கவிஞர் வாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டதட்ட நாற்பது நாட்களாகிவிட்டது. இதில் சுமார் முப்பது நாட்களுக்கு மேலாக அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார்.
கடந்த ஜுன் 7 ந் தேதி குமுதம் இதழில் வாலி எழுதி வெளிவந்த 'அழகிய சிங்கர்' இலக்கிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் அவர். சுமார் ஐந்து மணி நேரம் அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து அமர்ந்திருந்தார். மறுநாளே டைரக்டர் வசந்த பாலனின் 'தெருக்கூத்து' படத்திற்காக அவர் பணியாற்றும்படி ஆனது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கூடத்திற்கு வரவழைக்கப்பட்ட அவர் சுமார் ஏழு மணி நேரம் அங்கு அமர்ந்து படம் குறித்தும், எடுக்கப்பட்ட விதம் குறித்தும் பேசியபடியே பாடல் ஒன்றை எழுதிக் கொடுத்தாராம். அன்றிரவே அவருக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது. உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவர்.
நுரையிரல் தொற்றுதான் காரணம் என்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தார்கள். இரண்டொரு நாளில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார் வாலி. அதற்கப்புறம் மீண்டும் அவருக்கு உடல்நிலை மோசமானது. உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். சுமார் முப்பது நாட்களுக்-கும் மேலாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார்.
இடையில் நடிகர் கமல் ஹாசன் மருத்துவமனைக்கு வந்து வாலியின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். விஸ்வரூபம் 2 படத்திற்கு ஒரு பாடல் எழுதணும். நாங்க வெயிட் பண்ணிகிட்டு இருக்கோம். அவரை சீக்கிரம் அனுப்பி வைங்க என்று வாலியின் காதில் படும்படி மருத்துவரிடம் கூறிவிட்டு சென்றார் கமல். ஏ.ஆர்.ரஹ்மானும் வாலியை சந்திக்க வந்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு கவிஞர் வாலியின் உடல்நிலை மோசமானது. உடனடியாக அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். வாலியின் உடல்நிலை பற்றி அறிந்த திரையுலகம் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.