ஆஹா கல்யாணம் - விமர்சனம்

Rating:
3.5/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: நானி, வாணி கபூர், சிம்ரன், படவா கோபி

இசை: தரண் குமார்

ஒளிப்பதிவு: லோகநாதன் ஸ்ரீனிவாசன்

தயாரிப்பு: ஆதித்ய சோப்ரா

இயக்கம்: ஏ கோகுல் கிருஷ்ணா


ஹம் ஆப்கே ஹேய்ன் கோன், தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே போன்ற இந்திப் படங்களில் வரும் திருமணக் காட்சிகளைப் பார்க்கும்போதெல்லாம்... தமிழ்ல இந்த மாதிரி வண்ணமயமாக திருமணக் காட்சிகள் வருவதில்லையே என்ற கேள்வி எழுந்ததுண்டு..

அந்தக் குறையைத் தீர்த்திருக்கிறது ஆஹா கல்யாணம். வண்ணங்களை வாரியிறைக்கும் காட்சிகள்... சலிப்புத் தட்டாத காதல்.. உறுத்தாத இசை.. இயல்பான ஹீரோ-ஹீரோயின்கள் என எல்லா வகையிலும் ஒரு நல்ல பொழுதுபோக்குப் படமாக வந்திருக்கிறது ஆஹா கல்யாணம்.

ஆஹா கல்யாணம் - விமர்சனம்

இந்தியில் வெளியான தங்கள் பாண்ட் பாஜா பாரத் படத்தை காட்சிக்குக் காட்சி அப்படியே தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள் யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தினர். அவர்களுக்கு ரொம்பத் தோதாக வாய்த்திருக்கிறார் புது இயக்குநர் கோகுல் கிருஷ்ணா.

கதை.. ஒரு சேட்டு வீட்டுக் கல்யாணத்தில் அழையா விருந்தாளியாகப் போகும் நானியும், அங்கே திருமண ஏற்பாடுகளைக் கவனிக்கும் வாணியும் சந்திக்கிறார்கள். மோதிக் கொள்கிறார்கள். அந்த திருமண நிகழ்ச்சியில் வாணி ஆடும் ஆட்டும் நானியை அவர் பின்னாலேயே சுற்ற வைக்கிறது.

ஆஹா கல்யாணம் - விமர்சனம்

படிப்பை முடித்ததும் சொந்தமாக கெட்டி மேளம் என்ற திருமண ஏற்பாட்டு நிறுவனத்தைத் தொடங்குவதில் வாணி தெளிவாக இருக்க, அவருடன் நட்பாகி அந்த நிறுவனத்திலும் ஒரு பார்ட்னராகிவிடுகிறார் நானி.

தொழிலில் அடுத்தடுத்து செம முன்னேற்றம். ஒரு பெரிய வீட்டுத் திருமணத்தை முடித்துக் கொடுத்த வெற்றியை சரக்கடித்துக் கொண்டாடிய இரவில், இருவரும் நட்பின் எல்லை தாண்டி உடலைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அன்றே நானியை வாணியைக் கணவனாகக் கருத, நானியோ வாணியின் கேரியரை மனதில் வைத்து விலகி நிற்க.. பிரிவு ஆரம்பிக்கிறது. கெட்டி மேளம் இரண்டாக உடைகிறது. இருவருமே தொழிலில் சொதப்ப ஆரம்பிக்கிறார்கள்.

ஆஹா கல்யாணம் - விமர்சனம்

இந்த இருவரும் இணைய வேண்டிய ஒரு சூழல் வருகிறது. இணைகிறார்களா.. காதல் என்னாகிறது என்பதுதான் மீதிக்கதை.

கதைக் களம் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதால், முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் அது தெரியவில்லை. இரண்டாவது பாதியில் காட்சிகளை எளிதில் யூகிக்க முடிவதால் ஆரம்பத்திலிருந்த சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது.

ஆஹா கல்யாணம் - விமர்சனம்

சிம்ரன் ஏதோ பெரிய வில்லி மாதிரி வருவார் என்பதுபோல பில்ட் அப் கொடுக்கிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. 'மார்க்கெட்ல எல்லாருக்கும் இடமிருக்கு, சந்திக்கலாம்' என்பதோடு அவரை வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார் இயக்குநர்.

கதை என்னமோ விக்ரமன் பாணிதான். அதை எடுத்த விதம்தான் ஸ்பெஷல். காட்சிகளில் இளமை கொப்பளிக்கிறது. குறிப்பாக ஹீரோ நானி. தமிழில் தனக்கென தனி இடம் பிடிப்பார் என்பது தெரிகிறது.

ஆஹா கல்யாணம் - விமர்சனம்

பக்காவான ஆந்திர உச்சரிப்புதான்... சொந்தக் குரல் என்ற ப்ளஸ் அதனை மறக்கடிக்க வைக்கிறது. 'என்னடா தமிழை தெலுங்குமாதிரி பேசறே' என்று ஒரு வசனத்தையும் வைத்து சமாளித்துவிடுகிறார்கள். படம் முழுக்க ஒரு சினிமா ஹீரோ மாதிரி தெரியாமல்... நம் தெருவில் அல்லது பக்கத்து தெருவில் பார்க்கும் ஒரு பையனை நினைவுபடுத்திய அவர் நடிப்பு இந்தப் படத்தை ரசிக்க வைக்கிறது.

வாணி கபூர்... அசப்பில் கொஞ்சம் 'பெரிய' ஷில்பா மாதிரி தெரிகிறார். புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவு பக்கா ப்ரொபஷனல் நடிப்பு. பெல்லி டான்ஸில் சிம்ரனையே தூக்கிச் சாப்பிடுகிறார். ரொமான்ஸ், அலட்சியம், கோபம் என அத்தனையும் அந்த அகல முகத்தில் அழகாக எதிரொலிக்கின்றன.

கதை முழுக்க முழுக்க இந்த இருவரைச் சுற்றித்தான். அதனால் துணைப் பாத்திரங்கள் நிறைய இருந்தாலும் பளிச்சென்று நினைவில் யாரும் நிற்கவில்லை, படவா கோபி தவிர. ஒருவிதத்தில் இவர்தான் கதையை நகர்த்திச் செல்பவர்!

ஆஹா கல்யாணம் - விமர்சனம்

தருண் குமார் இசையில் மழையின் சாரலில் பாட்டும், அந்த பஞ்ச் பாடலும் மனசில் நிற்கின்றன. பின்னணி இசை பரவாயில்லை.

லோகநாதன் சீனிவாசன் கேமிரா இயக்குநருக்கு இணையான அந்தஸ்தைப் பெறுகிறது இந்தப் படத்தில்.

ஒரு வெற்றிப் படத்தை வேறு மொழியில் ரீமேக் செய்வது அத்தனை சுலபமல்ல... அந்த வகையில் இந்தி திரைக்கதையை அந்த சுவாரஸ்யம் குறையாமல் படமாக்கியதில் வெற்றி பெற்றிருக்கிறார் கோகுல் கிருஷ்ணா.

ஆஹா..!

 

மீண்டும் இணைந்தனர் லிஸி - ப்ரியதர்ஷன்; சேர்த்து வைத்த கமல், மோகன் லால்!

சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற முடிவு செய்திருந்த இயக்குநர் ப்ரியதர்ஷன் - லிஸியை சமாதானப்படுத்தி சேர்த்து வைத்துள்ளார்கள் நடிகர் கமல்ஹாஸனும் மோகன் லாலும்.

நடிகை லிசிக்கும் டைரக்டர் பிரியதர்ஷனுக்கும் 1996-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

லிசிக்கும் பிரியதர்ஷனுக்கும் இடையே சமீபத்தில் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர்.

மீண்டும் இணைந்தனர் லிஸி - ப்ரியதர்ஷன்; சேர்த்து வைத்த கமல், மோகன் லால்!

ரூ.80 கோடிக்கு மேல் ஜீவனாம்சத்துடன் தனக்கு விவாகரத்து வேண்டும் என லிஸி கேட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் விவாகரத்து நடக்காது என்றும், பேசிக் கொண்டு இருப்பதாகவும் இயக்குநர் ப்ரியதர்ஷன் தெரிவித்தார்.

லிஸியுடன் சமரப் பேச்சை தொடர்ந்து நடத்தியதில், இருவரும் மன வேறுபாடுகளை மறந்து இணைந்து வாழ சம்மதித்துள்ளனர்.

இந்த சமாதான முயற்சியை மேற்கொண்டவர்களில் முக்கியமானவர் நடிகர் கமல ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அறிவுரையைக் கேட்ட பிறகே லிஸி சமாதானத்துக்கு வந்தாராம்.

இதுகுறித்து நடிகை லிசி கூறுகையில், "பிரியதர்ஷனுக்கும் எனக்கும் சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மைதான். இதனால் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்தோம். எங்கள் இருவருக்கும் நண்பராக இருந்தவர்தான் இந்த தகராறுக்கு காரணமே.

மனம் விட்டு பேசாததால் பிரச்சினை பெரிதானது. இவை எல்லாமே நாங்கள் நேருக்கு நேர் சந்தித்து மனம் விட்டு பேசியதும் முடிந்து போனது. இப்போது தெளிவாகி விட்டோம்.

குழப்பங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்ந்து நாங்கள் சேர்வதற்கு கமல் ஹாசனும் கவுதமியும் உதவினார்கள். இது போல் மோகன்லாலும் அவரது மனைவியும் முயற்சி எடுத்தார்கள். எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

லிஸியும் கமலும் விக்ரம் படத்தில் ஜோடியாக நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரம்மன் - விமர்சனம்

Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: சசிகுமார், லாவண்யா, சந்தானம், சூரி, நவீன் சந்திரா, ஜெயப்பிரகாஷ், பத்மப்ரியா

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

ஒளிப்பதிவு: ஜோமோன் டி ஜார்ஜ்

தயாரிப்பு: கே மஞ்சு & ஆன்டோ ஜோசப்

இயக்கம்: சாக்ரடீஸ்

'நண்பன் ஜெயிச்சா நாமே ஜெயிச்ச மாதிரி' - இந்த ஒன்லைனை வைத்து சசிகுமார் டீம் படைத்துள்ளதுதான் பிரம்மன்.

எவ்வளவு மொக்கையான காட்சிகள் என்றாலும்... நட்பு, நட்புக்காக விட்டுக் கொடுத்தல், அந்த விட்டுக் கொடுத்தலை கவுரவித்தல் என்று வரும்போது மனசு நெகிழ்ந்துவிடும். பிரம்மனும் இப்படித்தான்.. மொக்கை - நெகிழ்ச்சிக் காட்சிகள் கலந்து கட்டிய சினிமா!

பிரம்மன் - விமர்சனம்

சசிகுமாருக்கும் அவர் நண்பன் நவீன் சந்திராவுக்கும் சின்ன வயசிலிருந்தே சினிமாதான் ஆதர்சம். நான்காவது படிக்கும்போது திருட்டுத்தனமான ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்துவிட்டு வரும் இருவரையும் போலீஸ் பிடிக்கிறது. இனி சசிகுமார் சகவாசம் வேண்டாம் என்று மகனை அழைத்துக் கொண்டு சென்னைக்குப் போகிறார்கள் நவீனின் பெற்றோர். பின்னர் தெலுங்கில் பெரிய இயக்குநராகிவிடுகிறார் நவீன்.

அப்பாவிடம் உதவாக்கரை பட்டம் பெற்றுவிட்ட சசிகுமார், கோவையில் ஒரு பழைய தியேட்டரை லீசுக்கு எடுத்து, நண்பன் சந்தானத்துடன் சேர்ந்து நஷ்டத்தில் நடத்தி வருகிறார். இடையில் சசிகுமாருக்கும் கல்லூரி மாணவி லாவண்யாவுக்கும் காதல் மலர்கிறது.

பிரம்மன் - விமர்சனம்

சசிகுமாரின் தியேட்டர் வரிப் பிரச்சினையில் சிக்கி இழுத்து மூடப்படுகிறது. பணம் தர ஆளில்லை. அப்போதுதான் மதன்குமார் என்ற பெயரில் பெரிய இயக்குநராக இருக்கும் நண்பனின் நினைவு வருகிறது சசிகுமாருக்கு. சென்னையில் இருக்கும் நண்பனைச் சந்தித்து பண உதவி கேட்க புறப்படுகிறார் சசி. போன இடத்தில் நண்பனைச் சந்திக்க முடியவில்லை.

அப்போது பரோட்டா சூரி கொடுத்த யோசனைப்படி நண்பன் அலுவலகத்துக்குப் போகிறார். ஆனால் தவறுதலாக ஒரு தயாரிப்பாளரின் அலுவலகத்துக்குப் போய்விட, அங்கே டைரக்டர் மதன்குமார் உதவியாளர் என்று தப்பாக நினைத்து சசிகுமாரிடம் கதை கேட்கிறார் தயாரிப்பாளர். சசியும் தன் சொந்தக் கதையை சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஆஹா அருமையான கதை என்று கூறி, அட்வான்ஸ் தருகிறார் தயாரிப்பாளர்.

பிரம்மன் - விமர்சனம்

சரி, வாய்ப்பை விடுவானேன் என்று நினைத்து இயக்குநராக ஒப்புக் கொள்கிறார் சசிகுமார். ஆனால் பின்னர், இவர் மதன்குமார் உதவியாளர் இல்லை என்ற உண்மை தெரிய வர, வாய்ப்பு பறிபோகிறது. ஆனால் அதே கதையை தன் முதல் தமிழ் படமாக எடுக்க விரும்புகிறார் மதன்குமார். அதை நேரில் வந்து கேட்கிறார். தான்தான் அந்த சின்ன வயசு நண்பன் என்ற உண்மையை மறைத்து, கதையை தாரை வார்க்கிறார் சசி. பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் தன் காதலியையும் தாரை வார்க்கிறார்.

நட்புக்காக இவ்வளவு தியாகம் செய்த சசிகுமாருக்கு, அந்த தியாகத்துக்கான கவுரவம் கிடைத்ததா.. இயக்குநர் மதன்குமார் தன் பால்ய நண்பன் சசிகுமாரை அடையாளம் தெரிந்து கொண்டானா? என்பது க்ளைமாக்ஸ்.

பிரம்மன் - விமர்சனம்

விட்டால் மெகா சீரியல் ரேஞ்சுக்குப் போகிற கதை. ஆரம்பக் காட்சிகள் பல அப்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளன. சசிகுமார் படங்கள் சினிமாத்தனமாக இருந்தாலும், அதில் யதார்த்தத்தின் கலவை சரிபாதியாக இருக்கும். அதுதான் அவரது வெற்றிக்கான பார்முலா. இந்தப் படத்தில் சினிமாத்தனம் ரொம்பவே அதிகம்.

அதே நேரம், சூரியின் பாத்திரப் படைப்பு. நண்பனுக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை கொண்டாடாமல், எப்படியெல்லாம் ஏகடியம் செய்வார்கள், சொதப்பி வைப்பார்கள் என்பதை மிகையின்றி காட்டியிருக்கிறார்கள். இன்று நம் கண்முன்னே நடமாடும் பல சினிமா மனிதர்களுக்கு ஒரு சாம்பிள் இந்த கோ டைரக்டர் சூரி!

சசிகுமார் தன்னை ஒரு யூத்புல் நாயகன் என்று காட்ட ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். பார்க்கவும் நன்றாகத்தான் இருக்கிறது. நண்பனுக்காக அவர் விட்டுக் கொடுக்கும் காட்சிகளில் அத்தனை இயல்பாக நடிக்கிறார். நட்பை நேசிக்கும் மனிதர். க்ளைமாக்ஸுக்கு முன் தங்கைக்கும் அவருக்குமான அந்த ஒரு காட்சி.. அருமை, அழகு, அத்தனை பாந்தம்!

பிரம்மன் - விமர்சனம்

லாவண்யா பார்க்க அம்சமாக இருக்கிறார். ஆனால் நடிக்க வாய்ப்பில்லை. அதுவும் க்ளைமாக்ஸில் அவர் நிலைமை அந்தோ பரிதாபம். காதலனுக்கும் கட்டிக்கப் போகும் கணவனுக்கும் இடையே ஒன்றுமே புரியாமல் அல்லாட வைத்திருக்கிறார்கள்.

வேண்டா வெறுப்பாக நண்பனுடன் சேர்ந்து தியேட்டர் நடத்தும் பாத்திரம் சந்தானத்துக்கு. அவர் காமெடியும் வேண்டா வெறுப்பாகத்தான் இருக்கிறது. பின் பாதியில் வரும் சூரி பரவாயில்லை. இருவரிடமுமே ஒரு வஞ்சம் இருந்து கொண்டே இருப்பதால், அவர்களின் நகைச்சுவை எடுபடவே இல்லை!

பிரம்மன் - விமர்சனம்  

ஜெயப்பிரகாஷ், தங்கை பாத்திரத்தில் வரும் மாளவிகா, நண்பனாக வரும் நவீன் சந்திரா, வனிதா, ஞானசம்பந்தம் என அனைவரின் நடிப்பும் மிகையின்றி இருப்பது சிறப்பு.

இன்று திரையரங்குகள் உள்ள பரிதாப நிலையை காட்சிப்படுத்திய விதம் மனசை பாரமாக்குகிறது. அந்த இறுதிக் காட்சியில் குசேலன் வாடை!

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் பரவாயில்லை. ஆனால் இன்னும் சச்சின் வாடை மிச்சமிருக்கிறது. புதுசா ப்ரெஷ்ஷா ஏதாவது பண்ணுங்க டிஎஸ்பி! ஜோமோனின் ஒளிப்பதிவு பிரமாதம். அதுவும் அந்த வெளிநாட்டு லொகேஷன்கள் செம ச்சில்!

படத்தில் ஒரு காட்சி. சூரியிடம் கதை கேட்க வருவார் ஒரு தயாரிப்பு மேலாளர். 'கதை எப்படி இருக்கணும்னா... முதல் பாதி சிட்டி சார்... அப்படியே வில்லேஜ் போயிடறோம். அதுல காதல் இருக்கணும், நல்ல ஆக்ஷன் வரணும்.. அப்படியே கொஞ்சம் காமெடி... ப்ரெண்ட்ஷிப்.. ஸாங்கெல்லாம் பாரின்ல... அப்படி ஒரு கதை சொல்லுங்க," என்று கேட்பார். சூரி வெறுத்துப் போய் கதையே சொல்லாமல் அந்த மேலாளரை விரட்டியடிப்பார்.

பிரம்மன் கதையை தயாரிப்பாளரிடம் சொன்னபோது தான் இருந்த நிலையை நினைத்துதான் இயக்குநர் சாக்ரடீஸ் இப்படி ஒரு காட்சியை வைத்தாரோ என்னமோ... ஆனால் சூரியைப் போல விரட்டியடிக்க தேவையில்லை. ஒரு முறை பார்த்து வைக்கலாம்!