சென்னை: தமிழ் சினிமாவிலும் சரி, சேனல்களிலும் சரி "பேய் டிரெண்ட்" மிகவும் பரபரப்பாக வளர்ந்து வருகின்றது. அதற்கு முக்கிய காரணம் குழந்தைகள் கூட பேய் படங்கள் என்றால் விரும்பி பார்ப்பதுதான். அந்த வகையில் பேய் ரசிகர்களை குறிவைத்து விரைவில் வெளியாக உள்ளது புதிய பேய் படமான "டெய்சி".
முதலில் காஞ்சனா, அரண்மனை போன்ற படங்களில் பெரிய பேய்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது சிறு குழந்தைகளை வைத்து பேய் படங்கள் வெளியாக உள்ளன.
அந்த வரிசையில் முதலாவதாக "பேபி" என்ற படம் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து குழந்தைப் பேயை மையமாக வைத்து "டெய்சி" என்ற பெயரில் புதுப்படம் ஒன்று வெளியாகவுள்ளது.
ஜூனா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் என்.ஷண்முகசுந்தரம், கே.முகமது யாசின் தயாரிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கி வருகிறார். இதில் தீபக் பரமேஷ், ஜாக்லீன் பிரகாஷ், குணாளன் மோகன், மோர்ணா அனிதா ரெட்டி மற்றும் மைம் கோபி நடித்துள்ளனர்.
உண்மையான நிகழ்வுகளை மையமாக வைத்து சென்டிமென்ட் கலந்த திகில் படமாக இதனை உருவாக்கியுள்ளாராம் இயக்குனர். டெய்சி என்ற எட்டு வயது குழந்தையின் பாசத்தை எடுத்துக் கூறும் இக்கதை சமீபத்திய திகில், பேய் படங்களிலிருந்து பெரிதும் வித்தியாசமாய் உருவாக்கி இருக்கிறார்களாம்.
இப்படம் பற்றி "ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின் வாழ்க்கை என்னும் சுவரை அலங்கரிக்கும் ஓவியங்கள். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தங்களது பெற்றோரின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் உலகிற்கு வருகின்றனர் என்றக் கூற்றை உறுதி படுத்தும் கதை இது. டெய்சி அன்புக்காக ஏங்கி அலை பாயும் ஒரு உக்கிரமான எட்டு வயது சிறுமியின் ஆவியை பற்றிய கதை.
நிஜ வாழ்க்கையில் நான் பார்த்து அறிந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையே டெய்சி. இன்றைய சிங்கிள் பேரண்டிங் குடும்பங்ளுக்கு தேவையான கருத்தைக் கொண்ட கதை என்பதால் முழுக்க முழுக்க சென்டிமெண்ட் கலந்து உருவாக்கியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார் இயக்குனர்.