அஜீத் சினிமா வாழ்க்கைக்கு வயது 21... வாழ்த்தும் திரையுலகம்!

அஜீத்தின் சினிமா வாழ்க்கைக்கு இன்று 21 வயதாகிறது. இந்த நாளில் அவரை சினிமா உலகப் பிரமுகர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர் அஜீத். அடுத்தடுத்து தோல்விகளையே சந்தித்தாலும், சோர்ந்து விடாமல் படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகரானார்.

அஜீத் சினிமா வாழ்க்கைக்கு வயது 21... வாழ்த்தும் திரையுலகம்!

1993 -ல் அமராவதியில் இயக்குநர் செல்வாவால் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்பட்டார் அஜீத். இந்தப் படம் பெரிதாகப் போகவில்லை. தொடர்ந்து பவித்ரா போன்ற படங்களில் நடித்தார்.

வான்மதி என்ற படம் அவரை ஓரளவு பிரபலமாக்கியது. ஆசை, காதல் கோட்டை, அவள் வருவாளா, வாலி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிட்டிசன், வில்லன், வரலாறு என பல ஹிட் படங்கள் அவருக்கு அமைந்தன.

அவர் நடிப்பில் வந்த பெரிய வெற்றிப் படம் மங்காத்தா. இது அவரது 50வது படம்.

இப்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆரம்பம் படத்தில் நடித்துள்ளார். அதற்கடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் விநாயகம் பிரதர்ஸ் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த ஆண்டோடு அஜீத் சினிமாவுக்கு வந்து 21 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த நாளில் அவருக்கு ரசிகர்களும் திரையுலக நண்பர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

 

டி.வி. நடிகையின் கார் மோதி ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்... நடிகை கைது

மும்பை: மும்பையில் டிவி நடிகை தாறுமாறாக கார் ஓட்டி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார் 4 பேர் படுகாயமடைந்தனர்.

மும்பை காந்திவிலி மேற்கு மகாவீர் நகர் பகுதியை சேர்ந்தவர் சாக்ஷி பாரிக் (வயது34). இவர் டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். இவர் நேற்று காலை 11 மணியளவில் காந்திவிலி கிழக்கு பகுதி நோக்கி தனது காரில் சென்றார்.

திடீரென சாக்ஷியின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையில் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ மீது அடுத்தடுத்து பலமாக மோதியது. இதில் ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது. பின்னர் சிறிது தூரத்தில் சாக்ஷி காரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார்.

கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற திலிப் சாந்தாராம் சோனி (30) என்ற வாலிபர் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

மேலும் ஆட்டோ டிரைவர் திலிப்காலு சோனி (43), பயணிகள் ஜெகர் கையும் சித்திக் (21), லவகுஷ் ராம்பரன் யாதவ் (20) மற்றும் அடையாளம் தெரியாத ஒருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

விபத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த சாலையில் சென்றவர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டு போரிவிலியில் உள்ள பகவதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்கு காரணமான சாக்ஷியின் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் நடிகை சாக்ஷி லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். விபத்தில் படுகாயமடைந்த திலிப் சாந்தாராம் சோனி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்த காந்திவிலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி சாக்ஷியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிரேக்கை மிதிப்பதற்கு பதில் தவறுதலாக ஆக்சிலேட்டரை மிதித்து விட்டதால் விபத்து நேரிட்டதாக வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

தெலுங்கானா விவகாரம்: ஆந்திர போராட்டக்காரர்களுக்கு அடங்க மறுத்த தமன்னா!

ஹைதராபாத்: ஒன்றுபட்ட ஆந்திராதான் வேண்டும் என போராட்டக்காரர்கள் கோஷம் போடச் சொன்னதை ஏற்காமல், அது சினிமாக்காரர்கள் வேலையல்ல என்று தைரியமாக மறுத்துப் பேசியுள்ளார் நடிகை தமன்னா.

தெலுங்கில் முதல் நிலை நடிகையாக உள்ளார் தமன்னா. இப்போது ஆந்திரா இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்படுகிறது. முன்பு தெலுங்கானா வேண்டும் என்று கோரி பெரும் போராட்டம் நடந்தது. இப்போது தெலுங்கானா வேண்டாம் என்று அதைவிட பெரிய போராட்டம் நடக்கிறது.

தெலுங்கானா விவகாரம்: ஆந்திர போராட்டக்காரர்களுக்கு அடங்க மறுத்த தமன்னா!  

நேற்று விசாகப்பட்டினம் விமான நிலையம் செல்லும் வழியிலும் ஒரு கும்பல் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். அந்த வழியாக செல்லும் வாகனங்களை மறித்து ரகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது நடிகை தமன்னாவின் காரும் அந்த கும்பலிடம் சிக்கியது.

காருக்குள் இருப்பது நடிகை தமன்னா என்பதை தெரிந்து கொண்ட போராட்டக்காரர்கள், தமன்னாவிடம், 'ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு ஜே' (சமய்கியாந்திரா) என்று சொல்லுமாறு வலியுறுத்தினர். ஆனால் அப்படி சொல்லாமல் தமன்னா தவிர்த்தார்.

சொன்னால்தான் அங்கிருந்து காரை செல்ல விடுவோம் என்று போராட்டக்காரர்கள் நிபந்தனை விதித்தனர். ஒரே சத்தமாக இருந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. உடனே அவர்களிடம் நடிகை தமன்னா, 'என்னை பேசவிடுங்கள். நான் ஒரு நடிகை. எனக்கு மொழி பேதம் இல்லை. அனைத்து மொழிகளிலும் நடிப்பதுதான் எனது தொழில். ஆந்திராவோ, தெலுங்கானாவோ, தமிழ்நாடோ எனக்கு எல்லாமே ஒன்றுதான். என்னை போகவிடுங்கள். நான் அவசரமாக செல்ல வேண்டும். இப்படி கோஷம் போடுவது என் வேலையில்லை,' என்று தெலுங்கில் சத்தமாகச் சொன்னார்.

உடனே, 'ஐக்கிய ஆந்திராவுக்கு ஜே' என்று ஒரு முறை மட்டும் சொல்லுங்கள், போகவிடுகிறோம் என்று பேரம் பேசிப் பார்த்தார்கள் போராட்டக்காரர்கள்.

ஆனால் தமன்னா கடைசி வரை அப்படி சொல்ல மாட்டேன் என உறுதியாக நின்றார்.

வேறு வழியின்றி சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு அவரது காரை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர். பின்னர் நடிகை தமன்னாவின் கார் அங்கிருந்து விமான நிலையம் நோக்கி விரைந்தது.

 

இளையராஜாவின் குரு வி தட்சிணாமூர்த்தி மரணம்

சென்னை: பழம்பெரும் இசை அமைப்பாளரும் இளையராஜாவின் குருவுமான தட்சிணாமூர்த்தி நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94.

நல்லதங்காள், நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர், ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி.

இளையராஜாவின் குரு வி தட்சிணாமூர்த்தி மரணம்

இவர் இளையராஜா, பி.சுசீலா, ஜேசுதாஸ் ஆகியோரின் குரு ஆவார். இவர் மலையாளப்பட உலகில் 3 தலைமுறை படங்களுக்கு இசை அமைத்து வந்தார்.

நேற்று மாலை 6-30 மணிக்கு தட்சிணா மூர்த்தி சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவர் மலையாளப்பட உலகில் ‘சுவாமி' என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். அவரை தட்சிணாமூர்த்தி சுவாமிகள் என்றே பொதுவாக அழைக்கப்பட்டார்.

இவர் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தட்சிணா மூர்த்தியின் இறுதிச்சடங்கு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

 

உலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்... அவர்தான் ரஜினி சார்!- ஷாரூக்கான்

சென்னை: இந்த உலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர் ரஜினி சார் மட்டுமே என்றார் பாலிவுட் கிங் எனப்படும் ஷாரூக்கான்.

ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடித்து திரைக்கு வரவிருக்கிறது 'சென்னை எக்ஸ்பிரஸ்' படம். இந்தப் படத்துக்கான அனைத்து விழாக்களும் முதலில் சென்னையில் நடப்பது போலவே ஏற்பாடு செய்துள்ளார் ஷாருக்கான்.

உலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்... அவர்தான் ரஜினி சார்!- ஷாரூக்கான்

படத்தின் நாயகி தீபிகா படுகோனேவுடன் இன்று சென்னை வந்த ஷாரூக்கான், விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

"என் அம்மா பிறந்த ஊர் ஹைதராபாத். தீபிகாவுக்கு சொந்த ஊர் பெங்களூர். இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் தமிழ். இந்தப்படம் சம்பந்தப்பட்டவர்கள் தென் இந்தியர்கள். தென் இந்தியர்கள் எல்லோரும் இணைந்து ஒரு இந்தி சினிமா செய்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அஜீத் எனக்கு நல்ல நண்பர். மணிரத்னம்,சந்தோஷ் சிவன் என்று என் மனதுக்குப் பிடித்த நண்பர்கள் இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள்," என்றார்.

தீபிகா படுகோனிடம், "கோச்சடையான், சென்னை எக்ஸ்பிரஸ் என்று இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்திருக்கிறீர்கள். நீங்கள் பணியாற்றிய விதத்தில் யார் பெஸ்ட் என்று நினைக்கீர்கள்?" என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

தீபிகா சற்று தயங்க, உடனே வந்த ஷாருக்கான் மைக் பிடித்து, "இந்த கேள்விக்கு தீபிகாவால் பதில் சொல்ல முடியாது. நானே சொல்கிறேன்.

உலகத்திற்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர் ரஜினி சார்தான். இது எல்லோருக்கும் தெரியும். ரஜினி சாருக்கு ஜப்பானில் இருக்கும் ரசிகர்களை கண்டு நான் வியந்திருக்கிறேன்.

தனித்துவம் வாய்ந்த அந்த மனிதரை கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பு அமைந்தது. அதனால்தான் லுங்கி டான்ஸ் ஒன்றுக்கு ஆடியுள்ளேன். இந்த பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலுக்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் ரஜினி சாருக்கு என்னால் முடிந்த ஒன்றைச் செய்த திருப்தி இருக்கிறது," என்றார்.

 

தன் மகன் தேஜ்ராஜை ஹீரோவாக களமிறக்குகிறார் நடிகர் சரண்ராஜ்.

நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் நுழைந்தவர் சரண்ராஜ். தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,இந்தி, ஒரியா,பெங்காலி உட்பட அனைத்து மொழிகளிலும் சேர்த்து நானூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சரண்ராஜ்.

தமிழில் ரஜினியுடன் பணக்காரன், தர்மதுரை, பாட்ஷா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தன் மகன் தேஜ்ராஜை ஹீரோவாக களமிறக்குகிறார் நடிகர் சரண்ராஜ்.

இப்போது அடுத்து தனது மகன் தேஜ்ராஜை ஹீரோவாக களம் இறக்குகிறார் .

அது பற்றி நடிகர் சரண்ராஜ் கூறுகையில், "என்னை எல்லா மொழிகளிலும் நடிகனாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு ரசிகனுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

இப்போது எனது மகன் தேஜ்ராஜ் நடிக்கணும்னு ஆசைப்பட்டான். உடனே ஏத்துக்கொண்ட நான் அவனை வாழ்த்தினேன்.

பல இயக்குனர்கள் என் மகன் தேஜ்ராஜை வாழ்த்தினார்கள். நிறைய இயக்குனர்கள் அறிமுகப்படுத்த ஓகே சொல்லி இருக்கிறார்கள். அதுபற்றி அறிவிப்பு விரைவில் வரும்," என்றார் சரண்ராஜ்.

தன் மகன் தேஜ்ராஜை ஹீரோவாக களமிறக்குகிறார் நடிகர் சரண்ராஜ்.

சினிமாவிற்கான அத்தனை பயிற்சிகளையும் பெற்றுத்தான் அறிமுகம் ஆகிறார் தேஜ்ராஜ்.

பாண்டியன் மாஸ்டரிடம் ஸ்டன்ட்டும், ரகுராம் மாஸ்டரிடம் நடனமும், பாலு மகேந்திராவின் பயிற்சி பட்டறையில் நடிப்பும் பயின்றுள்ளார் தேஜ்ராஜ்.

"உங்கள் ஆதரவும்,அன்பும்,இருந்தால் நிச்சயம் நான் கலையுலகில் வலம் வருவேன்", என்கிறார் அறிமுகநாயகன் தேஜ்ராஜ்.

 

நடிகர் சல்மான் கானுக்கு இங்கிலாந்து விசா மறுப்பு

நடிகர் சல்மான் கானுக்கு இங்கிலாந்து அரசு விசா தர மறுத்துள்ளது. ஆனால் அதற்கு காரணம் எதையும் தெரிவிக்கவில்லை.

நடிகர் சல்மான் கான் கிக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக இங்கிலாந்து நாட்டுக்கு புறப்பட்டு செல்ல படப்பிடிப்பு குழு முடிவு செய்தது.

நடிகர் சல்மான் கானுக்கு இங்கிலாந்து விசா மறுப்பு

சஜித் நாடியாவாலா தலைமையிலான குழுவில் சல்மான் கானும் செல்வார் என கூறப்பட்டது. இந்நிலையில், இங்கிலாந்து அரசாங்கம் சல்மான் கானுக்கு விசா வழங்க அனுமதி மறுத்துள்ளது.

இந்த விசா மறுப்பு நடவடிக்கைக்கு காரணம் எதுவும் கூறப்படவில்லை.

கடந்த 2002ம் ஆண்டு சல்மான் கான் ஏற்படுத்திய கார் விபத்தில் சாலையோரம் படுத்திருந்தவர்களில் சிலர் பலியானது தொடர்பான வழக்கு விசாரணை காரணமாகவே இந்த விசா மறுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

இவ்வழக்கு தொடர்பாக கடந்த 24ந் தேதி சல்மான் கான் கோர்ட்டில் ஆஜரானார். அதன் மீதான விசாரணையை வருகிற ஆகஸ்டு 19ந் தேதிக்கு கோர்ட் ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதுகுறித்து, சல்மான் கானின் தந்தை சலீம் கான் கூறுகையில், "இந்த செய்தி குறித்து கூறும்போது, இத்தகைய செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். சல்மான் கானுக்கு 10 வருட சுற்றுலா விசா அனுமதி உள்ளது.

அவர்கள் இன்னும் சில ஆவணங்களை கேட்டு உள்ளனர். அவை விரைவில் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். சல்மான் கானின் விசா மறுக்கப்படவில்லை. தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது," என்றார்.