சென்னை: தெனாலிராமன் படத்தின் கதை முழுக்க முழுக்க கற்பனையே. இதில் சரித்திர சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை, என்று ஏஜிஎஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தெனாலிராமன் படத்தில் மாமன்னன், தெனாலிராமன் என இரு வேடங்களில் நடிக்கிறார் வடிவேலு. அவரது சினிமா மறுபிரவேசப் படம் இது.
இதில் மன்னர் வேடம் கிருஷ்ணதேவராயரைக் குறிப்பதாகவும், அவர் தொடர்பான காட்சிகளில் கிண்டலும் கேலியும் இருப்பதாகவும் கூறி தெலுங்கு அமைப்புகள் சர்ச்சை கிளப்பி வருகின்றன. தலைமைச் செயலரிடம் இது தொடர்பாக கடிதமும் கொடுத்துள்ளனர்.
வரும் ஏப்ரல் 18-ம் தேதி படம் வெளியாக உள்ள சூழலில், இந்த சர்ச்சை பதட்டத்தை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் தெனாலிராமன் படத்தின் கதை குறித்து அதிகாரப்பூர்வமாக ஒரு விளக்கம் அளித்துள்ளது படத்தைத் தயாரித்துள்ள ஏஜிஎஸ் நிறுவனம்.
அந்த விளக்க அறிக்கையில், "இந்தத் திரைப்படம் தெனாலிராமன் மற்றும் பிற நீதிக் கதைகளைத் தழுவி எழுதப்பட்டுள்ள ஒரு கற்பனைக் கதை. இப்படம் தெனாலிராமன் வாழ்க்கையைப் பற்றியோ, அவர் சம்பந்தப்பட்ட இன்னும் சில முக்கியப் பிரமுகர்களின் வரலாற்றையோ பதிவு செய்யும் படமல்ல.
கிபி 15-ம் நூற்றாண்டில் நடைபெற்ற வாழ்க்கை முறையைப் பின் புலமாகக் கொண்டு, தற்கால நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு புனைகதை.
இத் திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் முழுக் கற்பனையே. பெயர்களும் சம்பவங்களும் எவரையும் குறிப்பிட்டு அமைக்கப்படவில்லை. அப்படி ஒத்திருந்தாலும் அது தற்செயலே!," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.