இதுவரை சைடு ரோல்களில் தலைகாட்டி வந்த இமான் அண்ணாச்சி, அதுவேற இது வேற என்ற படத்தில் மெயின் காமெடியனாக மாறியுள்ளார்.
களிகை ஜி ஜெயசீலன் வழங்க, ஜெனி பவர்புல் மீடியா படநிறுவனம் சார்பாக பெல்சி ஜெயசீலன் தயாரிக்கும் படம் இது.
இந்த படத்தில் வர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சானியாதாரா நடிக்கிறார். இமான் அண்ணாச்சி, கஞ்சாகருப்பு, சிங்கமுத்து, ஷகீலா ஆகியோர் காமெடி கூட்டணி அமைத்துள்ளனர் இந்தப் படத்தில். இமானுக்கு படம் முழுக்க வருவது போன்ற மெயின் காமெடியன் வேடம்.
ரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்ய, தாஜ்நூர் இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் திலகராஜனிடம் கேட்டபோது, "இந்த சென்னை மாநகரத்திற்கு வருபவர்கள் டாக்டராகவேண்டும், வக்கீலாக, மந்திரியாக, தொழிலதிபராக, நடிகராக வேண்டும் என்ற கனவுகளுடன் தான் வருவார்கள் ஆனால் நம்ம ஹீரோ குருசாமி வந்த காரணமே வேறு!
அப்படி வந்தவனுக்கு காதல் வருகிறது. காதல் கைகூடி வருகிற நேரத்தில் செய்யாத ஒரு கொலைக் குற்றவாளியாகிறான். அந்தப் பழி அவனை எப்படியெல்லாம் கஷ்டப் படுத்துகிறது அதிலிருந்து அவன் மீண்டானா? - இதுதான் கதை.
இதை காமெடியாக கதை சொல்லி இருக்கிறோம். தியேட்டரில் சிரிப்பு அலை அலையாக கேட்கும் அந்தளவுக்கு காமெடியாக காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளன," என்றார்.