ஷில்பா ஷெட்டிக்கு வளைகாப்பு!

Shilpa shetty  
வாயும், வயிறுமாக இருக்கும் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு அவரது தங்கை ஷமீதா ஷெட்டி, மே 3ம்தேதி வளைகாப்பு நடத்தவிருக்கிறாராம்.

மும்பையில் உள்ள ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ராவின் வீட்டில் வைத்து இது நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஷமீதா தரப்பில் கூறுகையில், மே 3ம் தேதி மாலை 3.30 மணிக்கு வளைகாப்பு நடத்துகிறார் ஷமீதா. தேதியை அவரே முடிவு செய்து தனது அக்காவிடம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டார், ஷில்பாவின் தோழியர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா தத், ரவீனா தாண்டன் உள்ளிட்டோரும் வருகின்றனராம். இந்த நிகழ்ச்சியில் ஆண்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை என்றனர்.

ஷமீதா கூறுகையில், இது ஒரு சர்ப்ரைஸ் நிகழ்ச்சி. எல்லாம் முடிவு செய்த பின்னர்தான் ஷில்பாவுக்கே தெரிவித்தேன். அவருக்கு ஆச்சரியமாகி விட்டது, ஆர்வமாகவும் இருக்கிறார் என்றார் சிரித்தபடி.

தற்போது ஷில்பா ஷெட்டி 9 மாதமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சினிமாவாகிறது நிரஞ்சனாவின் நினைவுகள் அழிவதில்லை நாவல்!

Ninaivugal Azhivathillai
நினைவுகள் அழிவதில்லை - இது தமிழின் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு நாவல்களுள் ஒன்று. நிரஞ்சனா எழுதியது. தமிழில் பிஆர் பரமேஸ்வரன் மொழிப் பெயர்த்திருந்தார்.

முற்போக்கு எழுத்தாளர்களுடன் பரிச்சயமுள்ள அத்தனை வாசகர்களும் தவறாமல் படித்த நாவல் இது.

நாடகமாக நடத்தப்பட்ட இந்த நாவலை இப்போது தமிழில் சினிமாவாக்குகின்றனர்.

ஆங்கிலேயர்கள் அபகரித்த விவசாய நிலங்களை மீட்க 4 இளைஞர்கள் போராடும் இந்தக் கதை, நிஜ சம்பவம். பகத்சிங் கண்ணன் இயக்குகிறார்.

இந்த படத்துக்கு தயாரிப்பாளர் என யாரும் இல்லை. நாடக நடிகர்கள், எழுத்தாளர்கள் நன்கொடையாக அளித்த பணத்தை வைத்து படத்தை எடுக்கிறார்கள். புதுமுகங்கள் நடிக்கின்றனர்.

ஆங்கிலயேர்கள் நிலங்களை பிடுங்கி மக்களை வெளியேற்றிய நிழ்வுகளை படத்தில் சேர்த்துள்ளார்களாம். மாவட்டம் தோறும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
 

ரஜினியை அப்பா என்று அழைக்கும் தீபிகா

Deepika padukone  
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக கோச்சடையானில் நடிக்கும் தீபிகா படுகோனே அவரை அப்பா என்றே அழைக்கிறாராம்.

இன்றைய தேதிக்கு கோலிவுட், மாலிவுட், டோலிவுட், பாலிவுட் என்று அனைத்து உட்களைச் சேர்ந்த நடிகைகளும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறார்கள். ஏன் நம்ம பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா கூட ரஜினியுடன் நடிக்க ஆசையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

அப்பேர்பட்ட ரஜினியுடன் கோச்சடையானில் ஜோடியாக நடிக்கிறார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. அவரும், ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். படத்தில் ஜோடியாக நடித்தாலும் கேமராவுக்கு பின்னால் ரஜினியை தீபிகா பாசத்துடன் அப்பா என்றே அழைக்கிறாராம்.

கோச்சடையான் படப்பிடிப்பில் தான் சௌகரியமாக உணர உதவிய சவுந்தர்யாவுக்கு நன்றி தெரிவித்து தீபிகா டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதன் மூலம் தான் அவர் ரஜினியை அப்பா என்று அழைப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சவுந்தர்யா டுவிட்டரில் கூறுயிருப்பதாவது,

கேரளாவில் கோச்சடையானின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளோம். தீபிகாவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. தீபிகா ஒரு டார்லிங் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு தீபிகாவின் டுவீட்,

சவுந்தர்யா ரஜினிகாந்துக்கு நன்றி. அப்பா, அம்மாவுக்கு எனது அன்பை தெரிவிக்கவும், விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

பதிலுக்கு சவுந்தர்யா டுவீட்,

உங்களை இயக்கியதில் மகிழ்ச்சி. விரைவில் சந்திப்போம். அப்பா, அம்மா மற்றும் படக்குழு தங்கள் அன்பை தெரிவித்துக்கொள்கிறார்கள்.
 

'ரூ. 10 லட்சத்தை லவட்டி விட்டார் பவர் ஸ்டார் சீனிவாசன்': போலீஸில் புகார்!

Dr Srinivasan
சென்னை: எனக்கு ரூ. 2 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ. 10 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு நடிகர் டாக்டர் சீனிவாசன் ஏமாற்றி விட்டார் என்று சென்னை காவல்துறையில் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

இது உண்மையிலேயே மோசடிப் புகாரா அல்லது சீனிவாசன் மேற்கொள்ளும் பப்ளிசிட்டி ஸ்டண்ட்டா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை புஜங்கராவ் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதியை சந்தித்து ஒரு புகார் அளித்தார். அதில், லத்திகா உள்ளிட்ட ஒரு சில படங்களை தயாரித்து, நடித்திருப்பவர் டாக்டர் சீனிவாசன். இவர், நண்பர் ஒருவர் மூலம் எனக்கு அறிமுகமானார்.

எனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தொழில் நடத்த ரூ.2 கோடி கடன் வாங்கித் தருவதாக சீனிவாசன் என்னிடம் கூறினார். அதற்காக முதல் கட்டமாக ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்றார். அதை நம்பி அண்ணாநகரில் உள்ள அவரது பாபா டிரேடிங் என்ற நிறுவனத்தின் பெயரில் டி.டி.எடுத்து கொடுத்தேன்.

ஆனால், சொன்னபடி ரூ.2 கோடி கடன் வாங்கித் தரவில்லை. நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது, அதையும் தரவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தப் புகாரில் கணேசன் கூறியுள்ளார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
 

நானும் விஜய்யும் நண்பர்கள்... என் ரசிகர்கள் விஜய்யை விமர்சிப்பது தவறு - அஜீத்

Ajith and Vijay
நானும் விஜய்யும் சினிமாவுக்கு வெளியே நல்ல நண்பர்கள். என் ரசிகர்கள் விஜய்யை விமர்சிப்பது முகம் சுளிக்க வைக்கிறது. அதை நிறுத்திக் கொள்ள வேண்டும், என்றார் அஜீத்.

நடிகர் அஜித் இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவர் அளித்த பேட்டி:

இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் நீங்கள் கற்றுக் கொண்டது?

என்னுடைய வளர்ச்சியில் ரசிகர்களின் பங்கை மறக்கமாட்டேன். இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் நல்ல நல்ல படங்களில் நடித்துள்ளேன். மோசமான படங்களிலும் நடித்துள்ளேன். நல்ல முடிவுகள் எடுத்தது உண்டு. மோசமான முடிவுகளையும் எடுத்தேன். அற்புதமான மனிதர்களையும் சந்தித்திருக்கிறேன். இதன் மூலம் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. இவை என்னை செதுக்கி உள்ளது. கடந்த கால நிகழ்வுகள் பற்றி எந்த வருத்தமும் கிடையாது.

உங்களுக்கு போட்டி யார்? லட்சியம் என்ன?

எல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என்பதை நான் நம்புகிறேன். எனக்கு பெரிய லட்சியங்கள் கிடையாது. வாழ்க்கை என்பது பெரிய பரிசு. ஆக்கப்பூர்வமாக வாழ ஆசைப்படுகிறேன். நான் யாருக்கும் போட்டியும் இல்லை. நாம் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் நம் பெயர் உள்ளது என்பதை நான் நம்புகிறேன். எனவே நமக்கு கிடைப்பது கிடைக்கும். ஏன் கவலைப்பட வேண்டும்.

ஒரு வெற்றிப் படத்துக்கான தேவை, பார்முலா என்ன?

படத்தின் வெற்றிக்கான பார்முலா தெரிந்தால் எல்லோருமே 100 சதவீத ஹிட் கொடுக்க முடியும். ஒரு படம் ஜெயிப்பதற்கு பல விஷயங்கள் உள்ளது. அது கூட்டு முயற்சி. படங்களை தேர்வு செய்ய இயக்குனர், தயாரிப்பாளர்களுடனான புரிதல் முக்கியம். கதையும் முக்கியமானது. படத்தை முடிவு செய்த பின் எதிலும் நான் தலையிடமாட்டேன்.

ரொம்ப வெளிப்படையாகப் பேசுகிறீர்களே?

நான் உணர்வு பூர்வமாக பேசுகிறேன். நினைப்பது ஒன்று பேசுவது ஒன்று கிடையாது. அரசியல் ரீதியாக இது சரி இல்லாமல் இருக்கலாம். அது என் குற்றம் இல்லை.

விஜய்க்கு நீங்கள் போட்டியா? உங்கள் இருவரின் ரசிகர்களும் அவ்வப்போது மோதிக் கொள்கிறார்களே?

அஜித்துக்கும் எனக்கும் தொழில் முறை போட்டிதான் உள்ளது என்றும், சினிமாவுக்கு வெளியே நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றும் விஜய் சொல்லி இருப்பது உண்மைதான்.

விஜய் மனைவி சங்கீதாவும் என் மனைவி ஷாலினியும் நட்புடன் பழகுகிறார்கள். இருவர் குழந்தைகளும் ஒன்றாக இருக்கின்றனர். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ரசிகர்கள் ஒருத்தரை ஒருத்தர் பற்றி தவறாக கருத்துக்கள் வெளியிடுவது மனதை புண்படுத்துகிறது. சாதாரண மனிதன் இதை பார்க்கும்போது முகம் சுளிக்கிறான். எனவே இவற்றை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

உங்கள் முடிவுகளில் மனைவி ஷாலினி குறுக்கிடுவாரா?

மனைவி ஷாலினி எல்லா விஷயங்களிலும் எனக்கு உதவியாக இருக்கிறார். சினிமா சம்பந்தமாக நான் எடுக்கும் முடிவுகளில் தலையிடுவது இல்லை.

நீங்களே சமைத்து விருந்து கொடுப்பதாக அடிக்கடி செய்தி வருகிறதே?

நான் நன்றாக சமைப்பேன். எனது அம்மா சிறு வயதில் இருந்தே சமையல் கற்று கொடுத்துள்ளார். ஓய்வு நேரத்தில் சமைத்து நண்பர்களை சந்தோஷப்படுத்துவது எனக்குப் பிடிக்கும்.
 

மூத்த நடிகை சண்முக சுந்தரி மரணம்!

Shanmuga sundari
மூத்த நடிகையும், நடிகை - பின்னணி பாடகி டி கே கலாவின் தாயாருமான சண்முகசுந்தரி நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 75.

கடந்த 45 ஆண்டுகளாக 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ள பழம்பெரும் தமிழ் நடிகை சண்முகசுந்தரி. இவர் எம்.ஜி.ஆருடன் 'இதயக்கனி', 'நீரும் நெருப்பும்', 'கண்ணன் என் காதலன்', 'என் அண்ணன்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜியுடன் 'லட்சுமி கல்யாணம்,' 'வடிவுக்கு வளைகாப்பு' படங்களிலும், ஜெமினியுடன் 'மாலதி' படத்திலும் நடித்துள்ளார்.

காமெடி கிங் கவுண்டமணியின் மாமியாராக ஒரு படத்தில் அவர் நடித்தார். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல படங்களில் கவுண்டமணியுடன் நடித்தார்.

டி.பி.கஜேந்திரன் இயக்கிய 'மிடில் கிளாஸ் மாதவன்', வீ சேகர் இயக்கிய காலம் மாறிப்போச்சு படங்களில் வடிவேலுவின் தாய் கேரக்டரில் நடித்தார். அந்த இரு படங்களிலும் வடிவேலு - சண்முக சுந்தரி காட்சிகள் மிகப் பிரபலமாகின.

ஏராளமான படங்களுக்கு 'டப்பிங்' குரலும் கொடுத்துள்ளார்.

சண்முகசுந்தரிக்கு சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

சண்முகசுந்தரிக்கு டி.கே.கலா, நீலா, மாலா, மீனா, செல்வி என 5 மகள்கள். டி.கே.கலா பிரபல பாடகி. கில்லி, குருவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சண்முகசுந்தரி உடல் சாலிகிராமம் மதியழகன் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நடிகர் சங்கம் சார்பில் வாகை சந்திரசேகர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நாளை காலை 10 மணிக்கு வளசரவாக்கம் மயானத்தில் உடல் தகனம் நடைபெறுகிறது.