சினிமாவில் நடிக்க தில் இருக்கா?


"சினிமாவில் நடிக்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா... உடனே வாங்க.. வாய்ப்பு தருகிறோம்... சம்பளமும் தருகிறோம்", என்று அழைப்பு விடுத்துள்ளது புதிய பட நிறுவனம் ஒன்று. பெயரைக் கேட்டால் கொஞ்சம் மிரட்சியாகத்தான் இருக்கிறது.. 'கிரியேட்டிவ் கிரிமினல்ஸ்' என்று பெயர் சூட்டியுள்ளனர் இந்த நிறுவனத்துக்கு!

இந்த நிறுவனம் 'கர்மா' என்ற படத்தை தயாரிக்கிறது. விளம்பர பட இயக்குனரான அர்விந்த் ராமலிங்கம் இப்படத்தினை எழுதி இயக்குகிறார்.

இப்படக்குழுவினர் இன்று சென்னை எம்எம் தியேட்டரில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இப்படத்தின் இயக்குனர் அர்விந்த் ராமலிங்கம் கூறுகையில், "இப்படத்தின் கதையை தற்போதுள்ள பிரபல நடிகர்களிடம் சொல்லி நடிக்க கேட்டேன். அவர்கள் யாருமே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. கதை பிடித்திருந்தாலும், அந்தப் பாத்திரத்தின் எதிர்மறை தன்மையைப் பார்த்து தயங்குகிறார்கள். அதனால்தான் இப்படத்தில் நடிப்பதற்கு தைரியமான புதுமுகங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்.

இப்படம் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். நடிகர்கள் மட்டுமல்ல, இப்படத்தில் கேமராமேன், இசையமைப்பாளர் உள்பட அனைத்து டெக்னீஷியன்களும் புதிய முகங்களாக இருந்தாலும் அனைவரும் திறமைசாலிகள்.

புதுமுக நடிகர் தேர்வை வித்தியாசமாக செய்ய இருக்கிறோம். இப்படத்தில் நடிக்க விருப்பமுள்ள நடிகர், நடிகைகள் தங்களின் 3 விதமான போட்டோக்களையும், வீடியோ சாம்பிள்களையும் karmamoviecasting@gmail.com என்ற முகவரிக்கு வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதிலிருந்து தேர்வு செய்யப்படுபவர்கள் எங்களது பேஸ்புக் தளத்தில் இடம்பெறுவார்கள். அவர்களில் யார் ரசிகர்களிடம் அதிக வாக்குகள் (likes and comments) பெறுகிறாரோ அதனடிப்படையில் இப்படத்தின் கதாநாயகன், கதாநாயகியை தேர்வு செய்ய உள்ளோம்.

இது குறித்த முழு விபரங்களை www.karma-movie.com என்ற வலைப்பக்க முகவரியில் கொடுத்திருக்கிறோம். 'தில்' இருக்கிறவங்க நடிக்க விண்ணப்பிக்கலாம்," என்றார்.

தில் இருக்கிறவங்க சோதனைக்கு தயாராகலாம்!
 

பிப்ரவரி 15ல் ரஜினியின் 'கோச்சடையான்' படப்பிடிப்பு– கே.எஸ்.ரவிக்குமார்


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கோச்சடையான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் தொடங்கும் என்று படத்தின் மேற்பார்வையாளர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

ராணா படம் பூஜை போடப்பட்டு உடல் நலம் குன்றியதால் அந்த படம் கைவிடப்பட்டது. பின்னர் சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சைக்கு பெற்று திரும்பிய பின்னர் கோச்சடையான் படத்தில் ரஜினி நடிக்க உள்ள அறிவிக்கப்பட்டது.

எந்திரன் படத்திற்குப் பின்னர் ரஜினி நடிக்க உள்ள படம் கோச்சடையான். என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இத் திரைப்படத்தை இயக்க உள்ளார்.

அதற்கான பட வேலைகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கே எஸ் ரவிக்குமார் மேற்பார்வையிடுகிறார். திரைப்படத்திற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிப்ரவரி 15ல் படப்பிடிப்ப..

இந்த திரைப்படத்திற்கான பூஜை வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் திரைப்படத்தின் சூட்டிங் பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக திரைப்படத்தின் மேற்பார்வையாளர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார். சூட்டிங்கில் கலந்து கொள்ளும் வகையில் ரஜினிகாந்த் பூரண உடல் நலம் பெற்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

முழுக்க முழுக்க 3 டி அனிமேஷன் படமாக தயாராக உள்ள கோச்சடையானை அவதார் பட உத்தியைப் பயன்படுத்தி, அத்தனை பாத்திரங்களும் நிஜத்தில் வருவது போலவே எடுக்க உள்ளனர். இந்தியாவில் இதுபோல தயாராகும் முதல் திரைப்படம் கோச்சடையான்தான். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
 

'பில்லா 2’ அஜீத்-அசத்தல் போஸ்டர்கள்


பில்லா– 2 படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தல அஜீத் நடிக்கும் 51 வது படம் ‘ பில்லா 2. பார்வதி ஒமணக்குட்டன் நாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படத்தை‘சக்ரி டொலெட்டி இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.

புதிய போஸ்டர்கள்

இந்த நிலையில் பில்லா 2 படத்தின் கலக்கலான போஸ்டர்கள் பொங்கல் தினத்தில் வெளியிடப்பட்டுள்ளதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். " கையில் துப்பாக்கியுடன் கோபப்பார்வையோடு ‘ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு இறந்த காலம் உண்டு. ஒவ்வொன்றும் வரலாறு’ என்பதை குறிக்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

நூறு சதவிகித ஒத்துழைப்பு

இந்த படத்தில் அஜீத் நடிப்பை பற்றி கூறிய இயக்குநர், ‘டேவிட் என்ற சாதாரண மனிதன் தூத்துக்குடியில் இருந்து வந்து டான் பில்லாவாக எப்படி உருவாகிறார் என்பதை வாழ்ந்து காட்டியிருக்கிறார் அஜீத் என்றார்.

’பில்லா 2’ படத்தில் மும்முரமாக நடித்து வந்ததால் அஜீத் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. பில்லா 2 படத்தில் அஜீத்தின் பணிகள் முடிந்த பின் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்றிருந்தார். தற்போது சிங்கப்பூரில் இருந்து திரும்பி இருக்கும் அஜீத், அடுத்ததாக விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

அஜீத் மகள் மனதைக் கவரும் அழகி: ராதிகா சரத்குமார்


அஜீத், ஷாலினியின் மகள் அனோஷ்கா ஒரு அழகி என்று நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தல அஜீத், அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் சரத்குமார், அவரது மனைவி ராதிகா, மகன் ராகுல் ஆகியோர் அண்மையில் சந்தித்தனர். அப்போது அஜீத்தின் செல்ல மகள் தனது மனதைக் கொள்ளை கொண்டதாக ராதிகா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,

அஜீத் மகள் அனோஷ்கா ஒரு அழகி. அவள் எங்கள் மனங்களை எல்லாம் கொள்ளை கொண்டுவிட்டாள் என்று எழுதி புகைப்படமும் வெளியிட்டுள்ளார்.

அஜீத் படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது செல்ல மகளுடன் விளையாடி மகிழ்கிறார். ஷூட்டிங், ஷூட்டிங் என்று ஓடிவிடுவதால் மகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என்பதால் அஜீத் புத்தாண்டை மனைவி, மகளுடன் சிங்கப்பூரில் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

மலேசிய தமிழர்களுடன் பொங்கல் கொண்டாடிய நடிகை மோனிகா


மலேசியா: மலேசியாவில் படப்பிடிப்புக்கு சென்ற நடிகை மோனிகா அங்குள்ள தமிழர்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடினார். அவருடன் புழல் பட நாயகன் முரளியும் கலந்து கொண்டார்.

மலேசியாவில் நடைபெற்ற படப்படிப்பில் நடிகை மோனிகா கலந்து கொண்டார். அப்போது மலேசியாவில் உள்ள தமிழர்கள் ஏற்பாடு செய்த பொங்கல் விழாவில் மோனிகா கலந்து கொண்டார்.

பொங்கல் விழாவையொட்டி கோவில் முன்பு பொங்கல் பானை வைத்து அதில் தானியங்களை படையலிட்டு தயாராக வைக்கப்பட்டிருந்தது. நடிகை மோனிகா பானையில் அரிசியை கொட்டி தீ மூட்டினார்.

பொங்கல் பொங்கி வந்த போது விழாவில் கலந்து கொண்ட தமிழ் குடும்பத்தினர் பொங்கலோ பொங்கல் என்று குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். அதன்பிறகு பொங்கி வந்த பொங்கலை கடவுளுக்கு படையலிட்டு வணங்கினர்.

சிறப்பு பூஜைக்கு பிறகு பொங்கல் அனைவருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

விழாவில் கலந்து கொண்ட மோனிகா பாட்டு பாடி, நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தார். புழல் படத்தின் கதாநாயகன் முரளியும், பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.
 

வேட்டை - திரைப்பட விமர்சனம்


நடிப்பு: ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலா பால்
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: நீரவ் ஷா
எடிட்டிங்: ஆண்டனி
பிஆர்ஓ: ஜான்சன்
தயாரிப்பு: திருப்பதி பிரதர்ஸ் & யுடிவி

எழுத்து - இயக்கம்: லிங்குசாமி

பொங்கல் பண்டிகையின் குதூகல மூடுக்கேற்ப வந்துள்ள படம் என்றால் லிங்குசாமியின் வேட்டைதான். இத்தனைக்கும் படத்தின் கதை ஒன்றும் புதிதில்லை. எம்ஜிஆர் கால பார்முலாதான். ஆனால் அதை காட்சிப்படுத்திய விதமும், யுவன் சங்கர் ராஜாவின் துள்ளல் இசையும் படத்தை உற்சாகமாக ரசிக்க வைக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் பாக்யராஜ் இயக்கம் நடிப்பில் 'அவசர போலீஸ் 100' என்று ஒரு படம் வந்தது (அமரர் எம்ஜிஆர் நடித்த காட்சிகளை சேர்த்து). கிட்டத்தட்ட அதே கதையை கொஞ்சம் ரிப்பேர் பண்ணி வேட்டையாக்கியிருக்கிறார் லிங்குசாமி.

மாதவனும் ஆர்யாவும் பாசமிக்க அண்ணன் தம்பிகள். இவர்களது அப்பா தூத்துக்குடியில் போலீஸ் அதிகாரி. மாதவன் இயல்பில் பயந்த சுபாவம் கொண்டவர். ஆனால் ஆர்யாவோ அதிரடிப் பார்ட்டி. அண்ணனின் பயத்தைப் போக்க பல முயற்சிகளை மேற்கொள்கிறார் ஆர்யா. அப்பா மறைவுக்குப் பிறகு அவரது காக்கி யூனிபார்மை அண்ணன் மாதவனுக்கு மாட்டிவிடுகிறார்!

வெறும் யூனிபார்ம்தான் மாதவனுக்கு... ஆனால் நிஜத்தில் அத்தனை சாகஸங்களையும் செய்பவர் ஆர்யா. வெளியில் தெரியாமல் நடக்கும் இந்த டூப்ளிகேட் சமாச்சாரம், மூன்று தூத்துக்குடி ரவுடிகளை களையெடுக்கும் முயற்சியில் அம்பலமாகிவிடுகிறது. மாதவனையும் ஆர்யாவையும் ஒழித்துக்கட்ட கைகோர்க்கிறார்கள் ரவுடிகள். இதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் சகோதரர்கள் என்பது எளிதில் யூகிக்கக் கூடிய க்ளைமாக்ஸ்.

இடையில் பயந்தாங்கொள்ளி மாதவனுக்கு தடாலடி சமீராவை திருமணம் செய்து வைப்பதும், அப்படியே சமீராவின் அழகுத் தங்கை அமலாவுக்கும் ஆர்யாவுக்கும் காதல் பூப்பதும் செம ஜாலியாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஆர்யா அதிரடி பண்ணுகிறார். நடனம், சண்டை, காதல், நகைச்சுவை, அமெரிக்க மாப்பிள்ளையைக் கலாய்ப்பது என அத்தனை காட்சிகளிலும் வெளுத்துக் கட்டியுள்ளார். படத்துக்கே தனி வண்ணத்தை தருகிறது ஆர்யாவின் துடிப்பான நடிப்பு.

அண்ணனாக வரும் மாதவன் அடக்கி வாசித்து, மனதைக் கொள்ளையடிக்கிறார். அதிரடியாக அதகளம் பண்ணுவதை விட, ஒரு கோழையாக நடிப்பதில்தான் சவால் அதிகம். மாதவன் அந்த சவாலில் ஜெயித்திருக்கிறார். ரவுடிகளிடம் அடிபட்ட பிறகு, 'போதுண்டா... எவ்வளவு நாளைக்குதான் நீ வந்து காப்பாத்துவேன்னு காத்திட்டிருக்கிறது' என்று அவர் பேசும் காட்சியும், தம்பியை அடிப்பது பொறுக்காமல், தன்னையறியாமல் வீல்சேரிலிருந்து எழுந்து இரும்புக் கம்பி வலையை ஏறிக் குதிப்பது போன்ற காட்சிகளில் மாதவன் நடிப்பு 'க்ளாஸ்'!

கதைக்களம் தூத்துக்குடி என்பதற்காக அனாவசியமாக ஏலே வாலே போலே என்று பாத்திரங்களை செயற்கையாக பேசவிடாததற்காக இயக்குநருக்கு நன்றிகள் (நாசர் விலக்கு).

நாயகிகள் இருவருமே படத்துக்கு பெரும் பலம். சமீராவின் அதிரடியும் அமலா பாலின் கிறங்கடிக்கும் கவர்ச்சியும் ரசிகர்களுக்கு விருந்துதான். போலீஸ் கணவனைத் தேடி வீட்டுக்கு வரும் ரவுடியை வீராவேசமாக எதிர்க்கும் காட்சியில் சமீராவும், அமெரிக்க மாப்பிள்ளையை வெறுப்பேற்ற ஆர்யாவுக்கு லிப் டு லிப் அடிக்கும் காட்சியில் அமலாவும் அட்டகாசம்!

க்ளைமாக்ஸில் எந்த புதுமையும் இல்லாதது ஒரு குறை. ரவுடிகள் மாதவன் வீட்டை முற்றுகையிடும்போதே, முடிவு தெரிந்துவிடுகிறது. ஆர்யா அடுத்து என்ன ஆவார் என்று கூட பக்கத்து சீட்காரர் கணித்துச் சொன்னது, தமிழ் சினிமா இயக்குநர்களை மக்கள் எந்த அளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு சான்று!

நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்துக்கு பண்டிகைக்கால உற்சாகத்தைத் தருகிறது. தூத்துக்குடி பக்கத்தில் இப்படியெல்லாம் லொகேஷன்கள் இருக்கிறதா...!

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இன்னொரு ப்ளஸ். அந்த பப்பரப்பா பாட்டுக்கு தியேட்டரே ஆடுகிறது. பழைய கதையை பரபரப்பாக நகர்த்திச் செல்வதில் எடிட்டர் ஆண்டனியின் பங்கு பெரியது!

ஆரம்பத்திலிருந்தே ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்திருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. அது, படம் பார்ப்பவர்களை ஒரு கணம் கூட யோசிக்கவே விடக்கூடாது. ஜாலியாக பார்க்க வேண்டும் என்பதுதான். லாஜிக், எதார்த்தம் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் பார்த்தால் இந்தப் படத்தை ரசிக்க முடியும்!

வேட்டை ... வசூல் வேட்டை!

-எஸ். ஷங்கர்
 

பெண்கள் வாழ்வின் சாபமா? மயக்கம் என்ன பாடல் சர்ச்சை: புகார்


மயக்கம் என்ன படத்தில் தனுஷ் பாடியுள்ள ‘காதல் என் காதல் கண்ணீரிலே பாடல்’ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தப் பாடல் பெண்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாகவும் அதனை தடை செய்ய வேண்டும் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கி தனுஷ் நடித்துள்ள படம் 'மயக்கம் என்ன'. இந்த படத்தில் காதல் என் காதல் என கண்ணீருல.. என்று தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ளது. அதில் ‘அடிடா அவள, உதடா அவள, வெட்றா அவள, தேவையே இல்ல’ என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன.

அத்துடன் ‘பொண்ணுங்க எல்லாம் வாழ்வின் சாபம்’ என்ற வரியும் இடம் பெற்றுள்ளது. இவை பெண்களை இழிவுபடுத்துபவை என்றும் பெண்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுபவை என்றும் ராமசுப்பிரமணியம் என்பவர் புகார் கூறியுள்ளார்.

பெண்களை கொண்டாடும் நாம் கலாசாரத்துக்கு இந்த பாடல் முற்றிலும் எதிரானது என்றும் தனது புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மயக்கம் என்ன படம் ரிலீசாகி பல நாட்களுக்கு பிறகு பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதற்கு கீதாஞ்சலி செல்வராகவன் வியப்பு தெரிவித்துள்ளார். இந்த பாடலில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வரிகள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஜோவியலான மூடில் பாடுவது போல உள்ளதே தவிர பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் இப்பாடல் எழுதப்படவில்லை என்றும் தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பாடலை தனுசும் படத்தின் இயக்குனர் செல்வராகவனும் இணைந்து எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்தியாவின் இணையற்ற இசையமைப்பாளர் வாழ்ந்த வீடு இன்று கோழிப்பண்ணை!


எஸ்டி பர்மன்... இந்தியாவின் இசை மேதைகளுள் முக்கியமானவர். நாற்பது ஆண்டுகள் பாலிவுட்டைக் கலக்கிய சாதனையாளர். தேசிய விருது, மாநில அரசின் விருதுகளைப் பெற்றவர். அவரது ஒவ்வொரு பாடலும் வைரம் மாதிரி காலத்தை வென்று ஜொலித்துக் கொண்டிருக்கின்றன.

ரசிகர்களால் 'தாதா (Dada)' என அன்புடன் அழைக்கப்பட்ட சச்சின் தேவ் பர்மன், திரிபுரா மன்னரின் நேரடி வாரிசு. ஆனால் அரண்மனை அரசியல் காரணமாக, அகர்தலாவிலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்து இசையமைப்பாளரானார். பத்தோடு பதினொன்றாக இல்லால், இசையமைப்பாளர்களில் மன்னராகத் திகழ்ந்தார்.

கைடு, ஜூவல் தீஃப், பேயிங் கெஸ்ட், ஆராதனா என வெள்ளிவிழாப் படங்களின் இசையமைப்பாளர் எஸ்டி பர்மன்தான். இவர் மகன்தான் இந்திப் பட இசையின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ஆர் டி பர்மன்.

'காலம் பூரா காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடும் அளவுக்கு பெரிய மேதை எஸ்டி பர்மன்' என்பார் இசைஞானி இளையராஜா அடிக்கடி.

அப்பேர்ப்பட்ட இசைமேதை வாழ்ந்த வீடு இன்று கோழிப்பண்ணையாக மாறிப் போயிருக்கிறது!

எஸ்டி பர்மன் வாழ்ந்த வீடு இந்திய - பங்களாதேஷ் எல்லையில் உள்ள கோமில்லா அருகே சார்த்தா என்ற கிராமத்தில் உள்ளது. டாக்காவிலிருந்து 85 கிமீ தூரத்தில் உள்ளது இந்த இடம். இந்தியாவின் அகர்த்தலாவிலிருந்து 50 கிமீ தூரம்.

சமீபத்தில் திருபுராவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனாவிடம் இதுகுறித்து மாநில அரசின் கலை பண்பாட்டுத்துறை அதிகாரிகள் இதுகுறித்து தெரிவித்தனர்.

உடனே, எஸ்டி பர்மனின் அந்த இல்லத்தை பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப் போவதாக ஹஸீனா தெரிவித்தார்.

திரிபுரா கலாச்சார ஒத்துழைப்பு கமிட்டியில் இடம்பெற்றுள்ள கவுதம் தாஸ் கூறுகையில், "அந்த வீடு சேதமடைந்த நிலையில் இருந்தததால், உள்ளூர்க்காரர்கள் சிலர் ஆக்கிரமித்து கோழிப்பண்ணை வைத்துவிட்டார்கள். இதனை பங்களாதேஷ் பிரதமரிடம் தெரிவித்துவிட்டோம். ஆனால் இன்னும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. பங்களாதேஷை சார்ந்த சிலரும் எங்கள் கமிட்டியில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூலம் மீண்டும் நமது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளோம். விரைவில் எஸ்டி பர்மனின் வீடு, அவரது அழகிய நினைவில்லமாக மாற்றப்படும் என நம்புகிறோம்," என்றார்.
 

சிவாஜி, எந்திரனுக்குப் பிறகு 'வேட்டை' படத்துக்கு விமர்சனம் எழுதிய 'நியூயார்க் டைம்ஸ்'!!


முதல் முறையாக வெளிநாட்டுப் பத்திரிகைகளில் வந்த தமிழ் சினிமா விமர்சனம் ரஜினியின் 'சிவாஜி - தி பாஸ்' (அதற்கு முன் முத்து படம் பற்றி ஜப்பான் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின!). நியூயார்க் டைம்ஸ், பிபிசி, கார்டியன் என பல பத்திரிகைகள் 'சிவாஜி'யை 'அட்டகாசமான பொழுதுபோக்குப் படம்' என எழுதின.

அடுத்து இதே ரஜினியின் எந்திரன் படத்துக்கு உலகின் முக்கியப் பத்திரிகைகள், இணையதளங்கள் அனைத்துமே விமர்சனம் எழுதின. 'இதை ஒரு இந்தியப் படம் என்று நம்பமுடியவில்லை' என்று குறிப்பிட்டிருந்தது அமெரிக்காவின் ஸ்லேட் இணைய இதழ். "புலிக்கும் பெரும் புயலுக்கும் பிறந்த ஒருவர் பூகம்பத்தை திருமணம் செய்துகொண்டால் அவருக்குப் பிறப்பதை ‘ரஜினிகாந்த்’ எனலாம்" என்று ரஜினியை அபாரமாக வர்ணித்து இந்த பத்திரிகை எழுதிய கட்டுரையை இந்தியா டுடே அப்படியே எடுத்தாள அது பெரிய பிரச்சினையானது நினைவிருக்கலாம்!

நியூயார்க் டைம்ஸ் எந்திரனை வெகுவாகப் புகழ்ந்ததோடு, ரஜினியை அபூர்வமான நடிகர் என்றும் குறிப்பிட்டிருந்தது.

ரஜினியின் படங்களுக்குப் பிறகு, முதல் முறையாக தமிழ்ப் படம் ஒன்றிற்கு நியூயார்க் டைம்ஸ் விமர்சனம் எழுதியுள்ளது. அது மாதவன்- ஆர்யா நடித்த பொங்கல் ரிலீஸான 'வேட்டை' படத்துக்கு!

இந்தப் படத்துக்கான விமர்சனத்தில், "தூத்துக்குடி என்ற கடலோர பகுதியில் நடக்கும் இந்தப் படத்தின் கதை தீயசக்தியை வேட்டையாடும் போலீஸை மையப்படுத்தி அமைந்துள்ளது. பொழுதுபோக்கு, சென்டிமென்ட், காதல், விறுவிறுப்பான சண்டைகள், தாளம் போட வைக்கும் பாடல்கள் என ஒரு கச்சிதமான பொழுதுபோக்குப் படம்," என குறிப்பிட்டுள்ளார், விமர்சனத்தை எழுதிய ராச்செல் சால்ஸ்.

நியூயார்க் டைம்ஸ் உலக அளவில் பெரிதும் மதிக்கப்படுகிற, அதிகம் விற்பனையாகிற பத்திரிகைகளுள் ஒன்று.

தமிழ் சினிமாவின் வீச்சு எந்த அளவு அதிகரித்துள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாக பார்க்கப்படுகிறது. இப்படியொரு விமர்சனம் வெளியாக படத்தின் தயாரிப்பாளர்கள் மேற்கொண்ட பப்ளிசிட்டி உத்திகளும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது!

"உலகத்தில் இந்தியா தவிர்த்து, வேறு நாட்டுப் படங்களில் டூயட் இருக்கா, சோகப்பாட்டு இருக்கா.." என்றெல்லாம் கிண்டலடித்து வந்தனர் இங்குள்ள சில விமர்சகர்கள். ஆனால் இப்போதோ, இந்த டூயட்டுகள், குத்துப்பாட்டுகளை சர்வதேச ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள் என்பது நிரூபணமாகியிருக்கிறது. அடுத்து ஏதாவது ஒரு ஹாலிவுட் படத்தில் இந்திய ஸ்டைல் குத்துப்பாட்டு என்று போட்டாலும் வியப்பதற்கில்லை!!
 

ரஜினியை வைத்து விளம்பரம் தேடுகிறோமா? - ஐஸ்வர்யா மறுப்பு


அப்பா ரஜினி பெயரை வைத்து விளம்பரம் தேடுவதில் மகள்கள் ஐஸ்வர்யாவும் சௌந்தர்யாவும் போட்டி போடுவதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை வைத்து '3' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் 'கொலவெறி...' பாடல் உலகப் புகழ் பெற்றுவிட்டது. அதே நேரம், இந்தப் படத்தில் ரஜினி நடிப்பதாகவும், இசை வெளியீட்டுக்கு வருவார் என்றெல்லாம் யூகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியாகின.

ஆனால் ரஜினி நடிக்கவுமில்லை, அந்தப் படம் தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவுமில்லை. இந்தப் படம் குறித்து அவர் வெளிப்படையாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம் இளையமகள் சௌந்தர்யா, அப்பா ரஜினியை வைத்து படங்கள் தயாரிப்பதில் முனைப்பு காட்டி வருகிறார். ஆரம்பத்தில் ரஜினியை வைத்து சுல்தான் என்ற படத்தை ஆரம்பித்தார். அந்தப் படம் இப்போது கைவிடப்பட்டு, கோச்சடையான் படத்துக்கான ஆயத்த வேலைகள் நடந்து வருகின்றன.

இடையில் தொடங்கப்பட்ட ராணா படம், ரஜினி உடல்நிலை காரணமாக தள்ளிப் போடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இணை தயாரிப்பாளர், தொழில்நுட்ப இயக்குநர் சௌந்தர்யாதான்.

இரண்டு மகள்களும் அப்பாவின் சூப்பர் ஸ்டார் இமேஜ் மற்றும் புகழை வைத்து முடிந்தவரை விளம்பரம் தேடிக் கொள்வதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும் இருவருக்கும் இடையே இந்த விஷயத்தில் பெரும் போட்டியே நடப்பதாகவும், அதில் ஐஸ்வர்யாவின் கை ஓங்கியிருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.ய

இதற்கு ஐஸ்வர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "ரஜினி பெயரை நானும், என் தங்கை சௌந்தர்யாவும் விளம்பரத்துக்கு பயன்படுத்துவதாகவும், எங்கள் இருவர் இடையே போட்டி நிலவுவதாகவும் வெளியான செய்தி வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

தங்கைக்கும் எனக்கும் மோதல் வர அவசியம் இல்லை. அவர் அனிமேஷன் படத்தை இயக்குகிறார். நான் சினிமா படமொன்றை இயக்கி வருகிறேன். எங்களுக்குள் எப்படி போட்டி வரும். சூர்யாவும் கார்த்தியும் ஒரே துறையில் உள்ளனர். அவர்களுக்குள் போட்டியா இருக்கிறது. என் கணவர் தனுஷ் கூட சூப்பர் ஸ்டார் ரஜினி பெயரை விளம்பரத்துக்காக பயன்படுத்தியது இல்லை. எங்களுக்கு திருமணமாகி 8 வருடம் ஆகிறது. இந்த எட்டு ஆண்டுகளில் எப்போதாவது அப்பா பெயரை எங்கள் சுய விளம்பரத்துக்காக பயன்படுத்தினோம் என்று சொல்ல முடியுமா...

தனுஷின் எந்த பட விழாவிலும் அப்பா பங்கேற்றது இல்லை. அப்பா உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது மட்டும் ஒரு பொறுப்புள்ள மருமகனாக இருந்து அவரது உடல்நிலை பற்றிய விவரங்களை ரசிகர்களுக்கு தெரிவித்தார். இதில் எங்களுக்கு என்ன விளம்பரம்? செய்திகளை தார்மீக பொறுப்போடு வெளியிட வேண்டும்.

எங்களைப் பற்றிய செய்தியை என்னிடமோ தனுஷிடமோ தொடர்பு கொண்டு விளக்கம் பெற்று வெளியிடலாமே... நாங்கள் தொடர்பு கொள்ள முடியாத தூரத்தில் இல்லையே. யார் கேட்டாலும் விளக்கம் சொல்கிறோமே. ஆனால் எதையுமே கேட்காமல் இஷ்டப்படி எழுதுவது சரியா?," என்று கேட்டுள்ளார்.
 

எருமை மீது ஊர்வலம் போய் கையை உடைத்துக் கொண்ட மன்சூர் அலிகான்!


தனது புதிய படம் ஒன்றின் படப்பிடிப்பில் எருமை மீது ஊர்வலம் போன நடிகர் மன்சூர் அலிகான், கீழே விழுந்ததில் அவர் கை முறிந்தது.

நடிகர் மன்சூர் அலிகான், 'லொள்ளு தாதா பராக் பராக்' என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வியாசன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு போளூர் அருகே ஒரு ஏரி பகுதியில் நடந்தது.

மன்சூர் அலிகான், எருமை மாடு மீது ஊர்வலமாக வருவதுபோல் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர்களின் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. கூட்டத்தைப் பார்த்து எருமை மாடு மிரண்டு ஓடியதால், மன்சூர் அலிகான் கீழே விழுந்தார்.

அதில், அவருடைய வலது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக போளூர் ஆஸ்பத்திரியில் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு சென்று அவர் சிகிச்சை பெற்று, கட்டு போட்டுக் கொண்டார். அவரை ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதனால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சமீபத்தில்தான் நிலமோசடி வழ்ககில் கைதாகி ஜாமீனில் விடுதலையானார் மன்சூர் அலிகான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

கேரளாவில் இருந்து கடத்தப்பட்ட துணை நடிகை - சென்னையில் போலீசார் வலைவீச்சு


சென்னை: கேரளாவில் இருந்து சினிமா வாய்ப்பு அளிப்பதாக ஆசை வார்த்தை கூறி சென்னைக்கு கடத்தி வரப்பட்ட துணை நடிகையை போலீசார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம், எர்ணாகுளத்தை அடுத்த கொச்சியை சேர்ந்தவர் லட்சுமி. 10ம் வகுப்பு வரை படித்த இவர், அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு (2011) மே மாதம் பெட்ரோல் பங்க்கிற்கு வந்த ஒரு நபர், லட்சுமியுடன் பேசியாக கூறப்படுகின்றது. அதன்பிறகு லட்சுமியை காணவில்லை.

இது குறித்து லட்சுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் எர்ணாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் குருவாயூரை சேர்ந்த ஷெபிக் என்ற கார் டிரைவர், லட்சுமிக்கு சினிமா ஆசைக்காட்டி சென்னைக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

அதன்பிறகு கார் டிரைவர் ஷெபிக், போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஷெபிக்கிடம் நடத்திய விசாரணையில், காணாமல் போன லட்சுமி தற்போது சென்னையில் தங்கியிருப்பதாகவும், சினிமா மற்றும் டிவி சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வருவதாகவும் தெரிய வந்தது.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார், சென்னையில் உள்ள துணை நடிகை ஏஜெண்ட்களிடம் விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், போரூரில் உள்ள ஒரு வீட்டில் விசாரித்த போது, அங்கு தங்கியிருந்த லட்சுமி சமீபத்தில் காலி செய்ததாக போலீசாருக்கு தெரிய வந்தது.

சென்னையில் தங்கி இருப்பதாக கூறப்படும் துணை நடிகை லட்சுமியை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
 

சூப்பர் ஹிட்டான விஜய்யின் நண்பன்!


அதிரடி ஆக்ஷன் இல்லாமல், டாடா சுமோக்கள் பறக்காமல், பிரமாண்ட கிராபிக்ஸ்கள் இல்லாமல் விஜய்-ஷங்கரின் கூட்டணியில் நல்ல கதையுடன் வந்திருக்கும் நண்பன், 2012ம் ஆண்டின் முதல் மெகா ஹிட் தமிழ்ப் படம் என்ற பெயரை வாங்கியுள்ளது.

வசூலில் அள்ளிக் குவித்து வரும் இந்தப் படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுந்துள்ளது.

3 இடியட்ஸ் என்ற மாபெரும் வெற்றிப் படத்தை அப்படியே சீனுக்கு சீன் மாற்றாமல் எடுத்திருந்தாலும், ஷங்கர் தனது வேலையைக் காட்டி தமிழுக்கு ஏற்ற மாதிரி ட்யூன் செய்து அசத்தியிருக்கிறார்.

விஜய்க்கும் இது மிக மிக வித்தியாசமான அனுபவமாகவே இருந்திருக்கும். எதிரிகளை நோக்கி சுட்டு விரலை நீக்கி அடிக்குரலில் கத்தாமல், பார்வையாலேயே எதிரியை துளைக்காமல், மிக யதார்த்தமான பக்கத்து வீட்டு பையன் மாதிரியான ஒரு கேரக்டர்.

இளைய தளபதி என்ற பட்டத்தையெல்லாம் தூர ஒதுக்கி வைத்துவிட்டு, தனது கேரக்டரை மிக அழகாக உள்வாங்கி பின்னி எடுத்திருக்கிறார்.

ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் என அனைவருமே ஒரு டீமாக இறங்கி, அந்தந்த கேரக்டர்களாகவே வாழ்ந்து காட்டியுள்ளனர். ஒரு ஸ்ட்ரெய்ட் என்டர்டெயின்மெண்ட் என்று அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கொள்ளையடித்துள்ள இந்தப் படம், வசூலிலும் எந்தக் குறையும் வைக்கவில்லை.

தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் படம் ரிலீசான இடமெல்லாம் சீட்கள் நிரம்பி வழிகிறதாம். இதனால் ரிலீசான 4 நாட்களிலேயே படத்தைத் தயாரித்த ஜெமின் சர்க்யூட் தயாரிப்பாளர்களுக்கு வசூல் மழை.

படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வெளியாகி வருவதால், ரிபீட் ஆடியன்ஸோடு, பெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டுள்ளது இந்தப் படம்.
 

பாரதிராஜாவுடன் 21 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கங்கை அமரன்


பாரதிராஜா இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக, கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 21 ஆண்டுகளுக்கு முன் பாரதிராஜா இயக்கிய என் உயிர் தோழன் என்ற திரைபடம் வெளியானது. பாபு, ரமா உள்ளிட்டோர் நடித்த இப்படத்தின் அனைத்து பாடல்களையும், கங்கை அமரன் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் நடிகர் அமீர், நடிகை இனியா, கார்த்திகா உள்ளிட்டோரின் நடிப்பில் பாரதிராஜா இயக்கி வரும் படம் அன்னக்கொடியும் கொடிவீரனும். இப்படத்தில் வைரமுத்து, கங்கை அமரன் உள்ளிட்ட 2 பேரும் பாடல்களை எழுதி உள்ளனர். பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.

இது குறித்து கங்கை அமரன் கூறியதாவது,

கடந்த 21 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிராஜா இயக்கும் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றேன், என்றார்.
 

ஹோசன்னா பாடல்: ரகுமானுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்


விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கில் உள்ள ஹோசன்னா பாடலுக்கு கிறிஸ்தவ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த பாடலில் இருந்து ஹோசன்னா என்ன வார்த்தையை நீக்காவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக அது எச்சரிக்கை விடுத்துள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட்டான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் ஹோசன்னா என்ற பாடல் மிகவும் பிரபலம். தற்போது இந்த படம் இந்தியில் ஏக் தீவானா தா என்ற பெயரில் தயாராகிறது. இந்தியிலும் ரஹ்மான் இசையில் தமிழில் ஹிட்டான ஹோசன்னா பாடல் உள்ளது. அந்த பாடல் வெளியிட்டதில் இருந்து வட இந்தியாவில் மிகவும் பிரபலமாகிவிட்டது.

இந்நிலையில் அந்த பாடலுக்கு மும்பையைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஹோசன்னா என்பது கிறிஸ்தவர்களின் புனித வார்த்தை அதை எப்படி ஒரு காதல் பாட்டில் பயன்படுத்தலாம் என்று அது கண்டித்துள்ளது. அந்த பாடலில் உள்ள ஹோசன்னா என்ற வார்த்தையை நீக்காவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாகவும், வழக்கு தொடரப் போவதாகவும் அது தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு தனது எதிர்ப்பை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாடலாசிரியர் ஜாவித் அக்தர், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் சோனி நிறுவனத்திற்கு இமெயில் மூலம் தெரிவித்துள்ளது.
 

‘நான்’ எல்லோருக்கும் பிடித்தவன்– விஜய் ஆண்டனி


‘நான்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், நினைத்தாலே இனிக்கும், உள்ளிட்ட பிரபல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனி. இவர் முதன் முதலாக ‘நான்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

புதிய விசயம் கிடையாது

இசையமைப்பாளர்கள் திரைப்படத்தில் நடிப்பது புதிய விசயம் இல்லை. மைக்கேல் ஜாக்ஸன், மடோனா வரையில் எல்லோருமே நடித்துள்ளார்கள். தமிழ் இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் விளம்பரத்தில் நடிக்கின்றனர். நான் திரைப்படத்தில் நடித்துள்ளேன் என்றார். இந்த திரைப்படம் பிப்ரவரி மாதத்தில் வெளியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அனைவருக்கும் பிடிக்கும்

எனது நண்பர் தான் படத்தின் இயக்குனர். ஏதாவது வித்தியாசமாக செய்து பார்க்க வேண்டும் என்ற துடிப்பு நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அதற்காகவே திரைப்படத்தில் நடித்தேன். படம் நன்றாக வந்திருக்கிறது. அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இது பிடிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷனும் ஏ.வி.ஆர். டாக்கீஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ள ’நான்’ படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் ஜீவா சங்கர். இவர் மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ஜீவாவுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களுக்கு விஜய் நேரில் உதவி


கடலூர்: புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவி வழங்கினார் நடிகர் விஜய்.

தானே புயலால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள் புதுச்சேரி மற்றும் கடலூர். அரசியல் தலைவர்கள் நேரில் போய் ஆறுதல் கூறினாலும், இந்த மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் முழுமையாக சேரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றங்கள் மூலம் முடிந்த வரை உதவிகளைச் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை புதுச்சேரிக்கு சென்ற விஜய் அங்கே பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு அரிசி, வீட்டு உபயோகத்துக்கான பாத்திரங்கள், வீடுகளை சீரமைக்க சிமெண்ட் கூரைகள் வழங்கினார்.

மேலும் அதிக அளவு உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று கடலூருக்கு சென்றார். புயலால் கடலூர் மற்றும் சுற்றுப் புற பகுதிகள் சின்னாபின்னமாகிவிட்டன. எனவே இதில் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார் விஜய். இன்னும் அதிக உதவிகளைச் செய்யவிருப்பதாகவும் அவர் மக்களிடம் கூறினார்.

நிவாரண உதவி பெற்றவர்கள் விஜய்யை வாழ்த்திச் சென்றனர்.
 

தேர்தல் வழக்கு: நத்தம் நீதிமன்றத்தில் வடிவேலு!


மதுரை: தேர்தல் விதிமீறல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் வடிவேலு நத்தம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் நத்தம் தொகுதியில் திமுக வேட்பாளர் விஜயனை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்தார்.

போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக வடிவேலு மீது தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நத்தம் உரிமையியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த விசாரணையின்போது நடிகர் வடிவேலு நேரில் ஆஜரானார்.

நத்தம் திமுக வேட்பாளராக போட்டியிட்ட விஜயனும் வடிவேலுவுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
 

உ.பி தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கும் நடிகர், நடிகைகள்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
உத்திரபிரதேசத்தில் நடக்க உள்ள சட்டசபைத்தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளுக்காக நடிகர் -நடிகைகள் பிரசாரம் செய்ய உள்ளனர். உத்திரபிரதேச சட்டசபை தேர்தல், அரசியல்வாதிகளின் பிரச்சாரத்தில் சூடுபிடித்திருக்கும் நிலையில், அங்குள்ள முக்கிய கட்சிகளின் சார்பில் இந்தி நடிகர், -நடிகைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்த  கட்சிகள் தயாராகி வருகின்றன.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நடிகை நக்மா, நடிகர் ராஜா முராத் மற்றும் ரவி கிஷன் ஆகியோருடன் பேச்சு நடத்தி வருவதாக அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை ஸ்மிரிதி இரானி மற்றும் சுரேஷ் ஒபராய் ஆகியோரும் பாரதிய ஜனதா கட்சிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என பா.ஜ.க தெரிவித்துள்ளது.


 

மினி ஸ்கர்ட் அணிய மறுத்து ஹீரோயின் வெளியேறினார்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மினி ஸ்கர்ட் அணிய மறுத்து ஷூட்டிங்கில் இருந்து ஹீரோயின் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னடத்தில் உருவாகும் படம் 'கரோட்பதி'. ரமேஷ் டைரக்டு செய்கிறார். இதில் ஹீரோயினாக ப்ரியா தேர்வானார். இவர் 'சிங்கம்' படத்தில் அனுஷ்கா தங்கையாக நடித்தவர். இதன் ஷூட்டிங் சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஸ்டுடியோவில் நடந்தது. காலையில் ஷூட்டிங் வந்த ப்ரியா மதியம் வரை எந்த பிரச்னையும் இல்லாமல் நடித்தார். இந்நிலையில் மினி ஸ்கர்ட் அணிந்து வரும்படி இயக்குனர் கூறினார். மவுனமாக மேக் அப் அறைக்கு சென்றவர் மீண்டும் தளத்துக்கு வரவில்லை. இதையடுத்து அவரை அழைத்து வர உதவியாளர் மேக் அப் அறைக்கு சென்றார்.

அவரோ, 'மினி ஸ்கர்ட் அணிந்து நடிக்கும்படி என்னிடம் கதை சொல்லும்போது இயக்குனர் கூறவில்லை. கல்லூரி மாணவியாக இதில் நடிக்கிறேன். எந்த மாணவி கல்லூரிக்கு மினி ஸ்கர்ட் அணிந்து செல்ல அனுமதிக்கப்படுகிறார் என்று தெரியவில்லை. இக்காட்சியில் என்னால் நடிக்க முடியாது' என்றார். இதையடுத்து இயக்குனர் ரமேஷ் வந்து சமாதானம் செய்தார். ஆனால் அதை ஏற்காத ப்ரியா அங்கிருந்து வெளியேறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மும்பை பெண் ஜாஸ்மின் பாஸின் நடித்தார்.

''ஸ்கிரிப்ட் கேட்டபோது மாடர்ன் உடைகள் அணிந்து நடிக்க சம்மதித்த பிரியா திடீரென்று நடிக்க மறுத்தது அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே கல்லூரி மாணவியாக நடித்த ஜூஹி சாவ்லா போன்றவர்கள் மினிஸ்கர்ட் அணிந்து நடித்திருக்கிறார்கள். கதைக்கு தேவைப்பட்டதால் இப்படி நடிக்க கேட்டேன். ப்ரியா மறுத்து விட்டார். இதையடுத்து அவருக்கு பதிலாக ஜாஸ்மின் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு நாளில் புதிய நடிகையை தேர்வு செய்து படப்பிடிப்பை தொடங்கிவிட்டேன்'' என்றார் இயக்குனர் ரமேஷ்.




 

சிம்பு படத்தில் நான்தான் ஹீரோயின் தீக்ஷா சேத் பேட்டி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'சிம்பு படத்தில் நான்தான் ஹீரோயின். ஹன்சிகா நடிப்பதுபற்றி தெரியாது' என்றார் தீக்ஷா சேத். 'ராஜ பாட்டை' படத்தில் அறிமுகமானவர் தீக்ஷா சேத். இவர் கூறியதாவது: ராஜபாட்டையில் விக்ரம் ஜோடியாக நடித்தேன். இது நல்ல அறிமுகமாக அமைந்தது. இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ரேயா, ரீமா சென் நடித்திருந்தனர். இது மார்க்கெட் தந்திரம். தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க குறிப்பிடத்தக்க பாத்திரம் அமைவதற்காக காத்திருக்கிறேன். தற்போது 'வேட்டை மன்னன்' உள்ளிட்ட 2 படங்களில் நடிக்கிறேன். 'வேட்டை மன்னன்' ஷூட்டிங் முதல் ஷெட்யூல் முடிந்தது. மீண்டும் பிப்ரவரியில் 2ம் தேதி ஷெட்யூல் தொடங்குகிறது. நடிப்பு தொழிலில் தாமதம் என்பது ஒரு அங்கமாக இருக்கிறது. பல நேரங்களில் அதை தவிர்க்க முடியவில்லை.

இப்படத்தில் ஹன்சிகாவும் நடிக்கிறாரே என்கிறார்கள். இதன் ஸ்கிரிப்ட் சொல்லும்போது நான்தான் ஹீரோயின் என்று இயக்குனர் கூறினார். சிம்புவின் காதலியாக நடிக்கிறேன். படம் முழுவதும் நான் வராவிட்டாலும் எனக்கு 10க்கும் அதிகமான காட்சிகள் இருக்கிறது. ஆனால் இதற்கு மேல் எனக்கு காட்சிகள் இருக்கும் என்ற நம்புகிறேன். ஹன்சிகா நடிப்பதுபற்றி எனக்கு முதலில் தெரியாது.
இவ்வாறு தீக்ஷா சேத் கூறினார்.


 

ஆன்-லைன் மோசடி பற்றிய குறும்படத்தில் கார்த்திக்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சைபர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் குறும்படம் ஒன்று உருவாக இருக்கிறது. இதில் நடிகர் கார்த்திக் நடிக்க உள்ளார். குறிப்பாக ஆன்-லைன் மோசடிகளை தடுக்கும் பொருட்டு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக இந்த குறும்படம் தயாரிக்கப்படுகிறது. 5 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தில் ஆன்-லைன் மோசடிகள் மற்றும் பிற மோசடிகள் எப்படி நடக்கிறது என்பதை பற்றி கார்த்தி விளக்கி நடிக்க உள்ளார்.