எனக்கு எல்லாமே என் மனைவிதான்! - விஜய் ஆன்டனி

எனக்கு எல்லாமே என் மனைவிதான். அவர்தான் என் வெற்றிக்குக் காரணம் என்றார் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆன்டனி.

முன்னணி இசையமைப்பாளரான விஜய் ஆன்டனி, ‘நான்' படத்தில் நாயகனாக நடித்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் வந்தன.

ஆனாலும் தன் சொந்தத் தயாரிப்பிலேயே அடுத்து நடிக்கிறார் விஜய் ஆன்டனி. படத்துக்கு தலைப்பு சலீம்.

எனக்கு எல்லாமே என் மனைவிதான்! - விஜய் ஆன்டனி

இதில் அவருக்கு ஜோடியாக அக்ஷா பர்தஷ்னி நடிக்கிறார். என்.வி.நிர்மல் இயக்குகிறார். இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் சினிமாஸில் நடைபெற்றது.

இயக்குனர்கள் பாரதிராஜா, பாலா, பார்த்திபன், ஜெயம் ராஜா, நடிகர் ஷாம் உள்பட பலரும் விழாவுக்கு வந்திருந்தனர். படத்தின் ஆடியோ சிடியை கேயார் முன்னிலையில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட, இயக்குனர் பாலா பெற்றுக்கொண்டார்.

இசை வெளியீடு முடிந்ததும், விஜய் ஆன்டனி பேசுகையில், "சலீம் படத்தை ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியிடவிருக்கிறோம். என்னுடைய மனைவிதான் எனக்கு எல்லாமே.

என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் என்னுடைய மனைவிதான் இருக்கிறார். இந்தப் படத்தின் கதை ரொம்பப் பிடித்திருந்தது. என் மனைவிதான் கதையைத் தேர்வு செய்தார்", என்றார்.

 

பொது இடத்தில் புகை பிடித்தார்... புகைப்பட ஆதாரத்துடன் நடிகர் சக்தி கபூர் மீது வழக்குப் பதிவு

ஜெய்ப்பூர்: பொது இடத்தில் புகை பிடித்ததற்காக பாலிவுட் நடிகர் சக்தி கபூர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான சக்தி கபூர் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சங்கானர் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரைப் புகைப்படம் எடுத்தனர்.

பொது இடத்தில் புகை பிடித்தார்... புகைப்பட ஆதாரத்துடன் நடிகர் சக்தி கபூர் மீது வழக்குப் பதிவு

ஊடகங்களில் வந்த அந்த புகைப்படத்தில் சக்தி கபூர் புகைப் பிடித்தபடி போஸ் கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து பொது இடத்தில் புகைப்பிடித்ததாக சக்தி கபூர் மீது வழக்கறிஞர் நேம் சிங் என்பவர் பெருநகர தலைமை நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

தனது புகாருக்கு சாட்சியமாக ஊடகங்களில் வெளியான சக்தி கபூரின் புகைப்பிடிக்கும் புகைப்படத்தை சுட்டிக் காட்டியிருந்தார் நேம்சிங். இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி கிரிஷ் குமார் ஓஜா, விசாரணையை 6-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ஆனால், இவ்விவகாரம் தொடர்பாக விமான நிலைய நிர்வாகம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

கோச்சடையானுக்கு கேளிக்கை வரி வசூல்.. உயர்நீதிமன்றம் கண்டனம்.. நீதிமன்ற அவதூறு வழக்கு!

சென்னை: கோச்சடையான் படத்துக்கு நீதிமன்ற உத்தரவையும் மீறி மக்களிடம் கேளிக்கை வரி வசூலித்தது நீதிமன்ற அவமதிப்பாகும். இதில் நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழக அரசின் செயல் கண்டனத்துக்குரியது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த வக்கீல் முத்தையா உயர்நீதிமன்றத்தில் இன்று ‘கோச்சடையான்' படத்துக்கு கேளிக்கை வரி வசூல் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

கோச்சடையானுக்கு கேளிக்கை வரி வசூல்.. உயர்நீதிமன்றம் கண்டனம்.. நீதிமன்ற அவதூறு வழக்கு!

அவர் தாக்கல் செய்த மனுவில், "கோச்சடையான் படத்துக்கு வணிக வரித்துறை கேளிக்கை வரி விலக்கு அளித்து கடந்த மே 12-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தேன்.

அப்போது நீதிமன்றம் கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்தது சரிதான் என்றும் இந்த படத்தை பார்க்க வரும் பொதுமக்களிடம் இருந்து கேளிக்கை வரியை தியேட்டர் உரிமையாளர்கள் வசூலிக்க கூடாது என்றும் கடந்த மே 22-ல் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் தமிழகம் முழுவதும் கோச்சடையான் படத்தை திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் பொதுமக்களிடம் இருந்து கேளிக்கை வரி வசூலித்துள்ளனர்.

சில தியேட்டர் உரிமையாளர்கள் நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தை விட கூடுதல் கட்டணமும் வசூலித்திருக்கிறார்கள்.

இது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகும். கூடுதல் கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வில்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார், நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது, "கோச்சடையான் படத்துக்கு பொது மக்களிடம் இருந்து கேளிக்கை வரி வசூலிக்க கூடாது என்று இந்த நீதிமன்றம் உத்தரவிட்டும் கேளிக்கை வரி வசூலித்த தியேட்டர் உரிமையாளர்கள் மீது தமிழக வணிகவரி துறை முதன்மை செயலாளர் மற்றும் கமிஷனர் ஆகியோர் நடவடிக்கை எடுக்காதது கண்டனத்துக்குரியது.

இந்த மனுவுக்கு சரியான பதில் மனுவை வணிக வரிதுறை முதன்மை செயலாளரும், கமிஷனரும் ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்," என்று கூறினர்.

 

இஸ்லாம் மதத்துக்கு மாறுவேனா?- விஜய் ஆன்டனி பதில்

சென்னை: நான் இஸ்லாம் மதத்துக்கு மாறப் போவதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை என்று விஜய் ஆன்டனி கூறினார்.

கோடம்பாக்கத்தில் பிரபலங்கள் தொடர்ந்து இஸ்லாம் மதத்துக்கு மாறி வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் ஆன்டனியும் மாறப் போவதாக தகவல்கள் வெளியாகின. விஜய் ஆன்டனி மனைவி இஸ்லாமியர் என்பதும், விஜய் ஆன்டனி இப்போது நடிக்கும் படத்தின் தலைப்பு சலீம் என்று இருப்பதும் பலவிதமான யூகங்கள் வெளியாகக் காரணமானது.

இஸ்லாம் மதத்துக்கு மாறுவேனா?- விஜய் ஆன்டனி பதில்

இந்த நிலையில் சலீம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து விஜய் ஆன்டனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில், "நான்' படத்தில் சலீம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்த கதாபாத்திரத்தின் பெயரைத்தான் இந்த படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறோம்.

இந்தத் தலைப்பு இஸ்லாம் மதம் சம்பந்தப்பட்டதாக இருப்பது நான் விரும்பியது அல்ல. எல்லாம்தானாக அமைந்ததுதான். தற்பொழுது சினிமா உலகைச் சேர்ந்த பலர் இஸ்லாம் மதத்துக்கு மாறி வருகின்றனர். அவர்களைப்போல் நானும் இஸ்லாம் மதத்துக்கு மாறப்போகிறேன் என்று சொல்வதெல்லாம் உண்மையில்லை.

எனக்கு ஜாதி, மத பேதம் கிடையாது. எனக்கு பிடித்த பாடல் என்னவென்று கேட்டால் இளையராஜாவின் ‘ஜனனி ஜனனி' பாடல்தான் என்று சொல்வேன்," என்றார்.

 

அழியும் சினிமா.. காப்பாற்ற எந்த வழியையும் கண்டுபிடிக்கவில்லையே!- பார்த்திபன்

சென்னை: சினிமாவை அழிவிலிருந்து காப்பாற்ற எந்த வழியும் கண்டுபிக்கவில்லையே என நடிகர் - இயக்குநர் பார்த்திபன் ஆதங்கப்பட்டார்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகான நடித்துள்ள ‘சலீம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பார்த்திபன் பேசியதிலிருந்து...

அழியும் சினிமா.. காப்பாற்ற எந்த வழியையும் கண்டுபிடிக்கவில்லையே!- பார்த்திபன்

"அமெரிக்காவில் திருடர்களை கண்டுபிடிப்பதற்காக ஒரு மெஷினை கண்டுபிடித்து வைத்தார்கள். அந்த மெஷின் மூலம் ஒரு 10 ஆயிரம் பேரைப் பிடித்தார்கள்.

அதேபோல் ஜப்பானில் கொண்டுபோய் அந்த மெஷினை வைத்தார்கள். அங்கு அது 8 ஆயிரம் பேரை பிடித்துக் கொடுத்தது. ரஷ்யாவில் கொண்டுபோய் அந்த மெஷினை வைத்தார்கள். அங்கு 1000 பேரை பிடித்துக் கொடுத்தது.

கடைசியாக இந்தியாவில் கொண்டுவந்து அந்த மெஷினை வைத்தார்கள். இங்கு அந்த மெஷினையே திருடிக் கொண்டு போய்விட்டார்கள்.

அதுதான் இங்கு சினிமாவிலும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் கஷ்டப்பட்டு ஒரு படத்தை எடுக்கிறோம். அதைத் திருட்டு விசிடி போட்டு சினிமாவை காலி பண்ணுகிறார்கள்.

சினிமாவை அழிப்பதற்குண்டான ஏகப்பட்ட வழிகளை இங்கே உள்ளவர்கள் செய்துகொண்டிருக்கிறார்களே தவிர, சினிமாவை காப்பாற்ற யாரும் எந்த வழியையும் கண்டுபிடிப்பதில்லை. இதுக்கெல்லாம் ஒரு தீர்வு காணப்படுமா என்று தெரியவில்லை," என்றார்.

 

லிங்காவில் முதல் முறையாக நவீன அதிவேக காமிரா!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தில் முதல் முறையாக அதிவேக காமிராவான பாந்தம் ப்ளக்ஸ் 4கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய திரைப்பமொன்றில் இத்தகைய கேமிரா பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.

லிங்காவில் முதல் முறையாக நவீன அதிவேக காமிரா!

இந்த காமிராவை ஸ்டீரியோவிஷன் நிறுவனம் லிங்காவுக்கு வழங்கியுள்ளது.

ரஜினி நடித்த ஸ்டன்ட் காட்சி ஒன்றை இந்தக் கேமராவைக் கொண்டு படமாக்கியிள்ளனர். ஹாலிவுட்டைச் சேர்ந்த ஸ்டன்ட் இயக்குநர் லீ விட்டேகர் அமைத்த ஒரு பெரிய சண்டைக்காட்சியை பாந்தம் ப்ளக்ஸ் கேமிராவில் படமாக்கினார் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு.

இத்தகவலை ஸ்டீரியோயோவிஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தற்போது லிங்கா படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருகிறது. ஹைதராபாதில் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நசக்கவிருக்கிறது.

 

ஜாகையை மும்பைக்கு மாற்றுகிறேனா?: முருகதாஸ் விளக்கம்

மும்பை: பாலிவுட்டிலும் கவனம் செலுத்தும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது ஜாகையை மும்பைக்கு மாற்றமாட்டாராம்.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யை வைத்து கத்தி படத்தை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் துப்பாக்கி படத்தை இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். அந்த படம் நாளை ரிலீஸாகிறது. இதனால் கத்தி படப்பிடிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டு முருகதாஸ் மும்பையில் தங்கி ரிலீஸ் வேலைகளை கவனித்து வருகிறார்.

ஜாகையை மும்பைக்கு மாற்றுகிறேனா?: முருகதாஸ் விளக்கம்

இப்படி பாலிவுட், கோலிவுட் என்று போகிறாரே மனிதர் பிரபுதேவாவை போன்று மும்பையில் செட்டிலாகிவிடுவாரோ என்ற சந்தேகம் எழுந்தது. இதை அவரிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,

தமிழ் படங்கள் எனக்கு புகழும், பணமும் கொடுத்தன. எனக்கு மேலும் பல இந்தி படங்கள் எடுக்க ஆசை. இந்தி கற்க விரும்புகிறேன். ஆனால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவனம் செலுத்துவேன். நான் மும்பைக்கு வந்து செல்வேனே தவிர இங்கு செட்டிலாகிவிட வேண்டும் என்று நினைக்கவில்லை என்றார்.

 

மூச்சுத் திணறல்: தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகை மனோரமா!

சென்னை: மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மனோரமாவுக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகை மனோரமா மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை மனோரமாவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் முழங்கால் அறுவைச் சிகிச்சை நடந்தது.

மூச்சுத் திணறல்: தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகை மனோரமா!

பின்னர் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றிருந்தபோது, குளியல் அறையில் தவறி விழுந்தார். அப்போது அவருடைய தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.

ஆனால் இந்த சம்பவத்துக்குப் பிறகு அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், கடந்த மாதம் 26ந் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மனோரமா உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் இல்லை என்றும், இன்னும் இரு தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இனி என் படங்களில் நடிகர் நடிகைகள் சிரமப்படுத்த மாட்டேன் - ஜெயம் ராஜா

இனி என் படங்களில் நடிகர் நடிகைகளை அதிக சிரமப்படுத்தமாட்டேன், என்றார் இயக்குநர் ஜெயம் ராஜா.

இயக்குனர் ஜெயம் ராஜா முதல் முறையாக நடித்திருக்கும் படம் என்ன சத்தம் இந்த நேரம்.

இனி என் படங்களில் நடிகர் நடிகைகள் சிரமப்படுத்த மாட்டேன் - ஜெயம் ராஜா

இந்தப் படத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த, ஒரே மாதிரி முகத் தோற்றம் கொண்ட 4 பெண் குழந்தைகள் நடித்திருக்கின்றனர். இந்த குழந்தைகளின் அப்பாவாக ஜெயம் ராஜாவும், அம்மாவாக காதல் மன்னன் புகழ் மானுவும் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் குரு ரமேஷ்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது.

ஜெயம் ராஜா பேசுகையில், "என் தந்தை திரைத்துறையில் நீண்ட வருடங்களாக இருப்பவர்.

நான் விரும்பியிருந்தால் எப்போதோ இயக்குநராகியிருப்பேன். ஆனால் எனக்கு அதில் ஆர்வமில்லை. ஆனால் இப்போது இந்தப் படத்தில் நான் நடிக்கக் காரணம், இந்த நான்கு தெய்வங்கள்... குழந்தைகள்தான். இவர்களுக்காகவே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இயக்குனராக பல படங்களை இயக்கியிருந்தாலும் நடிப்புக்கு நான் புதுசுதான். எனவே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஜெயம் ரவி சொல்லுவான், 'எங்களையெல்லாம் என்ன பாடு படுத்தினே... இப்ப தெரியுதா?' என்று. இனிமேல் நான் இயக்கும் படங்களில் நடிகர், நடிகைகளுக்கு அதிகம் சிரமம் கொடுக்கக் கூடாதுன்னு புரிஞ்சிக்கிட்டேன்," என்றார்.