கரகாட்ட நடிகை குத்திய டாட்டூ… டைரக்டருக்கு தெரியுமா?

சென்னை: கோலிவுட், பாலிவுட் என பல முன்னணி நடிகைகளும், டாட்டூவில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

நடிகைகளின் உடம்பின் எல்லா பாகங்களிலும் இந்த டாட்டூ வந்து உட்கார்ந்து கொள்கிறது. இதற்கான ஸ்பெஷல் மையங்கள் சென்னையில் பல இடங்களில் இருந்தாலும், இதற்கு நுங்கம்பாக்கம்தான் பிரபலமாம். இங்குதான் பல நடிகைகள் வந்து டாட்டூ போட்டுச் செல்கின்றனராம்.

டாட்டூ வரைய லட்சங்களை கொட்டுகிற நடிகைகளும் இருக்கிறார்கள். நடிகைகள் பட்டும் படாமலும் வரைகிற டாட்டூக்கள் ஏக கவர்ச்சியாக இருப்பது வேறு விஷயம்.

அவசரத்தில் குத்திய டாட்டூவை அழிக்க முடியாமல் சில நடிகைகள் தடுமாறி வர, புதிதாக கரகாட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை டாட்டூ குத்திவிட்டு தற்போது கவலையில் இருக்கிறாராம்.

கடவுள் இயக்குநர் படத்தில் கரகாட்டக்காரியாக நடிக்கும் இவர் தனது கையில் பளிச்சென்று தெரிகிற இடத்தில் ஒரு டாட்டூவை வரைந்து வைத்திருக்கிறார்.

கதைப்படி கிராமத்து கரகாட்டக்காரி இவ்வளவு ஸ்டைலான டாட்டூவை வரைந்திருக்க முடியாதுதானே? இயக்குநர் கொந்தளிப்பதற்குள் அதை மறைத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.
கிராமபுறங்களில் பாட்டியம்மாக்களெல்லாம் குத்திக் கொள்ளாத பச்சையா? கடவுள் இயக்குநருக்கு தெரிந்தாலும் பிரச்சனையில்லை என்று ஆறுதல் சொல்லி வருகிறாராம் நடிகையின் நெருங்கிய தோழர்.

 

மோசமான படங்களாக இருந்தாலும் தொழிலுக்கு துரோகம் செய்யாமல் இசையமைப்பேன்! - இளையராஜா

சென்னை: ஒரு படம் எத்தனை மோசமாக இருந்தாலும், எனக்குப் பிடிக்காவிட்டாலும், என் தொழிலுக்கு துரோகம் செய்யாமல் சிறப்பான இசையையே தருவேன், என்றார் இசைஞானி இளையராஜா.

சுப்ரமணியம் சிவாவிடம் உதவியாளராக பணியாற்றிய கார்த்திக் ரிஷி இயக்கியிருக்கும் புதிய படம் ‘மேகா'. அஷ்வின் - ஸ்ருஷ்டி ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

மோசமான படங்களாக இருந்தாலும் தொழிலுக்கு துரோகம் செய்யாமல் இசையமைப்பேன்! - இளையராஜா

ஆல்பர்ட் ஜேம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஜெ.எஸ்.கே நிறுவனம் வெளியிடுகிறது.

படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சாலிகிராமம் பிரசாத் லேப் அரங்கில் நடந்தது. இதில் இசைஞானி இளையராஜா பங்கேற்றார். அப்போது இந்தப் படத்துக்காக அவர் ஹங்கேரி சென்று இசையமைத்ததன் வீடியோ காட்சிகளை திரையிட்டுக் காட்டினர்.

நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது:

பாரதிராஜாவோட முதல் மரியாதை படம். பின்னணி இசைக்காக எனக்கு முதல் முறையாக போட்டுக் காட்டினார்கள். படம் பார்த்தேன். எனக்குப் பிடிக்கல. பாரதி கேட்டார்.. நான் ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டேன். 'சரி அவனுக்கு படம் பிடிக்கல..' என்று உடனிருந்தவர்களிடம் சொன்னார்.

அடுத்த நாள் பின்னணி இசையமைக்க ஆரம்பித்தேன். கடைசி ரீல்.. அதில் ராதா சிறைக்குள் இருக்கும் காட்சி. சிவாஜி வருவார்.. ராதா அவரைப் பார்க்க வருவார். அந்தக் காட்சிக்கான பின்னணி இசையைக் கேட்டதும், பாரதி ராஜா கண்ணீர் விட்டு அழுதுவிட்டார். (பாரதிராஜா போல அழுது காட்டி) 'உனக்குப் பிடிக்காத படத்துக்கே இப்படி இசையமைச்சிருக்கியேடா' என்று தழுதழுத்தார்.

அது எத்தனை நல்ல படமாக, மோசமான படமாக இருந்தாலும், எனக்குப் பிடிச்சிருந்தாலும் பிடிக்காவிட்டாலும், தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நல்ல இசையைத்தான் தருகிறேன். என் தொழிலுக்கு, என் சரஸ்வதிக்கு, சப்தஸ்வரங்களுக்கு துரோகம் செய்யமாட்டேன்.

நீங்கள் தூ என்று துப்பும் படத்தைக் கூட நான் நான்கு முறை பார்க்கிறேன். சலித்துக் கொண்டதில்லை. காரணம் அது என் தொழில்.

(பேச்சின் இடையில் மேகா இயக்குநரைப் பார்த்து, 'இங்க வாங்க டைரக்டர்..' என்று தன் அருகே அழைத்தார் ராஜா.)

இந்தப் படம் மேகாவை நன்றாகவே எடுத்திருந்தார் இந்த இயக்குநர். படத்தின் முதல் ரீலுக்கு இசையமைத்துவிட்டு, அவருக்கு போட்டுக் காட்டினேன்.

இளையராஜா: 'எப்படி இருந்தது?'

மேகா இயக்குநர்: இசையோடு கேட்டபிறகு அந்தப் படம் நான் நினைத்ததை விட மிகச் சிறப்பாக இருந்தது. இது நான் எடுத்த படமா என பிரமித்தேன்.

இளையராஜா: இப்படித்தான் எல்லா இயக்குநர்களும் சொல்வார்கள்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆல்பர்ட் பற்றிச் சொல்ல வேண்டும். சிலரைப் பார்த்தால், ஏன்டா பார்த்தோம் என்று தோன்றும்.. சிலர் வரும்போது, 'இவன் எதுக்கு இங்க வர்றான்'னு இருக்கும்.

ஆனால் ஆல்பர்ட்டை பார்த்த போதே அவரைப் பிடித்துவிட்டது. முதல் நாள் என்னிடம் எப்படி இருந்தாரோ, இந்த நிமிடம் வரை அதே மாதிரிதான் நடந்து கொள்கிறார். மிக நல்ல மனிதர். அவருக்காகவே இந்தப் படத்தை ஒப்புக் கொண்டேன்.

கார்த்திக் நன்றாக இயக்கியுள்ளார் என்பதே அவருக்கான ஆசீர்வாதம்தான்," என்றார்.

 

பயங்கர விபத்தில் சிக்கிய பிரகாஷ் ராஜ்.. லேசான காயங்களுடன் தப்பினார்!

ஹைதராபாத்: பயங்கர விபத்தில் சிக்கிய பிரகாஷ் ராஜ், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸிலிருந்து காரில் நேற்று மாலை சாத்நகர் நோக்கி குடும்பத்துடன் சென்றார் பிரகாஷ் ராஜ்.

மாதாபூர் மேம்பாலம் அருகில் கார் வந்தபோது போக்குவரத்து சிக்னலில் நின்றது. அப்போது பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ், பிரகாஷ்ராஜ் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் பின்புறம் நொறுங்கியது.

பிரகாஷ் ராஜ் காருக்குப் பக்கத்தில் நின்ற இன்னொரு ஆட்டோவையும் அந்த பஸ் இடித்து தள்ளியது. ஆட்டோ இன்னொரு காரில் மோதி அதுவும் சேதமானது.

இந்த விபத்தில் பிரகாஷ் ராஜுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காரில் இருந்த குடும்பத்தினரை உடனடியாக கீழே இறக்கி ஒரு ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

விபத்து குறித்து ஹைதராபாத் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

பயங்கர விபத்தில் சிக்கிய பிரகாஷ் ராஜ்.. லேசான காயங்களுடன் தப்பினார்!

இந்த விபத்து குறித்து பிரகாஷ்ராஜ் ட்விட்டரில், "பயங்கரமான விபத்தில் சிக்கினேன். அதில் இருந்து தப்பியது அதிர்ஷ்டம். விபத்து நடந்தபோது கார் ஆட்டோக்களில் இருந்தும், மோட்டார் சைக்கிள்களில் இருந்தும் நிறைய பேர் கீழே விழுந்தனர். அவர்களை யாரும் காப்பாற்ற முன் வரவில்லை. இது எனக்கு அதிர்ச்சியளித்தது.

குறிப்பாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் விபத்தை செல்போனில் படம் எடுத்தனர். வெட்கக் கேடு. உயிர் பிழைத்த பயத்தைவிட இளைஞர்கள் இப்படி மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்வதுதான் அதிக பயத்தைத் தருகிறது!", என்று குறிப்பிட்டுள்ளார்.

 

விஜயா நிறுவனத்துக்கு படம் பண்ணும் ஜில்லா இயக்குநர்

விஜய் நடித்த ஜில்லா படத்தை இயக்கிய நேசன், அடுத்து விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு படம் இயக்குகிறார்.

விஜய் - மோகன்லால் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான படம் ஜில்லா. ஆர்பி சவுத்ரி தயாரித்த இந்தப் படத்தை ஆர் டி நேசன் இயக்கியிருந்தார்.

விஜயா நிறுவனத்துக்கு படம் பண்ணும் ஜில்லா இயக்குநர்

இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்குகிறார் நேசன். இந்தப் படத்தில் ஆர்யா, ஜெயம் ரவி அல்லது விஷால் ஆகியோரில் இருவர் நடிக்கப் போகிறார்களாம்.

அஜீத்தை வைத்து வீரம் படத்தை எடுத்த விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த புதிய படத்தைத் தயாரிக்கிறது.

இரண்டு முன்னணி நாயகிகளை இந்தப் படத்துக்காக ஒப்பந்தம் செய்யப் போகிறார்களாம்.

விஜய்யின் ஜில்லாவும் அஜீத்தின் வீரமும் தீபாவளிக்கு வெளியான படங்கள். இதில் ஜில்லா இயக்குநர் வீரம் நிறுவனத்துக்கு படம் பண்ணுகிறார் என்பது சுவாரஸ்யமான தகவல்.

 

'லீடர்' நடிகரின் படத்தை சீறும் இயக்குனர் எதிர்க்காததற்கு 'இது' தான் காரணமா?

சென்னை: லீடரின் ஆயுதம் படத்தை அரசியலில் இருக்கும் அந்த 3 எழுத்து இயக்குனர் எதிர்க்காததற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன.

லீடர் நடிகர் நடித்து வரும் ஆயுதத்தின் பெயர் கொண்ட படத்தை இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் தயாரிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ஆனால் தயாரிப்பாளருக்கும் ராஜபக்சேவுக்கும் தொடர்பு இல்லை என்று படக்குழுவினர் பலமுறை விளக்கம் அளித்தும் யாரும் அதை கேட்கவில்லை. இந்நிலையில் அரசியலில் இருக்கும் அந்த 3 எழுத்து இயக்குனர் படத்திற்கு ஆதரவு அளித்துள்ளார். இது என் தம்பி படம். காரணமே இல்லாமல் படத்தை எதிர்க்க நான் ஒன்றும் எதுவும் தெரியாத மூர்க்கன் இல்லை என்றார்.

இந்நிலையில் அந்த இயக்குனர் படத்தை எதிர்க்காததற்கு காரணம் இருப்பதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த இயக்குனர் லீடரை வைத்து எடுக்க இருந்த படத்தை ஆயுதம் படத்தை தயாரிக்கும் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அதில் லீடர் அல்ல விரல் நடிகர் தான் ஹீரோ என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தை எதிர்க்காவிட்டால் லீடரின் ரசிகர் பட்டாளத்தின் ஆதரவை பெறலாம் அது தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் என்று இயக்குனர் நினைப்பதாக இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.