சென்னை: தன் பிறந்த நாளை மரக்கன்று நட்டு இன்று தொடங்கினார் இசைஞானி இளையராஜா.
தமிழ் சினிமாவில் 40 ஆண்டு காலமாய் கோலோச்சிக் கொண்டிருப்பவர் இளையராஜா. இந்திய சினிமா தாண்டி, உலகளாவிய இசை மேதைகளுள் முன்னணியில் இருப்பவர் என மேலை நாட்டவரும் வியக்கும் பெரும் மேதையாகத் திகழ்கிறார்.
இன்று பிரசாத் ஸ்டுடியோவில் தன் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினார். அவருக்காக இசை வடிவில் சிறப்பாக கேக் வடிவமைக்கப்பட்டு வரவழைக்கப்பட்டது.
முதலில் கேக் வெட்ட தயக்கம் காட்டினாலும், பின்னர் இயக்குநர்கள் பாலா மற்றும் சுகா ஆகியோர் வற்புறுத்தியதால் வெட்டினார்.
முதல் துண்டை அவர் பஞ்சு அருணாச்சலத்துக்குத் தந்தார். அடுத்து பஞ்சு அருணாச்சலம், இளையராஜாவுக்கு கேக் ஊட்டினார்.
பின்னர் பேசிய இளையராஜா, "இது பிறந்தநாள் விழா என்பதைவிட புத்தக வெளியிட்டு விழா என்றே சொல்லலாம். இவ்விழாவிற்கு வந்திருக்கும் பஞ்சு சார், பாலா, பார்த்திபன், ராமகிருஷ்ணன், சுகா அனைவருமே அவரவர் துறைகளில் சாதித்தவர்கள்தான்.
பொதுவாக அழைப்பிதழ்கள் அடித்து பிறந்தநாள் விழா கொண்டாடுவது எனக்குப் பிடிக்காது. ஆனால் இது புத்தக வெளியீட்டு விழாவோடு பிறந்தநாள் விழாவும் சேர்ந்த இந்த நாளில் உங்களை சந்திப்பது மிக்க மகிழ்ச்சி. எனக்கு எழுதி சாதிக்க வேண்டுமென்றோ, மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி சாதிக்க வேண்டுமென்றோ எனக்கு எண்ணம் கிடையாது.
அதேபோல, இங்கே வந்திருக்கும் பஞ்சு அண்ணனோ ஒரே சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் சரி, உலகநாயகன் கமல்ஹாசனுக்கும் சரி, ஆறிலிருந்து அறுபதுவரை, கல்யாணராமன் என்ற இரண்டு படங்களை ஒரே சமயத்தில் எழுதி, ஒரே வாரத்தில் ரிலீஸ் செய்து, இரண்டு படங்களையும் சக்சஸ் செய்தவர். இது எப்படி சாத்தியம் என ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.
கமலும், ரஜினியும் அவர்கள் வாழ்க்கையில் அதிக வெற்றிப் படங்களில் நடித்திருப்பது பஞ்சு அண்ணன் தயாரிப்பில்தான்.
எனவே அவர் இந்த விழாவிற்கு வருகை தந்து என்னை வாழ்த்தியது எனக்கு மகிழ்ச்சி. உங்களைச் சந்தித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி...
இன்று என் பிறந்த நாளையொட்டி மரங்கள் நட்டிருக்கிறார்கள். நானும் ஒரு மரக்கன்று நட்டேன். மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான் என்று ஏற்கெனவே பாடியிருக்கிறேன்.. நான் வைத்த மரத்துக்கு நானே தினமும் நீர் ஊற்றிக் கொண்டிருக்க முடியாது. இங்குள்ள தோட்டக்காரர் ஊற்றுவார்.. அப்படி இன்று நடப்படும் மரங்கள் அனைத்துக்கும் ஏதோ ஒரு வகையில் நீர் பெறும்.. வேறு என்ன சொல்ல.. நன்றி,'' என்றார்.
இன்று மட்டும் தமிழகமெங்கும் இளையராஜா ரசிகர்கள் 71001- மரக்கன்றுகள் நட்டது குறிப்பிடத்தக்கது.