கடந்த திங்கட்கிழமை பைதுஷி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அருகில், கண்ணாடி அலமாரி உடைந்து கிடந்ததால், அலமாரி விழுந்து அவர் இறந்திருக்கலாம் என போலீசார் முதலில் கருதினர். ஆனால், பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பைதுஷி கழுத்தில் நகக்கீறல்கள் இருந்தன. இதனால், கேதாரின் நகம் மாதிரியை தடயவியல் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.
16 வயது முதலே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த பைதுஷி, சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் மன ரீதியாகவும் கடுமையாக பாதித்திருந்தார். இந்த இரு நோய்களுக்கும் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும், ஓராண்டுக்கு முன் ஏற்பட்ட விபத்து காரணமாக பைதுஷியின் தலை முடி கொட்டியது. அதற்காகவும் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சிகிச்சைகளுக்கு பெரும் தொகை செலவாகி வந்தது. இதனால், பைதுஷிக்கும் கேதாருக்கும் சில மாதங்களாக அடிக்கடி சண்டை நடந்துள்ளது. கேதாருக்கு மாத சம்பளமாக ஸி60 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது. இதில், வீட்டு வாடகைக்கு ரூ. 22 ஆயிரம் தருகிறார். இது போக பைதுஷியின் மருத்துவச் செலவுக்கும் பணத்தை செலவு செய்துள்ளார்.
தினமும் மூன்று வேளை இன்சுலின் ஊசியை பைதுஷி பயன்படுத்தியுள்ளார். இதனால், பணப் பிரச்னை ஏற்பட்டதால் சிகிச்சைக்கான பணத்தை சம்பாதித்து கொள்ளும்படி பைதுஷியிடம் கேதார் கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட சண்டையால் பைதுஷியின் மனநிலை மேலும் பாதித்துள்ளது.
கொலை நடந்த அன்று காலையும் கேதாருடன் பைதுஷி சண்டை போட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட கோபத்தில் பைதுஷியை கேதார் தாக்கி, கண்ணாடி அலமாரியை அவர் மீது தள்ளி விட்டதால் எதிர்பாராத விதமாக பைதுஷி இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக 4வது நாளாக கேதாரிடம் போலீசார் நேற்றும் விசாரித்தனர். அவர் மீது சந்தேகம் வலுத்து வருவதால் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. கொலை பற்றி விசாரித்து வரும் அந்தேரி டி.என். நகர் போலீஸ் அதிகாரி கூறியதாவது;
கொலை நடந்த அன்று காலை 8 மணிக்கு வேலைக்கு புறப்பட்டு சென்ற கேதார், அடுத்த ஒரு மணிநேரத்தில் பைதுஷி மொபைலுக்கு போன் செய்துள்ளார். அதற்கு பதில் இல்லாததால், பைதுஷியை மிகவும் நேசிப்பதாக எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார். பைதுஷி எந்த பதிலும் அளிக்காத நிலையில், வீட்டின் மேல்தளத்தில் வசிக்கும் வீட்டின் உரிமையாள ருக்கு போன் செய்து கேதார் விவரம் கேட்டிருக்கலாம். அப்படி செய்யவில்லை. காலை 10 மணிக்கு கேதார் தனது தந்தைக்கு போன் செய்து, பைதுஷி பதில் அளிக்காதது பற்றி கூறியுள்ளார். பிறகு இரவு 7 மணிக்கு பைதுஷியின் தந்தை சாந்தனு தாசுக்கு போன் செய்து, பைதுஷிக்கு பலமுறை போன் செய்தும் போனை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
திருமணமான கடந்த 3 ஆண்டுகளில் கேதார் தனக்கு ஒருமுறை கூட போன் செய்ததில்லை என்றும், பைதுஷிக்கு தான் போன் செய்தாலும் கேதார் தன்னிடம் சரியாக பேசமாட்டார் என்றும் சாந்தனு கூறியுள்ளார். இதனால், கேதார் மீது சந்தேகம் அதிகமாகி உள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
மும்பை போலீஸ் வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் நாங்கரே பாட்டீல் கூறுகையில், ''பைதுஷி கழுத்தில் உள்ள கீறல்கள் கேதாரின் நகத்தால் ஏற்படுத்தப்பட்டதா என்பது பரிசோதனையில் உறுதியானால், அவர் கைது செய்யப்படுவார். கொலை நடந்தன்று பைதுஷியை பார்க்க 3 பேர் வந்துள்ளனர். அவர்களை பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.