இந்த கிரகத்திலேயே சிறந்த மனிதர் அஜீத் சார்: ராணா புகழாரம்

சென்னை: இந்த கிரகத்திலேயே உள்ள அருமையான மனிதர் அஜீத் சார் தான் என தெலுங்கு நடிகர் ராணா தெரிவித்துள்ளார்.

அஜீத்துடன் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என அனைவரும் அவரை புகழ்ந்து பேசி வருகிறார்கள். அவர் குணத்திற்காக அவருடன் மீண்டும் மீண்டும் பணியாற்ற விரும்புகிறார்கள்.

இந்நிலையில் ஆரம்பம் படத்தில் அஜீத்தின் நெருங்கிய நண்பராக நடித்த தெலுங்கு நடிகர் ராணா ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர்கள் அவரிடம் அஜீத்துடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் பற்றி கூறுமாறு கேட்டனர்.

இந்த கிரகத்திலேயே சிறந்த மனிதர் அஜீத் சார்: ராணா புகழாரம்

அதற்கு ராணா கூறுகையில்,

கோலிவுட்டில் எனக்கு பிடித்த நடிகர் என்றால் அது அஜீத் தான். இந்த கிரகத்திலேயே சிறந்த மனிதர் அஜீத் சார் என்று தெரிவித்துள்ளார்.

அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் வேலைகள் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பே துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பங்களாவுக்கு மின்சாரம் திருடிய நடிகர் கலாபவன் மணி மீது வழக்கு: ரூ.1.5 லட்சம் அபராதம்

திருச்சூர்: கேரளாவில் உள்ள தனது பங்களாவுக்கு மின்சாரம் திருடிய நடிகர் கலாபவன் மணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் ரூ.1.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் கேரளாவைச் சேர்ந்த கலாபவன் மணி. அவருக்கு கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருவி அருகே பங்களா ஒன்று உள்ளது. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் அவர் அந்த பங்களாவில் தான் ஓய்வெடுப்பார். இந்நிலையில் அந்த பங்களாவுக்கு மின்சாரம் திருடப்படுவதாக பொதுமக்கள் மின்வாரியத்திடம் புகார் அளித்தனர்.

பங்களாவுக்கு மின்சாரம் திருடிய நடிகர் கலாபவன் மணி மீது வழக்கு: ரூ.1.5 லட்சம் அபராதம்

இதையடுத்து மின்வாரியத் துறை அதிகாரிகள் சிறப்புக் குழு கலாபவன் மணியின் பங்களாவில் சோதனை நடத்தியது. சோதனையில் பல ஆண்டுகளாக மின்சாரம் திருடப்படுவது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கலாபவன் மணிக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மின்சாரம் திருடியது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பங்களாவுக்கு மின்சாரம் திருட உதவியாக இருந்த மின்வாரிய ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி வருகிறார் கலாபவன் மணி என்பது குறிப்பிடத்தக்கது.

 

கோ -2... பிரகாஷ்ராஜூடன் இணையும் பாபி சிம்ஹா!

சென்னை : கோ படத்தின் இரண்டாம் பாகத்தில் பாபி சிம்ஹா நாயகனாக நடிக்க இருக்கிறார். இப்படத்தில் பிரகாஷ்ராஜும் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடிக்கிறார்.

கடந்த 2011ம் ஆண்டு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்து வெளிவந்த படம் கோ. அரசியல் பின்னணியில் திரில்லர் படமாக வெளிவந்திருந்த இப்படத்தில் நாயகியாக, நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நடித்திருந்தார்.

கோ -2... பிரகாஷ்ராஜூடன் இணையும் பாபி சிம்ஹா!

எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருந்தது.

இந்நிலையில், தற்போது அதே நிறுவனம் இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க முடிவு செய்துள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் பாபி சிம்ஹா நாயகனாகவும், டார்லிங் பட நாயகி நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடிக்கவிருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். சரத் என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன.

ஜிகிர்தண்டா படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்து தேசிய விருது வாங்கிய பாபி சிம்ஹாவுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

'ஓ காதல் கண்மணி' படம் ரிலீஸாவதை நினைத்து கவலையாக உள்ளது: துல்கர் சல்மான்

சென்னை: ஓ காதல் கண்மணி படம் ரிலீஸாவதை நினைத்து கவலையாக இருப்பதாக படத்தின் ஹீரோ துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள காதல் படம் ஓ காதல் கண்மணி. படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படக்குழுவினர் சனிக்கிழமை சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

'ஓ காதல் கண்மணி' ரிலீஸாவதை நினைத்து கவலையாக உள்ளது: துல்கர் சல்மான்

அப்போது துல்கர் சல்மான் கூறுகையில்,

இது என் கனவுப் படம். ஓ காதல் கண்மணி படத்தில் நடித்த ஓராண்டும் கனவு போன்று இருந்தது. அந்த கனவில் இருந்து கண் விழிக்கவே கூடாது என்று தோன்றியது. தொடர்ந்து அதே கனவில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். பி.சி.ஸ்ரீராம், மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானுடன் பணியாற்றியது மேஜிக் போன்று இருந்தது. இது கனவுக் குழு.

என் கனவில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டும் என்பதால் படம் ரிலீஸாவதை நினைத்து கவலையாக உள்ளது என்றார்.

 

உத்தம வில்லன் தயாரிப்பாளரை மிரட்டும் தியேட்டர்காரர்கள்... அதிர வைக்கும் கட்டப்பஞ்சாயத்து!

ரூ 1 கோடி கொடுக்காவிட்டால் உத்தம வில்லன் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டேன் என்று தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோசை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ரோகினி பன்னீர் செல்வம் மிரட்டி நெருக்கடி கொடுப்பதாக எழுந்துள்ள புகார்தான் இப்போது திரையுலகையே அதிரவைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் கட்டப் பஞ்சாயத்துக்குகளுக்கு எப்போதும் பஞ்சமே இருந்ததில்லை. சரி, இந்த முறை கலைப்புலி தாணு தயாரிப்பாளர் சங்கத் தலைவராகியிருக்கிறார். எனவே இந்த மாதிரி சமாச்சாரங்கள் இனி இருக்காது என்று நினைத்த நேரத்தில்தான், ஒரு பகீர் புகார் வந்துள்ளது. அதுவும் ஒரு கட்டப் பஞ்சாயத்தில் கலைப்புலி தாணுவையே அவமானப்படுத்தும் அளவுக்கு ரசாபாசமாகியிருக்கிறது.

கமலின் உத்தம வில்லன் படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ளது. வரும் மே 1-ம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்து, அதற்கான வேலைகளில் மும்முரமாக உள்ளனர்.

'உத்தம வில்லனை ரிலீஸ் செய்ய ஒரு கோடி கேட்டு கட்டப்பஞ்சாயத்து' - திடுக்கிட வைக்கும் மிரட்டல்!

இந்த நிலையில் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் ரோகினி பன்னீர் செல்வம் மல்லுக்கு நிற்கிறாராம்.

விஸ்வரூபம் பட விவகாரத்தில் தங்களுக்கு எதிராக இந்திய போட்டிகள் ஆணையத்தில் கமல் வழக்குத் தொடர்ந்தது, அந்த வழக்கை நடத்தியது, அதற்காக செலவழித்தது மற்றும் அதனால் தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்கு ஈடாக கணிசமான தொகை கொடுத்தால்தான் ரிலீசுக்கு அனுமதிப்போம் என்று விநியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் போன்றவை போர்க்கொடி தூக்கியுள்ளன.

இந்தப் பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து அபிராமி ராமநாதன், ரோகினி பன்னீர்செல்வம், மதுரை அண்ணாமலை ஆகியோரை அழைத்துக் கேட்டார்களாம் திருப்பதி பிரதர்ஸ் சகோதரர்களும், கமலஹாசன் தரப்பும்.

அப்போது மல்டிப்ளெக்ஸ் காம்ப்ளெக்ஸ் சங்கத்தின் சார்பில் வந்த அபிராமி ராமநாதன் எங்களுக்கு எந்த இழப்பீடும் வேண்டாம் என்றார்களாம்.

விநியோகஸ்தர்கள் சங்கமோ தங்களுக்கு ரூ 1,93,000 ஆகியுள்ளது. அதைக் கொடுங்கள் என்றார்களாம். ஆனால் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் ரோகினி பன்னீரும், மதுரை அண்ணாமலையும், அப்புறம் சொல்கிறோம் என்று கூறிவிட்டார்களாம்.

ரூ 1 கோடி வேண்டும்

கூட்டம் முடிந்த பிறகு போஸை தனியாக அழைத்த பன்னீர், தனக்கு ரூ 50 லட்சமும், சங்கத்துக்கு ரூ 50 லட்சமும் கொடுத்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என்று கூற, இதைக் கேட்டு மயங்கிவிழாத குறையாகி விட்டாராம் போஸ். பின்னர், "இல்ல சார் நானே ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறேன்.. கொஞ்சம் பார்த்து உதவி செய்யுங்க.." என்று கேட்க, "இங்க பாரு போஸ், உன்னுடைய படம் ரிலீஸ் ஆகனும்னா கேட்டதைக் கொடு, இல்லன்னா எப்போ உனக்கு பணம் கொடுக்க முடியுமோ அப்போ படத்தை ரிலீஸ் செய்," என்றாராம் பன்னீர்.

தாணுவுக்கு நேர்ந்த அவமானம்

என்ன செய்வதென்று தெரியாமல், பலகோடி ரூபாய் போட்டு எடுத்த படத்தை முடக்கப் பார்க்கிறார்களே என்ற வேதனையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணுவிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். இதைக் கேட்ட அவர் அதிர்ச்சியடைந்து, "இது என்னஅநியாயம்" போய் பேசலாம் என்று சுபாஷ் சந்திர போஸை கூட்டிக்குகொண்டு பன்னீரின் தி.நகர் ரோகினி லாட்ஜுக்குப் போயிருக்கிறார்கள். அங்கே பன்னீருடன் மதுரை அண்ணாமலையும் இருந்தாராம்.

"அவர்களிடம் படத்தை எடுத்துவிட்டு போஸ் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் வேறு பணம் கேட்டு மிரட்டுவதாக அழுகிறார். அதைக் குறைத்து வினியோகிஸ்தர்கள் கூட்டமைப்பு வாங்கியது போல செலவான தொகையை மட்டும் வாங்கிக்கொண்டு இந்த படத்தை ரிலீஸ் செய்ய உதவுங்க", என்று தாணு கேட்டிருக்கிறார்.

மதுரை அண்ணாமலையோ, "எங்கள் சங்கத்திற்கு ஐம்பது லட்ச ருபாய்க்கு ஒரு பைசா குறைவா கொடுத்தாலும் ரிலீஸ் செய்ய விடமாட்டோம்," என்று கூறிவிட்டு டமால் என கதவைச் சாத்தி தாணுவை அவமானப்படுத்திவிட்டாராம்.

மீண்டும் பேரம்

எப்படியாவது சிக்கல் தீர்ந்தால்போதும் என்று நினைத்த போஸ், பன்னீருக்கு நெருக்கமான படூர் ரமேஷ் என்பவர் மூலம் பன்னீருடன் மீண்டும் பேசியுள்ளார். அப்போது பன்னீருக்கு ரூ 50 லட்சம், சங்கத்துக்கு ரூ 20 லட்சம் என்று முடிவாகியிருக்கிறது. முதல் கட்டமாக அடுத்த நாளே ரூ 25 லட்சத்தை மிகுந்த கஷ்டப்பட்டு கடன் வாங்கி பன்னீருக்கு கமிஷனாகக் கொடுத்துமிருக்கிறார் . மீதியை பின்னர் புரட்டித் தருவதாகவும் அவர் கூறினார்.

ஆனால் பன்னீர் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டாராம். இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது... 50 கோடிக்கு மேல் பணத்தைக் கொட்டிப் படமெடுத்துவிட்டு, சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒருவருக்கு இவ்வளவு பணத்தைக் கொடுக்க வேண்டியிருக்கிறதே என்ற மன அழுத்தம் காரணமாகவே தன்னுடைய கஷ்டத்தை திரையுலகில் பலரிடமும் கூறி அழுதிருக்கிறார்.

சுபாஷ் சந்திர போஸ் மேற்கொண்டு பணம் கொடுக்காததால், தியேட்டர்காரர்களை அழைத்து, உத்தம வில்லனுக்கு ரெட் போட்டிருக்கிறது. நான் சொல்லும் வரை படத்தை வெளியிடக்கூடாது என்று.. யாரும் அக்ரிமென்ட் போடாதீர்கள் என்று கூழியிருக்கிறார்.

பதில் சொல்லாமல் ஓட்டம்

இந்த நிலையில்தான், உட்லன்ட்ஸ் திரையரங்கில் தியேட்டர்காரர்களின் பொதுக் குழு கூடியிருக்கிறது. அப்போது போஸுக்கு வேண்டப்பட்ட விருதுநகர் அப்சரா தியேட்டர் ரத்னகுமார், அருப்புக்கோட்டை இளையராணி மகாராணி தியேட்டர்
உரிமையாளர் தங்கபாண்டியன், சோழவந்தான் ‘ஏ' தியேட்டர் உரிமையாளர் டாக்டர் செந்தில் ஆகியோர் பன்னீரின் கட்டப்பஞ்சாயத்து மற்றும் பணம் பறிப்பு பற்றி கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

உடனே ரோகினி பன்னீர் எந்த பதிலும் சொல்லாமல் கூட்டத்தை விட்டு ஓடிவிட்டார் என்கிறார்கள் பங்கேற்றவர்கள்.

நூற்றுக்கும் மேற்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் இனிமேல் ரோகினி பன்னீர் சங்கத்தின் எந்தப் பொறுப்பிலும் இருக்கக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.

தயாரிப்பாளர்களும் ரோகினி பன்னீர் லீசுக்கு விட்டிருக்கும் ரோகினி தியேட்டருக்கு இனி படம் தருவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

என்ன கொடுமை பாருங்கள்... வழக்குப் போட்டவர் கமல். ஆனால் அவரிடம் நேரடியாகக் கேட்க இவர்களுக்கு தைரியமில்லை. கமலை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளரின் கழுத்தை நெறிப்பது எந்த வகை தொழில் நியாயம்?

 

ஜெயா டிவியில் தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம் 'கத்தி'..சன் டிவியின் 'அனேகனுக்கு' போட்டி!

சென்னை: விஜய் நடித்த கத்தி திரைப்படத்தை தமிழ் புத்தாண்டான சித்திரை 1ம் தேதியான ஏப்ரல் 14ம்தேதி ஜெயா டிவி ஒளிபரப்புகிறது.

இளைய தளபதி விஜய் நடித்து வெளியாகி ஹிட்டான திரைப்படம் கத்தி. விவசாயிகள், கிராம மக்கள் படும் கஷ்டங்களை யதார்த்தமாக எடுத்துச் சொன்ன இந்த திரைப்படம், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. ஜில்லா திரைப்படத்தில் சற்று சறுக்கிய விஜய், கத்தி படத்தால் அதை ஈடு செய்தார்.

ஜெயா டிவியில் தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம் 'கத்தி'..சன் டிவியின் 'அனேகனுக்கு' போட்டி!

லைகா தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். காமெடி கேரக்டரில் சதீஷ் நடித்திருந்தார்.

அனிருத் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் ஆகின. கடந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆன இந்த திரைப்படத்தை, ஜெயா டிவி வரும் செவ்வாய்க்கிழமை காண்பிக்கிறது. தமிழ் புத்தாண்டான அன்று, மாலை 6 மணிக்கு ஜெயா டிவியில் படம் காண்பிக்கப்படுகிறது.

அதேநேரம், சன் டிவியில் தனுஷ் நடித்து வெளியாகி, தடுமாறிய, அனேகன் திரைப்படம் காண்பிக்கப்படுகிறது. வழக்கமாக, பண்டிகை நாட்களில் ஹிட்டான புதுப்படங்களை காண்பிக்கும், சன் டிவியை இம்முறை ஜெயா டிவி முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், குடியரசு தினத்தன்றே கத்தி படத்தை ஒளிபரப்புவதாக விளம்பரம் செய்த ஜெயா டிவி கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்டது நினைவிருக்கலாம்.