போட்டியைச் சமாளிக்கவும், நல்ல தியேட்டர்களைப் பிடிக்கவும் தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன், கத்தி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாம் லைகா நிறுவனம்.
விஜய் - சமந்தா நடிப்பில், அனிருத் இசையமைப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் திரைப்படம் ‘கத்தி'. படத்தின் இறுதிகட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டு பணிகளைச் செய்து வந்தனர்.
ஆனால் தீபாவளிக்கு பூஜை மற்றும் பூலோகம் படங்கள் வருவது உறுதியாகியுள்ளது. எனவே திரையரங்குகள் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
குறிப்பாக விஷாலின் பூஜை படத்துக்கு 350 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தன் பூலோகம் படத்தை வாங்கி வெளியிடுவோருக்குதான் படத்தைத் தருவேன் நிபந்தனை விதித்துள்ளதால், நல்ல அரங்குகள் அனைத்தும் இந்த இரு படங்களுக்கும் போகும் நிலை உள்ளது.
எனவே தீபாவளிக்கு முன்கூட்டியே அக்டோபர் 17ம் தேதி (வெள்ளிகிழமை) கத்தி படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அப்படி முன்கூட்டி ரிலீஸாகும் பட்சத்தில் படத்திற்கு மொத்தமாக பத்து நாட்கள் வசூல் கிடைக்கும். நான்கு நாட்களுக்கு போட்டியின்றி படத்தை ஓட்டி விடலாம் என்று தயாரிப்பாளர் தரப்பு நம்புகிறது.