இந்தி பிதாமகனில் ரித்திக், சைப் அலி கான்?


தேசிய விருது பெற்ற பிதாமகன் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அதில் ரித்திக் ரோஷன், சைப் அலி கான் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

சீயான் விக்ரம், சூர்யா, சங்கீதா, லைலா நடித்த பிதாமகன் தேசிய விருது வாங்கிய படம். ஒரு பாட்டுக்கு மட்டும் வந்தாலும் சிம்ரன் நச்சென்று நடனம் ஆடி அசத்தியிருப்பார். இந்த படம் கடந்த 2003-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. விக்ரம் இப்படத்தில் பேசாமல் தன் நடிப்பால் நம்மையெல்லாம் அவரைப் பற்றி பேசவைதத்தார்.

இப்படிப்பட்ட பிதாமகன் தற்போது இந்திக்குப் போகிறது. இப்போதெல்லாம் தமிழ் படங்களை இந்தியில் ரீமேக் செய்ய பாலிவுட் ஆர்வம் காட்டி வருகின்றது. கஜினி, காக்க காக்க, சிங்கம் போன்ற படங்கள் இந்திக்குப் போய் அங்கும் ஹிட்டானது.

தற்போது அந்த வரிசையில் பிதாமகனும் சேர்கிறது. விக்ரம் நடித்த சேது இந்தி ரீமேக்கில் சல்மான் நடித்தார். தற்போது பிதாமகன் படத்தின் உரிமையைப் பெற ஸ்ரீதேவி கணவர் போனி கபூர், வஷு பாக்னானி, டேவிட் தவான் ஆகியோரெல்லாம் போட்டி போட இறுதியில் இயக்குனர் சதீஷ் கௌஷிக் சத்தமில்லாமல் உரிமையை வாங்கிவி்ட்டார்.

அவர் இந்த படத்தில் ரித்திக் ரோஷன், சைப் அலி கான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார். இன்னும் அவர்களிடம் இது குறித்து அவர் கேட்கவில்லையாம்.

அப்போ சங்கீதா, லைலா கதாபாத்திரங்களில் யார் நடிக்கப் போகிறார்கள்?. சிம்ரன் ஆடிய ஜிங்கிள் டான்ஸை ஆடப் போவது யார்...!!
 

தீபாவளி ரேஸிலிந்து விலகின தனுஷ், சிம்பு படங்கள்!


தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த தனுஷின் மயக்கம் என்ன மற்றும் சிம்புவின் ஒஸ்தி படங்கள், தியேட்டர் பற்றாக்குறை மற்றும் கடும் போட்டி காரணமாக விலகிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு விஜய் நடித்த வேலாயுதம், சூர்யா நடித்த ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கியிருந்த மயக்கம் என்ன, தரணி இயக்கத்தில் சிம்பு நடித்த ஒஸ்தி போன்றவையும் தீபாவளித் திரை விருந்தாக வரும் என்று கூறப்பட்டது.

ஆனால் பெரும்பாலான திரையரங்குகள் ஏழாம் அறிவு மற்றும் வேலாயுதம் படங்களுக்கே ஒதுக்கப்பட்டுவிட்டதால் இப்போது மற்ற இரு படங்களும் வெளியாவது கடினமாகிவிட்டது.

நான்கு பெரிய படங்கள் போட்டியிட்டால் தேறுவது கடினம் என்பதால், மயக்கம் என்ன படத்தை தனியாக வெளியிடப் போவதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். சிம்பு படத்துக்கும் அதே நிலைதானண். மேலும் இந்தப் படத்தில் ஒரு பாடல் வேறு இன்னமும் முடியவில்லையாம். எனவே இந்தப் படங்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ரா ஒன்னுக்கு கணிசமாக திரையரங்குகள் கிடைத்துள்ளன.
 

ஷங்கர் இயக்க, அஜீத் நடிக்க இந்தியன் -2? என்ன சொல்கிறார் ஏஎம் ரத்னம்?


பில்லா 2 நடித்துக் கொண்டிருக்கும் அஜீத்தின் அடுத்தபடம் அநேகமாக இந்தியன் 2 ஆக இருக்கலாம் என்கிறது கோடம்பாக்கம் வட்டாராம்.

இந்தியன் படத்தின் இறுதியில், அதன் அடுத்த பாகம் வரப்போவதை இயக்குநர் ஷங்கர் சூசகமாக குறிப்பிட்டிருப்பார். இந்தப் படத்தை தயாரித்த ஏஎம் ரத்னம்தான், அடுத்து அஜீத்தை வைத்து படம் தயாரிக்கிறார்.

அதேபோல, பாய்ஸ் சமயத்தில் மனக்கசப்பு ஏற்பட்டாலும், ரத்னத்துக்கு இன்னொரு படம் பண்ணித் தருவதாக இயக்குநர் ஷங்கரும் உறுதி தந்திருந்தார்.

எனவே இதுவரை நடக்காமல் இருந்த அஜீத் - ஷங்கர் காம்பினேஷனை இந்த முறை சாத்தியமாக்கிவிடலாம் என ரத்னம் முயற்சிப்பதாகவும், அது இந்தியன் -2 ஆக மலரலாம் என்றும் தகவல் பரபரக்கிறது. அன்னா ஹஸாரே விவகாரம் படுபாப்புலராக உள்ள இந்த நேரத்தில் இந்தியன் 2 எடுப்பது வியாபாரத்தில் அனல் பறக்க வைக்கும் என்பதால் இந்த பேச்சு.

இதுகுறித்து தயாரிப்பாளர் ஏ எம் ரத்னத்தை தொடர்பு கொண்டு விசாரித்தோம். "பேசிக்கிட்டிருக்கோம்," என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தவரை, இந்தியன் -2 உண்மையா என்று மட்டும் சொல்லுங்க என்றோம்.

"எதுவும் நடக்கலாம். இந்தியன்- 2 கூட நல்லாதான் இருக்குல்ல," என்றார் அப்பாவியாய்.

கமல்ஹாசன், சுகன்யா, மனீஷா கொய்ராலா நடித்து வெளியான தமிழில் புதிய புரட்சி படைத்த படம் இந்தியன். இப்படத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் தாத்தா வேடம் வெகு பிரபலமானது. இப்படத்தில் லஞ்சம், ஊழலை எதிர்த்துப் போராடும் இந்தியன் தாத்தா வேடத்தில் சிறப்பாக நடித்ததற்காக கமல்ஹாசனுக்கு தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது நினைவிருக்கலாம்.

எல்லாம் சரி, கமல்ஹாசன் தரித்த வேடத்தை தாங்கும் அளவுக்கு அஜீத்துக்கு பலம் இருக்கிறதா?
 

எதற்கும் வணங்கா 'தல' அஜீத்: த்ரிஷா


‘தல’ அஜீத் குமார் ரொம்ப ஸ்ட்ரெய்ட் பார்வர்ட் என்று கூறியுள்ளார் த்ரிஷா.

நடிகை த்ரிஷா அஜீத் குமாருடன் ஜீ, கிரீடம், மங்காத்தா என்ற 3 படங்களில் நடித்துள்ளார். அதில் மங்காத்தா சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதனால் த்ரிஷா மகிழ்ச்சியாக உள்ளார். சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கு முக்கியத்துவம் தருவதாக இருந்ததால் தான், தான் அதில் நடித்ததாக கூறுகிறார் த்ரிஷா.

அஜீத்துடன் 2 படம் நடிச்சிருக்கீங்க, அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர் ஸ்ட்ரெய்ட் பார்வர்ட். நேரடியாக எதையும் பேசக் கூடியவர், யாரையும் முன்னால் விட்டு பின்னால் பேச மாட்டார். எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேரே பேசி விடுவார் என்றார்.

சரி விஜய் கூட நீங்க நடிச்ச கில்லி படத்தில் வரும் அப்படி போடு பாட்டு இன்னமும் தாளம் போட வைக்கச் செய்கிறது. த்ரிஷா, விஜய் ஜோடி சேர்ந்தாலே ஹிட் என்றெல்லாம் பேசப்படுகிறது. நீங்கள் இருவரும் சேர்ந்து ஏற்கனவே நிறைய படங்கள் நடித்திருக்கிறீர்கள். உங்கள் நண்பர் விஜய் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என்றதற்கு விஜய் ரொம்ப ஸ்டைலான நடிகர் என்று கூறினார்.

‘தல’ ஸ்ட்ரெய்ட் பார்வர்ட், ‘இளைய தளபதி’ ஸ்டைல் அப்போ ‘சீயான்’ விக்ரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள், அவர் திறமைகளின் மொத்த உருவம் என்று பளிச்சென்று பதில் கூறினார் த்ரிஷா.

ஆனால், சிம்பு பற்றி த்ரிஷா எதுவும் சொல்லவில்லை…!

 

'கிருஷ்ணவேணி பஞ்சாலை'க்கு வைரமுத்து எழுதிய ஆயுத பூஜைப் பாட்டு!


கிருஷ்ணவேணி பஞ்சாலை திரைப்படத்தில் ஆயுத பூஜைக்காத கவிஞர் வைரமுத்து ஒரு பாடல் எழுதியுள்ளார்.

அந்தப் பாடல், இனி வரும் ஆயுத பூஜைகளில் பிரதான இடம்பெறும் எனும் அளவுக்கு சிறப்பாக அமைந்துள்ளது.

ஏஆர் ரஹ்நந்தன் இசையமைத்துள்ள பாடல் இது:

பல்லவி

ஆலைக்காரி
பஞ்சாலைக்காரி
ஆலைக்காரி
பஞ்சாலைக்காரி
கல்லில் உள்ள சிலைகள் எல்லாம்
உங்கள் சாமி – நூல்
மில்லில் உள்ள எந்திரம் எல்லாம்
எங்கள் சாமி
இதயம் போடும் ஓசைதான் – நம்
உயிரின் சங்கீதம்
எந்திரம் போடும் ஓசைதான்
தொழிலாளியின் சங்கீதம்
இந்த ஆலை என்பது ஆலை அல்ல
ஆலயந்தான்
பூஜைபோடு – ஆயுத
பூஜைபோடு
தொழிலாளி வாழ்க – என்னும்
ஆசையோடு

சரணம் – 1

பெத்த மண்ணை வித்துத் தின்னு
இத்துப் போயி வந்தோம்
பெத்த தாயப் போல நீயே உப்புப் போட்டாயே!
தனித் தனியா நூலா வந்தோம்
துணியா இங்கே ஆனோம்!
மானங் காக்கும் வேலை தந்து
மானங் காத்தாயே
பலசாதிப் பறவை
ஒருகாட்டில் குடியேறும்
அதுபோல நாங்கள் உறவானோம் இங்கே
ஆயுத பூஜை என்பது கூட
மேதினம் போலத்தான்
ஆயுதம் மேலே குங்குமம் வைத்தோம்
செந்நிறம் காணத்தான்
இந்த ஆலை என்பது ஆலை அல்ல
ஆலயந்தான்!

சரணம் – 2

சொந்தம் உள்ள சாதிசனம்
தூரமாகிப் போக
வந்த சனம் சொந்தம் என்னும்
பந்தம் உண்டாச்சே
முள்ளுக்குள்ள வாழ்ந்த வாழ்க்கை
முற்றும் தீர்ந்து போச்சு
மில்லுக்குள்ள வந்தோம்
பஞ்சம் போயே போயாச்சு
மனுசங்க வேர்வை
ஒருவாசம் உண்டாக்கும்
மிஷினுக்கும் கூட
ஒரு வாசம் உண்டு
பஞ்சைக் கொண்டு நூலைக் கண்டோம்
பஞ்சம் போனதுகாண்! – எங்கள்
காலம் வெல்லும் என்னும் கனவு
கண்ணில் தோணுதுகாண்
இந்த ஆலை என்பது ஆலை அல்ல
ஆலயம்தான்!

ஒரு பஞ்சாலையை மையப்படுத்தி தனபால் பத்மநாபன் இயக்கியுள்ள இந்தப் படத்தை மின்வெளி மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு நல்ல சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

 

9-ம் வகுப்பு மாணவியிடம் மனதைப் பரிகொடுத்த ஷாருக்!


பாலிவுட் பாதுஷா ஷாருக்கான் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கையில் ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் மனதைப் பறிகொடுத்தாராம்!.

இன்று பாலிவுட்டில் கிங் ஆக இருக்கும் ஷாருக் கான் துவக்கத்தில் தொலைக்காட்சித் தொடர்களில் தான் நடித்தார். கடந்த 1988-ம் ஆண்டு பாவ்ஜி என்ற சீரியலில் நடித்தார். அடுத்ததாக அவர் நடித்த சர்க்கஸ் என்ற தொடர் தான் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதையடுத்து தான் அவர் பெரிய திரைக்கு வந்தார். அதன் பிறகு நடந்தது நமக்கெல்லாம் நன்றாகத் தெரியுமே.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த ஷாருக் கான் ஒரு பள்ளியில் நாடகம் நடத்தச் சென்றார். அப்போது அந்தப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவியைப் பார்த்தும் பிடித்துவிட்டது. முதலில் நட்பாகப் பழகிய ஷாருக்கும் அந்த மாணவியும் பின்னர் காதலிக்கத் துவங்கினர்.

இந்த விஷயம் அந்த மாணவியின் வீட்டுக்குத் தெரிய அவர் பெற்றோர் தையா, தக்கா என்று குதித்தார்கள். பொறுத்துப் பார்த்த ஷாருக் கான் சில வருடங்கள் கழித்து அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது தெரிகிறதா அந்த மாணவி யார் என்று? அவர்தான் ஷாருக்கானின் மனைவி கௌரி தான்.

ஷாருக் ஒரு முஸ்லிம் என்பதால் தான் கௌரியின் பெற்றோர் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஷாருக், கௌரியின் காதல் மதங்களைத் தாண்டி வெற்றி பெற்றது.

தனது காதலையும், அது வெற்றி பெற்ற விதத்தையும் ஷாருக் கானே சொல்லி சிலாகித்துள்ளார்.

 

சரித்திரத்தை மீண்டும் தூசு தட்டும் சாமி... வருவாரா ஸ்ரீதேவிகா?


சிந்து சமவெளி படத்துக்குக் கிளம்பிய எதிர்ப்பலையில் கொஞ்சநாள் காணாமல் போயிருந்த சாமி… இதோ அடுத்த படத்துக்கு ஆயத்தமாகிறார்.

இந்த முறை புதிய கதை எதையும் படமாக்கவில்லை. மாறாக தான் ஏற்கெனவே பாதியில் நிறுத்தியிருந்த சரித்திரம் படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

ஆதி ஹீரோவாக நடித்துள்ள படம் சரித்திரம். ராஜ்கிரண் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். மிருகம் படத்தை முடித்த கையோடு இந்தப் படத்தை எடுத்தார் சாமி. ஆனால் சில காரணங்களால் இந்தப் படம் கைவிடப்பட, மைக்கேல் ராயப்பனுக்காக சிந்து சமவெளியை எடுத்தார்.

அந்தப் படத்தால் இவருக்கும் தயாரிப்பாளருக்கும் பைசா பிரயோசனமில்லாமல் போய்விட்டது. ஆனால் நிஜ பலன் ஹீரோயினாக நடித்த அமலா பாலுக்குதான். இந்தப் படம் பார்த்துதான் அவரை மைனாவுக்கு ஒப்பந்தம் செய்தார் பிரபு சாலமன் (அவரோ இந்தப் படத்தைப் பற்றி வெளியில் சொல்லவும் விரும்புவதில்லை).

சரித்திரம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஸ்ரீதேவிகா. இப்போது திருமணமாகி மும்பையில் செட்டிலாகிவிட்டார். ஆனாலும் எப்படியாவது இந்தப் படத்தின் மிச்ச காட்சியில் சிலவற்றிலும் நடித்துக் கொடுங்கள் என்று கேட்டுள்ளாராம் சாமி.

சாமியின் சரித்திரம் சர்ச்சைகள் இல்லாமல் உருவாகுமா?

 

வடிவேலு இல்ல... - மறுக்கும் சுந்தர் சி


அப்பாடா… ஒரு வழியா வந்துட்டார்யா வைகைப் புயல் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், ‘என் படத்தில் வடிவேலுவா…. இல்லவே இல்லை,’ என்று மறுப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் சுந்தர் சி.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வடிவேல் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். விஜயகாந்தை காய்ச்சி எடுத்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் அதிமுகவை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகிவிட்டார்.

அவரை யாரும் புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்யக் கூடாது என வாய்மொழி உத்தரவு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் வடிவேலுவோ நானாகத்தான் சினிமாவை ஒதுக்கி வைத்துள்ளேன் என்று கூறிவந்தார். எனவே வடிவேலு மீண்டும் நடிப்பாரா? என சினிமா ரசிகர்களின் மனதில் தொடர்ந்து கேள்வி எழுந்து வந்தது. வடிவேலு இல்லாத தமிழ் படங்கள் படு வறட்சியாகவே காணப்படுகின்றன.

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை வடிவேலு ஆரம்பித்துவிட்டார் என்றும் சுந்தர்.சி இயக்கும் படத்தில் வடிவேலு நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் பரவின.

ஆனால் இதனை மறுத்துள்ளார் சுந்தர் சி. இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு நடிப்பதாக வெளிவந்த செய்திகள் தவறானவை. எதுவுமே இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அனைத்துமே வதந்திதான்,” என்று கூறியுள்ளார்.

 

மாமனார், மாமியார் புடை சூழ வெளியே வந்த 8 மாத கர்ப்பிணி ஐஸ்வர்யா


8 மாத கர்ப்பிணியாக உள்ள ஐஸ்வர்யா ராய், தனது மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா பச்சன் சகிதம் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இரண்டு நிகழ்ச்சிகளிலும் அனைவரின் கவனமும் ஐஸ்வர்யா மீதே இருந்தது.

ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக உள்ளார். நீண்ட காலம் கழித்து அவர் கர்ப்பிணியாகியுள்ளதால் அவரது குடும்பத்தினர் கண்ணும் கருத்துமாக அவரைப் பார்த்துக் கொள்கின்றனர். அவருக்கு இரட்டைக் குழந்தை பிறக்கலாம் என்று கூறப்படுகிறது.

கர்ப்பம் தரித்த நாள் முதல் வெளி நிகழ்ச்சிகளுக்கு வராமல் வீட்டோடு இருந்து வந்தார் ஐஸ்வர்யா. இந்த நிலையில் தனது மாமனார், மாமியார் சகிதம் அவர் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

முதலில் சஞ்சய் தத் நடத்திய நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பின்னர் துர்கா பூஜையில் அவர் பங்கேற்றார்.

துர்கா பூஜையில் அவர் இளம் பிங்க் நிற சேலையில் அழகுற வந்திருந்தார். மேடிட்ட வயிற்றில் அவர் தாய்மை பொங்க மேலும் அழகுடன் காட்சி அளித்தார். இந்த சேலை கடந்த ஜனவரி மாதம் நடந்த ஸ்கிரீன் திரைப்பட விருது விழாவில் ஐஸ்வர்யாவின் மாமியார் ஜெயா பச்சன் அணிந்திருந்த சேலையாகும்.

நவம்பர் மாதத்தில் ஐஸ்வர்யாவுக்குக் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனராம். இதனால் பச்சன் குடும்பமே பரவசத்துடன் புதிய ஜூனியர்களைக் காண ஆவலோடு காத்திருக்கிறது.

 

'மணி'யின் மனம் கவர்ந்த மாதவன்!


இயக்குனர் மணிரத்னத்திற்கு உள்ள பெரிய பொழுதுபோக்கு கோல்ப் விளையாட்டுதான். ஆனால் அதை சினிமாத் துறையினருடன் விளையாட மாட்டார். அதற்கு விதிவிலக்காக ஒரு நடிகருடன் மட்டும் கோல்ப் விளையாடுகிறார்.

இயக்குனர் மணிரத்னத்திற்கு கோல்ப் விளையாடுவது பிடிக்கும். நேரம் கிடைக்கும்போது சென்னையில் உள்ள கோல்ப் கிளப்பிற்கு சென்றுவிடுவார். ஆனால் அவர் சினிமாத் துறையைச் சேர்ந்த எவருடனும் கோல்ப் விளையாட மாட்டார். காரணம் என்ன என்பது தெரியவில்லை.

அதேசமயம், ஆனால் ஒரே ஒரு ஹீரோ சென்னைக்கு வந்தால் மட்டும் அவருடன் சேர்ந்து கோல்ப் விளையாடுகிறார். அந்த ஹீரோ யார் என்று தெரியுமா? மணி ரத்னத்தால் பிரபலமான மாதவன் தான்.

மாதவன் சென்னைக்கு வரும்போதெல்லாம் மணிரத்னத்துடன் சேர்ந்து கோல்ப் விளையாடுவாராம்.

ஒருவேளை மற்றவர்களுக்கு கில்லிதண்டாதான் விளையாடத் தெரியும், கோல்ப் விளையாடத் தெரியாது என்று நினைத்து விட்டாரோ என்னவோ மணி...!
 

சைதை துரைசாமிக்கு ஆதரவாக களமிறங்கும் ரஜினி ரசிகர்கள்!


'ரசிகர்கள் அவரவர் விருப்பப்பட்ட கட்சிக்கு ஆதரவளிக்கலாம். ஆனால் அவர்கள் எங்கிருந்தாலும் தேவைப்படும்போது 'அழைத்துக் கொள்வேன்'!'

-ரசிகர்களின் அரசியல் விஷயத்தில்ரஜினியின் நிலைப்பாடு இதுதான்.

எனவே திமுக, அதிமுக என்ற கட்சிக் கரைகளைக் கடந்து, தங்களின் சூழலுக்கேற்ப ரஜினி ரசிகர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இந்த உள்ளாட்சித் தேர்தலில், சென்னை ரஜினி மன்றத்தின் முக்கிய பிரமுகரான சைதை ரவி, தனது ஆதரவை சென்னை மேயர் பதவிக்குப் போட்டியிடும் சைதை துரைசாமிக்கு தெரிவித்துள்ளார். சைதை ரவியுடன் உள்ள ஏராளமான ரசிகர்களும் துரைசாமிக்கே தங்கள் ஆதரவு என்றதோடு, களத்தில் இறங்கி வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தலைமை மன்றத்துக்கு முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெற்றுக் கொண்டுள்ளார் ரவி என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ரவி கூறுகையில், "அண்ணன் சைதை துரைசாமி அவர்களை குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளராக நாங்கள் பார்க்கவில்லை. அதையெல்லாம் தாண்டிய மரியாதைக்குரியவர் அவர். எங்கள் பகுதிக்கு நாங்கள் கேட்காமலே அவர் செய்து கொடுத்துள்ள வசதிகள் கொஞ்சமல்ல. அடிப்படை பிரச்சினை முதல் உயர்கல்வி வரை எந்த உதவி வேண்டுமானாலும் உடனடியாக நாங்கள் போய் நிற்பது சைதை துரைசாமியிடம்தான். அப்படிப்பட்ட மனிதர் சென்னை மேயரானால், இந்த நகருக்கே புதிய பொலிவு கிடைக்கும். மக்களின் மேயராக சைதையார் திகழ்வார்," என்றார்.

ரஜினியைச் சந்தித்து ஆசி பெற அனுமதி கோரியுள்ளார் சைதை துரைசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
 

விஜயதசமி ஸ்பெஷலாக வரும் 5 படங்கள்!


வாகை சூடவா, வெடி, முரண் என மூன்று படங்கள் கடந்த வாரத்தில் வெளியாகின. இவற்றில் தேறியது வாகை சூடவா மட்டுமே.

இதோ இந்த வாரம் 5 படங்கள் வருகின்றன, விஜயதசமி ஸ்பெஷலாக!

நந்தா - பூர்ணா நடிப்பில் உருவாகியுள்ள 'வேலூர் மாவட்டம்' இவற்றில் தனி கவனத்தைப் பெற்றுள்ளது. காரணம், இந்தப் படத்தை கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார். இன்னொன்று, பொதுவாக தமிழ் சினிமாவில் மதுரை, தூத்துக்குடி அல்லது தஞ்சை மாவட்டங்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றை பெருமளவில் பார்த்து ஆதரிப்பவர்கள் வேலூர், தர்மபுரி, சேலம் போன்ற வடமாவட்ட ரசிகர்கள்தான்.

இப்போது முதல்முறையாக வேலூர் மாவட்டத்தின் பெயரிலேயே ஒரு படம் வருவது இந்த ரசிகர்களுக்கு உற்சாகம் தந்துள்ளது. திரையில் இதுவரை பார்த்திராத வேலூர் மாவட்ட கலாச்சாரத்தை அல்லது ஊர்களையாவது பார்க்கலாம் அல்லவா!

சோனியா அகர்வால் - ஸ்ரீகாந்த் நடித்து, நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த சதுரங்கம் படமும் இந்த வாரம்தான் வெளியாகிறது.

இந்த வாரம் வரவிருக்கும் இன்னொரு சுவாரஸ்யமான படம் ராரா. உதயா மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் படம்.

வர்ணம் என்ற படமும் இந்த போட்டியில் குதித்துள்ளது. சாதீயக் கொடுமைகளை சாடும் படம் இது. இந்த ஆண்டு வெளியீடுகளில் முக்கிய இடம் பெறும் என நம்புகிறார்கள்.
 

தொட்டாச் சிணுங்கி' அனன்யா!


நடிகை அனன்யா ரொம்ப சென்சிடிவ் டைப்பாம். யாராவது சத்தமாக பேசினாலோ அல்லது திட்டினாலோ உடனே அழுது விடுவாராம்.

நாடோடிகள் புகழ் அனன்யா அமைதியான பொண்ணு என்று தானே உங்களுக்குத் தெரியும். அவர் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர் என்று உங்களுக்குத் தெரியுமா? நாடோடிகளை அடுத்து தற்போது ரிலீஸான எங்கேயும், எப்போதும் படம் அனன்யாவுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது. இதனால் அவர் குஷியாக உள்ளார்.

மலையாளத்தில் சசிகுமார் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். படங்களில் படு சுறுசுறுப்பாக, க்யூட்டாக தெரியும் அனன்யா, நிஜத்தில் தொட்டச் சிணுங்கியாம். யாராவது அதட்டுவது போலவோ அல்லது திட்டுவது போலவோ பேசினால், அவரால் தாங்கிக் கொள்ள முடியாதாம். உடனே அழுதுவிடுவாராம். அதுவும் ஓவென்று கதறி அழுவாராம்.

பொது இடமாக இருக்கிறதே இப்படி கதறி அழலாமா என்றெல்லாம் கூட பார்க்க மாட்டாராம்.

பச்சைக் குழந்தையை இனி யாரும் திட்டாதீங்கப்பா...!
 

நித்யா மேனன் என்ன தவறு செய்தார்?- ரீமா கல்லிங்கல் ஆதரவு


மலையாள நடிகைகள் நித்யா மேனன், ரீமா கல்லிங்கல் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தயாரிப்பாளரை சந்தித்துப் பேச மறுத்ததற்காக தடை விதிக்கப்பட்டுள்ள நித்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் ரீமா.

படப்பிடிப்புக்கு வராமல் வேறு நிகழ்ச்சிக்குப் போனதால் ரீமா மீதும் நடிகர் சங்கத்தில் புகார் தரப்பட்டுள்ளதால் அவருக்கும் தடை ஆபத்து நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்பம், 180 ஆகிய படங்களில் நடித்தவர் நித்யா மேனன். இவர் மூ்த்த தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க மறுத்ததாக கூறி தடை விதித்து விட்டனர். இந்த நிலையில் ரீமா கல்லிங்கல் இந்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகையான ரீமா கல்லிங்கல் தமிழில் யுவன் யுவதி படத்தில் நடித்துள்ளார்.

நித்யா மீதான தடை குறித்து ரீமா கூறுகையில், சுதந்திரமான ஜனநாயக நாட்டில் வசிக்கிறேன் என்று நம்புகிறேன். நடிகைகளுக்கு சில சொந்த விஷயங்கள் உள்ளன. யாரை எங்கே எப்படி சந்திக்க வேண்டும் என்பது நடிகைகளின் தனிப்பட்ட விருப்பம். அதைத்தான் நித்யாமேனன் செய்துள்ளார். இதற்கெல்லாம் போய் தடை விதிக்கலாமா என்று கேட்டுள்ளார்.

நித்யாவுக்கு ஆதரவாக ரீமா பேசியிருப்பது மலையாளத் தயாரிப்பாளர்களை மேலும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளதாம்.

சந்தித்துப் பேச மறுத்ததெற்கெல்லாம் தடையா, எந்தா சாரே இது...!
 

ஏ ஆர் முருகதாஸின் ஏழாம் அறிவு... தியேட்டர்கள் அறிவிப்பு


ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படம் என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது சூர்யா நடித்துள்ள ஏழாம் அறிவு.

முற்றிலும் புதிதான கதை, இதுவரை பார்த்திராத நாடுகளில் படப்பிடிப்பு என கூறப்பட்டு வருவதால், தீபாவளிப் படங்களில் ஏழாம் அறிவுக்கு தனி முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், தீபாவளிக்கு இன்னும் 22 நாட்கள் உள்ள நிலையில், இப்போதே படம் வெளியாகும் அரங்குகளின் பட்டியலை வெளியிட்டு அதிர வைத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை நகரினழ் பிரதான சினிமா அரங்குகளான சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி, அபிராமி, பிவிஆர், சங்கம், உதயம், ஏஜிஎஸ் போன்றவற்றில் இந்தப் படம் ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகிறது. இவை தவிர, சிங்கிள் ஸ்கிரீன்ஸ் எனப்படும் தனி அரங்குகளிலும் படம் வெளியாகிறது.

சூர்யா நடித்த படம் ஒன்று நகரில் இத்தனை அரங்குகளில் வெளியாவது இதுதான் முதல் முறை. இந்தப் படத்துடன், உதயநிதி ஹீரோவாக அறிமுகமாகும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் ட்ரெயிலரும் திரையிடப்படும் என உதயநிதி அறிவித்துள்ளார்.

வேலாயுதம், மயக்கம் என்ன, ஒஸ்தி போன்ற படங்களும் தீபாவளி ரேஸில் உள்ளது குறிப்பிடத்தக்கது.