'எனக்கும் ஸ்ரேயாவுக்கும்...' - ஜீவா சொல்லும் கெமிஸ்ட்ரி!!


பள்ளியில் பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி ஒழுங்காக வராமலிருந்தாலும், சினிமாவுக்கு வந்த பிறகு அதெல்லாம் அபாரமாக வந்துவிடுகிறது நடிகர் நடிகைகளுக்கு.

எந்த ஹீரோ ஹீரோயினிடம் பேசினாலும் 'எனக்கும் அவருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பரா ஒர்க் அவுட் ஆயிடுச்சி' என்று சிலாகிக்கிறார்கள். அதே கெமிஸ்ட்ரி கிசுகிசுவாக வந்து விட்டால் கொதிக்கிறார்கள்.

இப்போது கெமிஸ்ட்ரி பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகியுள்ள இருவர் ஸ்ரேயா - ஜீவா. படம் - ரௌத்திரம். ஸ்ரேயாவுக்கு தமிழில் இருக்கும் ஒரே படம்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில்தான் ஜீவா தனது கெமிஸ்ட்ரி புராணத்தை ஆரம்பித்தார்.

அவர் கூறுகையில், "நானும் ஸ்ரேயாவும் முதல்முதலில் ஜோடி சேர்ந்துள்ள படம் இது. ஸ்ரேயா சிறந்த டான்சர். இந்த படத்தில் அவருக்கு ரொம்ப சாஃப்ட் வேடம். எங்கள் இருவருக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங். கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது..", என்றார்.

ஏற்கெனவே ஜீவாவுடன கெமிஸ்ட்ரி 'எக்கச்சக்கமாக ஒர்க் அவுட்' ஆன பூனம் பாஜ்வா என்ன ஆனாருங்கோ!
 

ரஜினி படங்களுக்கு விளம்பரமே தேவையில்லை! - அமிதாப்


ரஜினியின் படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. அவர் பெயரே அவருடைய படங்களுக்கு மிகப்பெரிய விளம்பரம், என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

படங்களுக்கு செய்யப்படும் விளம்பர நிகழ்ச்சிகள் குறித்து சமீபத்தில் தனது பிளாக்கில் இதுகுறித்து அமிதாப் எழுதியுள்ளதாவது:

"திரைப்படங்களை உருவாக்குவது மட்டுமல்லாது அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது தான் மிக மிக முக்கியம். இன்றைய படங்கள் வெளியான ஒரு வாரத்திற்குள், அதனை வெற்றிப்படமாக்க வேண்டுமா இல்லையா என்பதை ரசிகர்கள் தீர்மானித்து விடுகிறார்கள்.

வர்த்தக ரீதியான வெற்றியே ஒரு படத்தின் அளவுகோலாக கருதப்படுகிறது. அதற்கு விளம்பரம் மிக மிக அவசியமான ஒன்றாகிவிட்டது. ஆனால் இந்த வரையறைக்குள் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் ஒருபோதும் வந்ததில்லை.

அவருடைய படத்தை விளம்பரங்கள் மூலம் பிரபலப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. அவரே, அவருடைய படத்துக்கு ஒரு மிகப்பெரிய விளம்பரம்.

'ஏன் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிக்கு நீங்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? அப்படி செய்வது உங்களை நீங்களே உங்களை விற்பனை செய்வது போன்றது என என்னிடம் ஒரு முறை கூறினார். உடனே நாங்கள் இருவரும் சிரித்தோம். பின்னர் இது பற்றி ரஜினியிடம் விளக்கி கூறினேன்," என்று எழுதியுள்ளார் அமிதாப்.
 

ரஜினியை தரிசிக்க ரசிகர்களுக்கு வாய்ப்பு!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலமடைந்து திரும்பியுள்ளதால் மகிழ்ச்சியில் உள்ள அவரது ரசிகர்களுக்கு இன்னொரு சந்தோஷச் செய்தி. கோவையில் ரஜினியை நேரில் காணும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவிருக்கிறது.

உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையிலும், பின்னர் சிங்கப்பூரிலுமாக சிகிச்சை பெற்றார் ரஜினிகாந்த். அதன் பின்னர் பூரண குணமடைந்து அவர் ஜூலை 13ம் தேதி இரவு சென்னை திரும்பினார்.

மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு பரபரப்புக்கு மத்தியிலும், சென்னை விமான நிலையத்தில் பெருமளவில் திரண்ட ரசிகர்கள், ரஜினியை உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர்.

தற்போது ரஜினிகாந்த் முழு ஓய்வில் இருந்து வருகிறார். அவர் பூரண ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்த நிலையில், ரஜினி ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. அது அவரது ஆன்மீக குருக்களில் ஒருவரான தயானந்த சரஸ்வதியின் 80வது பிறந்த நாள் விழா. இந்த விழா கோவையில் ஜூலை 20ம் தேதி முதல் 22வரை நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு ரஜினிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாம். அவரும் வருவதாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் எப்போது வருவார் என்பது தெரியவில்லை.

ஒருவேளை ரஜினி கோவை போவதாக இருந்தால் அவரைப் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைக்கலாம்.
 

நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா


சினிமாவுக்கு வந்து நடிக்கக் கூடாத படங்கள் சிலவற்றில் நடித்துவிட்டேன். அந்தத் தவறை இப்போது உணர்கிறேன் என்கிறார் நமீதா.

கவர்ச்சியில் புது எல்லைகளைத் தொட்டவர், வேறு எந்த நடிகைக்கும் இல்லாத அளவு புகழைப் பெற்றவர் நமீதாதான். அவருக்காகவே ஒரு டிவி ஷோ ஆரம்பி்க்கப்பட்டு, 6 மாதங்களில் அது மெகா ஹிட்டானதும் நமீதாவால்தான்.

தமிழில் இப்போதைக்கு வாய்ப்புகளைத் தவிர்த்து வரும் நமீதா, தெலுங்கு மற்றும் கன்னடத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த இரு மொழிகளிலும் தன்னை மையப்படுத்திய கதைகள் கிடைப்பதால் முன்னுரிமை அளிக்கிறாராம்.

ஹைதராபாதில் சமீபத்தில் நிருபர்களைச் சந்தித்தார் நமீதா. அப்போது அவர் கூறுகையில், "நான் சினிமாவுக்கு வந்து 9 வருடங்கள் ஆகிவிட்டன.

அப்பா அம்மாவுக்கு நான் நடிக்க வந்தது பிடிக்கவில்லை. முதன் முறையாக "சொந்தம்" என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானேன். அப்போது எனக்கு வயது 17.

மேக்கப் ரூமில் இருந்து அரை குறை ஆடையுடன் வெளியே வந்த என்னைப் பார்த்துவிட்ட அப்பா சங்கடத்தோடு தலையிலடித்துக் கொண்ட காட்சி இன்னும் என் மனதில் அப்படியே நிற்கிறது.

சினிமாகாரர்களை கேவலமாக பார்க்கும் நிலைமைதான் எங்கும் உள்ளது. அதற்கு சினிமாக்காரர்களும் ஒரு காரணம்தான். மறுக்கவில்லை. இந்த நிலை மாற வேண்டும். நடிகைகளுக்கும் குடும்பம் உள்ளது. உறவினர்கள் இருக்கிறார்கள். அலுவலகம் போய் வருவது போன்ற ஒரு தொழில்தான் இதுவும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

சினிமாவுக்கு வந்து இத்தனை காலங்களில் நடிக்க கூடாத சில படங்களில் நடித்து விட்டேன். அதை இப்போதுதான் உணர்கிறேன்.

கையைப் பிடித்து இழுத்த ரசிகர்...

பிரபலமாக இருப்பதால் சில தொல்லைகளும் இருக்கிறது. ஒரு தடவை ரசிகர் ஒருவர் ஓடி வந்து என் கையை பிடித்தார். நான் பயந்து போய் கையை உதறினேன். பிறகு அந்த ரசிகர் எனது கையை தொட்ட அவரது கைக்கு முத்தம் கொடுத்தபடியே அங்கிருந்து ஓடினார்.

அதை பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்படியும் வெறித்தனமாக ரசிகர்கள் இருக்கிரார்களே என்று நினைத்துக் கொண்டேன்.

தமிழில் நடிக்காதது ஏன்?

தமிழ்தான் எனக்கு பெரிய வாழ்க்கையைக் கொடுத்தது. ஆனால் இன்றைக்கு வெறும் ஊறுகாய் மாதிரி கவர்ச்சி சீன்களில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் என் கால்ஷீட் கேட்கிறார்கள்.

எனக்கு நல்ல கேரக்டர்கள் கொடுங்கள். அதில் கவர்ச்சியும் இருக்கலாம். என் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கொடுங்கள் என்றுதான் கேட்கிறேன். அதுபோன்ற வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன். கன்னடத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் வந்துள்ளன," என்றார்.
 

போதையில் மயங்கிக் கிடக்கும் தமிழ் இளைஞர் சமுதாயம்- நடிகர் ராஜேஷ் வேதனை


மதுரை: தமிழ் இளைஞர்கள் போதையில் மயங்கிக் கிடக்கிறார்களே என்று வேதனையுடன் குறிப்பிட்டார் நடிகர் ராஜேஷ்.

மதுரையில் இளைஞர்கள் பற்றிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ராஜேஷ் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், "மதங்கள் என்ற அஸ்திவாரத்தில் கட்டப்பட்டுள்ள இன்றை குடும்ப சுவர்களில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. திரைப்படம், அரசியல், பொது வாழ்வு போன்றவற்றில் குறிப்பிடும்படியான தலைவர்களான காமராஜர், கக்கன், லால்பகதூர் சாஸ்திரி, அண்ணா, எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் இன்று இல்லை.

மாறாக லஞ்சம், ஊழல் நிறைந்த சமுதாயமாக தற்போது மாறியுள்ளது.

தொலைக்காட்சி, திரைப் படங்கள், உலகமயமாக்கல் போன்றவற்றாலும் கலாச்சார சீரழிவு ஏற்பட்டு இன்றைய இளைஞர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இவர்கள் பழைய வரலாற்றை தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மறக்கடிக்கப்பட்டு வருகிறார்கள். கலாச்சார சீரழிவுக்கு காரணமாக மனிதனின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகிறது. பெரும்பாலான இளைஞர்கள் தற்போது மதுவுக்கு அடிமையாவது வேதனை அளிக்கிறது. இதனால் இளைஞர்கள் சிந்திக்கும் சக்தியையே இழந்து காணப்படுகிறார்கள். வெறும் பரபரப்பை நம்புகிறார்கள்.

எனவே இதுபோன்ற சவால்களில் இருந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மதுவிலிருந்து மீளவேண்டும்," என்றார்.
 

போலிச்சாமியார்கள் பற்றி புதிய சினிமா 'வெங்காயம்'!


பெரியார் அடிக்கடி பிரயோகித்த வார்த்தை வெங்காயம். அது ஏதோ கெட்ட வார்த்தை என்று பலரும் நினைத்ததுண்டு. ஆனால் அந்த வெங்காயம் என்ற வார்த்தைக்குள் எத்தனை பெரிய தத்துவத்தை பெரியார் புரிய வைத்தார் என்பதை பின்னர்தான் அனைவரும் புரிந்து கொண்டனர்.

இன்றைய தலைமுறையினருக்கு பெரியாரின் கொள்கைகளை, புரட்சிக் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஒரு படத்தை தயாரிக்கிறார்கள். அந்தப் படத்தின் தலைப்பு 'வெங்காயம்'. போலிச் சாமியார்களின் முகத்திரையைக் கிழிக்கும் காட்சிகள் இந்தப் படத்தில் ஏராளம் உள்ளனவாம்.

தமிழ் சினிமாவில் பெரியாரின் கொள்கைகளைப் பேசி வருபவரும், அவர் வேடத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றவருமான சத்யராஜ்தான் இந்தப் படத்தின் நாயகன். சங்ககிரி ராஜ்குமார் இயக்குகிறார்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

முதல் சிடியை துப்புரவு தொழிலாளர் ஜானய்யா வெளியிட, ஏழுமலை என்ற விவசாயி பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசுகையில், "வெங்காயம்' படம், போலி சாமியார்களின் முகத்திரையை கிழிக்கிற படம்", என்றார்.

ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, ஈழப்போரின்போது தமிழருக்கு நிகழ்ந்த கொடுமைகள் குறித்துப் பேசினார்.

இயக்குநர் கவுதமன் பேசும்போது, "வெங்காயம், பெரியார் கொள்கைகளை சித்தரிக்கும் படம். பெரியார் படத்தை போட்டு கட்சி நடத்தும் அரசியல் கட்சிகள், இந்த படத்தை வாங்கி, திரைக்கு வருவதற்கு உதவ வேண்டும்'' என்றார்.

திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எம்.மாணிக்கம், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் ஆகியோரும் பேசினார்கள்.
 

சென்டிமெண்ட்.... ரஜினியின் ராணா படத் தலைப்பில் மாற்றம்?


சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராணா படத் தலைப்பு மாறக்கூடும் என சில தினங்களாகவே பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் ரஜினி அல்லது இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த ரியாக்ஷனும் இல்லை.

ரஜினி கதை எழுதி, 3 வேடங்களில் நடிக்கும் மெகா பட்ஜெட் படம் ராணா. தமிழ் மன்னன் ஒருவனின் கதை. முழுக்க முழுக்க சரித்திரப் படம். இதில் ரஜினியின் ஒரு வேடத்துக்குப் பெயர்தான் ராணா. இந்தப் பெயரை தேர்வு செய்தததும் ரஜினிதான்.

இந்தப் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கின்போதுதான் அவருக்கு உடல் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு, சிங்கப்பூருக்குப் போய் சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ளார்.

இப்போது ஓய்விலிருக்கும் ரஜினி படத்தின் காட்சியமைப்புகள் குறித்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாருடன் விவாதித்து வருகிறார்.

இந்த நிலையில், சென்டிமெண்டாக ராணா தலைப்பு வேண்டாம் என ஒரு சாரார் கருத்து தெரிவி்த்துள்ளார்களாம். ஆனால் ரஜினியோ ராணா தலைப்புதான் மிக ஈர்ப்பாக இருக்கிறது என அபிப்பிராயப்படுகிறாராம்.

அடுத்தவர் கருத்துக்கு எப்போதுமே அவர் மதிப்பளிப்பவர் என்பதால், தலைப்பில் மாற்றம் செய்யக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் ரஜினியோ கேஎஸ் ரவிக்குமாரோ இதுபற்றி எதுவும் கருத்து தெரிவிக்காமல் உள்ளனர்.

ஏற்கனவே அண்ணாமலை படத்தில் நடித்த போது தலைப்பை பலர் கிண்டல் செய்தனர். அண்ணாமலை அரோகரா என்று பேசினர். எனவே தலைப்பை மாற்றலாமா? என யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரஜினி அதை ஏற்கவில்லை. அண்ணாமலை என்பது திருவண்ணாமலை சிவன் பெயர் எனவே அதை மாற்றக் கூடாது என்று பிடிவாதமாக மறுத்தார். இதையடுத்து அந்த பெயரிலேயே படம் வந்து வெற்றிகரமாக ஓடியது.

படையப்பா பெயர்தான் பெரும் அளவு கிண்டலடிக்கப்பட்டது. ஆனால் வசூலில் தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்டது இந்தப் படம்.

எனவே ரஜினி தலைப்பை மாற்றுவாரா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
 

சக்சேனாவுக்கு இரண்டாவது வழக்கில் ஜாமீன்!


சென்னை: சன் பிக்சர்ஸ் சக்சேனாவுக்கு இரண்டாவது வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது. இன்னும் இரு வழக்குகளில் அவர் ஜாமீன் பெற வேண்டும். ஆனால் அதற்குள் மேலும் சில வழக்குகள் பாயும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் உரிமம் கொடுப்பது தொடர்பான விவகாரத்தில் தன்னை தாக்கிய சண்முகவேல் என்பவர் கொடுத்த புகாரில் சக்சேனாவை கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் சக்சேனா மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி தேவதாஸ் விசாரித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேவதாஸ், சக்சேனாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சக்சேனா ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும் அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் வழங்க வேண்டும். மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில், காலையிலும் மாலையிலும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.

ஏற்கனவே செல்வராஜ் என்ற சினிமா விநியோகஸ்தரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சக்சேனாவை கே.கே.நகர் போலீசார் கைது செய்திருந்தனர். இந்த வழக்கில் சக்சேனாவுக்கு ஏற்கனவே நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தது. இப்போது 2-வது வழக்கிலும் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

அவர் மீது இன்னும் 2 வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவற்றில் அவர் இன்னும் ஜாமீன் பெறவில்லை என்பதால், சிறையிலிருந்து இப்போதைக்கு அவரால் வெளிவர முடியாது.

அதேநேரம், காவலன் படம் தொடர்பாக சக்சேனா மீது புதிய புகார் தர சிலர் தயாராகி வருகின்றனர்.
 

கரண் ரொம்ப வசதி! - அஞ்சலியின் அனுபவம்


தம்பி வெட்டோத்தி சுந்தரம்... கரண் நடித்து வெளியாகும் அடுத்த படம் இது. படத்தில் அவருக்கு ஜோடி அஞ்சலி.

இருவரும் இந்தப் படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.

இந்தப் படக்குழுவினர் நேற்று நிருபர்களைச் சந்தித்து, படம் குறித்த பல்வேறு தகவல்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

படத்தின் நாயகி அஞ்சலி கூறுகையில், "தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தில் கரணுக்கு ஜோடியாக என்னை நடிக்க அழைத்தபோது, அவர் ஒரு சீனியர் நடிகர் என்பதால், எப்படி பழகுவாரோ என்று கொஞ்சம் பயந்தேன். ஆனால், நான் பயந்தது போல் அவர் இல்லை. எனக்கு சவுகரியமான கதாநாயகனாக இருந்தார்.

எனக்கும், அவருக்கும் ஜோடிப்பொருத்தம் கச்சிதமாக இருக்கிறது. குறிப்பாக, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'கொலைகாரா...' என்ற பாடல் காட்சியில், எங்கள் இருவரின் கூட்டணியும், படம் பார்க்கும் எல்லோருக்கும் பிடிக்கும்.

இந்த வேடம், இந்த காஸ்ட்யூம் என்று எனக்கு எந்த பிடிவாதமும் இல்லை. நல்ல வேடம், காட்சிக்கேற்ற உடைகளை நான் அணிய தயங்கியதில்லை," என்றார்.

இந்தப் படம் நாகர்கோவில் அருகில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ளார்.

கரண் பேசும்போது, "தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை பார்த்தபின், அந்த படத்தை மறக்க முடியாது. 4 நாட்களுக்கு மனசுக்குள்ளேயே நிற்கும். அப்படி ஒரு பாதிப்பை படம் ஏற்படுத்தும்'' என்றார்.

அது என்ன வெட்டோத்தி...?

"வெட்டுக்கத்தி மாதிரி அது ஒரு ஆயுதம். ஆனால் இந்தப் படம் ஒவ்வொரு ரசிகருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே வாழ்ந்த அனுபவத்தைத் தரும்," என்றார்கள் இயக்குநர் வடிவுடையானும் தயாரிப்பாளர் செந்தில் குமாரும்.
 

அழுதது உண்மைதான்... ஆனா விலகறதா இல்ல-நயன்தாரா


சென்னை: ராம ராஜ்யம் படப்பிடிப்பின் இறுதிநாளில் நான் உணர்ச்சிவசப்பட்டு அழுதது உண்மைதான். ஆனால் சினிமாவிலிருந்து விலகப்போவதற்காக நான் அழுததாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம், என நயன்தாரா கூறியுள்ளார்.

நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. திருமணத்துக்கு பின் நயன்தாரா நடிக்க மாட்டார் என செய்தி பரவி உள்ளது.

தெலுங்கில் நயன்தாரா கடைசியாக நடித்த ராம ராஜ்ஜியம் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிந்தது. படப்பிடிப்பின் கடைசி நாளில் அவர் கதறி அழுததும், படக்குழுவினர் அனைவரிடமும் பிரியா விடை பெற்றதும் கடந்த வாரச் செய்திகள்.

இது அழுகையும் பிரியா விடையும் சினிமாவுக்கும் சேர்த்துதான் என்று கூறப்பட்டது. அப்போது செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் இருந்த நயன்தாரா, இப்போது சினிமாவை நான்விலகமாட்டேன், என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் சினிமாவை விட்டு விலகப்போவதாக வந்த செய்தியில் உண்மையில்லை. ராம ராஜ்ஜியம் படப்பிடிப்பில் அழுததற்கான காரணமே வேறு.

என்னையும் மீறி என் மன வேதனை கண்ணீராய் வெளிப்பட்டுவிட்டது.

இன்னொரு பக்கம் ராம ராஜ்ஜியம் படப்பிடிப்பு குழுவினர் பாட்டு பாடி என்மேல் பூக்களை தூவி வழியனுப்பினார்கள். என் அழுகைக்கு அதுவும் ஒரு காரணம்.கடந்த ஆண்டு நான்நடித்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட். நான் எதற்கு விலகப் போகிறேன்", என்றார்.

எதுக்கும் பார்த்து பேட்டி கொடுங்க... அடுத்த செய்தி பிரபுதேவாவிடமிருந்து நயன் விலகல் என்று வரக்கூடும்!
 

நான் பாதி இந்தியர் என்றால் ராகுல் காந்தி யார்?- கத்ரீனா கேள்வி


காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் தன்னைப் போன்று பாதி இந்தியர் தான் என்று பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் தெரிவித்துள்ளார்.

கத்ரீனா கைப் இந்திய காஷ்மீரி தந்தைக்கும், இங்கிலாந்து அன்னைக்கும் பிறந்தவர். அவர் பாதி இந்தியர். பாதி ஐரோப்பியராக இருப்பதால் அடிக்கடி இது தொடர்பான சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.

அழகிய பதுமை கத்ரீனாவை தாக்கிப் பேச விரும்புவர்கள் முதலில் கூறுவது அவர் பாதி இந்தியர் என்பதைத் தான். இவ்வாறு கூறுவதன் மூலம் அவர்களுக்கு ஒரு திருப்தி.

இது குறித்து கத்ரீனா கைப் கூறியதாவது,

நான் பாதி இந்தியர் என்று பிறர் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கின்றனர். இந்த உலகத்தில் என்னைப் போன்று பாதி இந்தியர்கள் பலர் உள்ளனர்.

இந்திய நியூஸ் சேனல்கள் எனது பாஸ்போர்ட் நகலை வைத்துள்ளன. அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்று கேட்காதீர்கள். என் பாஸ்போர்டில் எனது அன்னையின் பெயர் உள்ளது. எனது பிறந்த நாள், பிறப்பிடத்தை என்றைக்குமே மறைத்ததில்லை. நான் ஹங்காங்கில் பிறந்தேன். இந்த தகவலை தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்றார் கடுப்பாக.

நான் பாதி இந்தியர், பாதி ஐரோப்பியர் என்பதற்காக வெட்கப்பட வேண்டுமா? வேண்டியதில்லை. ராகுல் காந்தி கூட தான் பாதி இந்தியர், பாதி இத்தாலியர் என்றார்.

சபாஷ், சரியான கேள்வி!