம்' என்ற படத்தில் நடித்தவர்,'' என்றும் ஸ்ரீநாத் ராஜேந்திரன் கூறினார்.

இது பற்றி நடிகர் மம்முட்டி கூறுகையில், "எனது மகன் சினிமாவில் நடிப்பது அவரது விருப்பம். அவர் நடிக்கும் சினிமாவின் கதையை மட்டும் நான் கேட்டுக் கொண்டேன். வேறு எதிலும் தலையிடவில்லை," என்றார்.

ஆரம்பத்தில் துல்ஹரை தமிழில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருந்தார் மம்முட்டி. ஆனால் அது முடியாமல் போனதாக வருத்தத்துடன் கூறியிருந்தது நினைவிருக்கலாம். துல்ஹர் பிறந்து, வளர்ந்து படித்ததெல்லாம் சென்னையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ரசிகர்கள் தொல்லை... சாமி கும்பிடக் கூட முடியலியே - ஐஸ்வர்யா ராய் வருத்தம்


சென்னை: நடிகர் நடிகைகளுக்கும் குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை இருப்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ரசிகர்கள் தொல்லையால் நிம்மதியாக சாமி கும்பிடக் கூட முடியவில்லை, என்று நடிகை ஐஸ்வர்யா ராஜ் வருத்தத்துடன் கூறினார்.

கர்ப்பமான பின் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜ்.

குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுப்பதற்காக டாக்டர்களை சந்திப்பது, அவர்கள் ஆலோசனைப்படி உணவு எடுத்துக் கொள்வது, லேசான உடற்பயிற்சிகள் செய்வது என்று அவர் பொழுது கழிகிறது.

சமீபத்தில் மும்பையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முக்கியஸ்தர்கள் விரும்பி அழைத்ததால் சென்றார். அங்கு அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்தனர். கூட்டத்தினர் மத்தியில் சிக்கித் தவித்தார். போலீசார் தலையிட்டு மீட்டனர். இதனால் திருப்தியாக சாமி கும்பிட முடியாமல் கோபத்தோடு வீடு திரும்பினார்.

இது குறித்து ஐஸ்வர்யாராய் கூறுகையில், "ரசிகர்கள் செய்வதைப் பார்த்து சந்தோஷப்படுவதா அல்லது வேதனைப்படுவதா என்றே புரியவில்லை. நானும் சாதாரண பெண்தான். நடிகை என்பதால் சொந்த வாழ்க்கை இருக்கக்கூடாது என்று அர்த்தம் அல்ல. வீடு, பெற்றோர், உறவினர்கள் எல்லாம் உண்டு. இது போன்று ரசிகர்கள் தொல்லை கொடுப்பதால், நிம்மதியாக சாமி கும்பிடக் கூட முடியவில்லை," என்றார்.
 

அஜீத் கால்ஷீட் ஏஎம் ரத்னத்துக்கு உண்டு... வெங்கட் பிரபுவுக்கு இல்லை!


அஜீத் தன் அடுத்த படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை பிரபல தயாரிப்பாளர் ஏ எம் ரத்னத்துக்கு வழங்கியுள்ளார். ஆனால், அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு வெங்கட்பிரபுவுக்கு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

அஜீத்தின் மங்காத்தா படம் வெளியான போதே, அடுத்த படம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. இதில் ரொம்ப நாளாக தன்னிடம் கால்ஷீட் கேட்டு வந்த ஏ எம் ரத்னத்துக்கு முன்னுரிமை அளித்தார் அஜீத்.

இதைத் தொடர்ந்து அந்தப்படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்றும், அஜீத்துடன் சிம்புவும் இணைவார் என்றும் தகவல் வெளியானது.

ஆனால் இப்போது, படத்தை இயக்கும் வாய்ப்பு வெங்கட் பிரபுவுக்கு இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

இதைத் தொடர்ந்து, இந்தப் படம் விஷ்ணுவர்தனுக்கா அல்லது இயக்குநர் விஜய்க்கா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எப்படியும் வரும் வாரத்தில் இதை தெளிவாக்கிவிடுவார் 'தல' என்கிறது தயாரிப்பாளர் தரப்பு!
 

எஸ்.பி.பி.சரண் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு.. விரைவில் கைதாகிறார்!


சென்னை: நடிகை சோனா கொடுத்த புகாரில் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் எஸ்.பி.பி.சரண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முதல்கட்ட போலீஸ் விசாரணைக்குப்பிறகு அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

பாலியல் பலாத்காரம்

நடிகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண் மீது பிரபல நடிகை சோனா பாலியல் குற்றம் சாட்டி நேற்று முன்தினம் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் பத்திரிகையாளர்களைக் கூட்டி கதறி அழுதபடி தனக்கு நேர்ந்ததைச் சொன்னார் சோனா.

பலர் முன்னிலையில் தன் மீது பாய்ந்த சரண், ஆடைகளைக் கலைந்ததாகவும் அவர் கூறினார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனாவின் இந்த புகார் மீது பாண்டிபஜார் போலீசார் நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்தனர்.

எஸ்.பி.சரண் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு உள்பட 4 சட்டப்பிரிவுகளின்கீழ் போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'முதல் கட்டமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக எஸ்.பி.பி.சரணிடம் விசாரணை நடத்தப்படும். உடனிருந்தவர்களையும் விசாரிப்போம். பின்னர் கைது செய்வது பற்றி முடிவு செய்யப்படும்,' என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் எஸ்.பி.பி.சரண் நேற்று போலீஸ் கமிஷனரை சந்தித்து தன் மீது கூறப்பட்டுள்ள புகார் தவறான புகார் என்பதை சுட்டிக்காட்டி விளக்க மனு ஒன்று கொடுக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், கமிஷனரை சந்திக்க அவர் வரவில்லை. அவர் கோர்ட்டில் முன்ஜாமீன் வாங்குவாரா? அல்லது விசாரணைக்கு பாண்டிபஜார் போலீசில் அவர் ஆஜராவாரா? என்பதும் தெரியவில்லை.