எல்லா ஊரிலும் நெய்வேலியை காண்கிறேன் : பிரபு சாலமன்! 4/29/2011 11:02:25 AM
ஒவ்வொரு முகம், ஒவ்வொரு ரசனை, ஒவ்வொரு ஏக்கம், ஒவ்வொரு மகிழ்ச்சி, அப்பப்ப கொண்டாட்டம், அப்பப்ப வெறுமை… இப்படி எல்லாத்தையும் குழைச்சு வச்சிருக்கிற வித்தியாசமான கூட்டாஞ்சோறுதான் ஊர். காலாற நடந்து போனா, கதை சொல்ற காற்றையும் ஏகப்பட்ட காதலர்கள் பெயரை சுமந்து நிற்கும் மரங்களையும் மக்கி மண்ணாகிப் போன, சொல்லப்படாத கதைகளையும் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஊரும் தனக்குள்ள வச்சிருக்கு. 'என்னைப் பேச விடுறீங்களா…'னு ஏதாவது ஒரு ஊர், தன்னோட கதையை சொல்ல ஆரம்பிச்சா, என்னவெல்லாம் சொல்லும்னு அடிக்கடி நினைச்சுப் பார்ப்பேன். இது கொஞ்சம் அதீத கற்பனைன்னாலும் யோசிக்கிறப்ப சந்தோஷமாவே இருக்கு.
நெய்வேலி டவுன்ஷிப்தான் சொந்த ஊர். பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாம் அங்கதான். எனக்கு ஊர்மேல இருக்கிற பாசத்தை விட, ஊருக்குதான் என்மேல அதிக பாசம்னு சொல்வேன். நான் மறந்துபோனா கூட, ஊர், என்னை அடிக்கடி நினைக்க வைக்கிறதால இந்த எண்ணம். இந்தியாவிலயே அதிகமா மரம் வளர்க்கிற ஊர்னு பேர் வாங்கினது நெய்வேலிதான். இது எப்பவும் அமைதியா இருக்கிற ஊர். அடூர் கோபாலகிருஷ்ணன் படத்துல வர்ற மாதிரி, எங்கயாவது ஒருத்தர் சைக்கிளை மிதிச்சுட்டு எப்பவும் வந்துட்டிருப்பதை அங்க அடிக்கடிப் பார்க்கலாம்.
சின்ன வயசுல அதிகமா தனியாதான் சுத்துவேன். நிலக்கரி சுரங்கத்துல இருந்து எடுக்கிற மண்கள், மேடு மாதிரி குவிஞ்சு கிடக்கும். அவ்வளவும் களிமண். கட்டியா இறுகிப் போய் இருக்கும். அதுக்குள்ள போனா, அங்கங்க மெகா சைஸ் குகைகள் போல அது போகும். மழை உருவாக்கி வச்சிருக்கிற குகைகள். உள்ள போய் எங்கேயாவது ஒரு இடத்துல உட்கார்ந்து, நேரத்தைப் போக்கிட்டு வெளிய வர்றதுதான் சனி, ஞாயிறுகள்ல என்னோட பொழுது போக்கு.
மழைக் காலங்கள்ல, இந்த மண்ணுமேல பார்த்தா மொசைக் போட்ட மாதிரி இருக்கும். அதுல ஏறி இறங்கி சறுக்கு விளையாடுறதால மாசத்துல நாலு டவுசரை கிழிச்சுடுவேன். மழை நேரத்துல இதுல ஓடுற தண்ணி பளிங்கு மாதிரி போகும். மீன்கள் போனா, அப்படியே பின்னாலயே போய் பிடிச்சு, எதிர்ல போட்டு சுட்டு சாப்பிடறது என் விளையாட்டு. இதைத்தாண்டி, வீட்டுக்கு வெளியே கொஞ்சம் தள்ளி ஒரு வேப்ப மரம் இருக்கும். மரம்னு சொல்றதை விட என்னோட இன்னொரு தோழன்னு சொல்லலாம். வெயில் கொளுத்துற கோடையில சைக்கிளை அதுக்கு கீழ ஸ்டாண்ட் போட்டுட்டு புத்தகங்கள் படிக்கிறதும் என் பொழுதுபோக்கு. படிக்கிற கதைகளின் ஹீரோவா என்னை மாற்றிக்கிட்டு அந்த கேரக்டரோட ஒன்றி கனவுல சஞ்சரிப்பேன்.
அங்க இருக்கிற, செயின்ட் பால் ஸ்கூல்லதான் படிச்சேன். நான் படிக்கும்போது இருந்த ஆசிரியர்கள்ல, என் மேல மரியாதை வச்சிருந்தவங்க நிறைய பேர். எனக்கும் அந்த ஸ்கூல் மேல இனம் தெரியாத பாசம் உண்டு. அதுக்குக் காரணம் என்னன்னு இன்னைக்கு வரைக்கும் தெரியலை. அங்க, மரியதாஸ்ங்கற வரலாற்று ஆசிரியர் இருந்தார். என்னை நாடக நடிகர் ஆக்கியவர் இவர். ஏதாவது விழான்னா, ஸ்கூல்ல உடனே நாடகம் போட்டிருவாங்க. போனமுறை என்னவா நடிச்சேனோ, அதுக்கு நேர்மாறா வேற கேரக்டர் கொடுப்பார் அடுத்த நாடகத்துல. நான் சினிமாவுக்கு வர அவரும் அந்த நாடகங்களும்தான் காரணம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கற்பனை வளரும். கூட படிக்கிறவங்கள்லாம், 'நீ பெரிய நடிகனாயிடுவடா'னு ஏற்றி விடுவாங்க. ஆனா, எனக்குள்ள டைரக்டர் ஆசைதான் முழுமையா இருந்ததுங்கறதை நான் கண்டுபிடிக்கவே ரொம்ப நாளாச்சு.
சினிமாவுக்காக சென்னை வந்த பிறகு மாசக்கணக்குல ஊருக்கு போகாம இருந்தாலும் மனசுக்குள்ள ஊரும் நண்பர்களும் எப்பவும் இருந்துட்டு இருப்பாங்க. ஏதாவது ஒரு படம் பார்த்து, அதுல ஏதாவது ஒரு ஊரை காட்டினா கூட, எங்க ஊர் என்னை கிள்ளிவிட்டுட்டுப் போகும். ஒரே ஊர்ல வாழ்ந்தவங்களால அந்த ஊரை ஜென்மத்துக்கும் மறக்க முடியாதுங்கறதுதான் உண்மை. ஏன்னா, ஊர்ங்கறது ஊர்மட்டுமல்ல, அதுதான் உயிர்.
'மைனா' ஹிட்டுக்குப் பிறகு சேரனோட 'ஆட்டோகிராஃப்' மாதிரி, நான் படிச்ச பள்ளி, வசிச்ச வீடு, ஓடியாடிய மைதானம், கூட சுற்றிய நண்பர்கள்னு தேடிப்போனேன். நான் வசிச்சப்போ இருந்ததை விட இப்ப நிறைய மாற்றம். இங்க எதுவுமே அப்படியே இருந்திட போறதில்லையே… மனசுக்குள்ள அடிக்கடி வந்துபோகும் அந்த மரியதாஸ் வாத்தியாரைத் தேடி சந்திச்சேன். உடனே, நான் படிச்ச ஸ்கூல்லயே ஒரு மீட்டிங். மனசுக்கு நிறைவா பேசிட்டு வந்தேன். என்னோட சிஸ்டரும், அம்மாவும் இன்னும் ஊர்லதான் இருக்காங்க. 'சென்னையில வந்து இருங்க'னு சொன்னாலும் அம்மாவுக்கு இந்த பரபரக்கிற நகரம் பிடிக்கலை. ஒரே இடத்துல வாழ்ந்த நினைவுகளும் வாழப்போற வாழ்க்கையும் தந்த, தரப்போற சுகங்கள் ஜாஸ்தி. சிலருக்கு வாழற ஊருதான் வீடு. சிலருக்கு வாழற வீடுதான் ஊரு. எனக்கு ரெண்டும் ஊராகத்தான் இருக்குது.