மூடநம்பிக்கைக்கு எதிராக முண்டா தட்டும் முண்டாசுப்பட்டி!

தென் மாவட்டங்களில் இப்போதும் சில பழக்கங்கள் உண்டு.. வீட்டுக்கு கதவு வைத்தால் சாமி குத்தம்... படுக்க கட்டில் பயன்படுத்தினால் குற்றம்... இப்படி சில பழக்கங்கள்.

அதுபோல.. போட்டோ எடுத்துக் கொண்டால் மரணம் நேரும் என்றும் சில ஊர்களில் நம்பிக்கை உண்டு.

அந்த நம்பிக்கையை மையமாக வைத்து ஒரு படம் எடுத்துள்ளனர். அதுதான் முண்டாசுப்பட்டி.

மூடநம்பிக்கைக்கு எதிராக முண்டா தட்டும் முண்டாசுப்பட்டி!

இந்தப் படத்தில் விஷ்ணு நாயகனாவும் நந்திதா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். ராம் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது.

படம் குறித்து இயக்குநர் ராம் கூறுகையில், "முண்டாசுப்பட்டி என்னும் கற்பனையான கிராமத்தில் 1947-ம் ஆண்டு ஒரு சம்பவம் நடக்கிறது. அந்த சம்பவத்தில் இருந்து அக்கிராம மக்கள் யாரும் புகைப்படம் எடுப்பதில்லை. அப்படி புகைப்படம் எடுத்தால் இறந்து விடுவோம் என்ற மூட நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

புகைப்படக் கலைஞனாக இருக்கும் விஷ்ணு, தன் உதவியாளர் காளியுடன் அந்த கிராமத்துக்குச் சென்று, அங்குள்ள ஒருவரை புகைப்படம் எடுக்கிறான். அந்த புகைப்படத்தால் ஏற்படும் குழப்பங்கள் காரணமாக, நாயகனை அந்த கிராமத்திலேயே மக்கள் சிறை வைக்கிறார்கள். அதற்குப்பின் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொண்டு நாயகன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே முண்டாசுப்பட்டி படத்தின் கதை.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் கோவைக்கு அருகில் மற்றும் சந்தியமங்கலம் பகுதிகளில் எடுத்தோம்.

இப்படத்தின் கதை 1980களில் நடப்பதால் அவ்வூரில் உள்ள வீடுகளை அதற்கு ஏற்றார்போல் மாற்றினோம். இப்படம் மூட நம்பிக்கையை சாடுகிற படமாக இருக்காது. மூட நம்பிக்கையால் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக சொல்லும்.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் ஜூன் மாதம் 13-ம் தேதி வெளியாகும்," என்றார்.

இந்தப் படமும் ஒரு குறும்படத்திலிருந்துதான் உருவாகியுள்ளது. நாளைய இயக்குநர்கள் போட்டிக்காக தான் எடுத்த 9 நிமிட படத்தைத்தான், இரண்டரை மணி நேரப் படமாக மாற்றியுள்ளார் ராம். இதற்கு முன் யாரிடமும் இவர் உதவியாளராகப் பணியாற்றியதில்லையாம்!

 

அரையாண்டில் செஞ்சுரி அடிக்கும் தமிழ் சினிமா!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழில் வெளியான சினிமாக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த மே 30-ம் தேதிக்குள் தமிழில் வெளியான, வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 80. ஜூன் மாத இறுதிக்குள் இது 100-ஐத் தொடவிருக்கிறது.

கோடம்பாக்கத்தில் இது புதிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.

அரையாண்டில் செஞ்சுரி அடிக்கும் தமிழ் சினிமா!

இன்றைய தேதிக்கு சினிமா நன்றாக ஒடுகிறதோ இல்லையோ.. படமெடுக்க வரும் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை தாறு மாறாக உயர்ந்து வருகிறது. லாபம் கிடைக்காவிட்டாலும், சினிமாவுக்கே உரிய கவர்ச்சி, பலரையும் தயாரிப்பாளராக்குகிறது.

அப்படி படம் தயாரிக்க வந்துள்ள திடீர் தயாரிப்பாளர்களால் இன்று 350 படங்கள் தயாரிப்பில் உள்ளன.

வாரத்துக்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து படங்களாவது வெளியாகின்றன. கோச்சடையான் மாதிரி பெரிய படம் வரும்போது மட்டும் வாரத்துக்கு ஒன்றாக மாறிவிடுகிறது இந்த எண்ணிக்கை.

வரும் மே 30ம் தேதி, அதாவது நாளை மட்டுமே 5 புதிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.

தவிர ஜூன் மாதம் மட்டும் 15 முதல் 18 புதிய படங்கள் ரிலீசுக்குக் காத்திருக்கின்றன.

ஆக அரையாண்டுக்குள் செஞ்சுரி அடித்து சாதனைப் படைக்கவிருக்கிறது தமிழ் சினிமா.

இவற்றில் எத்தனை வெற்றிப் படங்கள் என்று மட்டும் கேட்டுடாதீங்க!

 

சென்னை தூர்தர்ஷனில் முதன் முறையாக மெகா தொடர் 'வாழ்வே தாயம்'!

சென்னை: தொலைக்காட்சி தொடங்கப்பட்டு சுமார் நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை மெகா தொடர் எதையும் தூர்தர்ஷன் ஒளிபரப்பியதில்லை.

பெரும்பாலும் 13 வாரத் தொடர், அதுவும் வார விடுமுறை நாட்களில் மட்டுமே ஒலிபரப்பப்பட்டு வந்திருக்கிறது.

சென்னை தூர்தர்ஷனில் முதன் முறையாக மெகா தொடர் 'வாழ்வே தாயம்'!

இப்போது முதல் முறையாக "வாழ்வே தாயம்" என்ற மெகா தொடரை சென்னை தொலைக்காட்சி தயாரித்து வழங்குகிறது.

ஜூன் 2 ஆம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இந்தத் தொடர் ஒளிபரப்பாகிறது.

சென்னை தூர்தர்ஷனில் முதன் முறையாக மெகா தொடர் 'வாழ்வே தாயம்'!

இது ஒரு நகைச்சுவைத் தொடர். இதில் பாண்டு, மதன்பாப், நித்யா, காத்தாடி ராமமூர்த்தி, ஷோபனா, சத்யஜித், கிரீஸ், நிஷா, சித்ரா, கீர்த்தி சுந்தர், கார்த்திக், பாபி ஆகியோர் நடிக்கிறார்கள்.

காதல் மதியின் பாடல் வரிகளுக்கு ஜான்பீட்டர் இசையமைக்கிறார்.

இந்தத் தொடரை எழுதி இயக்குபவர் ரதீஸ். இவர் முன்னாள் செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவியின் சகோதரர். ரதீஸ் ஏற்கெனவே பல தொடர்களை சென்னைத் தொலைக்காட்சிக்காக எழுதி இயக்கி இருக்கிறார். அத்தனை தொடர்களுமே விருதுகளைப் பெற்றிருக்கிறது.

அகில இந்திய அளவில் தூர்தர்ஷனில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக இவரது தொடர்கள் தேசிய விருது பெற்றுருக்கிறது. இவர் விரைவில் பிரபல நட்சத்திரங்களை வைத்து திரைப்படம் ஒன்றையும் இயக்கப் போகிறாராம்.

 

சட்டைக் காலரைப் பிடித்து பிரகாஷ் ராஜும், விமான பயணியும் சண்டை.. டெல்லியில்!

டெல்லி: டெல்லியிலிருந்து சென்னை திரும்புவதற்காக விமான நிலையம் வந்த நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், சக பயணி ஒருவருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டு விட்டது. இந்த மோதல் கைகலப்பாகி இருவரும் ஒருவரை ஒருவர் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உள்ளே புகுந்து இருவரையும் விலக்கி விட்டு அமைதிப்படுத்தியதால் மோதல் தவிர்க்கப்பட்டது.

படப்பிடிப்புக்காக விமானம் மூலம் டெல்லி வந்தார் பிரகாஷ் ராஜ். படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை திரும்புவதற்காக விமான நிலையம் வந்திருந்தார். ஏர் இந்தியா நிறுவன கவுண்டரில் பயணிகளோடு பயணியாக வரிசையில் நின்றிருந்தார்.

சட்டைக் காலரைப் பிடித்து பிரகாஷ் ராஜும், விமான பயணியும் சண்டை.. டெல்லியில்!

அப்போது அவருக்குப் பின்னால் இருந்த ஒரு பயணி, பிரகாஷ் ராஜ் மீது விழுந்துள்ளார். இதில் பிரகாஷ் கீழே விழப் பார்த்தார். சுதாரித்து சமாளித்து நின்ற அவர் கோபத்துடன் அவரிடம் சரியாக நிற்க முடியாதா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பயணி ஏதோ சொல்ல கோபமாகிப் போன பிரகாஷ் ராஜ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது அந்த பயணி பிரகாஷ் ராஜிடம் கடுமையாகப் பேசியுள்ளார். பதிலுக்கு பிரகாஷ் ராஜும் சத்தம் போட்டுள்ளார். இது ஒரு கட்டத்தில் கடுமையான சண்டையாக மாறியது. பிரகாஷ் ராஜ் கோபத்தில் அந்த பயணியின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துள்ளார். அவரும் பிரகாஷ் சட்டைக் காலரைப் பிடிக்க அங்கு ரசாபாசமான சூழல் ஏற்பட்டது.

இருவரும் அடித்துக் கொள்ளும் நிலை ஏற்படவே அங்கிருந்தவர்கள் இருவரையும் கஷ்டப்பட்டு விலக்கி விட்டு அமைதிப்படுத்தினர். இந்த திடீர் சண்டையால் அங்கு சலசலப்பு ஏற்பட்டு விட்டது.

ஏன் இந்த சண்டை தீவிரமானது என்பது தெரியவில்லை.!

 

கார் விபத்தில் சிக்கிய தொழிலதிபருக்கு உதவிய மிஸ்டர் பீன்... மீட்புக்குழுவினர் பாராட்டு

கார் விபத்தில் சிக்கிய தொழிலதிபருக்கு உதவிய மிஸ்டர் பீன்... மீட்புக்குழுவினர் பாராட்டு

குழந்தைகளை சிரிக்கவும், அதேசமயத்தில் சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை கதாபாத்திரம் தான் மிஸ்டர் பீன். கார்ட்டூன் மற்றும் தொலைக்காட்சி தொடரில் இக்கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ரோவன் அட்கின்சன்(வயது 59).

இந்நிலையில், நேற்று நிஜத்தில் விபத்தில் சிக்கிய ஒருவரை காப்பாற்றியுள்ளார் அட்கின்சன். இதனால், நேற்றைய ஊடகச் செய்திகளில் மிஸ்டர் பீனின் மனிதாபிமான உதவி தான் பெருமளவில் இடம்பெற்றதாக அந்நாட்டு செய்திகள் கூறுகின்றன.

மீட்பு....

நேற்று இத்தாலியில் தனது காரில் பயணம் செய்து கொண்இருந்த அட்கின்சன், சாலை ஓரத்தில் ஒரு கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி இருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக தனது காரை விட்டு இறங்கிய அட்கின்சன் விபத்து நடந்த காரினுள் சிக்கியவர்களை மீட்க உதவி செய்தார்.

தகவல்...

மேலும், இந்த விபத்துக் குறித்து இந்தாலிய போலீசாருக்கும் மீட்புப்படையினர்களுக்கு போன் மூலம் தகவலளித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

மனிதாபிமானம்...

அதனைத் தொடர்ந்து காயமடைந்தவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில், விபத்தில் சிக்கியது அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலதிபர் என தெரிய வந்தது. மிஸ்டர் பீன் அவர்களின் மனிதாபமானத்தை மீட்புக்குழுவினர்கள் பாராட்டினார்கள்.

இதே போன்ற விபத்து...

விபத்தில் சிக்கிய தொழிலதிபர் ஓட்டி வந்தது மெக்லர்ன் எப் 1 ஸ்போர்ட்ஸ் வகைகாராகும். இதே போல் ஒரு காரில் செல்லும் போதுதான், கடந்த 2011ம் ஆண்டு நடிகர் அட்கின்சனும் விபத்தில் சிக்கிக் கொண்டார் என்பது குறிப்பிட தக்கது.

 

திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கு தடை கேட்டு முஸ்லிம் அமைப்பு வழக்கு!

சென்னை: திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம் அமைப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது.

திருமணம் என்னும் நிக்காஹ் என்ற தலைப்பும், அது எதைப் பற்றிய கதை என்ற தகவலும் வெளியானதிலிருந்தே, அந்தப் படத்துக்கு ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆட்சேபணை தெரிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இப்போது அது நடந்தேவிட்டது. திருமணம் என்னும் நிக்கா படத்துக்கு எதிராக தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத் என்ற அமைப்பின் துணைத் தலைவர் அலிகான், சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:

திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கு தடை கேட்டு முஸ்லிம் அமைப்பு வழக்கு!

நடிகர் ஜெய், நடிகை நஸ்ரியா நடித்துள்ள திருமணம் என்னும் நிக்காஹ் படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.

இந்த படம் நாளை (30-ந் தேதி) வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷியா முஸ்லிம் சமுதாயத்தின் மதக் கொள்கை தவறாகவும் அவதூறாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளிவந்தால், மத மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஏற்கனவே தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் வேலாயுதம் என்ற படத்தில் மன உணர்வுகளை புணப்படுத்தும் விதமாக காட்சிகளை எடுத்திருந்தார். தற்போது திருமணம் என்னும் நிக்காஹ் படத்திலும் முஸ்லிம் சமுதாயத்தை விமர்சனம் செய்துள்ளார்.

எனவே ரவிச்சந்திரன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் கமிஷனரிடம் கடந்த 20-ந் தேதி புகார் செய்தோம். இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

எனவே திருமணம் என்னும் நிக்காஹ் படத்தை 30-ந் தேதி வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவிச்சந்திரன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடவேண்டும்.

-இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை போலீஸ் கமிஷனர், சென்சார் வாரியத்தின் மண்டல அதிகாரி, படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

 

லிங்காவுக்கு அடுத்து ஷங்கர் படம்... ரஜினி முடிவு!

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தற்போது லிங்கா படம் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி, அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், இயக்குநர் ஷங்கர் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லிங்கா படத்தின் படப்பிடிப்பு மைசூரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

லிங்காவுக்கு அடுத்து ஷங்கர் படம்... ரஜினி முடிவு!

நான்கு நாயகிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா மற்றும் லாரன் இர்வின் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் ரஜினி ஜோடிகளாக நடிக்கின்றனர். நயன்தாரா ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.

இந்தப் படம் கடந்த மே 2-ம் தேதி மைசூரில் தொடங்கியது. தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்து நடித்து வருகிறார் ரஜினி. யாருக்கும் அனுமதி கிடைக்காத மைசூர் அரண்மனையில் ரஜினியின் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் தொடங்குகிறது. அங்கு மீதிப்படத்தை முடித்துவிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை திரும்பும் ரஜினி, ஷங்கருடன் கதை விவாதத்தில் ஈடுபடப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஷங்கர் தனது ஐ படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். ஒரு பாடல் காட்சி மட்டும்தான் பாக்கியாம். ஜூன் இறுதி அல்லது ஜூலையில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். படத்தை வெளியிட்ட கையோடு, சில தினங்கள் ஓய்வெடுத்த பிறகு, ரஜினியின் படத்துக்காக களமிறங்கப் போகிறாராம் ஷங்கர்.

முன்பெல்லாம் மூன்றாண்டுகளுக்கொரு படம் என்ற கொள்கை வைத்திருந்த சூப்பர் ஸ்டார், இந்த ஆண்டே மூன்று படங்களில் நடிப்பது, ரசிகர்களுக்கு தாங்க முடியாத மகிழ்ச்சிதானே!


 

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளின் சம்பளம் ஜாஸ்தியாயிருச்சாமே?

சென்னை: சேட்டிலைட் சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளுக்கு சேனல்கள் வழங்கும் சம்பளம் என்னவோ குறைவுதான்.

ஆனால் சினிமா ஆடியோ ரிலீஸ், பொதுநிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வாங்கும் சம்பளமோ மிக மிக அதிகம்.

நட்சத்திர டிவி சேனலின் காபி நிகழ்ச்சி தொகுப்பாளினிதான் இன்றைய தேதிக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குதவதற்கு அதிக சம்பளம் வாங்குகிறவரவராம். அவர் ஒரு நிகழ்ச்சிக்கு 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை வாங்குகிறாராம்.

அடுத்த இடத்தில் பாடல் ரியாலிட்டி ஷோ தொகுப்பாளினி இருக்கிறார். இவர் 35 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார். நட்சத்திர சேனலின் ரம்யமான தொகுப்பாளினி 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வாங்குகிறார்.

சூர்ய டிவியின் அழகு தொகுப்பாளினியின் சம்பளமும் இருமடங்காகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்ற தொகுப்பாளினிகளின் சம்பளம் 5 ஆயிரத்தில் தொடங்கி 20 ஆயிரம் வரை. ஆண் தொகுப்பாளர்களுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரைதான்.

இந்த சம்பளம் சினிமா நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான். மற்ற கமர்ஷியல் நிகழ்ச்சிகள் என்றால் இன்னும் கூடுதலாக இருக்கும். காரணம் சினிமா நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும். மற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகாது.

வெளியூர் நிகழ்ச்சிக்கென்றால் சம்பளம் அப்படியே இரண்டு மடங்காகிவிடும். முதல் வகுப்பு கட்டணம், தங்குவதற்கு நட்சத்திர ஓட்டல் இதெல்லாம் தனியாக கொடுத்துவிட வேண்டுமாம்.

மாதிரி உடைகள் அணிய வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும். அதற்குரிய உடைகளை கொடுத்துவிட வேண்டும், அவர்களே அணிந்து வந்தால் அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டும்.

உடன் வரும் உதவியாளர் மற்றும் மேக்அப்மென் சம்பளம் ஆகியவற்றையும் கொடுக்க வேண்டும். ஒரு மாதம், அல்லது ஒரு வாரத்துக்கு முன்பே புக் செய்து 50 சதவிகித சம்பளத்தை அட்வான்சாக கொடுத்து விடவேண்டுமாம். எந்த இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகளும் உண்டு என்கின்றனர் சின்னத்திரை வட்டாரங்களில்.