நடிகைகளுக்கு கவர்ச்சிதான் கைகொடுக்கும் என்று சுனிதா வர்மா கூறினார். மேலும் அவர் கூறியதாவது: தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறேன். தெலுங்கில் பெரும்பாலும் கமர்சியல் படங்கள் தயாராவதால் கவர்ச்சி தவிர்க்க முடியாதது. மலையாளத்தில் கதையம்சமுள்ள படத்துக்கு திறமைதான் முக்கியம். அது இருந்தால்தான் மலையாளத்தில் ஜெயிக்க முடியும். தமிழில் ஜெயிக்க இந்த இரண்டும் முக்கியம். அதை சரியாக புரிந்து கொள்ளாததால்தான் தமிழில் உரிய இடத்தை என்னால் பிடிக்க முடியவில்லை. கவர்ச்சிதான் கைகொடுக்கும் என்பது இப்போது புரிந்திருக்கிறது.
டிஜிட்டலில் சிவாஜியின் கர்ணன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சாவித்ரி, தேவிகா, அசோகன் உட்பட பலர் நடித்த பிரமாண்டமான படம், 'கர்ணன்'. பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் 1964-ம் ஆண்டு வெளியான இந்த புராணப் படம், இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரீ ரிலிஸ் ஆகிறது. இந்தப் படத்தை வெளியிடும் திவ்யா பிலிம்ஸ் சாந்தி சொக்கலிங்கத்திடம் கேட்டபோது கூறியதாவது: மகாபாரத கேரக்டரான 'கர்ணனை' இந்த தலைமுறையினரும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் பல லட்சம் செலவு செய்து டிஜிட்டலுக்கு மாற்றியுள்ளோம். படத்தின் ஒவ்வொரு காட்சியும் இன்றைக்குப் பார்த்தாலும் அவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது. இதன் டிரைலர் வரும் 21ம் தேதி வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தெலுங்கு நடிகருடன் பாமா காதலா?
தமிழில், 'எல்லாம் அவன் செயல்' படத்தில் நடித்தவர் மலையாள நடிகை பாமா. இப்போது 'சேவற்கொடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் 'மஞ்சுவாடு' என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் நடித்த ராஜீவை பாமா காதலித்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் ஒன்றாக சுற்றுவதாகவும் இந்த காதலுக்கு பாமாவின் பெற்றோர் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி பாமாவிடம் கேட்டபோது, "எந்த நடிகரோடும் என்னை இணைத்து இதுவரை செய்தி வந்ததில்லை. இப்போது வந்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய படங்களில் பிசியாக நடித்துவருகிறேன். இதில் நான் எங்குபோய் காதலிப்பது? அதனால் இது வதந்திதான்" என்றார்.
ஹீரோ ஆசை இல்லை பரத்ராஜ்
'விளையாட வா' படத்தில் வில்லனாக நடித்துள்ள பரத்ராஜ், நிருபர்களிடம் கூறியதாவது: மும்பையில் பிறந்து, வளர்ந்தேன். முறைப்படி நடிப்புப் பயிற்சி பெற்றேன். மேடை நாடகங்களில் நடித்தேன். 5 ஆயிரத்துக்கும் அதிகமான விளம்பரப் படங்களுக்கு குரல் கொடுத்ததுடன், பாடல்களையும் பாடியிருக்கிறேன். தமிழில் நடிக்க முயற்சித்தபோது, 'விளையாட வா' இயக்குனர் விஜயநந்தா, வில்லன் வாய்ப்பு கொடுத்தார். சிலர், ஏன் ஹீரோவாக நடிக்கக்கூடாது என்கின்றனர். அதில் விருப்பம் இல்லை. கதையின் திருப்புமுனைக்கு காரணமாக அமையும் எந்த கேரக்டராக இருந்தாலும் நடிப்பேன்.
ஷக்தி சிதம்பரத்தின் மச்சான்
சிவகார்த்திகேயன் ஜோடியாக தன்ஷிகா நடிக்கும் படம், 'மச்சான்'. ஷக்தி சிதம்பரம் இயக்குகிறார். ஒளிப்பதிவு, ஆஞ்சநேயலு. இசை, ஹரிகிருஷ்ணன். பாடல்கள்: நா.முத்துக்குமார், யுகபாரதி, விவேகா. படம் பற்றி ஷக்தி சிதம்பரம் கூறும்போது, "தான் காதலிக்கும் ஹீரோவுக்கு நண்பர்கள்இருக்கக்கூடாது என்கிறார், ஹீரோயின். நண்பர்களா? காதலா என்பதில் ஹீரோ என்ன முடிவு எடுக்கிறார் என்பது கதை. கன்னடத்தில் 55 படங்களுக்கு இசையமைத்து, 3 முறை தேசிய விருது பெற்ற ஹரிகிருஷ்ணன், தமிழில் அறிமுகமாகிறார். தயாரிப்பாளர், பெப்சிக்கு இடையே சுமூக ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு படப்பிடிப்பு தொடங்குகிறது" என்றார்.
ரசிகர்கள் அதிகரிப்பு : அமலா பால் மகிழ்ச்சி
ஒரே நேரத்தில் இரு படங்கள் ரிலீசானதில் மகிழ்ச்சி என்று அமலா பால் சொன்னார். மேலும் அவர் கூறியதாவது: நான் நடித்த 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', 'காதலில் சொதப்புவது எப்படி?' படங்கள் ஒரே நாளில் ரிலீசாகியுள்ளன. இரண்டிலும் எனது நடிப்பை பாராட்டுகிறார்கள். வரும் கேரக்டர்கள் கனமானதாகவும் காதல் கதைகளாகவும் இருப்பது எனக்குக் கிடைத்த பிளஸ் பாயின்ட். இப்போது எனக்கு ரசிகர்கள் அதிகரித்திருக்கிறார்கள். 'மைனா'வுக்குப் பிறகு எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் உயரத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது. என்றாலும், கதைக்குள் என்னை கேரக்டராகப் பொருத்திப் பார்க்கவே விரும்புகிறேன். தமிழில் தொடர்ந்து கவனம் செலுத்துவேன்.
இடைவெளி ஏன்?
'பாலைவனச்சோலை' ரீமேக்கில் நடித்த நிதின் சத்யா, ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பொருத்தமான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு வருடம் காத்திருந்தேன். எஸ்.டி.வேந்தன் சொன்ன 'மயங்கினேன் தயங்கினேன்' கதை பிடித்தது. ஒப்புக்கொண்டேன். இதில் கால்டாக்சி டிரைவர் வேடத்தில் நடிக்கிறேன். திஷா பாண்டே ஜோடி. திரைக்கதை, காட்சி அமைப்புகள் எல்லாம் புதுமையாக இருக்கும். அடுத்து '143' படத்தில் ஷோபா ஜோடியாக நடிக்கிறேன். இந்த இரு படங்களும் எனக்கு திருப்புமுனையாக அமையும். ஆக்ஷன், காதல் என வெவ்வேறு தளங்களில் நடிப்பைத் தொடர்கிறேன்.
விண்மீன்கள் ஷூட்டிங்கில் யானையிடம் சிக்கிய பாண்டியராஜன்
பழம்பெரும் இயக்குனர் கே.சங்கரின் பேரன் விக்னேஷ் மேனன் எழுதி, இயக்கும் படம் 'விண்மீன்கள்'. ராகுல் ரவீந்திரன், விஷ்வா, ஷிகா, அனுஜா அய்யர், பாண்டியராஜன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆனந்த் ஜீவா. இசை, ஜூபின். பாடல்கள், நா.முத்துக்குமார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பாண்டியராஜன் பேசியதாவது: ஊட்டியின் உயரமான பகுதிகளிலும், தேயிலை தோட்டங்களிலும் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தது. இரவு நேரம் ஷூட்டிங் முடித்து விட்டு காரில் வருவோம். அப்போது ரோட்டில் சுவர் மாதிரி தென்படும். அது மிகப் பெரிய யானை என்று, உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே தெரியும். நடுரோட்டில் கார் என்ஜினை 'ஆப்' செய்துவிட்டு அமைதியாக காத்திருப்போம். சில மணி நேரம் கழித்து யானை நகர்ந்து செல்லும். பிறகுதான் எங்களுக்கு உயிர் வரும். இப்படி ஒவ்வொரு நாளும் த்ரில்லிங்கான அனுபவம். இதில் என்னை வயதான தோற்றத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர். புதுமையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
முக்தா சீனிவாசனின் இந்திய நடனங்கள்
முக்தா சீனிவாசன் திரைத்துறைக்கு வந்து 65 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 42 படங்கள் தயாரித்து, இயக்கியுள்ளார். இப்போது 'முக்தா என்டர்டெயின்மென்ட்' என்ற நிறுவனத்தை, தனது சகோதரர் வி.ராமசாமியின் மகன் முக்தா கோவிந்துடன் இணைந்து தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் சார்பில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்தா சீனிவாசன் படம் இயக்குகிறார். அதற்கு 'இந்திய நடனங்கள்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, 'நாகரீகம் வளர, வளர நமது கலாசார பதிவுகளாகப் போற்றப்படும் பல விஷயங்கள் காணாமல் போய்விட்டன. அதில் இன்னமும் நிலைத்து நிற்பது, நடனம் மட்டுமே. பரத நாட்டியக் கலைஞர் பிரியதர்ஷினி கோவிந்த் ஆலோசனையில் இதை உருவாக்குகிறேன்' என்றார்.
நெல்லை வட்டார வழக்கு பிந்து மாதவி பயிற்சி
நெல்லை வழக்குப் பேச பயிற்சி எடுப்பதாக பிந்து மாதவி கூறினார். அவர் மேலும் கூறியதாவது: 'கழுகு' படத்தில் மேக்கப் இல்லாமல், நடித்துள்ளேன். இப்படம் ரிலீசானால், எனக்கு நல்ல பெயர் கிடைக்கும். இப்போது சீனு ராமசாமி இயக்கும் 'நீர்ப்பறவை'யில் விஷ்ணு ஜோடியாக நடிக்கிறேன். இதன் ஷூட்டிங் தூத்துக்குடியில் சில நாட்கள் நடந்தது. மெர்ஸி என்ற கிறிஸ்தவப் பெண் வேடம். நெல்லை, தூத்துக்குடி பகுதி பேச்சுவழக்கை கற்றுக்கொண்டு நடிக்கிறேன். அசிஸ்டென்ட் டைரக்டர் ஒருவர் தினமும் பயிற்சி அளிக்கிறார். தெலுங்கில் 'போகா' என்ற படத்தில் நடிக்கிறேன்.
ரஜினியுடன் நடிக்காததற்கு கால்ஷீட்தான் காரணம்
'கோச்சடையான்' படத்தில் ரஜினியுடன் நடிக்காததற்கு எனது கால்ஷீட் பிரச்னைதான் காரணம் என்று இந்தி நடிகை கேத்ரினா கைப் கூறினார். 'கோச்சடையான்' படத்தின் கேத்ரினா கைஃப் ஹீரோயினாக நடிப்பார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தீபிகா படுகோன் ஹீரோயினாக அறிவிக்கப்பட்டுள்ளார். ரஜினியுடன் நடிக்காதது ஏன் என்று கேட்டபோது கேத்ரினா கூறியதாவது: சல்மான்கானுடன் 'ஏக் தா டைகர்', ஷாரூக்கானுடன் பெயரிடப்படாத படங்களில் நடித்துவருகிறேன். இந்நிலையில் ரஜினி மகள் சவுந்தர்யா 'கோச்சடையானி'ல் நடிக்க என்னிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஷாரூக் பட ஷூட்டிங்கும் லண்டனில்தான் நடக்க இருக்கிறது என்பதால் கால்ஷீட் அட்ஜஸ்ட் செய்யலாம் என நினைத்தேன். 20 நாட்கள் போதும் என்றார் சவுந்தர்யா. ஆனால், அவர் கேட்ட தேதியை ஒதுக்க முடியவில்லை. ரஜினியுடன் நடிக்காதது வருத்தமாகத்தான் இருக்கிறது. இவ்வாறு கேத்ரினா கூறினார்.