ஹீரோ வில்லனாகிறார் ... வில்லன் ஹீரோவாகிறார்.. இது உறுமீன் 'கதை'!

சென்னை: ஜிகிர்தண்டா பட மிரட்டல் வில்லன் பாபி சிம்ஹா ஹீரோவாக நடித்து வரும் படம் உறுமீன். இப்படத்தில் மெட்ராஸ் பட புகழ் கலையரசன் வில்லனாக நடிக்கிறாராம்.

சூதுகவ்வும், நேரம், ஜிகிர்தண்டா உள்ளிட்ட படங்கள் மூலம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் பாபி சிம்ஹா. அதிலும் குறிப்பாக ஜிகிர்தண்டா படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருப்பார்.

ஹீரோ வில்லனாகிறார் ... வில்லன் ஹீரோவாகிறார்.. இது உறுமீன் 'கதை'!  

வில்லனாக மிரட்டிய பாபி இப்போது உறுமீன் படத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். பெருமாள் சாமி இயக்கும் இப்படத்தில், பாபியின் ஜோடியாக ரேஷ்மி மேனன் நடித்துள்ளார்.

உறுமீன் திரைப்படம் சிம்ஹாவுக்கு மட்டும் ஒரு திருப்புமுனையாக இல்லாமல், 'மெட்ராஸ்' பட புகழ் கலையரசனுக்கும் ஒரு திருப்புனையாக அமையப்போகிறது. மெட்ராஸ் படத்தில் சிறப்பான நடிப்பால் அதிகம் பாராட்டுகளைத் தட்டிச் சென்றவர் கலையரசன்.

இவர் இப்போது உறுமீன் திரைப்படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் டிரைய்லர் இம்மாத இறுதியிலும், படம் மே மாதத்திலும் ரிலீஸ் செய்யப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

சித்தார்த்துக்கும் எனக்கும் காதலோ, கத்தரிக்காயோ இல்லை: தீபா சன்னதி

பெங்களூர்: சித்தார்த்துக்கும், தனக்கும் இடையே காதல் கிடையாது என்றும், சித்தார்த்-சமந்தா பிரிய தான் காரணம் இல்லை என்றும் நடிகை தீபா சன்னதி தெரிவித்துள்ளார்.

சித்தார்த், சமந்தா காதல் முறிய நடிகை தீபா சன்னதியும் ஒரு காரணம் என்று செய்திகள் வெளியாகின. தீபா சித்தார்த்துடன் சேர்ந்து எனக்குள் ஒருவன் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தான் இந்த செய்திகள் வெளியாகின.

சித்து, சமந்தா பிரிய நான் காரணமா?: சிரிக்கிறார் தீபா சன்னதி  

இது குறித்து தீபா கூறுகையில்,

நான் பெங்களூரில் வசித்து வருவதால் இந்த செய்தி பற்றி சில நாட்களுக்கு முன்பு தான் தெரிய வந்தது. இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். இதெல்லாம் யாரோ இந்த செய்தியை பரபரப்பாக்க கற்பனையை சேர்த்து கூறியது. படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் சித்தார்த்தை தொடர்பு கொண்டதே இல்லை. எங்களுக்குள் காதல் எல்லாம் இல்லை.

படப்பிடிப்பு முடிந்த பிறகு படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தான் நாங்கள் சந்தித்தோம். இது என் முதல் தமிழ் படம் என்பதால் அவர் எனக்கு உதவினார். அவ்வளவு தான். அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. முன்பு எல்லாம் வதந்திகளை கேட்டு காயம் அடைந்தேன். ஆனால் தற்போது பழகிவிட்டது என்று கூறி சிரித்தார்.

முன்னதாக தீபாவின் பெயர் ஆர்யாவுடன் அடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஐ விமர்சனம்

Rating:
3.5/5
ஷங்கர்

நடிப்பு: விக்ரம், எமி ஜாக்ஸன், சந்தானம், ராம்குமார், உபேன் படேல், சுரேஷ் கோபி, ஓஜாஸ் ரஜனி

ஒளிப்பதிவு: பிசி ஸ்ரீராம்

இசை: ஏ ஆர் ரஹ்மான்

பாடல்கள்: கபிலன், கார்க்கி

தயாரிப்பு: ஆஸ்கார் பிலிம்ஸ்

இயக்கம்: ஷங்கர்

இரண்டரை ஆண்டுகாலம் இயக்குநர் ஷங்கர் பார்த்துப் பார்த்து செதுக்கிய படம் ஐ. அபார உழைப்பும் பணமும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம், எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறதா... பார்ப்போம்.

ஐ விமர்சனம்

வட சென்னையைச் சேர்ந்த லிங்கேசன் என்கிற லீ (விக்ரம்) ஒரு பாடி பில்டர். பிரபல மாடல் அழகியான எமி ஜாக்சனின் தீவிர ரசிகர். மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்ற கட்டழகனான லீயின் உதவி ஒரு கட்டத்தில் எமிக்கு தேவைப்படுகிறது. தன்னை படுக்கைக்கு அழைக்கும் சக மாடலான உபேன் பட்டேலிடமிருந்து தப்பிக்க, அவனுக்கு பதில் லீயை நடிக்க வைக்கிறார். சீனாவில் விளம்ப ஷுட். ஆரம்பத்தில் நடிக்க கூச்சப்படும் லீயை சகஜமாக்க, விளம்பர இயக்குநரின் ஆலோசனைப்படி காதலிப்பது போல நடிக்கிறார். இந்த விளம்பரப் படத்துக்காக வரும் மேக்கப் நிபுணரான திருநங்கை ஓஜாஸ் விக்ரமின் உடல் அழகைப் பார்த்து மோகம் கொள்கிறார். லீயை எமி உண்மையாக காதலிக்கவில்லை என்ற உண்மையைப் போட்டுக் கொடுக்கிறாcglnfர். உண்மை தெரிந்து மனம் நொந்தாலும், சமாதானப்படுத்திக் கொள்கிறான் லீ.

லீ - எமி நெருக்கத்தைப் பார்த்த உபேன் பட்டேல், லீயை காலி பண்ண ஆட்களை அனுப்புகிறான். அவர்களுடன் அபாரமாய் சண்டைப் போட்டு விரட்டியடிக்கும் லீ மீது தானாக காதல் வருகிறது எமிக்கு. இருவரும் புகழ்பெற்ற மாடலாக ஜொலிக்கும் தருணத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்து நிச்சயமும் செய்கிறார்கள். அப்போதுதான் லீ மெல்ல மெல்ல தன் உடல் கட்டை இழக்கிறான். முகமெல்லாம் விகாரமாகி, கூன் விழுந்து ஆளே படு கோரமாகிப் போகிறான். இது ஏன் ஏற்படுகிறது. யாரால் ஏற்படுகிறது என்பது மீதி.

முழுக்க முழுக்க காதல் கதை என்றாலும், அதை க்ரைம் - ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்குப் படமாகத் தந்திருக்கிறார் ஷங்கர்.

ஐ விமர்சனம்

சீனாவின் இயற்கை அழகுகளையும் அந்த ஹல்லேலுஜா மலைத் தொடர்களையும் பளிங்கு நதிகளையும் வெல்வெட் பூத்த பூமியையும் அலுப்பு சலிப்பு இல்லாமல் ரசிக்கும் அளவுக்கு படம்பிடித்த பிசி ஸ்ரீராமுக்கு பெரிய சல்யூட். பூக்களே சற்று ஓய்வெடுங்கள் பாடலில் எமியும் விக்ரமும் பறவைகள் போல பறந்து பறந்து காற்று வெளியில் இணைவதுபோல காட்சிப்படுத்தியிருப்பார் ஷங்கர். ரசனையான காட்சி.

விக்ரம்... இவரை வெறும் நடிகர் என்று சொல்லிவிட்டுக் கடப்பது ஒரு மாபெரும் கலைஞனை அவமதிப்பதாகிவிடும். நடிப்பதற்கென்றே அவதாரம் எடுத்து வந்தவர் மாதிரி மிரட்டியிருக்கிறார் மனிதர். சீனாவில் எமி முதல் முறை தன்னிடம் காதலைச் சொல்லும்போது, விக்ரம் காட்டும் ஒரு ரியாக்ஷன் ஒரு சோறு பதம்.

ஐ விமர்சனம்

இந்தப் படத்தில் ஒரு காட்சியில்தான் அவர் எலும்புக்கூடு மாதிரி மெலிந்த தோற்றத்தில் வரவேண்டும். ஆனால் அதற்காக இவர் ஆறுமாதம் மெனக்கெட்டு மெலிந்திருருக்கிறார் என்றால்... இவரை என்னவென்று சொல்வது?

முகமெல்லாம் கட்டிகளாக, தலை சீர்குலைந்து, கூன் விழுந்து... இத்தனை விஷயங்களையும் தத்ரூபமாக, இது மேக்கப்.. இது நடிப்பு என்றெல்லாம் யாரும் பிரித்துச் சொல்ல முடியாத அளவுக்கு இயல்பாக நடித்து அசத்தியிருக்கிறார் விக்ரம். இன்னொரு தேசிய விருதினை இவருக்குத் தராவிட்டால், அது அந்த விருதுக்கு கவுரவமில்லை!

எமி ஜாக்சன்.. சில காட்சிகளில் படு சாதாரணமாகத் தெரிகிறார். சீனா ஷூட்டிங் காட்சிகள் மற்றும் அந்த என்னோடு நீ இருந்தால் பாடல்களில் பேரழகியாகத் தெரிகிறார். உடைக்கு அநாவசிய செலவெல்லாம் வைக்கவில்லை. ஆனால் இந்தக் கதையில் அவரளவுக்கு வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியுமா என்பதும் சந்தேகம்தான்.

ஐ விமர்சனம்

சந்தானம் தனது டைமிங் வசனங்களில் கிச்சு கிச்சு மூட்டினாலும், அவர் இதில் முழு நீள காமெடியன் இல்லை. நாயகனின் தோழனாக வந்து மனதில் இடம்பிடிக்கிறார். பவர் ஸ்டாருக்கு எந்திரன் கெட்டப் போட்டு நடக்க விட்டு, தன் படத்தை தானே கிண்டலடித்திருக்கிறார் ஷங்கர்.

திருநங்கை வில்லியாக வரும் ஓஜாஸ் ரஜனி, தொழிலதிபர் ராம்குமார், மாடல் உபேன் பாட்டேல், அந்த பாடி பில்டர் பட்டினப்பாக்கம் ரவி மற்றும் சுரேஷ்கோபி அனைவருமே கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். வில்லன்களுக்கு விதவிதமாக தண்டனைகளை யோசிப்பதில், கருட புராணத்தையே மிஞ்சிவிடுகிறது ஷங்கரின் கற்பனை.

ஐ விமர்சனம்

படத்தில் விக்ரமுக்கு இணையான நாயகன் ஏ ஆர் ரஹ்மான். பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி புதிய பரிமாணம் காட்டியிருக்கிறார். மெரசலாயிட்டேன் பாடலின் இரண்டாவது இடையிசை ஒரு நிஜமான இசை விருந்து. என்னோடு நீ இருந்தால், பூக்களே சற்று ஓய்வெடுங்கள் பாடல்கள் முதல் முறை கேட்கும்போதே மனதில் ஒட்டிக் கொள்கின்றன. அய்ல அய்ல.. இந்த ஆண்டு முழுக்க இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் உதடுகளைப் பிரியாமலிருக்கும்.

அதேபோல பிசி ஸ்ரீராம். இந்த பூமியில் இத்தனை அழகான இடங்கள் இருக்கிறதா என கேட்க வைக்கிறது அவர் ஒளிப்பதிவு. சண்டைக் காட்சிகளை இத்தனை மிரட்டலாகப் படமாக்க தமிழ் சினிமாவில் வேறு ஆள் இல்லை.

அதே நேரம்.. வழக்கமான ஷங்கர் பட பார்முலாவிலிருந்து இம்மியும் விலகவில்லை இந்தப் படம். உடம்பு சரியில்லாமல், கூன் விழுந்த விக்ரம், நாயகியை மணவறையிலிருந்து தூக்கிக் கொண்டு பைப் வழியாக இறங்குவாரே.. அங்கு ஆரம்பிக்கிறது லாஜிக் மீறல். அது படம் முழுக்க தொடர்கிறது.

சண்டைக் காட்சிகளில் அதே லாஜிக் மீறல். நூறு பேரை ஒரு ஹீரோ ஓடிக் கொண்டே அடிப்பது. ஒவ்வொரு சண்டையிலும் வில்லன்கள் விக்ரமை அப்படிப் போட்டு அடிக்கிறார்கள். படத்தில் காட்டுவது மாதிரி ஒருவரைப் போட்டு அடித்தால், கூழாகி கொழகொழவென பரவிக் கிடப்பார். ஆனால் நம்ம ஹீரோவை மணல் மூட்டையைப் போட்டு மொத்துவது போல அடித்துக் கொண்டே இருக்கிறார்கள் வில்லன்கள். இரும்பு ராடுகளில் வெளுக்கிறார்கள். ஆனால் அவர் கடைசியில் அசால்டாக எழுந்து வந்து வில்லன்களை காலி பண்ணுகிறார். என்ன லாஜிக்கோ...

ஐ விமர்சனம்

முதல் பாதியில் இருக்கும் சுவாரஸ்யமும் இனிமையான காட்சியமைப்பும் இடைவேளைக்குப் பிறகு தொலைந்து போகிறது. அடுத்த காட்சி, அடுத்த திருப்பம் என்னவாக இருக்கும் என்பது எல்லோருக்குமே தெரிந்து போவதில், சுவாரஸ்யமில்லாமல் போகிறது.

அதேபோல விக்ரமை அந்த நிலைக்கு எப்படி கொண்டுவந்தோம் என வில்லன்கள் ரூம் போட்டு சொல்லும் காட்சியைப் பார்த்தால் ஏனோ எம்ஜிஆர் படம் நம்நாடு நினைவுக்கு வந்தது. அத்தனை பழைய காட்சி அது. திருநங்கையை ஏகத்துக்கும் கேலி செய்வதாக யாரும் சண்டைக்கு வராமல் இருக்க வேண்டும். ஒரு மாணவியை அத்தனை கேவலமான கண்ணோட்டத்துடன் சுரேஷ் கோபி பார்க்கும் காட்சி தேவையா?

ஐ விமர்சனம்

உண்மையிலேயே இந்தப் படம் மூன்று மணி பத்து நிமிடங்கள் ஓட வேண்டிய அவசியமே இல்லை. சரியாக 2.15 மணி நேரத்துக்குள் இந்தக் கதையைச் சுருக்கி இருக்க முடியும். படத்தில் இடம்பெறும் இரு பாடல்கள் முழுக்க முழுக்க விளம்பர ஜிங்கிள்கள் மாதிரிதான் காட்சி தருகின்றன. ஒரு பிரமாண்ட விளம்பரப் படத்தை எடுக்க இனி ஷங்கர் - பிசி ஸ்ரீராம் - ரஹ்மானை அணுகலாம் எனும் அளவுக்கு கிட்டத்தட்ட 10 மெகா பிராண்டுகளின் விளம்பரங்கள் படத்தில் இடம்பெறுவது இதுதான் முதல்முறையாக இருக்கும்!

இவ்வளவு எதிர்மறை அம்சங்கள் இருந்தாலும், படத்தை ஒரு முறை அலுப்பின்றிப் பார்க்க முடிகிறது. அதுதான் ஷங்கரின் மேஜிக்!

 

கிருமி மருத்துவப் படம் இல்லையாம்... சீட் நுனியில் உட்கார வைக்கும் காதல் கலந்த த்ரில்லர் படமாம்!

கிருமி மருத்துவப் படம் இல்லையாம்... சீட் நுனியில் உட்கார வைக்கும் காதல் கலந்த த்ரில்லர் படமாம்!  

ஆனால், இப்படத்தின் கதைக்களம் அது இல்லையாம். இளைஞர் ஒருவர் தனது வாழ்க்கையில் சந்திக்கும் மாற்றங்கள் தான் கதை. காதல் கலந்த த்ரில்லர் கதைக்களம். இன்றைய இளைஞர்களைப் பிரதிபலிப்பவனாக படத்தின் நாயகன் பாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளதாம்.

ஆஸ்திரேலியாவில் பல்வேறு குறும்படங்களை இயக்கி பாராட்டுக்களைப் பெற்றவர் அனு சரண். கிருமி அவரது முதல் படம்.

பி.சி.ஸ்ரீராமின் முன்னாள் உதவியாளர் வின்செண்ட் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கே இசையமைக்கிறார்.

இப்படத்தில் சார்லி, வனிதா, டேவிட் சாலமோன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் பின்னணி இசை கோர்ப்பு உள்ளிட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

அட என்னம்மா இப்படி சொல்லிட்டீங்களே... சூப்பர் படத்தால் நாயகிக்கும் நஷ்டமாம்...!

சென்னை: சூப்பரின் சமீபத்திய படத்திற்கு ஆரம்பம் முதலே பிரச்சினை தான். முதலில் சுட்டபழம் என்றார்கள், பின் நஷ்டம் எனப் போர்க்கொடி பிடித்தார்கள். படமும் ரிலீசாகி வெற்றி நடை போட்டுக் கொண்டு தான் இருக்கிறது, ஆனால் இப்பிரச்சினை முடிந்தபாடில்லை.

இந்நிலையில், மற்றொரு பிரச்சினை அரசல் புரசலாக உலா வந்து கொண்டிருக்கிறது. அதாவது இப்படத்தில் நடித்த யோகா நடிகைக்கும் கோடிக்கணக்கில் நஷ்டமாம். அது எப்படி, அவரும் படத்தில் முதலீடு செய்திருந்தாரா என உங்களுக்கு சந்தேகம் தோணலாம். ஆனால் உண்மை அது இல்லை.

அட என்னம்மா இப்படி சொல்லிட்டீங்களே... சூப்பர் படத்தால் நாயகிக்கும் நஷ்டமாம்...!

அக்கட தேசத்தில் பலத்த எதிர்பார்ப்புகளை உண்டாக்கி இருக்கும் ஹிஸ்டர் படங்களில் நடித்து வருகிறார் அம்மணி. அதற்கிடையே சூப்பர் நடிகரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதற்காக மற்ற இளம் நாயகர்களின் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் உதறித் தள்ளினார் நடிகை.

ஆனால், எதிர்பார்த்த படி சூப்பர் படத்தில் நடிகையின் கதாபாத்திரம் பேசப்படவில்லை. மாறாக குறைந்த காட்சிகளிலேயே வந்திருந்தாலும், ஆஹா ஓஹோ என பாராட்டுகளை அள்ளினார் வடக்கிலிருந்து வந்த நாயகி.

இந்த விமர்சனத்தால் ஏமாற்றமடைந்த நாயகி, இந்தப் படத்தை நம்பி மற்ற பட வாய்ப்புகளை கோட்டை விட்டு விட்டேனே என புலம்பி வருகிறாராம். இதனால் நடிகைக்கு கோடிக்கணக்கில் சம்பளம் நஷ்டமாம்.

நல்லவேளை புலம்புவதோடு விட்டாரே, சாகும் வரை உண்ணாவிரதம் என உட்காராமல் இருந்தால் சரி தான் !

 

மீண்டும் கல்லூரியில் படிக்கப் போகும் விஜய்

சென்னை: அட்லீ படத்தில் விஜய் கல்லூரி மாணவராக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

இளையதளபதி விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார். படத்தில் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா என்று இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். விஜய்யும், ஸ்ருதியும் ஒன்றாக சேர்ந்து டான்ஸ் ஆடுவதோடு மட்டுமல்லாமல் ஜோடியாக பாடவும் உள்ளனர். இருவருமே நல்ல பாடகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கல்லூரியில் படிக்கப் போகும் விஜய்

புலி படம் கோடை விடுமுறையையொட்டி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை முடித்த உடன் விஜய் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவரை நடிக்க சம்மதிக்க வைத்ததே நயன்தாரா தான் என்று கூறப்படுகிறது.

அட்லீ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் கல்லூரி மாணவராக நடிக்கிறாராம். முன்னதாக அவர் ஷங்கர் இயக்கத்தில் நடித்த நண்பன் படத்தில் கல்லூரி மாணவராக நடித்தார்.

அதன் பிறகு அவர் தற்போது தான் மீண்டும் கல்லூரி மாணவராக நடிக்க உள்ளார்.

 

பின்னிட்டாரு விக்ரம்... வரலாறு காணாத டெக்னிக்கல் மிரட்டல்.. ஷங்கரின் 'ஐ' பார்த்து மெர்சலான ரசிகர்கள்

சென்னை: வரலாறு காணாத டெக்னிக்கல் மிரட்டலாக ஐ படம் அமைந்துள்ளது. விக்ரம் நடிப்பில் பின்னி விட்டார். இந்த ரோலில் நடிக்க இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும். மிரட்டி விட்டார் என்று ஐ படம் பார்த்த ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் கூறி வருகிறார்கள்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ஐ. பி.சி.ஸ்ரீராம் மீண்டும் கேமரா பிடித்த படம், விக்ரமின் மிரட்டல் நடிப்பு, ஷங்கரின் இயக்கம் இன்னும் இன்னும் பல டெக்னிக்கல் சமாச்சாரங்கள்.. அர்னால்டே வந்து ஆடியோவை வெளியிட்டது என்று இப்படம் குறித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் படம் குறித்து ரசிகர்களிடையே ஹார்ட் பீட்டை தாறுமாறாக்கி விட்டிருந்தன.

இது போதாதென்று ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் ரசிகர்களை ஏற்கனவே மெர்சலாக்கியிருந்தது. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று ஐ படம் தியேட்டர்களைத் தொட்டது.. அதே வேகத்தில் ரசிகர்களின் மனதையும் எட்டிப் பிடித்து விட்டது.

பின்னிட்டாரு விக்ரம்... வரலாறு காணாத டெக்னிக்கல் மிரட்டல்.. ஷங்கரின் 'ஐ' பார்த்து மெர்சலான ரசிகர்கள்

இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் ஷோ.. அடுத்து 8 மணிக்கு ஷோ என்று படம் படு பிசியாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படம் பார்த்து விட்டு வந்த ரசிகர்களைப் பிடித்து நமது செய்தியாளர் ஐ படம் எப்படி என்று கேட்டபோது அவர்கள் சொன்னது..

படம் மொத்தம் 3 மணி நேரம் 10 நிமிடம் ஓடுகிறது. படம் செம நீளம்தான். ஆனால் நேரம் போனதே தெரியவில்லை. போரடிக்கவில்லை. மாறாக மிரண்டு போய் வெளியே வந்துள்ளோம்.

ஷங்கர் டெக்னிக்கலாக கொடுத்துள்ள படங்களில் இதுதான் பெஸ்ட். சும்மா மிரட்டி விட்டார் பாஸ். பிரமாதம்.

பின்னிட்டாரு விக்ரம்... வரலாறு காணாத டெக்னிக்கல் மிரட்டல்.. ஷங்கரின் 'ஐ' பார்த்து மெர்சலான ரசிகர்கள்

விக்ரம் பற்றி சொல்லவே வேண்டாம். மிரள வைத்து விட்டார். என்ன நடிப்பு இது.. அபாரம். இப்படி நடிக்க இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும். விக்ரம் வாழ்க்கையில் மிகப் பெரிய படம் இது.

படத்தின் லொக்கேஷன் பிரமிக்க வைக்கிறது. பெரும்பாலும் சீனாவில்தான் எடுத்துள்ளனர். இப்படி ஒரு லொக்கேஷனை தமிழ் சினிமாவில் பார்த்ததே இல்லை. அதிலும் ஷங்கர் தனது முத்திரையைப் பதித்து விட்டார். அசாதாரணமான இடங்கள் அத்தனையும்.

பின்னிட்டாரு விக்ரம்... வரலாறு காணாத டெக்னிக்கல் மிரட்டல்.. ஷங்கரின் 'ஐ' பார்த்து மெர்சலான ரசிகர்கள்

படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயண்ட் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்தான் பாடல்களில் பிரமிக்க வைத்து விட்டார். பின்னணியிலும் பிரமிக்க வைத்திருக்கிறார். பாட்டின் வரிகளுக்கு இடை இடையே வரும் இசையில் புதுப் புயலாக மாறி அசத்தியிருக்கிறார். ரஹ்மானின் பெஸ்ட் மியூசிக் இது.

பி.சி.ஸ்ரீராம் கேமராவில் புகுந்து விளையாடியிருக்கிறார். காட்சிகளை அவர் பிடித்துள்ள விதம் அபாரம்.

சண்டைக் காட்சிகளில் புதுமை என்று சொல்ல முடியவில்லை. டிப்பிக்கல் ஷங்கர் டைப் சண்டைகளாக உள்ளன.

படம் பெஸ்ட்டாக, சிறப்பாக இருக்கிறது.. போரடிக்காமல் விறுவிறுப்பாக இருக்கிறது.

 

‘ஆப்போனன்டா ஆளே இல்ல.. பிப்ரவரியில் சோலோ புள்ள".. இது தனுஷ்!

சென்னை: அனேகன் மற்றும் ஷமிதாப் என பிப்ரவரி மாதம் தனுஷின் இரண்டு படங்கள் ரிலீசாக உள்ளன. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் , அமைரா தஸ்தூர் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘அனேகன்'. ஹாரிஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் இணையம் , ஐடியூன், டிவி என ஹிட்டடித்துள்ளது. அதிலும் குறிப்பாக ‘டங்காமாரி' பாடல் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் வரும் பிப்ரவரி 13ம் தேதி ரிலீசாக உள்ளது.

‘ஆப்போனன்டா ஆளே இல்ல.. பிப்ரவரியில் சோலோ புள்ள

இதேபோல் பால்கி இயக்கத்தில் அமிதாப், தனுஷ் , அக்‌ஷரா ஹாசன், நடிப்பில் உருவாகி வரும் ‘ ஷமிதாப்' படமும் பிப்ரவரியில் ரிலீசாகிறது.

'அனேகன்' படத்தை அடுத்த அடுத்த லெவல் கொண்ட காதல் என ஒரு வீடியோ கேம் போல் அமைத்துள்ளாராம் கே.வி.ஆனந்த். அதே போல் 'ஷமிதாப்' இரு சினிமா கலைஞர்களுக்குள் உள்ள நட்பு மற்றும் ஈகோ பிரச்னையை சொல்ல போகிறது.

இந்த இருபடங்கள் தவிர பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாரி திரைப்படமும் இந்த வருட இறுதிக்குள் ரிலீஸாகிவிடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது

எனவே, 2015-ஆம் ஆண்டிற்கான பல விருதுகளையும் தட்டிச் செல்லப்போகும் நடிகர் தனுஷ் தான் என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அனேகன் படத்தில் வரும் டங்காமாரி பாடலில், ‘ஆப்போனன்டா ஆளே இல்ல சோலோ ஆகிட்டேன்' என வரிகள் இடம் பெற்றுள்ளன. இப்பாடல்வரிகள் தனுஷுக்காகவே எழுதப்பட்டது என நிரூபிக்கும் வகையில் எந்த படங்களுடனும் போட்டி இல்லாமல் ஷமிதாப், அனேகன் ஆகிய படங்கள் சோலோவாக ரிலீஸ் செய்யப்படுகின்றன.

 

சித்து-சமந்தா காதல் முறிவுக்கு பின்னால் கன்னட நடிகை?

சென்னை: சித்தார்த்தும், சமந்தாவும் பிரிய கன்னட நடிகையான தீபா சன்னதி காரணம் என்று கூறப்படுகிறது.

சித்தார்த்தும், சமந்தாவும் தங்கள் காதலை ஒப்புக்கொள்ளாவிட்டாலும் கடந்த 2 ஆண்டுகளாக ஜோடி போட்டு பல இடங்களுக்கு சென்றனர். ஜாடை மாடையாக காதல் பற்றி பேசிய அவர்கள் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அவர்களின் காதல் முறிந்து ஆளுக்கொரு பக்கம் சென்றுவிட்டனர்.

சித்து-சமந்தா காதல் முறிவுக்கு பின்னால் கன்னட நடிகை?

சமந்தா அண்மை காலமாக படங்களிலும், நிஜத்திலும் ஓவர் கவர்ச்சி காட்டுவது சித்தார்த்துக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் அவர்களின் காதல் முறிந்துவிட்டது என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர்கள் பிரிந்ததற்கு வேறு ஒரு காரணம் கூறப்படுகிறது.

சித்தார்த் நடித்து வரும் எனக்குள் ஒருவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் தீபா சன்னதி நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்கையில் சித்தார்த், தீபா இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகிவிட்டதாம். அதனால் தான் சித்தார்த்-சமந்தாவுடனான காதல் முறிந்தது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சித்தார்த்-சமந்தா பிரிந்தபோதிலும் ஒருவரைப் பற்றி மற்றொருவர் குறை கூறாமல் தங்களின் வேலையை கவனித்து வருகிறார்கள்.

 

உலகெங்கும் இன்று முதல் ஷங்கரின் ஐ.. 2500 அரங்குகளில் வெளியாகிறது!

ஷங்கர் இயக்கத்தில் பெரும் செலவில் உருவாகியிருக்கும் ஐ திரைப்படம் இன்று முதல் உலகெங்கும் வெளியாகிறது.

விக்ரம் -எமி ஜாக்ஸன் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் உருவாகி வந்த படம் ஐ. வெளியீட்டுத் தேதிகள் பலமுறை தள்ளிப் போயின இந்தப் படத்துக்கு.

உலகெங்கும் இன்று முதல் ஷங்கரின் ஐ.. 2500 அரங்குகளில் வெளியாகிறது!

ஒரு வழியாக பொங்கலுக்கு படத்தை வெளியிடுகின்றனர். இந்தப் படத்துக்கு தணிக்கைத் துறையில் யு ஏ சான்றுதான் வழங்கினர்.

யு சான்று பெற மிகவும் போராடியும் கிடைக்காததால், யு ஏ உடனேயே படத்தை வெளியிடுகின்றனர்.

தமிழகத்தில் 400 அரங்குகளுக்கும் மேல் இந்தப் படம் வெளியாகிறது. உலகெங்கும் இந்தப் படத்துக்கு 2500 அரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. சீனாவில் மட்டும் சில தினங்கள் கழித்து படத்தை வெளியிடப் போகிறார்களாம். படம் ரூ 1000 கோடி வசூலைக் குவிக்கும் என தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையில் பெரும்பாலான அரங்குகளில் ஐ படம்தான் திரையிடப்பட்டுள்ளது.

மூன்று மணி 9 நிமிடங்கள் ஓடக் கூடிய ஐ படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

என்னை அறிந்தால்... கவுதம் மேனனுக்காக ஒன்று, அஜீத் திருப்திக்காக இன்னொன்று!

அஜீத்தின் என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வெளியாகிவிடும் என்று இரண்டு மாதங்களாகக் கூறி வந்தனர். விளம்பரங்களும் வெளியிட்டனர்.

ஆனால் திடீரென்று படத்தை ஒரு மாதம் தள்ளிப் போட்டனர். காரணம் கேட்டபோது, ஆளுக்கொன்றாகச் சொன்னார்கள்.

என்னை அறிந்தால்... கவுதம் மேனனுக்காக ஒன்று, அஜீத் திருப்திக்காக இன்னொன்று!

அதில் ஒன்று இயக்குநர் கவுதம் மேனன் வைத்துள்ள க்ளைமாக்ஸில் அஜீத்துக்கு அவ்வளவாக உடன்பாடில்லை என்றும், வேறு சில காட்சிகளையும் ரீஷூட் பண்ணப் போவதாகவும், அதனால்தான் இப்படி தள்ளிப் போனது என்றார்கள்.

இப்போது அது கிட்டத்தட்ட உண்மை என்பதுபோல, வேறொரு செய்தி வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு இரண்டு கிளைமாக்ஸ் வைத்திருப்பதாக செய்தி பரவி வருகிறது. கவுதம் மேனன் ஏற்கெனவே வைத்த க்ளைமாக்ஸ் ஒன்றும், மாற்றுக் கிளைமாக்ஸாக இன்னொன்றும் வைத்துள்ளார்களாம்,

முதல் நாளில் மக்கள் விருப்பத்தைப் பொருத்து க்ளைமாக்ஸ் மாறும் என்கிறார்கள்.

 

புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட விழா

புதியவர்களுக்கும், புதிய முயற்சிகளுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய தமிழ் திரைப்பட விழா தொடங்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக குறும்படங்களுக்கென போட்டி வைக்கப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் படங்களில் இடம்பெறும் கலைஞர்களுக்கு, புதிய படங்களில் வாய்ப்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளது ஆஸ்திரேலிய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.

புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட விழா

இலங்கையில் பிறந்து ஆஸ்திரேலியாவில் செட்டிலான ஈழன் இளங்கோ என்ற திரைப்பட இயக்குநரின் புதிய முயற்சி இது.

ஈழன் இளங்கோ தமிழில் இனியவளே காத்திருப்பேன் என்ற முழு நீளப் படத்தை சில ஆண்டுகளுக்கு முன் தயாரித்து இயக்கினார். முழுக்க முழுக்க ஆஸ்திரேலிய தமிழ் கலைஞர்கள் நடித்த படம் அது. ஆஸ்திரேலியாவில் வெளியான இந்தப் படம் சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்றது. ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் வாழ்த்துகளைப் பெற்றது இனியவளே காத்திருப்பேன்.

இது தவிர, தவிப்பு, தொடரும் ஆகிய குறும்படங்களை ஈழன் இளங்கோ இயக்கியுள்ளார். மொழிப் பிறழ்வு (Misinterpretation) என்ற உணர்ச்சிப் பூர்வமான குறும்படத்தையும் இவர் தந்துள்ளார். உலகின் மிகப் பெரிய குறும்படப் போட்டியான TROPFEST 2013-க்காக உருவாக்கப்பட்ட படம் இது.

TROPFEST 2014 போட்டிக்காக இவர் உருவாக்கிய இன்னொரு குறும் படம் The Silent Scream. ஆஸ்திரேலிய முகாம்களில் வாடும் ஈழத் தமிழ் அகதிகள் குறித்த படம்.

வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசுவதால் ஏற்படும் ஆபத்தைக் குறிக்கும் வகையில் ஈழன் இளங்கோ உருவாக்கப்பட்ட ஆங்கிலக் குறும்படம் Anita's Point of View.

அடுத்து பாரி என்ற முழு நீள தமிழ்ப் படத்தை இயக்குகிறார் ஈழன் இளங்கோ. இந்தப் படத்துக்கு வர்ஷன் இசையமைத்திருந்தார்.இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சு நாட்டு நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

அன்னை படப்பகம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் நடிக்க, பணியாற்ற விருப்பமுள்ளவர்கள், ஆஸ்திரேலிய தமிழ்ப் பட விழாவுக்கு தங்கள் குறும்படங்களை அனுப்பலாம். விவரங்களுக்கு www.atfainc.com இணையதளத்தைப் பார்க்கவும். அனுப்ப கடைசி தேதி பிப்ரவரி 1, 2015.

 

அனைத்து சேனல்களிலும் கலக்கப்போகும் 'பொங்கல்' பாடல்!

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சேனல்களிலும் ஒரு படத்தின் பொங்கல் பற்றிய பாடல் ஒளிபரப்பாக இருக்கிறது. அது, 'உள்ளம் உள்ளவரை' படத்தில் இடம் பெற்றுள்ள பாட்டு.

பொங்கலுக்கு பல பாடல்கள் ஒளிபரப்பாகும். ஆனால் பொங்கல் பற்றிய பாடல் இருக்காது. அக்குறையைப் போக்கும் விதமாகவும் படத்தை விளம்பரப்படுத்தும் ப்ரோமோ போலவும் இப்பாடல் உருவாகியுள்ளது.

இந்துஜா பிலிம்ஸ் தயாரிக்கும் 'உள்ளம் உள்ளவரை' படத்தை விஷ்ணுஹாசன் இயக்குகிறார்.

அனைத்து சேனல்களிலும் கலக்கப்போகும் 'பொங்கல்' பாடல்!

'புதுநிலவு' என்கிற படத்தில் ஜெயராமை நாயகனாக்கி இயக்கித்

தயாரித்தவர்தான் இந்த விஷ்ணுஹாசன். சற்று இடைவெளிக்குப்பின் களத்துக்கு வந்திருக்கிறார். காலத்துக்கேற்ற பரபரப்பு, விறுவிறுப்பு, பதைபதைப்பு, கலகலப்பு கலந்த திகில் படமாக உருவாக்கி வருகிறாராம் உள்ளம் உள்ள வரை படத்தை.

கதாநாயகனாக ஆந்திர நாயகன் சங்கர் நடிக்கிறார். மீனு கார்த்திகா, ப்ரீத்தி, அங்கனாராய், காம்னாசிங் என நான்குபேர் நாயகிகள். கஞ்சா கருப்பு, மதன்பாப், மீரா

நான்கு வில்லன்கள். ஒருவர் கராத்தே சிவவாஞ்சி. இன்னொருவர் மும்பை வில்லன் நியாமத்கான். இவர்களுடன் தயாரிப்பாளர் நாமக்கல் கே.சண்முகமும் ஒரு வில்லனாக அறிமுகமாகிறார். மற்றொருவர் அஸ்வின்குமார், பழம் பெரும் நடிகர் காக்கா ராதாகிருஷ்ணனின் பேரனான அஸ்வின் குமார், இப்படத்தின்

மூலம் ஒரு வில்லனாக அறிமுகம் ஆகிறார்.

கிராமத்திலிருந்து சென்னை வரும் இளைஞன் எதிர்பாராத வகையில் ஒரு கொலைப்பழியில் சிக்கிக் கொள்கிறான். செய்யாத குற்றத்துக்கு பழிசுமக்கும் அவன் அதிலிருந்து மீண்டானா என்பதுதான் கதை.

கொலை செய்யப்பட்டவள் பேயாக மாறி எப்படி பழிவாங்குகிறாள் என்பது இன்னொரு பகுதி கதை.

இயக்குநர் விஷ்ணுஹாசன் படம் பற்றிக் கூறும் போது, "சற்று இடைவெளிக்குப் பின் இரண்டாவது படத்தை இயக்கி வருகிறேன். இப்போது முன்பு மாதிரி இல்லை. திரையுலக சூழல் மாறியிருக்கிறது இதை உணர்ந்துதான் காலத்துக்கேற்ற படமாக இதை உருவாக்கி வருகிறேன். இது சிக்கனத்தில் டிஜிட்டல் யுகமாக இருந்தாலும்

செலவைப் பற்றிக்கவலைப்படாமல் பிலிமில் எடுத்துள்ளோம்,'' என்றார்.

பொங்கல் பாடல் பற்றிக் கூறும் போது, "திகில் படம் என்பதால் படத்தில் இரண்டே பாடல்கள்தான். ஒன்று பாரில் பாடும்பாடல் இன்னொன்று பொங்கலின் பெருமையைப் பாடும் பாடல். பொங்கல் பற்றிய பாடல் வந்து நீண்ட நாட்களாகி விட்டன. இந்தப் பாடல் அந்தக் குறையைப் போக்கும் படி இருக்கும். சினேகன்தான் எழுதியுள்ளார். விஜய் ஏசுதாஸ், ஸ்வேதா மோகன் பாடியுள்ளனர்.

சதிஷ் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். 'சர்க்கர பொங்கல் .. கன்னிப் பொங்கல் .. இது காணும் பொங்கல்.. காதல் பொங்கல்' என்கிற இந்தப் பாடல் வரும் பொங்கலுக்கு அனைத்து டிவி சேனல்களிலும் ஒளிபரப்பாகி கலக்கப் போகிறது," என்றார்.