சென்னை: கத்தி படத்தை பிரச்சனை இன்றி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் சந்திக்க உள்ளனர்.
விஜய், சமந்தா நடித்து வரும் கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் மாதம் லண்டனில் பிரமாண்டமாக நடக்க உள்ளது. இந்நிலையில் படத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கத்தி படத்தை இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மிகவும் நெருக்கமானவர் தயாரிக்கிறார் என்று கூறி சிலர் போராட்டத்தில் குதித்தனர்.
படத்தை ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் ஒன்றும் தயாரிக்கவில்லை. அவர் இலங்கையில் நடந்த போரால் பாதிக்கப்பட்ட ஒரு தமிழர், தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் கத்தி படத்தை பிரச்சனை இன்றி ரிலீஸ் செய்ய ஏதுவாக படக்குழுவினர் தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் விரைவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்திக்க உள்ளார்.
இலங்கை தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருவதோடு மட்டும் அல்லாமல் முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி கட்டுரை வெளியிட்டு ஒட்டு மொத்த தமிழர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.