தயவு செய்து உதட்டை விட்டு இறங்குங்க ப்ளீஸ்... அலுத்துக் கொள்ளும் கைலி!

லாஸ் ஏஞ்சலெஸ்: ஒவ்வொருவருக்கும் ஒரு தனி அழகு இருக்கும்.. அந்த வகையில் ஹாலிவுட் நடிகை கைலி ஜென்னர் ஒரு உதட்டழகி... ஹாலிவுட்டில் அவரைப் பற்றி எழுதிய செய்திகளை விட அவரது உதட்டைப் பற்றிய செய்திகள்தான் நிறைய நிறைய...

ஆனால் இதுவரை தனது உதட்டழகின் ரகசியம் குறித்து கைலி வாயே திறந்ததே இல்லை.. ஏன் உதட்டைக் கூட அசைத்ததில்லை.. இந்த நிலையில் முதல் முறையாக தனது உதட்டழகின் ரகசியம் குறித்து அவர் பேசியுள்ளார்.

தயவு செய்து உதட்டை விட்டு இறங்குங்க ப்ளீஸ்... அலுத்துக் கொள்ளும் கைலி!

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், எப்பப் பார்த்தாலும் எனது உதடு பற்றிய பேச்சாகவே உள்ளது. இது எனக்கு சற்று அலுப்பைத் தருகிறது.

நான் காஸ்மெடிக் சர்ஜரி செய்துள்ளதாகவும், அதனால்தான் அது கொள்ளை அழகாக இருப்பதாகவும் கூட பேச ஆரம்பித்து விட்டார்கள். தயவு செய்து உதட்டைப் பற்றி பேசுவதை நிறுத்துங்கப்பா.

நான் எந்த ஆபரேஷனும் செய்யவில்லை. எனது உதடுகள் இயற்கையானவை, நிஜமானவை.. இயற்கை அழகுடன் கூடியவை.

12 வயது போட்டோவையும், 18 வயது போட்டோவையும் ஒப்பிட்டு உதடு மாறிப் போயிருச்சுன்னு எழுதுறாங்க. 12 வயதில் இருந்தது போலவா இப்போதும் உதடுகள் இருக்கும்.. மாறாதா?

எனது உதடுகள் குறித்துப் பேசுவதைக் கேட்டாலே எனக்கு போரடிக்கிறது. எனது உதட்டை விட்டு இறங்கி எனது வேலை பற்றிப் பேசுங்கள்.. அதைக் கேட்க நான் ஆர்வமாக இருக்கிறேன் என்றார் அவர்.

இதற்கிடையே, தனது உதடுகளுக்காக சிறப்புப் பராமரிப்பு எதையும் கைலி செய்வதில்லையாம். மாறாக லிப் பாம் கொஞ்சம், லைனர் கொஞ்சம் மட்டும்தானாம்...!

அதுக்கே இம்புட்டு அழகா.. ??

 

தீயாக வேலை செய்யும் 'தல' ரசிகர்கள்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஆத்விக் அஜீத்குமார்

சென்னை: ட்விட்டரில் இந்தியா அளவில் அஜீத்தின் மகன் ஆத்விக்கின் பெயர் 4வது இடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

அஜீத்தின் மனைவி ஷாலினி கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அஜீத்துக்கு மகன் பிறந்த செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து குட்டி தல என்று ஹேஷ்டேக்கோடு ரசிகர்கள் ட்வீட் செய்தனர். இதனால் பிறந்த அன்றே ட்விட்டரில் குட்டி தல டிரெண்ட் ஆனார்.

தீயாக வேலை செய்யும் 'தல' ரசிகர்கள்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஆத்விக் அஜீத்குமார்

இந்நிலையில் அஜீத் தனது மகனுக்கு ஆத்விக் என்று பெயர் வைத்துள்ளதாக இன்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஆத்விக் என்றால் தனித்துவம் மிக்கவன் என்பது பொருள். குட்டி தலக்கு பெயர் வைத்த செய்த அறிந்த ரசிகர்கள் ட்விட்டரில் ஆத்விக் பற்றி தான் பேசி வருகிறார்கள்.

ரசிகர்கள் #AadvikAjithKumar என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்து வருகிறார்கள். ஏராளமானோர் ட்வீட் செய்வதால் ட்விட்டரில் தேசிய அளவில்
#AadvikAjithKumar 4வது இடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

பெயர் வைத்தது பற்றி செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே #AadvikAjithKumar ஹேஷ்டேக்கை டிரெண்டாகவிட்டுள்ளனர் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஷாருக்கானுக்கு தாதாசாகேப் பால்கே ஃபிலிம் பவுன்டேஷன் விருது

மும்பை: மும்பையில் நடந்த விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு தாதாசாகேப் பால்கே ஃபிலிம் பவுன்டேஷன் விருது வழங்கப்பட்டது.

மும்பையில் கடந்த 21ம் தேதி தாதாசாகேப் பால்கே ஃபிலிம் பவுன்டேஷன் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் ராஷ்ட்ரிய லோக் தள கட்சி தலைவர் அமர்சிங் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

ஃபரா கான் இயக்கிய ஹேப்பி நியூ இயர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஷாருக்கானுக்கு விருது வழங்கப்பட்டது. சிட்டிலைட்ஸ் படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர் ராஜ்குமார் ராவுக்கு விருது கிடைத்தது.

ஷாருக்கானுக்கு தாதாசாகேப் பால்கே ஃபிலிம் பவுன்டேஷன் விருது

எனக்கு விருது கிடைக்க உள்ளது பற்றி 3 நாட்களுக்கு முன்பு தான் தெரிய வந்தது. இந்த விருது கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்று ராஜ்குமார் ராவ் தெரிவித்துள்ளார்.

ஷாருக், ராஜ்குமார் ராவ் தவிர பாலிவுட் பிரபலங்கள் ஜெயபிரதா, ஹூமா குரேஷி, டைகர் ஷ்ராப், ஸ்ரேயாஸ் தல்பதே, பாடகர்கள் உதித் நாராயண், பங்கஜ் உதாஸ் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.

விருது விழாவில் மேடையில் ஷாருக்கான் ஆட அவருடன் சேர்ந்து அமர் சிங்கும் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வழக்கை வாபஸ் பெற்றதால் மகிழ்ச்சி... பிவிபி படத்தில் ஒற்றைப் பாடலுக்கு ஆடுகிறார் ஸ்ருதி!

தன் மீதான வழக்கை வாபஸ் பெற்ற பிவிபி நிறுவனத்தின் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடுகிறார் ஸ்ருதி ஹாஸன்.

கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படத்தில் முதல் ஸ்ருதிஹாஸன்தான் நாயகியாக ஒப்பந்தமானார்.

ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அந்தப் படத்திலிருந்து விலகினார் ஸ்ருதி.

வழக்கை வாபஸ் பெற்றதால் மகிழ்ச்சி... பிவிபி படத்தில் ஒற்றைப் பாடலுக்கு ஆடுகிறார் ஸ்ருதி!

இதனால் தங்கள் நிறுவனத்துக்கு பெரிய நஷ்டமாகிவிட்டது என்று குற்றம்சாட்டிய தயாரிப்பாளர்கள், ஸ்ருதிஹாஸனை புதுப் படங்களில் ஒப்பந்தம் செய்யக் கூடாது எனக் கோரி ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஸ்ருதிஹாஸன் இனி புதுப் படங்களில் ஒப்பந்தமாக இடைக்காலத் தடை விதித்தது.

பின்னர், ஸ்ருதிஹாஸனுடன் சமரசமாகிவிட்டதால், வழக்கை வாபஸ் பெறுவதாக பிவிபி நிறுவனம் அறிவித்தது.

இதனால் மகிழ்ச்சியடைந்த ஸ்ருதிஹாஸன், அந்த நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்புக் கொண்டுள்ளார்.

 

பாலச்சந்தர், கமலிடம் விருது பெற்ற புது இயக்குநரின் 'சவாரி'

கே பாலச்சந்தர், கமல் ஹாஸன் என்ற பெரிய ஜாம்பவான்களிடம் விருது பெற்ற புதிய இயக்குநர் குகன் சவாரி என்ற பெயரில் இயக்குகிறார்.

டேக் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அறிமுக நாயகன் பெனிட்டோ, சனம் செட்டி, ‘முண்டாசுப்பட்டி' முனிஷ்காந்த், கார்த்திக் யோகி, கவிதாலயா கிருஷ்ணன் நடிக்கின்றனர்.

‘பரதேசி' புகழ் ஒளிப்பதிவாளர் செழியன் ஒளிப்பதிவு செய்ய, அமரர் கிஷோர் டிஇ படத்தொகுப்பு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

பாலச்சந்தர், கமலிடம் விருது பெற்ற புது இயக்குநரின் 'சவாரி'

படம் குறித்து இயக்குநர் குகன் கூறுகையில், "நாம் அன்றாடம் தெருவிற்கு தெரு, சாலைக்கு சாலை பார்க்கும் ஒரு விஷயத்தை மையமாக வைத்து எடுத்துள்ளோம். க்ரைம் த்ரில்லர் பாணி படங்களில் இதுவரை தொட்டிடாத ஒரு புதிய கதைகளத்தை கொண்டதுதான் ‘சவாரி'.

நாளைய இயக்குனர்-3 நிகழ்ச்சியில் இயக்குனர் சிகரம் பாலசந்தர் சார் மற்றும் கமல் ஹாசன் சார் அவர்களிடம் விருது வாங்கினேன். என் முதல் படத்தை இவர்கள் இருவருக்கும் திரையிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன், பாலசந்தர் சார் இன்று நம்மிடையே இல்லை எனினும் அவர் எனக்கு அளித்த கௌரவத்தை ‘சவாரி' காப்பாற்றும்" என்றார் நம்பிக்கையுடன்.

 

சூர்யாவை இயக்கப் போகும் சதுரங்க வேட்டை வினோத்!

சதுரங்க வேட்டை வெற்றிப் படத்தைத் தந்த வினோத் அடுத்து நடிகர் சூர்யாவை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

சமூகத்தில் வியாபாரம் என்ற பெயரில் நடக்கும் மோசடிகளை மையப்படுத்தி சில மாதங்களுக்கு முன் எடுத்து வெளியிடப்பட்ட படம் சதுரங்கவேட்டை.

நட்டி ஹீரோவாக நடித்து பெரும் வெற்றிப் பெற்றார். இந்தப் படத்தை வினோத் இயக்கியிருந்தார்.

சூர்யாவை இயக்கப் போகும் சதுரங்க வேட்டை வினோத்!

இவருக்கு இப்போது மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. தனது அடுத்த படத்தில் சூர்யாவை இயக்கப் போகிறார் வினோத்.

இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து முடித்துவிட்டார் சூர்யா. அடுத்து விக்ரம் குமார் இயக்கத்தில் 24 படத்தில் நடித்துக் கொண்டுள்ளார்.

இந்தப் படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படத்தைத்தான் வினோத் இயக்குகிறார்.

 

ரஜினியை மட்டும் பின்தொடரும் விஷால்!

மனதில் பட்டதைச் சொல்லும் துணிச்சல், யாருக்காகவும் தயங்காமல் தான் நினைத்ததைச் செய்வது போன்றவற்றுக்கு இன்றைய நடிகர்களில் பளிச்சென்று முன் நிற்பவர் விஷால்.

இந்த விஷயங்களில் தனது குருவாக அவர் நினைப்பது சூப்பர் ஸ்டார் ரஜினியை மட்டும்தான்.

ரஜினியை மட்டும் பின்தொடரும் விஷால்!

அதனால்தான் ட்விட்டரில் கூட ரஜினியை மட்டும் ஃபாலோ பண்ணுகிறார் மனிதர்.

விஷால் சமீபத்தில்தான் ட்விட்டரில் இணைந்தார். ட்விட்டரில் இணைந்ததிலிருந்து, ரொம்ப ஆக்டிவாக இருக்கிறார் விஷால். தன் படங்களைப் பற்றிய செய்திகள், படங்கள், ட்ரைலர்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது ரசிகர்களுடன் பேசுகிறார்.

இதுநாள் வரை விஷாலை 18 ஆயிரம் பேர் பின்தொடர்ந்துள்ளார்கள். ஆனால், விஷாலோ ஒருவரை மட்டும்தான் பின்தொடர்ந்துள்ளார். அந்த ஒருவர் யாரென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். மற்ற நடிகர், நடிகைகளை இதுவரை அவர் தொடரவில்லை. இதற்கான காரணம் என்னவென்றும் தெரியவில்லை.

 

பொய் சொல்லி மகளுக்கு வாய்ப்பு வாங்கிய நடிகை ராதா!

தன் மகள் கார்த்திகா நாயருக்கு கார் ஓட்டத் தெரியும் என பொய் சொல்லி வா படத்தின் வாய்ப்பை வாங்கியுள்ளார் நடிகை ராதா. ஆனால் ஷூட்டிங் வந்த பிறகுதான் கார்த்திகாவுக்கு பிரேக் எது, ஆக்ஸிலேட்டர் எது? என்பது கூடத் தெரியவில்லையாம்!

இந்தத் தகவலை பகிரங்கமாக வெளியிட்டார் படத்தின் நாயகனான அருண் விஜய்.

வா படத்தை ரத்தின சிவா இயக்கியிருக்கிறார். தமன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

பொய் சொல்லி மகளுக்கு வாய்ப்பு வாங்கிய நடிகை ராதா!

இசை வெளியீடு

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. இதில், சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், லிங்குசாமி, எஸ்.பி.ஜனநாதன், ஏ.வெங்கடேஷ், ரேணிகுண்டா இயக்குனர் ஆர்.பன்னீர்செல்வம் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அருண் விஜய்

இந்த விழாவில் நடிகர் அருண் விஜய் பேசும்போது, இந்த படத்தின் முதல்நாள் படப்பிடிப்பின்போது கார்த்திகா காரை ஓட்டுவதுபோலவும், நானும், சதீஷும் அந்த காரில் பயணிப்பதுபோலவும் படமாக்க திட்டமிட்டிருந்தோம். இயக்குனர் கார்த்திகாவிடம் டயலாக் எல்லாம் சொல்லிவிட்டு படப்பிடிப்பை நடத்த தயாரானார். அவரும் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, நடிக்க தயாராக இருந்தார். அப்போது, கார்த்திகா நாயர் என்னிடம் காரின் கியரை எப்படி போடுவது என்று கேட்டார். அதைக் கேட்டதும் நானும், சதீஷும் ஷாக் ஆகிவிட்டோம்.

பொய் சொன்ன ராதா

கார் ஓட்டத் தெரியாதவரை வைத்து இந்த காட்சியை எப்படி எடுப்பது என்று குழம்பி இயக்குனரிடம் கேட்டோம். அவர், படம் ஆரம்பிப்பதற்கு முன்பே, கார்த்திகாவின் அம்மா ராதாவிடம் இந்த படத்தில் கார் ஓட்டுவது போன்று காட்சி இருக்கிறது என்று விளக்கி கூறியதாகவும், அதற்கு ராதா, கார்த்திகாவுக்கு நன்றாக கார் ஓட்டத் தெரியும் என்று கூறியதாகவும் எங்களிடம் கூறினார்.

கார் ஓட்டத் தெரியவில்லை

ஆகையால், கார்த்திகா சும்மா தமாஷுக்காகத்தான் அப்படி சொல்கிறார் என்று நினைத்து படப்பிடிப்பை தொடங்கினோம். ஆனால், உண்மையிலேயே கார்த்திகாவுக்கு கார் ஓட்டத் தெரியவில்லை.

விபத்திலிருந்து தப்பினோம்

படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது கார்த்திகா காரில் உள்ள பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்திவிட்டார். உடனே கார் தாறுமாறாக ஓடியது. உடனே நான் சுதாரித்து காரை ஒருவழியாக நிதானத்துக்கு கொண்டுவந்து விட்டேன். ஒரு பெரிய விபத்திலிருந்து தப்பினோம் என்றுதான் சொல்லவேண்டும்," என்றார்.

 

வை ராஜா வை- படத்தில் எஸ்ஜே சூர்யா!

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள வை ராஜா வை படத்தில் ஒரு பாடல் காட்சியில் எஸ்ஜே சூர்யா நடனம் ஆடியுள்ளார்.

‘நியூ' படத்தில் நடிகராக அறிமுகமானார் எஸ்ஜே சூர்யா. ஆரம்பத்தில் விமர்சனங்களைச் சந்தித்தாலும், தனது தன்னம்பிக்கை மூலம் அதை வென்று ஒரு நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

வை ராஜா வை- படத்தில் எஸ்ஜே சூர்யா!

இவரை வெளிப்படங்களிலும் நாயகனாக அல்லது முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளனர். நண்பனில் கெஸ்ட் ரோலில் வந்தார். இவருக்காக இவர் பாணியிலேயே காட்சியை வைத்திருப்பார் ஷங்கர்.

தற்போது வை ராஜா வை படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள இந்தப் படத்தில் அவரது நடனம் பலரையும் கவரும் என்கிறார் ஐஸ்வர்யா.

அவர் கூறுகையில், "எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு, நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இதைப்பற்றி எஸ்.ஜே.சூர்யாவிடம் சொன்னதும் அவர் உடனே நடனம் ஆட ஒப்புக்கொண்டார்," என்றார்.

 

எனக்கும் ரஜினிக்கும் சம்பளம் கொடுத்துட்டா படத்தை எப்படி எடுப்பீங்க?- கமல் கேள்வி

ரஜினியுடன் சேர்ந்து நடிப்பேன்... ஆனால் கெஸ்ட் ரோலில் மட்டுமே என்று கூறியுள்ளார் கமல் ஹாஸன்.

சமீப காலமாக ரஜினி படத்தில் கமல் வில்லனாக நடிக்கிறார் என்ற பேச்சு உலா வருகிறது. ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை என்பதை கமல் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார் விகடன் பேட்டியில்.

எனக்கும் ரஜினிக்கும் சம்பளம் கொடுத்துட்டா படத்தை எப்படி எடுப்பீங்க?- கமல் கேள்வி

அந்த பேட்டியில் கமலிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அவரது பதிலும்:

'ரஜினியும் நீங்களும் சேர்ந்து நடிக்கலாமே... ஏன் இன்னும் திட்டமிட்டுத் தவிர்க்கிறீங்க?'

''என்னத்துக்கு? எங்க ரெண்டு பேருக்கும் சம்பளம் கொடுத்துட்டா, படத்தை எதை வெச்சு எடுக்கிறது? படத்தோட விலையை ஏன் அவ்வளவு ஏத்தணும்?

யோசிங்க..! வருமானத்துக்கு ஆசைப்படுபவர்கள் மட்டும்தான் இந்தக் கூட்டு முயற்சியில ஆர்வம் காட்டுவார்கள்.

வேணும்னா, ரெண்டு பேரும் கெஸ்ட் ரோல்ல ஒரு படத்துல நடிக்கலாம். இதுக்காக ஏன் வர்த்தக ரீதியா குழப்பத்தை உண்டாக்கணும்? எங்க சம்பளத்தை நாங்க ஏன் குறைச்சுக்கணும்? அந்தத் தியாகத்தை நாங்க யாருக்காக பண்ணணும்?

ரசிகர்களுக்காக பண்ணுங்கன்னா, அதான் சின்னதா ஒரு கெஸ்ட் ரோல் பண்றோம்னு சொல்றேனே! எங்களை ஒரு படத்துல சேர்ந்து பார்த்த சந்தோஷம் அவங்களுக்குக் கிடைச்சுருமே.

படம் பூரா நாங்க சேர்ந்து நடிச்சு எந்தத் தியாகமும் பண்ண வேண்டியது இல்லை. இது எல்லாத்தையும்விட, நல்ல கதை வேணும். தேவை இல்லாம ரசிகர்கள் தியேட்டர்ல அடிச்சுக்கக் கூடாது. இது பத்திலாம் நாங்க ரெண்டு பேரும் பலமுறை பேசியிருக்கோம்.

'கமல் 'மருதநாயகம்'ல நான் நடிச்சுக்கட்டுமா?'னு அவர் கேட்டார். என்ன வேஷம் எனக்குக் கொடுப்பீங்க?'ன்னும் கேட்டிருக்கார். அவர் படத்துல நான் நடிக்கக் கேட்டப்போ, 'படத்துல ஒரே ஒரு நல்ல வேஷம். அதை நானே செய்றேனே. போயிடுங்க.... நீங்க வராதீங்க கமல்'னு சிரிச்சுட்டே சொன்னார்.

இதெல்லாம் நாங்க தமாஷா பேசிக்கிற விஷயங்கள். ஆனா, படமா பண்றப்ப தமாஷ் ஆகிடக் கூடாதுல்ல!''

 

"கிளிசரின் இல்லாமல் அழுதேன்" ...மனம் திறந்த "கங்காரு" பிரியங்கா

சென்னை: கங்காரு படத்தில் கிளிசரின் இல்லாமலேயே பல காட்சிகளுக்கு அழுததாக நடிகை பிரியங்கா தெரிவித்துள்ளார்.

"கங்காரு" படத்தின் அனுபவம் பற்றிக் கூறும் போது, "நான் நடித்த முதல்படம் "அகடம்" கின்னஸ் சாதனைப் படம். அடுத்த படம்தான் கங்காரு. இது நல்ல கதைக்காக சிறந்த நடிப்புக்காக பேசப்பட இருக்கும் சாதனைப் படம் என்பேன்.

என் கேரக்டரில் நடிக்க பலர் வந்து இருந்தாலும் என்னையே சாமி சார் தேர்வு செய்தார். காரணம் தேர்வு செய்யும் போது ஸ்டில்ஸ் எடுத்தார்கள். 2, 3 வசனம் பேசச் சொன்னார்.

ஒரு எமோஷனல் சீனை நடித்துக் காட்டச் சொன்னார். நடித்துக் காட்டினேன், அதுவும் கிளிசரின் இல்லாமல் நடித்துக் காட்டினேன். அவ்வளவுதான் அது பிடித்துப் போய் சாமி சார் நீதான் தங்கையாக நடிக்கிறே என்றார்.

அதேபோல் படப்பிடிப்பு தொடங்கி 2 ஆவது நாளே ஒரு காட்சி. என் லவ்வர் இறந்து விடுவார். படிகளில் ஓடிவந்து அழ வேண்டும். படி சறுக்கி கைகளில் அடிபட்டு சிராய்ப்பு எல்லாம் வந்து விட்டது.

அப்போதும் கிளிசரின் இல்லாமல் அழுது விட்டேன். நான் நடித்ததைப் பார்த்து அடிபட்டதை பார்த்து யூனிட்டே கண்கலங்கினார்கள்.

அர்ஜுனா என் அண்ணனாக வருகிறார். நடிக்கும் முன் நாங்கள் கலந்து பேசி புரிந்து நடித்தோம். எதையும் ஒரு முறை மானிட்டர் பார்த்து நடித்தது சுலபமாக இருந்தது" என்கிறார்.

 

இந்தியாவில் ரூ 100 கோடியைக் குவித்த முதல் ஹாலிவுட் படம் ஃபாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் 7!

இந்தியாவில் ரூ 100 கோடியைக் குவித்த முதல் ஹாலிவுட் அல்லது வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பெருமையைப் பெறுகிறது ஃபாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் 7.

ஜேம்ஸ் வான் இயக்கத்தில் பால் வாக்கர் நடித்துள்ள இந்தப் படம் இந்தியாவில் மூன்று வாரங்களுக்கு முன் வெளியானது.

இந்தியாவில் ரூ 100 கோடியைக் குவித்த முதல் ஹாலிவுட் படம் ஃபாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் 7!

படத்துக்கு உலகெங்கும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் 2800 அரங்குகளில் வெளியானது. ஆங்கிலத்தில் மட்டுமில்லாமல், தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் படத்தை வெளியிட்டனர்.

2013-ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் பலியான நடிகர் பால் வாக்கரின் கடைசிப் படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த நெகிழ்ச்சியுடன் படத்தைப் பார்த்தனர்.

மொத்தம் ரூ 146 கோடியை இந்தியாவில் மட்டும் வசூலித்த இந்தப் படம், வரிகள் போக நிகர வசூலாக ரூ 104 கோடியைக் குவித்துள்ள்ளது.

இந்திய சினிமா வரலாற்றில், ஹாலிவுட் படம் ஒன்று இவ்வளவு வசூல் குவித்திருப்பது இதுவே முதல் முறை.

 

உத்தரவு மகாராஜா.. எஸ்ஜே சூர்யாவுடன் களமிறங்கும் உதயா!

நடிகர் உதயாவை நினைவிருக்கிறதா... தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனின் மகன். இயக்குநர் விஜய்யின் அண்ணன்.

திருநெல்வேலி', ‘ஷக்கலக்க பேபி', ‘கணபதி வந்தாச்சு', ‘ராரா', 'பூவா தலையா' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பெரிய திருப்புமுனை இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த முறை கிடைத்துவிடும் என நம்புகிறார்.

உத்தரவு மகாராஜா.. எஸ்ஜே சூர்யாவுடன் களமிறங்கும் உதயா!

இப்போது இரு படங்களில் நடித்து வருகிறார். ஒன்று ஆவி குமார். இந்தப் படம் கிட்டத்தட்ட முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

அடுத்து ‘உத்தரவு மகாராஜா' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

புதுமுக இயக்குனர் ஆஷிப் குரைஷி இயக்கும் இந்த படத்தில் உதயாவுக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் மகாராஜா கதாபாத்திரத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இப்படம் சைக்கோ திரில்லர் மற்றும் காமெடி கலந்து உருவாகவிருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஜூலையில் தொடங்க இருக்கிறார்கள். பெங்களூர், கோவை, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இன்று உதயாவின் பிறந்த நாளும் கூட. இந்த பிறந்த நாளை பயனுள்ள வகையில் கொண்டாட முடிவு செய்துள்ள உதயா, தன்னுடைய உடல் உறுப்புகள் அனைத்தையும் மோகன் பவுண்டேஷன் என்ற அமைப்பு மூலம் தானம் செய்துள்ளார்.

 

அதெப்படி என் பட கதையைக் கூறச் சொல்லி குஷ்பு கட்டாயப்படுத்தலாம்? - இயக்குநர்

குப்பி, வனயுத்தம் படங்களை இயக்கிய ஏ எம் ஆர் ரமேஷ், குஷ்புவைக் கண்டித்துள்ளார், திடீரென்று.

காரணம், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் என்ற புதுப் பதவியில் அமர்ந்திருக்கும் குஷ்பு, ரமேஷ் இயக்கும் அடுத்த படமான ஒரு மெல்லிய கோடு படத்தின் கதையை தன்னிடம் கூறுமாறு நிர்பந்தம் செய்கிறாராம்.

அந்தக் கதை முன்னாள் அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்படுவதாக அறிந்த குஷ்பு, உடனே ரமேஷின் குழுவிலுள்ள ஒருவருக்கு போன் போட்டு, முதல்ல கதையை என்கிட்ட சொல்லுங்க, என்றாராம்.

அதெப்படி என் பட கதையைக் கூறச் சொல்லி குஷ்பு கட்டாயப்படுத்தலாம்? -  இயக்குநர்

இதுகுறித்து ஏஎம்ஆர் ரமேஷ் கூறுகையில், "நடிகை குஷ்பு எங்கள் படக்குழுவை சேர்ந்த ஒருவரிடம் தொடர்பு கொண்டு படத்தின் கதை பற்றி விவாதித்துள்ளார். சுனந்தா புஷ்கர் வாழ்க்கை கதையையா படமாக்குகிறீர்கள் என்றும் கேட்டுள்ளார்.

இந்த படத்தின் மீது குஷ்பு ஏன் ஆர்வம் காட்டுகிறார் என்று புரியவில்லை. குஷ்பு காங்கிரசில் இருக்கிறார். நான் சுனந்தா புஷ்கர் வாழ்க்கையை படமாக்குகிறேன் என்று டெல்லியில் உள்ள யாரேனும் சந்தேகித்து குஷ்புவிடம் விசாரிக்க சொல்லி இருக்கலாம். ஆனாலும் என் படத்தின் கதையை யாரிடமும் நான் சொல்ல மாட்டேன்.

எந்த ஒரு நடிகரோ, டைரக்டரோ அவர்கள் படத்தின் கதையை வெளியே சொல்வது இல்லை. எனது உதவி இயக்குனர்களுக்குகூட இந்த படத்தின் கதை எதை பற்றியது என்று தெரியாது. குஷ்புவுக்கு கதை பற்றி தெரிய வேண்டுமானால் என்னிடம் நேரிலே பேசலாம்.

இப்போது சொல்கிறேன். இந்த படம் ஒரு மர்மமான கொலை பற்றியதுதான். மனிஷா கொய்ராலா கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை பற்றி துப்பு துலக்குவதுதான் கதை. படத்தை பற்றி வேறு எதையும் நான் சொல்ல மாட்டேன் ," என்றார்.

(சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன்னு முழுசா சொல்லிட்டீங்களே.. அப்புறமென்ன!)

குஷ்பு மறுப்பு

ஆனால் இதனை குஷ்பு மறுத்துள்ளார். தான் அப்படி யாரிடமும் கேட்கவில்லை என்றும், அவர்கள்தான் தன்னை படத்தில் நடிக்கக் கேட்டதாகவும், தான் மறுத்துவிட்டதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அப்படின்னா.. இதுவும் 'பப்ளிகுட்டி' ஸ்டன்ட்தானா டைரக்டர்!

 

ஓ காதல் கண்மணி விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.0/5

நடிகர்கள்: துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன்
ஒளிப்பதிவு: பிசி ஸ்ரீராம்
இசை: ஏ ஆர் ரஹ்மான்
தயாரிப்பு: மெட்ராஸ் டாக்கீஸ்
எழுத்து, இயக்கம்: மணிரத்னம்

திருமணத்தில் நம்பிக்கை இல்லாத இருவர், மெல்ல மெல்ல திருமண உறவின் அருமையைப் புரிந்து கொள்வதுதான் ஓ காதல் கண்மணியின் ஒரு வரிக் கதை.

எதற்கு வம்பு என்று நேராக மும்பைக்கே கதையை ஷிப்ட் பண்ணிவிட்டார் மணிரத்னம். பெரிய பணக்காரனாகும் ஆசையில் மும்பைக்கு வரும் துல்கர், ஒரு நாள் ரயில் நிலையத்தில் நித்யா மேனனைப் பார்க்கிறார். அடுத்த நாள் சர்ச்சில் ஒரு திருமணத்தில் பார்க்கிறார். அந்த நிமிடத்திலிருந்து காதலிக்க அல்லது நெருக்கமாகப் பழக ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் திருமணத்தில் இருவருக்கும் நம்பிக்கை இல்லை. அடுத்த ஆறு மாதங்களில் மேற்படிப்புக்காக நித்யா பாரீஸ் போக வேண்டும். துல்கரும் அமெரிக்கா போய் நிறைய சம்பாதிக்கும் திட்டத்திலிருக்கிறார்.

ஓ காதல் கண்மணி விமர்சனம்

இந்த இடைவெளிக்குள் அனைத்து சுகங்களையும் அனுபவித்துவிட வேண்டும் என்பதுதான் இருவரின் நோக்கம். தங்கள் முதல் 'கூடலை' நித்யா மேனனின் விடுதியிலேயே அரங்கேற்றிவிடுகிறார்கள். அடுத்த நாளே தான் வசிக்கும் பிரகாஷ்ராஜ் வீட்டுக்கு அழைத்து வந்து தங்களின் 'லிவிங் டுகெதர்' வாழ்க்கைக்கு அனுமதி கேட்கிறார். முதலில் கறாராக அனுமதிக்க மறுக்கும் பிரகாஷ் ராஜ், தன் 'அல்சீமர்' மனைவி லீலா சாம்சனுடன் நித்யா சரளமாக பழகி, பாட்டுப் பாடியதைப் பார்த்து நெகிழ்ந்து அனுமதி கொடுத்து விடுகிறார். அப்புறமென்ன.. திகட்டத் திகட்ட உரசி, உறவு கொள்கிறார்கள், படத்தின் கடைசி கால் மணி நேரத்துக்கு முன்பு வரை!

ஓ காதல் கண்மணி விமர்சனம்

இந்தக் கதையை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை. திருமண உறவின் பெருமையைச் சொல்வதாகக் கூறிக் கொண்டு, அந்த சிஸ்டத்தையே கேள்விக்குறியாக்கும் முயற்சியாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. நல்ல காதல் கதை என்றெல்லாம் இந்தப் படத்தைச் சொல்ல முடியாது.

அழகான காட்சிகளை இனிமையான இசையில் தோய்த்துக் கோர்த்திருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

[ஓ காதல் கண்மணி படங்கள்]

குறிப்பாக அந்த முதல் காட்சி... இதான்யா பிசி ஸ்ரீராம் என்று சொல்ல வைக்கிறது. அதன் பிறகு படம் முழுக்க அடிக்கடி அப்படிச் சொல்ல வைத்தது!

ரஹ்மானின் பின்னணி இசை, பிசி ஸ்ரீராமின் காமிராவோடே பயணிக்கிறது, நம்மை எப்போதும் ஒரு இதமான சூழலில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

ஓ காதல் கண்மணி விமர்சனம்

இன்னொரு முக்கியமான விஷயம், மணிரத்னத்தின் வழக்கமான வசன பாணியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம். இந்தப் படத்தை அரங்கில் உட்கார்ந்து பார்க்க வைப்பது இந்த மூன்று விஷயங்கள்தான்.

உயர் மேல்தட்டு வர்க்க இளைஞன் வேடத்துக்கு நூறு சதம் பக்காவாகப் பொந்துகிறார் துல்கர். குரல் மிகப் பெரிய ப்ளஸ். இளம் வயதுக்கே உரிய துள்ளல் உடல் மொழி, காதல் காட்சிகளில் சரியாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல் என அனைத்திலுமே டிஸ்டிங்ஷன். தமிழுக்கு ஒரு நல்ல வரவுதான்.

நித்யா மேனன்... இதுவரை சுமார் நடிகையாகப் பார்க்கப்பட்ட இந்தப் பெண், இனி நிறைய இளைஞர்களின் கனவுகளில் துரத்தப் போகிறவராக மாறிவிட்டார். முதல் நன்றியை பிசி ஸ்ரீராமுக்குதான் அவர் சொல்ல வேண்டும்.

ஓ காதல் கண்மணி விமர்சனம்

பிரகாஷ் ராஜ் - லீலா சாம்சன் இருவருமே அந்த பாத்திரங்களாக மாறியிருக்கிறார்கள்.

இந்தக் கதை சரியா... இப்போது கிடைத்திருக்கும் வரவேற்பு, இனி இதுபோன்ற படங்கள் பெருக வழிவகுக்குமே.. என்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஏற்கெனவே டாஸ்மாக்கிலும் சகல வித போதைகளிலும் சீரழிந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில், எவ்வளவு கெட்ட விஷயமாக இருந்தாலும் அதை கொஞ்சம் கவர்ச்சியாகச் சொன்னால் கொண்டாடும் ஒரு சமூகத்தில், இந்த மாதிரிக் கதைகள் பெறும் வெற்றி ஆபத்தானதும் கூட. 'மணிரத்னம் படப் பாணியில்...' என்ற தலைப்புடன் மீடியாக்களில் வாழ்க்கை தோல்விக் கதைகள் கிளம்பாமலிருக்க வேண்டுமே என்ற கவலைதான் படத்தைப் பார்த்து முடித்தபோது எழுந்தது!

ஓ காதல் கண்மணி விமர்சனம்

பள்ளி, இள நிலை கல்லூரி மாணவ மாணவிகள் கட்டாயம் பார்க்காமல் தவிர்க்க வேண்டிய படம்... அந்த வயதினர் காதல் என்ற பெயரில் செய்யும் அத்தனை எல்லை மீறல்களையும் நியாயப்படுத்தும் படம் இது. கொடுத்திருக்கும் மூன்று ஸ்டார்கள் படத்தின் தொழில்நுட்ப நேர்த்திக்காக மட்டுமே.. கதைக்கு -3!

 

'Readers Review': ஓ காதல் கண்மணி விமர்சனம்

நடிகர், நடிகைகள்: துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், லீமா சம்சன்

இசை: ஏ ஆர் ரஹ்மான்

ஒளிப்பதிவு : பி சி ஸ்ரீராம்

எழுத்து, வசனம், இயக்கம்: மணி ரத்னம்

பாடல் வரிகள்: வைரமுத்து

திருமணம் ஆகி இருவரும் பிரிந்து இருந்தாலும் சரி, திருமணம் ஆகாமல் இருவரும் இணைந்து வாழ்ந்தாலும் சரி, அங்கு பயணிப்பது காதல் மட்டும் தான். காதல் என்ற ஒற்றை வார்த்தை சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு வெற்றியை தக்க வைத்து கொண்டுள்ளவர் தான் மணிரத்னம்.

கதை:

காதல். எங்கும், எதிலும், யாரிடம் வேண்டுமானாலும் பயணிக்கலாம். இது மணிரத்னம் கதையின் வாழ்வாதாரம் போலும்.திருமணத்தில் நம்பிக்கையில்லை என்ற ஒற்றை புள்ளியில் வெவ்வேறு இலக்கோடு வாழும் இருவர் காதலில் விழுகின்றனர். காதல் மட்டுமில்லாது, இருவரும் ஒன்றாய் வாழ்கின்றனர். இவர்களின் வீட்டில் திருமணம் செய்ய வற்புறுத்துவதால், இவர்களின் பயணம் தொடர்ந்து திருமணத்தில் தொடர்கின்றதா? அல்லது அவரவர் லட்சியத்தில் முடிகிறதா? என்பது கதையின் முற்றுப் புள்ளி.

கலைஞர்களின் பங்களிப்பு:

துல்கர் துள்ளலான நடிப்பின் மூலம் இன்றைய இளம் காதல் கதாநாயகன் என்ற பெயரினை மட்டுமில்லை, இன்றைய இளம் பெண்களின் மனதையும் கொள்ளை கொண்டவராகவும் வலம் வருகிறார். தாராவாக வரும் நித்யா மேனன் தாராளமாகவே நடித்துள்ளார். இவரின் முக பாவனை, கிண்டல் பேச்சு அனைத்தும் அனைவரின் கைதட்டலையும் பெறுகின்றது.

ஞாபக மறதியால் வாடும் லீமா சம்சன் மற்றும் அவரை நேசிக்கும் கணவர் பிரகாஷ் ராஜ் காதலுக்கு முன்னுதாரனமாய் வரும் ஜோடிகளின் நடிப்பு அசத்தல்.

வைரமுத்துவின் பாடல் வரிகள் மற்றும் எ ஆர் ரஹ்மானின் இசை படத்தின் யானை பலம் என்றே கூறலாம். மணிரத்னத்தின் வசனங்களும் கதாப்பத்திரங்களும் குறை கூற முடியாத அளவு. இப்படத்தின் மிகப்பெரிய பலமே பி சி ஸ்ரீராம் என்று கூறலாம். பி சி ஸ்ரீராம் தன்னுடைய ஒளிப்பதிவால் இத்திரைப்படத்தினை முழுமைபெற செய்துள்ளார்.

மொத்தத்தில் கதை எப்படி..?

துள்ளலான துல்கரின் நடிப்பு, பி சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, எ ஆர் ரஹ்மானின் இசை, மணிரத்னத்தின் இலக்கே இல்லாத கதை மொத்தத்தில் ஓ காதல் கண்மணி, ஓகே கண்மணி..

மணிரத்னத்தின் இக்காதல் பயணமும் வெற்றியை குறி வைக்கிறது.

 

வாஹே குரு, என் படம் ஹிட்டாகணும்: பொற்கோவிலில் மாதவன் பிரார்த்தனை

மும்பை: தான் நடித்துள்ள இந்தி படமான தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் வெற்றி பெற வேண்டி மாதவன் பொற்கோவிலில் பிரார்த்தனை செய்தார்.

மாதவன், கங்கனா ரனாவத் நடித்த தனு வெட்ஸ் மனு படம் ஹிட்டானது. இதையடுத்து இயக்குனர் ஆனந்த் எல் ராய் மாதவன், கங்கனாவை வைத்து தனு வெட்ஸ் மனு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.

வாஹே குரு, என் படம் ஹிட்டாகணும்: பொற்கோவிலில் மாதவன் பிரார்த்தனை

தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கங்கனா அடக்கமான பெண்ணாகவும், தில்லான பெண்ணாகவும் 2 வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் விளம்பர வேலலையை துவங்கும் முன்பு மாதவன் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றார்.

தன்னுடைய படம் வெற்றியடைய வேண்டும் என்று மாதவன் பிரார்த்தனை செய்தார். மாதவன் இறுதிச் சுற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் நடித்திருக்கும் சாலா கடூஸ் இந்தி படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

கங்கனா ரனாவத் 2 தேசிய விருது வாங்கிய நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

 

அட்சய திரிதியை நாளில் பெண் குழந்தைக்கு அப்பாவான விவேக் ஓபராய்

மும்பை: அட்சய திரிதியை தினமான நேற்று பாலிவுட் நடிகரான விவேக் ஓபராயின் மனைவி பிரியங்காவுக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் விவேக் ஓபராய்.

கர்நாடக மாநில அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகளான பிரியங்கா ஆல்வாவை கடந்த 29-10-2010 அன்று விவேக் ஓபராய் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விவான் வீர்ஒபராய் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தற்போது இரண்டாவதாக பெண் குழந்தைக்கும் தந்தையாகியுள்ளார் விவேக் ஓபராய்.

அட்சய திரிதியை நாளில் பெண் குழந்தைக்கு அப்பாவான விவேக் ஓபராய்

இந்த தகவலையறிந்த பாலிவுட் நட்சத்திரங்களும் பிரபலங்களும் செல்போன் மூலமாகவும் ஃ பேஸ்புக், ட்விட்டர் மூலமாகவும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு இந்தியாவை முதன்முறையாக சுனாமி தாக்கியபோது சென்னையில் தங்கியிருந்த விவேக் ஓபராய், அப்போது தமிழக மக்களுக்கு 6 லாரி நிறைய நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்து உதவி செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டு சின்னாபின்னமாகிப்போன ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அந்த கிராம மக்களின் புனர்வாழ்வுக்கு ஏராளமான பணத்தை செலவழித்து பல நலத்திட்டங்களை நிறைவேற்றி தந்தார்.

புகையிலைப் பழக்கத்துக்கு எதிரான உலக சுகாதார மையத்தின் நல்லெண்ணத் தூதராகவும் பணியாற்றிவரும் விவேக் ஓபராய், தனது தொண்டு நிறுவனத்தின் மூலமாக சென்னை மற்றும் மும்பையில் பல்வேறு சமூகச் சேவைகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அடுத்து பாலிவுட் படம்... தனுஷுடன் கைகோர்க்கிறார் மணிரத்னம்!

விமர்சனங்கள் இருந்தாலும், ஓகே கண்மணி வெற்றிகரமாக ஓடுவதில் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார் மணிரத்னம்.

அந்த சந்தோஷத்தோடு, அடுத்த வேலைக்கான ஆயத்தங்களில் இறங்கியுள்ளார். பாலிவுட் பட நிறுவனங்கள் சில அவரை அணுகி படம் பண்ணித் தர கேட்டுள்ளார்களாம்.

இதைத் தொடர்ந்து அடுத்து இந்தியில் படம் இயக்கப் போகிறார் மணிரத்னம்.

அடுத்து பாலிவுட் படம்... தனுஷுடன் கைகோர்க்கிறார் மணிரத்னம்!

இதில் தனுஷை நாயகனாக்க திட்டமிட்டுள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

தனுஷும் மணிரத்னத்துடன் இணைய ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கெனவே ராஞ்ஜனா, ஷமிதாப் படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் நல்ல மார்க்கெட் உள்ளது தனுஷுக்கு.