விஸ்வரூபத்துக்கு தியேட்டர் தர விடாமல் தடுத்தது யார்? விசாரணையை ஆரம்பிக்கிறது போட்டி ஆணையம்!

Cci Probes Kamal Haasan S Complaint

டெல்லி: விஸ்வரூபம் படத்துக்கு தியேட்டர்கள் தரக்கூடாது என தடுத்தவர்கள் யார் என்ற விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப் போவதாக இந்திய போட்டி ஆணையம் (The Competition Commission of India) அறிவித்துள்ளது.

கமல்ஹாஸன் தனது விஸ்வரூபம் படத்தை தியேட்டர்களில் வெளியாகும் முன்பு டிடிஎச்சில் வெளியிடப் போவதாக அறிவித்தார்.

இதனால் கோபமடைந்த திரையரங்கு உரிமையாளர்கள், அந்தப் படத்தை எந்தத் தியேட்டரிலும் வெளியாக அனுமதிக்க மாட்டோம். அரங்குகள் தரமாட்டோம் என்றனர்.

இது தனது வியாபாரம் செய்யும் உரிமையை தடுக்கும் செயல் என்று கமல்ஹாஸன் புகார் தெரிவித்தார். இந்திய போட்டி ஆணையத்திடம் எழுத்து மூலமாக புகாரும் கொடுத்தார். அத்துடன் திரையரங்க உரிமையாளர் சங்கம் வெளியிட்ட தீர்மான நகலையும் இணைத்திருந்தார். அதில் டிடிஎச் அல்லது வேறு தொழில்நுட்பத்தில் வெளியாகும் எந்தப் படங்களுக்கும் ஒத்துழைப்பில்லை என்று குறிப்பிட்டிருந்தது.

இதுகுறித்து போட்டி ஆணையம் திரையரங்கு உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், திரையரங்க உரிமையாளர் அமைப்பின் தீர்மானம் தொழில் செய்யும் உரிமைக்கு விரோதமானதாக போட்டி ஆணையம் கருதியது.

எனவே இதில் கமல்ஹாஸனின் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதாகக் கருதுவதால், டைரக்டர் ஜெனரல் தலைமையில் விசாரணை நடத்தி 60 நாட்களுக்குள் அறிக்கை தர உத்தரவிடப்பட்டது.

ஆனால் இந்தப் புகாரைக் கொடுத்த சில தினங்களில் திரையரங்க உரிமையாளர்களுடன் சமாதானமாகிவிட்டார் கமல்ஹாஸன். 'நாங்கள் அண்ணன் தம்பிகள், மாமன் மச்சான்கள்... நாங்கள் இப்படித்தான் அடிக்கடி உரிமையாய் சண்டை போட்டுக் கொள்வோம்.. பிறகு கூடிக் கொள்வோம். இது என்னுடைய குடும்பம்,' என்று கூறினார். அவர்களும் 500 ப்ளஸ் அரங்குகளை இந்தப் படத்துக்கு ஒதுக்கிக் கொடுத்தனர்.

ஆனால் அந்த புகாரை மட்டும் கமல் வாபஸ் பெறவில்லை!

இப்போது அந்தப் புகார் மீதான விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிடப் போவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

சங்கரா டிவியில் சரஸ்வதி கடாட்சம்

Saraswathi Kataksham On Sankara Tv

கல்விக்கு அதிபதி சரஸ்வதி. பள்ளி மாணவர்களுக்கு சரஸ்வதி தேவியின் பரிபூரண அருள் கிடைக்கவேண்டும் என்பதற்காக சங்கரா டிவியில் சரஸ்வதி கடாட்சம் என்ற நிகழ்ச்சி காலை நேரத்தில் ஒளிபரப்பாகிறது.

படப்பிடிப்பு குழுவினர் ஒவ்வொரு பள்ளிக்கு நேரடியாக சென்று அங்கு மாணவர்களுக்கு சரஸ்வதி தியான சுலோகத்தை கற்றுக் கொடுக்கின்றனர்.

அத்துடன் சங்கல்ப்பம், பூஜை, அர்ச்சனை மற்றும் பிராத்தனைகளும் இடம் பெறுகின்றன. அதோடு கல்வி கற்பதன் நுணுக்கம் பற்றி கல்வியாளர் விளக்குகிறார்.

இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. உங்கள் பள்ளியும் இடம் பெற ஸ்ரீ சங்கரா டிவியை தொடர்பு கொள்ளவும். 044- 45072009

 

வருகிறது பீட்சா 2... ஆனால் ஹீரோ விஜய் சேதுபதி இல்லை!!

Sequel Super Hit Pizza

பீட்சா படத்தின் வெற்றி... அந்தப் படத் தயாரிப்பாளரை அதன் தொடர்ச்சியை எடுக்க வைத்துள்ளது. ஆனால் ஹீரோ, இயக்குநர் வேறு!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சிவி குமரன் தயாரிப்பில் வந்த படம் பீட்சா. விஜய் சேதுபதி - ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்திருந்தனர்.

படம் வெளியாகி அபார வெற்றியைப் பெற்றது. 2012-ன் மிகச் சிறந்த படமாக விமர்சகர்களால் போற்றப்பட்டது.

இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் கச்சிதமான திரைக்கதை, அதை அட்டகாசமாக தன் தோளில் சுமந்த ஹீரோ விஜய் சேதுபதி.

இப்போது பீட்சா படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறார் சிவி குமரன். ஆனால் இந்த முறை மொத்தமாக யூனிட்டே மாறியிருக்கிறது.

இந்த இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறவர் தீபன் சக்ரவர்த்தி. சில குறும்படங்கள் செய்திருக்கிறார். (கார்த்திக் சுப்புராஜும் குறும்படங்கள் செய்து நேராக பீட்சா இயக்கியவர்தான்)

நாயகனாக நடிப்பவர் வைபவ். கொள்ளைக்காரன் படத்தில் நாயகியாக நடித்த சஞ்சிதா ஷெட்டி இதில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த இரண்டாம் பாகத்துக்கு பீட்சா 2 - தி வில்லா என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் படம் தொடங்குகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

 

‘லஜ்ஜோ’... தூசி தட்டும் மணிரத்னம்... அமீர்கான் இணைவரா?

Aamir Khan Kareena Kapoor Mani Ratnam Film

‘கடல்' ஏற்படுத்திய அதிர்வில் தமிழ் படத்தை விட்டுவிட்டு இந்தி பக்கம் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் மணி ரத்னம்.

ஆனால், அந்த இந்தி பட ப்ராஜெக்ட் 6 வருடங்களுக்கு முந்தையதுதானாம். 2007ல் அமீர்கானை வைத்து ‘லஜ்ஜோ' என்ற படத்தை இயக்க மணிரத்னம் முடிவு செய்தார்.

சுதந்திரத்துக்கு முன்பு நடக்கும் கதையாக அது அமைக்கப்பட்டிருந்தது. உருது எழுத்தாளர் இஸ்மத் சுஹ்தயின் கதையை அடிப்படையாக வைத்து, பாலிவுட் எழுத்தாளர் அனுராக் கஷ்யப்வுடன் இணைந்து அந்த கதையை சினிமாவுக்கு ஏற்ப மாற்றம் செய்தார் மணிரத்னம். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை அதில் ஏற்படும் காதல் என போகுமாம் கதை.

பீரியட் பிலிம் என்பதால், ஹிந்தியுடன், உருது மொழியிலும் திறமையுள்ள எழுத்தாளர் கிடைக்காததால், ஸ்கிரிப்ட் மணிரத்னம் நினைத்த அளவுக்கு உருவாகவில்லை.

ராஜஸ்தானில் ஒரே வீச்சில் படத்தை எடுத்து முடிக்க மணிரத்னம் விரும்பினார். ஆனால், முழுமையான ஸ்கிரிப்டை பார்க்காமல், பல்க்காக டேட் கொடுக்க அமீர்கான் தயாராக இருக்கவில்லை. இழுபறியில் படம் இழுத்துக் கொண்டே போனதால், அமீர்கான் நடிக்க மறுத்து விலகிக் கொண்டார். இதையடுத்து அந்த படம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டது.

கடல் படத்துக்குப் பின், மீண்டும் பழைய ப்ராஜெக்ட்டையே கையில் எடுத்திருக்கிறார் மணிரத்னம். பாலிவுட் எழுத்தாளர் ரென்சில் டி சில்வாவுடன் இணைந்து இந்த படத்துக்கான ஸ்கிரிப்டை எழுதி வருகிறாராம். ஆனால் அமீர்கான், கரீனா கபூர் ஜோடி இதில் இணைவார்களா? என்பதுதான் பாலிவுட் வட்டாரத்தில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

அஜீத் படத் தலைப்பு 'வலை' - இன்று கன்ஃபர்ம்!

Ajith Next Movie Title Valai Confirmed   

விஷ்ணு வர்தன் நடிப்பில் கடந்த 6 மாதங்களாக உருவாகி வரும் அஜீத் படத்துக்கு வலை என்ற தலைப்பு இன்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்த புதிய டிசைன்கள் மற்றும் போஸ்டர்கள் இன்று வெளியாகியுள்ளன.

அஜீத் - நயன்தாரா, ஆர்யா - டாப்ஸி நடிக்கும் இந்தப் படத்தை ஏஎம் ரத்னம் தயாரிக்கிறார்.

இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் தலைப்பை ரகசியமாக வைத்திருந்தனர். காரணம், பெயரை முதலிலேயே அறிவித்துவிட்டால், ரசிகர்கள் ஆர்வத்தில் அந்தப் பெயரில் பேஸ்புக், இணையதளங்களில் புதிய சைட்கள் தொடங்கிவிடுகிறார்களாம்.

இதைத் தவிர்க்கவே பெயரை வெளியில் சொல்லாமல் இருந்தனர். இந்த நிலையில் இன்று படத்தின் போஸ்டர் மற்றும் டிசைன் வெளியாகியுள்ளது. மங்காத்தா ஹேர் ஸ்டைலில், டுகாட்டி பைக்கில் அமர்ந்தபடி அஜீத் போஸ் கொடுக்கும் இந்த போஸ்டரில், வலை என்று படத்தின் தலைப்பு டிசைன் செய்யப்பட்டுள்ளது.

அஜீத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராகிவிட்ட யுவன் சங்கர் ராஜா இசமையமைத்துள்ளார். விரைவில் படத்தின் இசை வெளியீட்டை நடத்தவிருக்கிறார்கள்.

 

காதல், காமெடி, கல்லூரி கலாட்டாவுடன் மணிவண்ணன் இயக்கும் 'தாலாட்டு மச்சி தாலாட்டு'!

Director Manivannan Is Back Full Form

அமைதிப் படை -2 படத்துக்குப் பிறகு முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, இளமை குறும்பு, காமெடி, காதல், சென்டிமென்ட் என ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படத்தை இயக்குகிறார் மணிவண்ணன்.

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் கொடுத்து அசத்தியவர் மணிவண்ணன். கோபுரங்கள் சாய்வதில்லை, இளமைக் காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், 24 மணி நேரம், முதல் வசந்தம், சின்னத் தம்பி பெரிய தம்பி, ஜல்லிக்கட்டு, பாலைவன ரோஜாக்கள், அமைதிப்படை என மணிவண்ணன் இயக்கிய படங்கள் காலப் பதிவுகளாய் நிற்கின்றன. இவை வணிக ரீதியில் வெற்றி பெற்றதோடு, என்றைக்குப் பார்த்தாலும் மனதுக்குப் புத்துணர்வைத் தரத் தவறியதில்லை.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இதுவரை 49 படங்களை இயக்கியுள்ளார் மணிவண்ணன். தமிழின் ஆகச் சிறந்த படங்கள் எனக் கருதப்படும் நிழல்கள், புதிய வார்ப்புகள், கல்லுக்குள் ஈரம், அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களுக்கு வசனங்கள் மூலம் சிறப்பு சேர்த்ததவர் மணிவண்ணன்.

2001-ம் ஆண்டு ஆண்டான் அடிமை என்ற படத்தைத் தந்தார். அதன்பிறகு நடிக்கவே நேரம் போதவில்லை அவருக்கு. அவ்வளவு வாய்ப்புகள். ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 40 படங்கள் வரை நடித்தவர் மணிவண்ணன்.

நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாகராஜசோழன் எம்ஏ., எம்எல்ஏ (அமைதிப் படை) என்ற படத்தை இயக்கி வருகிறார். சத்யராஜ், சீமான், ரகுவண்ணன், கோமல் சர்மா, மிருதுளா, வர்ஷா, அன்ஷிபா நடித்துள்ள இப்படம் படப்பிடிப்பு முடிந்து, ரிலீசுக்குத் தயாராகி வருகிறது. இது மணிவண்ணன் திரையுலக வாழ்க்கையில் 50வது படமாகும்.

இந்தப் படத்தின் ரஷ் பார்த்த அத்தனைபேரும் ரசித்துப் பாராட்டி வருகின்றனர். இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற, அதே நேரம் அவசியமான படம் இது என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றியை ஈட்டத் தயாராகி வருகிறது நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ.

51வது படம் தாலாட்டு மச்சி தாலாட்டு

அமைதிப்படை 2-க்குப் பிறகு தனது 51வது படத்தை இயக்கத் தயாராகிவிட்டார் மணிவண்ணன். இந்தப் படத்துக்கு தாலாட்டு மச்சி தாலாட்டு என்று தலைப்பிட்டுள்ளார்.

மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் பல புதுமுகங்களை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்துகிறார் மணிவண்ணன்.

மணிவண்ணனுடன் இத்தனை ஆண்டுகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களே இந்தப் படத்திலும் தொடர்கின்றனர்.

படம்குறித்து இயக்குநர் மணிவண்ணன் நம்மிடம் கூறுகையில், "இது ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படம். தலைப்பு ஏன் அப்படி வைத்துள்ளோம் என்பதை படம் பார்க்கும்போது புரிந்து ரசிப்பார்கள்.

நல்ல குடும்பப் பிண்ணனி கொண்ட, பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் ஒரு இளைஞனும் அதே கல்லூரியில் படிக்கும் பெண்ணும் காதலிக்கிறார்கள்.

ஆனால் அந்தக் காதலையும், குடும்பத்தினரின் அன்பையும் அவனுக்கு கிடைக்காமல் போகிறது. காரணம் ஒரு குழந்தை. மற்றவற்றை படத்தில் பாருங்கள். அனைவரும் ரசித்து இந்தப் படத்தைப் பார்க்கும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது," என்றார்.

 

மூத்த நடிகை ராஜசுலோசனா மரணம்.. நாளை இறுதிச் சடங்கு!

Veteran Actress Raja Sulochana Passes Away

சென்னை: தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளுள் ஒருவரான ராஜசுலோசனா இன்று சென்னை மடிப்பாக்கத்தில் காலமானார். அவருக்கு வயது 77.

தமிழகத்தின் பெருமைமிக்க கலைஞர்களான மறைந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசன், தெலுங்கில் என்டிஆர், கன்னடத்தில் ராஜ்குமார் என சாதனையாளர்களுடன் நடித்தவர் ராஜசுலோசனா.

1935-ம் ஆண்டு, அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்த பெஜவாடாவில் பிறந்தவர் ராஜசுலோசனா. அவரது இயற்பெயர் ராஜீவலோசனா. அதைத்தான் பின்னர் சினிமாவுக்காக ராஜசுலோசனா என மாற்றிக் கொண்டார்.

1953-ல் அவர் நடித்த முதல் படம் குணசாகரி வெளியானது. தொடர்ந்து அவர் நடித்த ரங்கோன் ராதா, அம்பிகாபதி, சாரங்கதாரா தாய் மகளுக்குக் கட்டிய தாலி, கவலை இல்லாத மனிதன், அரசிளங்குமரி, நல்லவன் வாழ்வான், படித்தால் மட்டும் போதுமா, தை பிறந்தால் வழி பிறக்கும் போன்ற படங்கள் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.

குறிப்பாக கைதி கண்ணாயிரம் படத்தில் ராஜசுலோசனா பாடிய கொஞ்சி கொஞ்சி பேசி மதிமயக்கும் வஞ்சகளின் உள்ளம் வலை விரிக்கும்... பாடலும், எம்.ஜி.ஆர். ஜோடியாக நல்லவன் வாழ்வான் படத்தில் பாடிய குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா... என்ற பாடலும் அந்த காலத்தில் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.

எழுபதுகளில் அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். எம்ஜிஆரின் இதயக்கனியில் அவரது வேடம் பெரிதும் பேசப்பட்டது.

ரஜினி நடித்த காயத்ரியில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்கள் வரை நடித்த ராஜ சுலோசனா, சென்னை மடிப்பாக்கத்தில் சதாசிவ நகரில் வசித்து வந்தார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

புஷ்பாஞ்சலி நிருத்ய கலா கேந்திரம் என்ற பெயரில் நடனப் பள்ளி ஒன்றை நடத்திய ராஜ சுலோச்சனா, ஏராளமானோருக்கு நடனமும் கற்றுத் தந்துள்ளார்.

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜசுலோசனா இன்று அதிகாலை மரணமடைந்தார்.

இவரது கணவர் பெயர் சிஎஸ் ராவ். இவர்களுக்கு தேவி, ஸ்ரீ என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் இரட்டை குழந்தைகள். ஷாம்சுந்தர் என்ற மகனும் உள்ளார். இவர் அமெரிக்காவில் இருக்கிறார். ராஜசுலோசனா மரணம் அடைந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டு சென்னை வந்து கொண்டு இருக்கிறார். நாளை மார்ச் 6-ம் தேதி அவரது இறுதிச் சடங்குகள் நடக்கின்றன.

மூத்த நடிகையான ராஜசுலோசனா மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா இரங்கல்:

ராஜசுலோச்சனா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில், பழம்பெரும் திரைப்பட நடிகை ராஜசுலோச்சனா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

"அரசிளங்குமரி", "படித்தால் மட்டும் போதுமா" "வணங்காமுடி" போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்ற ராஜசுலோச்சனா 275-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என்.டி.ராமா ராவ், நாகேஸ்வர ராவ், ராஜ் குமார் போன்ற முன்னணி திரைப்பட நடிகர்களுடன் நடித்து இருக்கிறார். சென்னையில் "புஷ்பாஞ்சலி நிருத்ய கலாகேந்திரம்' என்னும் நாட்டியப் பள்ளியை துவக்கி நாட்டிய கலைஞர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

திரைப்படத் துறையில் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் ராஜசுலோச்சனா. இவர் தனது அபார நடிப்பின் மூலம் திரைப்பட உலகில் புகழின் உச்சியை எட்டியவர். இவர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். அனைவருடனும் அன்புடன் பழகும் தன்மையானவர்.

ராஜசுலோச்சனாவின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல், திரைப்படத் துறைக்கும் மிகப் பெரிய இழப்பு ஆகும். ராஜசுலோச்சனாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன் என்று கூறியுள்ளார்.

 

எஸ் ஏ சந்திரசேகர் மீது கேயார் போலீசில் புகார்!

Keyar Files Complaint Sa Chandrasekaran

சென்னை: தயாரிப்பாளர் சங்க மோதல் நாளுக்கு நாள் மிகவும் கேலிக்குரிய விஷயமாக மாறிவருகிறது.

நேற்று முன்தினம் சங்க வளாகத்தில் கேயார் மற்றும் சந்திரசேகரன் அணியினர் மோதிக் கொண்டனர். கைகலப்பில் இறங்கிவிட்டனர்.

அதைத் தொடர்ந்து இப்போது போலீஸில் புகார் தரும் படலத்தைத் தொடங்கியுள்ளனர்.

கேயார் அணியினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது புகார் மனு அளித்தார். பின்னர், நிருபர்களிடம் கேயார் கூறுகையில், "கோர்ட்டு உத்தரவுக்கு பின்னரும் கூட எஸ்.ஏ.சந்திரசேகர் பதவி விலகாமல் இருப்பது சரியல்ல.

வருகிற 24-ந்தேதி அவர் கூட்டியுள்ள பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதமானது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 21 பைல்கள் காணாமல் போய் உள்ளன. இது கிரிமினல் குற்றமாகும். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

 

சானியாவில் பாதி... நயன்தாராவில் பாதி... இதோ சானியாதாரா!

A Mix Sania Mirza Nayanthara

அது வேற இது வேற.. இப்படி ஒரு தலைப்பில் ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறவர் காமடெி நடிகர் ஜெயமணியின் மகன் வர்ஷன். இயக்குநர் சுந்தர் சியிடம் பணியாற்றிய திலகராஜன் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இதெல்லாம் ஒரு பக்கமிருக்கட்டும். படத்தின் நாயகியுடைய பெயர்தான் சுவாரஸ்யமானது.

நடிகை மலையாள தேசத்து வரவுதான். எனவே அவர் பெயரில் ஏதோ ஒரு நாயர் ஒட்டிக் கொண்டிருந்தது.

பார்த்தார்கள்... புதுப்பெயருக்காக ரொம்ப நேரமாக யோசித்தவர்களுக்கு ஒரு பளிச் ஐடியா மின்னியது. அதுதான் 'சானியாதாரா'.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பெயரிலிருந்து சானியாவையும், நயன்தாரா பெயரிலிருந்து தாராவையும் உருவி.. சானியாதாரா என்று நாமகரணம் சூட்டிவிட்டார்.

ஹீரோயின் என்னமோ பார்க்க சுமாராக இருந்தாலும் பெயர் சூப்பரா இருக்கே என்று பாராட்டுகிறார்களாம்!

எப்படி இந்தப் பெயரை வைத்துக் கொண்டீர்கள் என யாரோ கேட்டதற்கு... நாயகி சொன்ன பதில்: 'நான் நயன்தாரா, சானியா மிர்சாவுக்கு பெரிய விசிறி. அதான் அப்படி பேர் வச்சிக்கிட்டேன்'.

எப்பூடி!

 

ஓவரா காட்றாங்க...! - அனுஷ்கா, ப்ரியாமணி மீது பொது நல வழக்கு

Case Against Anushka Priyamani

ஹைதராபாத்: படங்களில் ஏக கவர்ச்சி காட்டி நடிப்பதாகக் கூறி நடிகைகள் ப்ரியாமணி மற்றும் அனுஷ்கா மீது ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் வந்த தெலுங்குப் படங்களில் அனுஷ்காவும், ப்ரியாமணியும் கிட்டத்தட்ட முக்கால் நிர்வாணம் எனும் அளவுக்கு நீச்சலுடைக் காட்சிகள் மற்றும் கவர்ச்சி உடைகளில் நடித்துள்ளார்களாம்.

இது சமூகத்தில் இளைஞர்களை தவறான திசைக்குத் திருப்பும் என்றும் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வைக்கும் சமூக ஆர்வலர் சுபுத்தா கருத்து தெரிவித்திருந்தார்.

அத்துடன் நிற்காமல், தனது கருத்தை ஒரு வழக்காக மல்காஜ்கிரி நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார் சுபுத்தா.

அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் மிர்ச்சி என்ற படம் வெளியானது. ப்ரியாமணி நடித்த டிக்கா என்ற படம் சமீபத்தில் வெளிவந்தது.

 

சின்னத்திரை தொகுப்பாளரான நடிகை சங்கீதா

Actress Sangeetha Host Game Show On Zee Telugu

சினிமாவில் செகன்ட் இன்னிங்ஸ் மூலம் ஒரு ரவுண்ட் வந்த நடிகை சங்கீதா, இப்போது சின்னத்திரையில் கேம் ஷோ நடத்த வந்துவிட்டார்.

"காதலே நிம்மதி" படத்தில் அறிமுகமானவர் சங்கீதா. அடுத்தடுத்து படவாய்ப்புகள் இல்லாமல் போகவே தமிழ் சினிமாவை விட்டு தெலுங்கு பக்கம் கவனம் செலுத்தினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு "பிதாமகன்" படத்தில் கஞ்சா வியாபாரியாக நடித்ததுதான் அவருக்கு பெரிய ரீ-என்ட்ரியை கொடுத்தது. அதன் பிறகு "உயிர்" படத்தில் கொழுந்தனை விரும்பும் அண்ணி கேரக்டரிலும், "தனம்" படத்தில் பாலியல் தொழிலாளி கேரக்டரிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சினிமாவில் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பிக்கவே, 2009ம் ஆண்டு பிரபல டிவி சேனலில் நடுவராக வந்தார். அங்கு பாடகர் கிரீஸ் உடன் காதல் ஏற்படவே 2009 ம் ஆண்டு இவர்களின் திருமணம் நடந்தது.

எனினும் படங்களில் தொடர்ந்து நடித்தார். தமிழில் இவர் நடித்த "புத்திரன்", தெலுங்கில் "துர்கா" ஆகிய படங்கள் வெளிவரவேண்டியது இருக்கிறது.

இப்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார் சங்கீதா. அதனால் படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. எனினும் சன் டிவியில் நடுவராக வந்து செல்கிறார்.

இதுநாள் வரை நடுவராக வந்த சங்கீதா இப்போது "ஜீ தெலுங்கு" தொலைக்காட்சி நடத்தும் "பிந்தாஸ்" என்ற தெலுங்கு கேம் ஷோவை தொகுத்து வழங்குகிறார். விரைவில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

நிகழ்ச்சி தொகுப்பாளர், நடுவர் என்றால் ஓகே சொல்லும் சங்கீதா, சீரியல்களில் நடிக்க கூப்பிட்டால் நோ சொல்லி விடுகிறாராம்.