இந்தியாவின் தலைசிறந்த பாடகரான மோஹித் சவ்ஹான் பிரஷாந்தின் சாஹசம் படத்திற்காக பாடிய பாடலை மும்பையில் பதிவு செய்தனர்.
கவிஞர் நா.முத்துகுமார் எழுதிய
'பெண்ணே பெண்ணே...
குட்டிப் பெண்ணே ஆங்கிரி பேர்ட் பெண்ணே...
சும்மா சீனு வேணா(ம்) கண்ணே,
உங்க நைனா போட்ட சோத்தில்.. காரம் ரொம்போ...
குல்பி வாங்கித்தாரேன் கண்ணே..
என்ற வரிகளை மோஹித் சவ்ஹான் தனது மயக்கும் குரலில் பாடி அசத்தினார்.
இசையமைப்பாளர் தமன், சாஹசம் படத்திற்காக 6 மாதங்களாக இசை கோர்ப்பு செய்து 5 பாடல்களை ரெக்கார்ட் செய்துள்ளார். ஏற்கனவே ஆண்ட்ரியா, லட்சுமி மேனன், ஸ்ரெயா கோஷல், ஹனி சிங், சங்கர் மகாதேவன் ஆகியோர் சாஹசம் படத்திற்காக பாடியது தெரிந்ததே.
நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளரான தியாகராஜன் மோஹித் சவ்ஹானை பெரிய முயற்சிக்குப்பின் சாஹசம் படத்தில் பாட வைத்துள்ளார். பாடலைக் கேட்ட அனைவரும் 5 பாடல்களில் எதை முதல் பாடலாக தேர்வு செய்வதென்று ஒரு குழப்பத்தில் உள்ளார்களாம். அந்தளவுக்கு தமன் 5 பாடல்களையும் வித்தியாசமாக இசையமைத்துள்ளார்.
மோஹித் சவ்ஹானைப் பற்றி நடிகர் தியாகராஜன் கூறுகையில், "மிக அருமையான குரல் வளமிக்க மோஹித் சவ்ஹான் இசையில் மட்டுமல்ல பழகுவதற்கும் இனிமையான மனிதர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடிய பாடலை கேட்ட நாள்முதல் பிரஷாந்தின் சாஹசம் படத்தில் இவரை பாட வைக்க வேண்டுமென நினைத்தேன். நீண்ட முயற்சிக்குப் பிறகு அது நிறைவேறியது எனக்கு மகிழ்ச்சி. மிகச் சிறப்பாக வந்துள்ள ஆங்கிரி பேர்ட் பெண்ணே பாடலை இளம் காதலர்களுகாக டெடிக்கேட் செய்கிறேன்," என்றார்.
இந்த பாடலை இளைஞர்கள் மட்டுமல்ல இசை விரும்பிகள் அனைவருமே காதலிப்பார்கள். மோஹித் சவ்ஹான் ராக் ஸ்டார், டெல்லி 6, ரங்தே பசந்தி, ஜப்வி மெட் ஆகிய இந்தி படங்களில் பாடிய அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியடைந்தன. அகில இந்திய அளவில் சிறந்த பாடகருக்கான விருதை தொடர்ந்து 5 வருடங்களாக பெற்று வருகிறார் மோஹித் சவ்ஹான். இவர் ஏற்கனவே அனிருத் இசையில் 3 படத்திற்காக பாடிய போ நீ போ... என்ற பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்ததோடல்லாமல் சிறந்த பாடகருக்கான விஜய் விருதையும் பெற்று தந்தது.
சாஹசம் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது.