8/12/2011 5:21:26 PM
பிரபுதேவாவை மும்பையில் ரகசியமாக சந்தித்தார் நயன்தாரா. திருமணத்தை எப்போது, எங்கே நடத்துவது என்பது பற்றி இருவரும் பேசி முடிவு எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. பிரபுதேவா, நயன்தாரா காதலிக்கின்றனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் முதல் மனைவி ரமலத்திடம் விவாகரத்து பெற்றார் பிரபுதேவா. அதன் தொடர்ச்சியாக நயன்தாரா கடந்த சில நாட்களுக்கு முன் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார். தற்போது பிரபுதேவா 'ரவுடி ரத்தோர்' என்ற இந்தி படத்தை இயக்குகிறார். அதற்கான ஷூட்டிங் மும்பையில் நடக்கிறது.
மதம் மாறிய நயன்தாரா கேரளாவில் உள்ள தனது வீட்டுக்கு சென்று பெற்றோரை சந்தித்தார். பின்னர் மும்பை புறப்பட்டு சென்றார். பிரபு தேவாவை சந்தித்த அவர், மதம் மாறியது குறித்து தெரிவித்ததுடன், திருமண தேதி பற்றியும் பேசியதாக தெரிகிறது. திருமணத்தை ஆடம்பரமில்லாமல் மிக எளிமையாக நடத்த இருவரும் முடிவு செய்துள்ளனர். சென்னையை தவிர்த்துவிட்டு, மும்பையிலேயே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக விமான நிலையத்தில் நயன்தாராவை சந்தித்த ஒரு நிருபர், 'பிரபுதேவாவுடன் திருமணம் எப்போது?' என்று கேட்டிருக்கிறார். அதற்கு கோபமாக பதில் அளித்தார். 'நான் எல்லாவற்றையும் அடக்கமாகவே செய்ய விரும்புகிறேன். என்னைப் பற்றிய எந்த விஷயத்தையும் என்னுடன் இருப்பவர்களை தவிர வேறு யாரிடமும் பேச விரும்பவில்லை' என்று கூறிவிட்டு சட்டென கிளம்பிச் சென்று விட்டாராம்.